அடிமைத் தளையை அறுத்தெறியட்டும் கிராம சபைகள்!

-நந்தகுமார் சிவா

ஒரு பொதுத் தேர்தல் நடத்த முடிகிறது. சட்டமன்ற கூட்டத் தொடர் நடத்த முடிகிறது. ஆனால், ஒரு சின்னஞ் சிறிய கிராம சபை கூட்டத்தை மட்டும் இங்கே நடத்த முடியவில்லை!

மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, என கடந்த ஆண்டிலும், ஜனவரி 26, மே 1 ஆகஸ்ட் 15 என இந்த ஆண்டிலும் இதுவரை ஆறு கிராம சபைகள் கூட்டப் படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு காலங்களைத் தவிர்த்து இயல்பு நிலை திரும்பிய போதும், மதுக்கடைகள்,பொது போக்குவரத்து, சந்தைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல செயல்பாட்டுக்கு வந்த நிலையிலும் ஏனோ கிராமசபைக் கூட்டங்கள் மட்டும் நடத்தப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

எளிய கிராம மக்கள் தங்கள் அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்க, செயல்பட தடை விதிப்பதில் உள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆகவே, கிராம சபையை மீட்பதற்கான ஒரு அஹிம்சை வழி போராட்டம் தற்போது அவசியமாகிவிட்டது.

இது மக்கள் குரலுக்கு வலு சேர்க்கும்  சந்திப்பு பயணம்! மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய ஜனநாயகத்தின் அடி கற்களாக அதனைத் தாங்கி நிற்பவர்கள் அதன் சாமானிய மக்கள்.

அந்த சாமானிய மக்கள் வெறும் வாக்காளர்களோ, வெறும் வாக்கு வங்கிகளோ மட்டும் அல்ல என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துவதே கிராமசபை அதிகாரம்.

விழிப்புணர்வு பெற்ற மக்கள்

கிராமசபைகளின் முக்கியத்துவம் தற்போது பரவலாகத் தமிழகத்தில் அறியப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. கிராமங்களிலுள்ள சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மற்றும் மகளிரின் பங்களிப்பால் இது  சாத்தியமாகியுள்ளது.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும்  கடந்த ஜனவரி 26, 2020 குடியரசு தினத்தன்று நடந்த கிராமசபைக்குப் பிறகு சுமார் 19 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவில்லை. ஓரிரு இடங்கள் அல்ல, தமிழகம் முழுமைக்கும் உள்ள 12,525  ஊராட்சிகளிலும் நடத்தப்படாமல் இருக்கின்றன.

சட்டம் என்ன சொல்கிறது?  எது உண்மையான கிராமசபை?

இரண்டு கிராம சபைகளுக்கு இடையே அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது என்கிறது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994. இந்த 19 மாத இடைவெளி என்பது சட்டத்தை மீறியது!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி 9,  தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3 ஆகியவை கிராமசபையை அதிகாரப்படுத்துகின்றன.

ஒரு கிராம ஊராட்சியில் இருக்கும் ஒவ்வொரு வாக்காளரும் இயல்பாகவே அதன் கிராமசபையின் உறுப்பினராகிறார். கிராம ஊராட்சி நிர்வாகத்தின் பணிகளையும் ஊராட்சியின் பொது விஷயங்கள் குறித்த கருத்துக்களையும் தெரிவிக்க உரிமை படைத்தவர்கள் கிராம மக்கள். இந்திய ஜனநாயகத்தில் தங்கள் பிரதிநிதியாக ஒருவரைச் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்பி வைக்கும் அதே மக்கள், தங்களுக்கான பிரதிநிதிகளை அனுப்பத் தேவைப்படாத, தாங்களே நேரடியாகப் பங்கேற்று, ஊர் வளர்ச்சிக்காக தாங்களே நேரடியாக பேச முடியும் என்கிற வாய்ப்பை தருகிற ஒரே சபை, கிராமசபைதான்!

இந்திய ஜனநாயகத்தில் மக்கள் வெறும் வாக்காளர்கள் அல்ல, பங்கேற்பாளர்கள் என்பதை உறுதிப்படுத்துவது இது.

சட்டரீதியாக உள்ள இந்த சபை தான் உண்மையான கிராமசபை. கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்படுபவை உண்மையான கிராமசபை அல்ல. கிராம சபைகள் அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட பொதுத் தன்மையுடன் இயங்க வேண்டும்!

நமக்கு எழும் கேள்வி

இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற – மக்களுக்கு அதிகாரம் வழங்குகிற சபைகள் – கடந்த 19 மாதங்களாகக் கூடப் படாமல் இருப்பது உள்ளூர் வளர்ச்சிக்குப் பல தடைகளை ஏற்படுத்தி உள்ளது! அது மட்டுமல்லாமல், நம்பிக்கையோடு அந்த சபைகளை நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாக அதனைக் கட்டி எழுப்பி வந்த கிராம மக்கள் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். தங்கள் குரல் இனி ஒரு போதும் எடுபடாதா…? என ஏங்குகிறார்கள்..!  நாடாளுமன்றமும், சட்டமன்றமும் கூடி விவாதிக்கும் போது எங்களுக்காக நாங்கள் பேசும் ஒரு சபையை ஏன் முடக்க வேண்டும்? என அவர்கள் கேட்கும் கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதில்தான் என்ன?

கூட்டுவதற்கான அதிகாரம் யாருக்கு?

இந்த கூட்டங்களைக் கூட்டுவதற்கான அதிகாரம் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவருக்கு இருக்கிறது. வருடத்தில் நான்கு முறை கிராமசபைக் கூட்டங்கள் கூட்ட அறிவுறுத்துகிறது சட்டம். இந்த நான்கு நாட்களையும் தாண்டி உள்ளூர் தேவைகளுக்காகக் கூட்டம் கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் ஊராட்சித் தலைவர் நிச்சயமாக ஒரு கிராமசபையைக் கூட்ட முடியும்.

அவ்வாறுதான் கடந்த ஜனவரி 26 கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு தனது ஊருக்கான தேவையைக் கருத்தில் கொண்டு எங்கள் ஊர் கிராம சபையை நாங்கள் கூட்டுகிறோம் என அறிவிப்பு வெளியிட்டனர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றிய ராஜேந்திரபட்டினம் ஊராட்சி தலைவர் சுரேஷ் மற்றும் மன்ற உறுப்பினர்கள். ஆனால், மாவட்ட ஆட்சியர் அதற்குத் தடை விதித்து, ’கூட்டம் நடத்தக் கூடாது’ என வலியுறுத்தினார். அதற்கு ராஜேந்திர பட்டினம் ஊராட்சி தலைவர் தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கிறது.

சட்டப்படி கிராம சபையைக் கூட்டுவதற்கான வழிமுறைகளை கடைப்பிடித்து கூட்டத்திற்கான அறிவிப்பை நீங்கள் வழங்க முடியும் என்பதை ஊராட்சி பிரதிநிதிகளிடம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். குறிப்பாகக் கூட்டம் நடைபெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக கூட்டத்திற்கான அறிவிப்பு வழங்க வேண்டும்.

அக்டோபர்- 2 கிராம சபை!

இப்போது அக்டோபர் 2 கிராம சபைக்கு வருவோம். அதற்கு தமிழக அரசு தடைவிதிக்கும், விதிக்காது என்பது ஒருபுறம் இருக்கட்டும். கிராம சபை கூட்டத்திற்கான அறிவிப்பை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றம் வெளியிடலாம். அந்த அறிவிப்பு சென்னையிலிருந்து வர வேண்டும் என்பது அவசியம் அல்ல. சட்டப்படி 7 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு கொடுக்க வேண்டும் அவ்வளவே! ஆகவே, அக்டோபர் 2 கிராம சபைக்குச் செப்டம்பர் 24ஆம் தேதிக்கு முன்பாக அறிவிப்பு கொடுத்துவிடலாம். அதற்கு முன்பே கூட ஊராட்சி தலைவர்களும், கிராம மக்களும் தற்போதே கூட அந்த அறிவிப்பினை ஊராட்சி மூலம் வழங்க வழிவகை செய்யலாம். 24 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அதேபோல அரசு என்ன சொல்கிறது என்று எதிர்பார்த்து இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் அறிவிப்பு கொடுத்து கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என்பதே நாம் கவனிக்க வேண்டிய விஷயம். அரசு தடை விதிக்கும் போது அதை சட்டரீதியாக எதிர்கொள்ள நாம் தயாராவோம்.

உள்ளாட்சி அதிகாரம்

உள்ளாட்சிகளின் வலிமையே, அது  அரசியலமைப்பில் இடம்பெற்ற ஒரு அரசாங்கம் என்பதே ஆகும். மாநில அரசுக்கு இணையாக நமது ஊரில் கிராம சபை கூட்ட வேண்டிய அவசியத்தையும், நம் கருத்தாக முன்வைக்கக் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

கிராம சபையின் அவசியத்தை உணர்ந்து,

நமது ஊருக்கான முன்னேற்றமாக அதை அறிந்து,

அதை கூட்டுவதற்கான அதிகாரம் நம்மிடத்தில் இருக்கிறது

என்ற  புரிதலோடு அதை அணுகுவோம்.

கிராமசபை மீட்புப் பயணம்

இனியும் தமிழகத்தில்  கிராமசபைகளுக்குத் தடை இருக்கக் கூடாது, உரிய நேரத்தில் அவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மக்களின் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாகவும், கிராம சபையைக் கூட்டுவதற்கு ஊராட்சிக்கு உள்ள அதிகாரத்தைத் தெரியப்படுத்தவும் மக்களை நோக்கிப் பயணிக்கிறோம். ஆம் நண்பர்களே, கிராம சபையை மீட்டுருவாக்கம் செய்கிற பயணமாக அமைகிறது நம் கிராமசபை மீட்புப் பயணம்.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில் அக்டோபர் 2 கிராமசபைக்கு அரசு தடை ஏதும் விதிக்காது என நம்புவோம். நமக்கான முயற்சிகளை நாம் முன்னெடுப்போம். இந்த செய்தியை நாம் கிராமம் கிராமமாகக் கொண்டு சேர்ப்போம். அனைத்து மக்களும் – கிராமங்களில் வாழாத நகரங்களில் இருக்கும் ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை உள்ள அனைவருமே கூட இதற்கு ஆதரவளிக்க வேண்டும். ஊடக நண்பர்களும், சமூக ஆர்வலர்களும் ,பொதுமக்களும் இந்த கிராமசபை மீட்பு பயணத்திற்கு ஆதரவு நல்க வேண்டும்.

தமிழகத்தின் வரலாற்றில் வரும் காலங்களில் வலுவான உள்ளாட்சிகள் அமைந்தது, கிராமசபை அதற்கு அடிப்படையாக இருந்தது என்பதற்கான ஒரு துவக்கமாக இது அமையவுள்ளது!

அனைவரின் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வேண்டி நிற்கிறது கிராமசபை மீட்பு பயணக் குழு.

கட்டுரையாளர்; நந்தகுமார் சிவா

பொதுச் செயலர், தன்னாட்சி இயக்கம்

மின்னஞ்சல் : [email protected]

செல்பேசி; 9445700758

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time