சங்கத் தமிழை சந்தத் தமிழாக்கிய சமரசமற்ற கவிஞர்!

-சாவித்திரி கண்ணன்

புலமைப்பித்தன் திராவிட இயக்கத்தின் தீப்பிழம்பாய், தென்றலாய் வெளிப்பட்டவர்! ஆழ்ந்த தமிழ் புலமையோடும், ஆர்ப்பாட்டமற்ற எளிமையோடும் வலம் வந்தவர். சற்றே நெகிழ்ந்து கொடுத்திருந்தால் இன்னும் ஆயிரம் பாடல்கள் எழுத வாய்ப்பு பெற்று இருப்பார்! ஆனால்,சென்டிமெண்ட் நிறைந்த சினிமா உலகில் பகுத்தறிவு சிங்கமாக இயங்கியது எப்படி..?

மிக ஆழமான தமிழ்புலமையில் புலமைப்பித்தனை மிஞ்ச திரைக் கவிஞர்களில் யாருமில்லை எனலாம்!

சங்கத் தமிழ் சந்தத் தமிழாக அவரிடம் வெளிப்பட்டது. திரைபாடல்களில் இலக்கிய நயத்தை பொழிந்தவர்! டப்பாங்குத்துப் பாடல்களோ, முகம் சுழிக்க வைக்கும் ஆபாச வரிகளோ இவர் திரைத் தமிழில் பார்க்கவே முடியாது. நான் அறிந்த வரை இவர் பக்திபாடல்களை எழுதியதாகவும் தெரியவில்லை. சினிமாவுக்கு பூஜை போடும் நிகழ்வில் கூட இவரிடம் யாரும் தீபாரதனை தட்டைக் காட்டமுடியாது.

நாயகன் படத்தில் எல்லா பாடல்களையும் புலவர் எழுதிய போதிலும் ஜனகராஜ் ஓடத்தில் கூத்தடித்தபடி இளையராஜா குரலில் பாடும் நிலா அது வானத்து மேலே, பல்லானது ஓடத்து மேலே..பாடலை புலவர் எழுதவில்லை. அதை இளையராஜாவே எழுதிக் கொண்டார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் புலமைப்பித்தனுக்கு இருந்த ஆளுமையும்,ஆழங்கால் புலமையும், அரசியலில் அவருக்கு இருந்த திராவிட சித்தாந்த பின்புலமும் மிக அருமையான பாடல்கள் தமிழ் திரைக்கு கிடைக்க காரணமாயின! இவரது புரட்சித் தீ கவிதை தொகுதியை படித்து மகிழ்ந்த அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாடல்களில் உள்ள வேகமும் உணர்ச்சியும் புலமைப்பித்தன் பாடல்களில் காண்கிறேன் என மனம்விட்டு பாராட்டி உள்ளார்.

புரட்சி தீ கவிதை தொகுதிக்கு அணிந்துரை வழங்கியுள்ள கலைஞர்,

எழுத்தெல்லாம் கணைகள்

அனல்கக்கும் எரிமலைகள்!

கவிஞரின் சொல்லாற்றலோ குற்றால அருவி

என பாராட்டி மகிழ்ந்துள்ளார்.

 

கொங்கு மண்ணில் பிறந்த புலமைப்பித்தன் ஒரு பாஞ்சாலைத் தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டே தமிழ் புலவருக்கு படித்தவர். 1948 லேயே கவிதை எழுத தொடங்கியவர். பள்ளி ஆசிரியராக வேலை பார்க்கும் போது ஒண்டிப்புதூரிலே நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் இவரது பேச்சைக் கேட்டு அசந்து போன பழம்பெரும் இயக்குனர் கே.சங்கர் சென்னைக்கு வரச் சொல்லி அழைப்பு தந்தார். 1968 ல் குடியிருந்த கோயில் படத்தின் ஒரு சிக்கலான சூழலுக்கு எந்த கவிஞர் எழுதிய பாடலும் பொருந்தி வரவில்லை என்ற நிலையில் புலமைப் பித்தனை அழைத்து எழுத வைத்தார் கே.சங்கர்.

அந்தப் பாடல் தான்,

நான் யார் நான் யார் நீ யார்

நாலும் தெரிந்தவன் யார், யார்?

என்ற தத்துவப் பாடல்!

அதன் பிறகு தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் வாய்ப்பு பெற்றார்!

ஆயிரம் நிலவே வா, பாடும் போது நான் தென்றல் காற்று ..போன்ற பல பாடல்கள் பிரபலமாயின. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்த போது, புலமைப்பித்தன் எழுதிய, நீங்கள் நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற..” என்ற பாடலும், வாசலெங்கும் இரட்டை இலை கோலமிடுங்கள்… போன்ற ஆறு பாட்டுகளும் பட்டி, தொட்டி எங்கும் பிரச்சாரத்திற்குப் பயன்பட்டது.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசவைக் கவிஞர், மேலவை துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

திரைப் பாடல்களை இலக்கிய தரத்திற்கு எழுதியவர் புலமைப் பித்தன்! காதல் பாடல்களில் தென்றல் இதமாக வீசி தழுவும். கொள்கை பாடல்களிலோ உழைக்கும் வர்க்கத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும். அநீதியை எதிர்க்கும் தீப்பந்தமாய் சிவக்கும்!

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு, ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும், நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே.. போன்ற பாடல்கள் உதாரணங்களாகும்!

இந்த பச்சைக் கிளிக்கொரு செவந்திப் பூவினை..

தென் பாண்டிச் சீமையிலே, தேனோடும் வீதியிலே மான் போல..

போன்ற பல பாடல்கள் தமிழ்த் தேனை உண்ணக் கொடுத்த பாடல்களாகும்!

தாலாட்டுப் பாடலிலும் நாட்டு நலன் சார்ந்த பார்வைகளை வைப்பார் என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி!

சாதி மல்லி பூச்சரமே – சங்கத் தமிழ் பாச்சரமே

ஆசை என்ன ஆசையடி..

எனது வீடு எனது வாழ்வு

என்று வாழ்வது வாழ்க்கையா

இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா..?

தேசம் வேறல்ல, தாயும் வேறல்ல ஒன்று தான்

தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்று தான்!

திரைப்பட உலகம் சென்டிமெண்ட் நிறைந்தது .கவிஞரோ முழுமையான பகுத்தறிவுவாதி! ஒளிவுமறைவின்றி மனதில் பட்டதை பேசக் கூடியவர்.

சமரசமற்றவர். அப்படி இருந்தும் அவர் திரைத் துறையில் பல வாய்ப்புகளை பெற்றதற்கு அவரது அசாத்தியமான கவி ஆற்றலே காரணமாகும்!

திரிபுரசுந்தரி என்றொரு படம். இளையராஜா இசை! கதைக்கான  சூழலை கேட்டு உள்வாங்கி கவிஞர் ”ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகிறோம்’’ என எழுதி தந்தார். அந்த நேரம் வெளியில் வானம் இருண்டு, பயங்கர காற்றும், மழையும், இடியுமாக உலுக்கி எடுக்கிறது..! இளையராஜா படப்பாட்டும், வெளிச் சூழலும் ஒத்து இருக்கிறதே..என கலங்கியவராக ’’ம்கூம் அண்ணே இந்த பல்லவி வேண்டாம் மாற்றித் தாங்களேன்..’’ என கேட்டுள்ளார். அதற்கு கவிஞர், ”ராஜா இந்த பாட்டுக்கும், அந்த புயல் காற்றுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை இதையே வைத்துக் கொள்ளுங்கள்’’ என உறுதிபடக் கூறிவிட்டார்.

புலவர் சற்று கரடுமுரடானவர், கொள்கைவாதி என்ற போதும் இளையராஜா முக்கியமான பல படங்களில் பொருத்தமான வாய்ப்புகள் பலவற்றை புலவரை அழைத்து வழங்கினார். ”உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி..” போன்ற புலவரின் பாடல்களை இன்று கேட்டாலும் உள்ளத்தை உலுக்கி எடுக்கும்!

இப்படியாக பழுத்த ஆன்மீகவாதியான இளையராஜாவும், பகுத்தறிவு சிங்கமான புலமைப் பித்தனும் இணைந்து இணக்கமாக செயலாற்றி பல அருமையான பாடல்களை நமக்கு தந்துள்ளனர்..! தமிழும், இசையும் தான் அவர்களைப் பிணைத்தன!

ஒரு நேர் காணலில் தான் சினிமாவிற்கு பாட்டு எழுத வந்தது பற்றி இப்படிச் சொன்னார். ஐ.ஏ.எஸ் படித்தவன் பியூன் வேலைக்கு வந்தது போன்ற வலி சில சமயங்களில் உண்டு. நல்ல கருத்துக்களை சொல்லவும், நான் உள்வாங்கிய சங்கத் தமிழை இனிய சந்தத் தமிழாக்கி தரவுமான மகிழ்ச்சிக்குரிய வாய்ப்பாக இதை மாற்றிக் கொண்டேன்’’ என்றார்.

ஒரு சமயம்  பழைய பாடல்களை ரீமிக்சிங் செய்து ”பொன் மகள் வந்தாள் பொருட்கோடி தந்தாள்’’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் சிதைத்த போது பொங்கி தள்ளிவிட்டார்.

”நன்றாக செய்து வைத்த வடை,பாயாசத்தில் மஞ்சள் காமாலை வந்தவன் சிறு நீர் கழித்தது போல இப்போது வரும் ரீமிக்ஸ் பாடல்கள் உள்ளன! தயவு செய்து பழைய பாடல்களின் இனிமையைக் கெடுக்க வேண்டாம். இதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் ஏறாத இடமெல்லாம் ஏறிச் சென்று இதை நான் தடுக்க வேண்டியதாகிவிடும்’’ என பகிரங்கமாக எச்சரித்தார்.

இலங்கை பிரச்சினையில் விடுதலைப் புலிகளை சமரசமற்று நெருக்கடிகளுக்கு இடையிலும் ஆதரித்து வந்தார்!

திராவிட அரசியல் இயக்கமான அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து அந்த கட்சியில் யாருமே பேசத் துணிவில்லாத நிலையில் புலமைப்பித்தன் மிகத் துணிச்சலாக இந்த இரட்டைத் தலைமையை கண்டித்தார்!

”ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையிலும் கட்சி கட்டுக் கோப்பாக இருந்துவந்தது. ‘மோடியா இந்த லேடியா…’ என்று பேசுகிற அளவுக்கு துணிச்சல் மிக்கவராக இருந்தார் அவர். ஆனால், இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் என இவர்கள் இருவரும் இன்றைக்கு அ.தி.மு.க-வை ‘தமிழக பா.ஜ.க-வாக மாற்றிவிட்டார்கள். ஒரு மதவாதக் கட்சிக்கு ஈடாக அ.தி.மு.க-வை கொண்டு வந்து  நிறுத்தியதை, என்னால் கொள்கை ரீதியாக ஒத்துப்போகவே முடியாது!” என்றார்

இப்படி தன்னுடைய துறையிலாகட்டும், தான் சார்ந்த கட்சியிலாகட்டும் தவறு என ஒன்றைக் கண்டால் சுட்டிக் காட்டவும், தட்டிக் கேட்கவும் தயங்காதவராக புலமைப்பித்தன் இருந்தார். இந்த தலைமுறைக் கவிஞர்களுக்கு அந்த துணிச்சல் இருக்குமா தெரியவில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time