இந்த காலகட்டத்தில் இந்தியா யாரால் ஆட்சி செய்யப்பட்டது என்று வருங்கால சரித்திர பாடபுத்தகத்தில் ஒரு கேள்வி எழுப்பபட்டால்,அதற்கு பதிலாக ’’குற்றவாளிகளால்!’’ என்ற பதிலைத் தான் வருங்கால மாணவன் எழுத முடியும்!
அந்த அளவுக்கு இந்தியாவில் தொடர்ந்து குற்றவழக்கு பின்னணி உள்ளவர்களே எம்.பி, எம்.எல்.ஏக்களாக ஜெயித்து ஆட்சிக்கு வரமுடிகிறது? இது எதனால்? ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற்று வரும் எம்.பி,எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது!
இந்தியா முழுமையும் முன்னாள், இந்நாள் எம்.பி,மற்றும் எம்.எல்.ஏக்கள் 4,442 பேர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதென்றால் இதற்கு யார் யாரெல்லாம் பொறுப்பேற்க வேண்டும் என்று காத்திரமான கேள்விகளை முன் வைக்கிறது இந்தக் கட்டுரை!
ஜனநாயக மாற்றத்திற்கான அமைப்பு தேர்தல்கள் தோறும் வெற்றி பெற்று வரும் எம்.பி,எம்.எல்.ஏக்களில் எத்தனை பேர் குற்றபின்னணி உள்ளவர்கள் என்ற தகவலை வெளியிட்டு எச்சரித்து வருகிறது! ஆயினும் தேர்தலுக்கு தேர்தல் ,மக்களைவை எம்.பிக்களில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் தான் உள்ளது!
2009 ஆம் ஆண்டு மொத்த எம்.பிக்களில் 158 பேர் குற்றபின்னணி உள்ளவர்கள்!
2014 ஆம் ஆண்டு வெற்றிபெற்றவர்களில் 184 பேர் குற்றபின்னணி உள்ளவர்கள்!
2019 ஆம் ஆண்டு மொத்த் எம்.பிக்களில் 233 பேர் குற்ற பின்னணி உள்ளவர்கள்!
இவர்கள் தான் இந்த நாட்டின் சட்டத்தை உருவாக்குபவர்கள் என்ற நிலையில் அன்றும்,இன்றுமான இந்த பட்டியலில் 413 பேர் ஆயுள் தண்டனை பெறக் கூடிய அளவுக்கு குற்றவாளிகள்! இன்னும் போட்டு உடைக்க வேண்டுமென்றால்,கொலை, மற்றும் கொலை முயற்சி,கற்பழிப்பு ஆகிய புகார்களில் சம்பந்தப்பட்டவர்கள் 29% த்தினர்!
Also read
இன்றைய எம்.பிக்களில் அதிக குற்ற பின்னணி உள்ளவர்களை பெற்றுள்ள கட்சி பாஜக தான்! இதன் எண்ணிக்கை 166. பணமோசடி,பிறர் சொத்துகளை பறித்தல்,பொது சொத்துகளை சேதப்படுத்தல்,கொலை முயற்சி,கொலை,கற்பழிப்பு ஆகிய பின்னணி இருந்தும் இவர்கள் எல்லாம் மீண்டும் எப்படி பொது வாழ்க்கையில் கால் ஊன்றமுடிகிறது என்று பார்த்தால் இவர்களுக்கு நீதிமன்றங்கள் தரும் வாய்ப்புகள் தான்!
தமிழகத்தில் ஜெயலலிதா வழக்கையே எடுத்துக் கொண்டால் 19 வருடம் நீதிமன்றங்களில் அது இழுபட வேண்டிய அவசியம் தான் என்ன? அப்படி இழுபட்ட வழக்கை நேர்மையான நீதிபதி குன்ஹா முடிவுக்கு கொண்டு வந்து தண்டனை வழங்கினார். அந்த நீதியை புறந்தள்ளி ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். இதனால்,மேல்முறையீடு செய்துவிட்டு தேர்தலில் நின்று மீண்டும் முதல்வரானார்! மீண்டும்,மீண்டும் சொத்துகளை வாங்கி குவித்தார்! கடைசியில் அவர் இறந்த பின்பு தான் குற்றவாளி என தீர்ப்பு வருகிறது! அவர் உயிரோடு இருந்தால், இந்த தீர்ப்பும் வெளி வந்திருக்குமா? என்று தான் மக்கள் பேசிக் கொண்டனர்! ஆக,செல்வாக்கானவர்கள் மீது நீதிபதிகளில் சிலர் கரிசனம் காட்டி வருவது தான் குற்ற பின்னணி உள்ளவர்கள் தொடர்ந்து பொது வாழ்க்கையில் உலா வரக் காரணமாகிறது!
சில பேர் மீது குற்றப் பத்திரிகை பதிவதே குதிரைக் கொம்பு தான்! அப்படியே பதிந்துவிட்டாலும் அதற்கு மேல் அது நகராது! அப்படியே நகர்ந்தாலும் வருடக் கணக்கில் மெதுவாக நகரும்.இதனால்,பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழந்து சோர்ந்துவிடுவார்கள்! இந்த அதிகாரமிக்க மன்றங்களில் இடம் பெற்றுவிட்ட குற்றபின்னணி உள்ளவர்களை கைது செய்யமுடியாமல் இடைக்கால தடை ஆணை பிறப்பித்துவிடும் நீதிமன்றங்கள்! தமிழகத்தை பொறுத்த அளவில் இவ்வாறு உயர் நீதிமன்றம் தடை பெற்றவர்கள் 88. உச்ச நீதிமன்றம் தடை பெற்றவர்கள் 4.
சரி எந்தெந்த மாநிலம் எவ்வளவு குற்றப் பின்னணியுள்ளவர்களை தேர்ந்து எடுத்துள்ளது என பார்க்கலாம்!
உத்திரபிரதேசம் – 1,217
பீகார் – 531
கேரளா -331
ஒடிசா – 331
மகாராஷ்டிரா – 330
தமிழ் நாடு – 324
கர்நாடகா -164
ஆந்திரா -106
தெலுங்கானா -118
குஜராத் -89
இந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டு, எண்ணிக்கை குறைந்த மாநிலங்களெல்லாம் ஒரளவு பரவாயில்லையே…. என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அந்தப் புரிதல் தவறானது.ஏனெனில், எண்ணிக்கை குறைவாகக் காட்டும் மதக் கலவரங்கள் அதிகமாக நடந்துள்ள குஜராத்தில் பல எம்.பி,எம்.எல்.ஏக்கள் மீது குற்றபத்திரிகை கூட பதிவு செய்யமுடியாத அளவு கெடுபிடி இருக்கவும் வாய்ப்புள்ளது.
சரி, மீண்டும் தமிழக விவகாரத்திற்கு வருவோம்.
தமிழகத்தில் தற்போதைய எம்.பிக்களில் 26 பேரும்,எம்.எல்.ஏக்களில் 113 பேரும், முந்தைய எம்.பிக்களில் 36 பேரும் முந்தைய எம்.எல்.ஏக்களில் 162 பேரும் குற்றபின்னணி உள்ளவர்கள்!
2018 ஆம் ஆண்டு,அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு தீபக்மிஸ்ரா அவர்கள் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டு இப்படிப்பட்டவர்கள் வரவுள்ள தேர்தலில் நிற்க தடை வழங்க கோரி ஒரு வழக்கு வந்தது! ஆனால், அந்த அமர்வு தடை வழங்க மறுத்துவிட்டது. இந்த விஷயத்தில் நாம் நீதிமன்றங்களை குறை சொல்லமுடியாது.ஆட்சியாளர்களுக்கு இந்த விவகாரத்தில் ஒரு ’பொலிடிகல் வில்’ இருந்தால் மட்டுமே இது போன்ற சட்டங்கள் சாத்தியமாகும்!
எத்தனையோ சட்டங்கள்,புதிய மசோதாக்கள்,கவன ஈர்ப்புகள் நடந்தும் இந்த விவகாரங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றதேயன்றி,குறைவதாகத் தெரியவில்லை! அரசியல் செல்வாக்கு நீதிமன்ற செயல்பாடுகளில் ஏற்படுத்தும் நிர்பந்தங்களே இந்த மோசமான நிலைமைக்கு காரணமாகும்! ஆரோக்கியமான அரசியல் சூழல் மட்டுமே நீதித்துறை உள்ளிட்ட அனைத்திலும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரமுடியும்!
Leave a Reply