பாசாங்குத்தனமில்லாத அறப் பயணத்தில் ஓராண்டு!

-சாவித்திரி கண்ணன்

வேகமாக ஓராண்டு உருண்டோடிவிட்டது! நினைத்தால் பிரமிப்பாக உள்ளது! இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறோம். ஓராண்டுக்கு முன்பு இந்த நாள் தான் அன்புத் தம்பி கவின் (Invalai) அறம் இணைய தளத்தை அழகுற வடிவமைத்துக் கொடுத்தார்! என்னுடைய 36 வருட பத்திரிகை துறையில் இந்த ஓராண்டு மிகக் கடினமானது. பெரும் உழைப்பாற்றலை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளியது! மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததும் கூட!

அரசியல்,சமூகத் தளங்களில் கட்டமைக்கப்படும் மாயைகளைக் களைந்து,கள யதார்தங்களை வெளிப்படுத்துவது, வெகுஜன தளத்தில் பேசத் தயங்கி, மறைக்கப்படும் உண்மைகளை உரத்துச் சொல்வது ஆகிய பணிகளைத் தான் அறம் செய்து வருகிறது! கடந்து வந்த ஓராண்டில் தமிழகம் மட்டுமின்றி, தேசிய மற்றும் சர்வ தேசிய தளத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் என்னென்னவெல்லாம் எழுதியுள்ளோம்..என திரும்பி பார்க்கும் போது…மன நிறைவாகவே உணர்கிறோம்!

ஒராண்டு அறத்தில் இது வரை 584 கட்டுரைகள் வெளி வந்துள்ளன! அரசியல், சமூகம், விவசாயம், மருத்துவம், விளையாட்டுத் துறை, பாரம்பரிய உணவு, சினிமா விமர்சனம்..என பலதரப்பட்ட கட்டுரைகள் வந்துள்ளன. இந்த ஓராண்டில் நடந்த தமிழக செய்திகள் மட்டுமின்றி, மற்ற மாநிலத்தின் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக தேர்தல்கள்… கர்நாடகம், ஆந்திரா, மேற்குவங்கம், பீகார், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், கேரளம், தில்லி,வட கிழக்கு மாநிலங்கள் என மற்ற மாநில அரசியலையும், அதன் களயதார்த்தங்களையும் மிகத் துல்லியமாக எழுதியுள்ளோம்.

தேசிய அரசியலில் பாரதிய ஜனதா கட்சியின் ஜாதி, மத பாகுபாடுகளை அதிகரிக்கும் மிக மோசமான குரூர அரசியலை மிக காத்திரமாக விமர்சித்து வருகிறோம். அதன் அரசியல், சமூக கலாச்சார ஆபத்துகளில் இருந்து மக்கள் காப்பாற்றப்படுவதற்கு ஏதுவான ஆரோக்கியமான சூழலை கட்டமைப்பதே அறத்தின் தலையாய நோக்கமாக கருதுகிறோம். பிற்போக்குத் தனமான மன்னராட்சி மகாத்மியங்களையும், பண்ணை அடிமைத்தன கலாசாரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியாகத் தான் பாஜக ஆட்சியின் நகர்வுகளை பார்க்கிறோம்!

அதே போல அமெரிக்க தேர்தல், இலங்கை தேர்தல், பாலஸ்தீனப் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் நிலவரங்கள், இந்திய-சீன மோதல்கள்..என சர்வதேசிய நிகழ்வுகளைக் குறித்த மிக ஆழமான பார்வைகளை வெளிப்படுத்தியுள்ளோம்.

குறிப்பாக, தமிழக தேர்தல் களத்தில் அறத்தின் பங்களிப்பு அளப்பரிய விதத்தில் இருந்தது. நமது அரசியல் சார்பு நிலையற்றது என்ற போதிலும், யார் தோற்கடிக்கப்பட வேண்டும், யார் வெல்ல வேண்டும் என்பதில் தெளிவான முடிவெடுத்து அந்தப்படியே இயங்கினோம். அறத்தில்  வெளியான கட்டுரைகள் தீக்கதிர், ஜனசக்தி, விடுதலை, முரசொலி..என பல ஏடுகளில் மட்டுமின்றி, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்களில் எடுத்து அப்படியே பிரசுரிக்கப்பட்டன. பல நூற்றுக்கணக்கான வாசகர்கள் நமது கட்டுரைகளை முக நூல்களிலும், வாட்ஸ் அப்பிலும் பகிர்ந்து பாரெல்லாம் பரப்பினர்.

முக்கியஸ்தர்கள் நிற்கும் தொகுதிகளில் கூட தோற்கடிக்கப்பட வேண்டியவர்களை குறிவைத்து அம்பலப்படுத்தினோம். குறிப்பாக கமலஹாசன் யார் என்பதை தெளிவாக வெளிப்படுத்தி, அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என நான் தொடர்ச்சியாக எழுதிய வலுவான கட்டுரைகள் அவரது தொகுதியில் சரியான தாக்கத்தை உருவாக்கின. ஆயிரத்து சொச்சம் ஓட்டுகளில் அவர் தோற்றுள்ளார் என்பதைக் கொண்டு, வெற்றியின் விளிம்பில் நின்ற அவரை தோல்வியின் பக்கம் இடறிவிட்டதில் அறத்தின் பங்களிப்பு இருந்ததாகவே எண்ணுகிறேன்.

கொரோனா காலகட்டத்தில் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகளை – அதில் நடந்த தனியார் மருத்துவமனை அட்டுழியங்களை – அம்பலப்படுத்தினோம். தற்போது தடுப்பூசியின் பின்னுள்ள சர்வதேச கார்ப்பரேட்டுகளின் வியாபார நோக்கங்களையும், இயற்கை வாழ்வியல் முறையிலேயே நமக்கான நோய் எதிர்பாற்றலை வலுப்படுத்த முடியும் என்பதையும், ஆகவே விருப்பமானவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு  தடுப்பூசியை நிர்பந்திக்கக் கூடாது –  என்றும் எழுதி வருகிறோம்.

அறம் சிற்றிதழ் தான்! அதிகபட்சம் ஐம்பதினாயிரம் பேர் படிக்கின்றனர். ஆனால், கட்டுரைகள் அறத்தோடு வெளிப்படுவதால் அதன் அதிர்வுகள் காத்திரமாக உள்ளன! நாம் சுட்டிக்காட்டும் விஷயங்கள் அதிகார மட்டங்களிலும் அவ்வப்போது எதிரொலிக்கவே செய்கின்றன. சில துறைகளில் நடக்கும் ஊழல்களை நாம் சுட்டிகாட்டிய போது ஊழல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்! சில நடவடிக்கைகள் நடந்துள்ளன.

அறம் சிறிய டீம்வொர்க் தான்! என்னோடு செழியன்.ஜா, (காக்கை கூடு) பீட்டர் துரைராஜ், மாயோன் என்ற ராஜதுரை, ச.அருணாசலம் என்ற மிகச் சிறிய அணியே! இது தவிர சுமார் 40 பேர் அவ்வப்போது ஓரு சில கட்டுரைகள் தந்துள்ளனர். அறநோக்கு தான் எங்களை பிணைத்துள்ளது!

குற்றம் காண்பது மட்டுமல்ல, இதழியல் பணி, நேர்மையான நற்சிந்தனைக்கும், செயல்களுக்கும் அடித்தளமிடுவது! அந்த வகையில் நீதித் துறை நிர்வாகத் துறை சினிமா துறை வரை நல்லோர்களையும், வல்லோர்களையும், நல்ல ரசனை போக்கையும் அடையாளப்படுத்தி வருவதையும் அறம் வாசகர்கள் அறிவர்.

பாசாங்குத்தனமில்லாத, ஒளிவு மறைவற்ற நேர்மையான அணுகுமுறையை நாம் அடி நாதமாக கொண்டுள்ளோம்!

சமூக நலனுக்கு கேடு என உணரும் எதையும், எந்த தயக்கமுன்றி எதிர்ப்பது என்பதையும் கொள்கையாக கொண்டுள்ளோம்!

ஊழல் அரசியல்வாதிகளை, அதிகாரிகளை கட்சி-இனம்-சாதி-மதப் பாகுபாடுகளின்றி தயவு தாட்சயண்யமின்றி – எதிர்த்து வெளிப்படுத்துவோம்.

விளம்பரம் வாங்குவதுமில்லை, தரவும் சக்தியில்லை என்பதே நம் நிலை! ஆகவே, இந்த அறம் இணைய இதழ் சமூகத்தின் தேவை என வாசகர்கள் உணரும் பட்சத்தில் அவர்களால் உயிர்த்திருக்க வேண்டும்.  ஆகவே, இந்த ஓராண்டை கொண்டாடும் வகையில் அவரவர்களுக்கு உகந்த வகையில் உங்கள் முக நூலிலோ, டிவிட்டரிலோ, வாட்ஸ் அப்பிலோ அறத்திற்கான உங்கள் மதிப்பீட்டையும், வாழ்த்தையும் வெளியிட்டு கூடுதல் வாசகப் பரப்பிற்கு இதனை கொண்டு செல்லுங்கள்! வாய்ப்பு அமையுமாயின் விரைவில் ஒரு வாசகர் சந்திப்பை நடத்தவும் உத்தேசமுண்டு!

சாவித்திரி கண்ணன் – ஆசிரியர்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time