மீண்டும் சத்துணவு முட்டையில் ஊழலா…?

-சாவித்திரி கண்ணன்

தமிழகத்தில் பள்ளிகளில் சத்துணவு மையங்களுக்கு தினசரி 80 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வரும் திங்களன்று (செப்டம்பர் 13) நடக்க உள்ளதாகத் தெரிகிறது. இந்த முறை ஒரே நபருக்கு அந்த ஆர்டரைத் தராமல் பரவலாக பகிர்ந்து தரலாம் என தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது! தமிழகத்தில் குறிப்பாக நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோழிப் பண்ணைகள் உள்ளன. அவர்கள் இந்த டெண்டரில் நேரடியாக பங்கு பெற முனைப்பு காட்டி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு ‘லாபி’ செய்வதாகத் தெரிய வந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் நடந்த அக்கிரமமான ஊழல்;

திருச்செங்கோடைத் தலைமையகமாகக் கொண்ட கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கும், அதன் பினாமியான நாச்சுரல் புட் புராடக்ட்ஸ் மற்றும் சுவர்ணமுகி எண்டர் பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே அரசு பள்ளிகள், அங்கன்வாடிகள் அகியவை தொடர்பாக முட்டை, சத்துமாவு,பருப்பு ஆகிய அனைத்தையும் வழங்கி வந்தது.

ஒரு கோழிப் பண்ணை கூட வைத்திராத இந்த நிறுவனம் 69 லட்சம் மூட்டைகளை வாரம் ஐந்து நாட்கள் வினியோகம் செய்யும் ஆர்டர் பெற்றது வினோதம் தான்! சந்தையில் மொத்த விற்பனையில் 3.30 பைசாவிற்கு விற்ற முட்டையை அரசுக்கு 4.51 பைசாவிற்கு விற்பனை செய்தது 2014-15-16 ஆம் ஆண்டுகளில்! கிட்டதட்ட இதே போலத்தான் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இவர்கள் மட்டுமே இதே ரீதியில் செயல்பட்டனர். இது மட்டுமின்றி, இவர்கள் மிக அதிக விலைக்கு விற்ற முட்டைகள் வழக்கமான (60கிராம்) முட்டையை விட குறைந்த எடையுள்ள (40கிராம்) சிறிய முட்டைகளாகவுமிருந்தன. இதை ‘புல்லட் முட்டைகள்’ என்பர்.இந்த முட்டைகளை வினியோகம் செய்த வகையில் அதிமுக அரசு நாளொன்றுக்கு மட்டுமே ஒரு கோடி ஆதாயம் அடைந்ததாக சொல்லப்பட்டது.

இவர்கள் சுமார் 400 கோழிப் பண்ணைகளில் இருந்து மிகக் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து சந்தையைவிட அதிக விலைக்கு அரசுக்கு விற்றதன் மூலமாக, ”மூட்டை கொள்முதலில் அரசுக்கு சுமார் 5,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று அன்றைய மத்திய அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக பேசினார். அதையடுத்து 2018 ஆம் ஆண்டு இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 78 இடங்களில் சி.பி.ஐ ரெய்டு நடத்தப்பட்டது. அதில் பல கோடி பணம் ரொக்கமாக கண்டெடுக்கப்பட்டது. பத்து கிலோ தங்கம் பிடிபட்டது. இது மட்டுமின்றி, இவர்கள் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்களும் கிடைத்தன.

”முட்டையில் ஊழல் செய்ததன் மூலம் ஏழை பள்ளிக் குழந்தைகள் வயிற்றில் அடித்து ஊழல் செய்யவும் அதிமுக அரசு தயங்காது என்பது தெரிய வருகிறது” என கனிமொழி கூறினார்.

ஆனபோதிலும், அடுத் தடுத்த ஆண்டுகளிலும் இதே நிறுவனமே ஆர்டர் பெற்று இயங்கியது. இதன் மூலம், ‘அதிமுக ஆட்சியாளர்களின் ஊழல்களில் தனக்குரிய கமிஷனை மத்திய பாஜக அரசு ரெய்டுகள் நடத்தி மிரட்டி பெற்று வந்துள்ளது’ என்ற புரிதலே அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் ஏற்பட்டது.

தேர்தல் நேரத்தில் இந்த முட்டை ஊழல் குறித்து அம்பலப்படுத்திய ஸ்டாலின், ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தகுந்த நடவடிக்கை எடுப்போம்’’ என தெரிவித்திருந்தார். ஆனால், இது வரை இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை பாயவில்லை. தற்போது நடக்கவுள்ள டெண்டரிலும் இந்த நிறுவனம் பங்கு பெறும் எனவும் தெரிய வந்துள்ளது. ”இந்த கிறிஸ்டி நிறுவனமே ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் வினியோகம் செய்வதிலும் சுமார் இரண்டாயிரத்து சொச்சம் கோடி ஊழல் செய்தது’’ என அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியது. இன்று வரை இந்த நிறுவனம் பிளாக் லிஸ்டில் வைக்கப்படவில்லை என்பதும் கவனத்திற்கு உரியது.

இது ஒரு புறமிருக்க..,கடந்த வாரம் வரையிலும் மொத்த சந்தையில் 3.50 பைசாவிற்கு விற்ற முட்டை திடீரென்று 4.50 என்பதாக உயர்ந்தது. இது அனைத்து கோழிப்பண்ணையாளர்களும் சேர்ந்து டெண்டரின் போது சந்தை மதிப்பை அதிகப்படுத்துவதற்காக செய்த ‘லாபி’ என தெரிய வந்துள்ளது. ஆனால், இதனால் பல லட்சம் முட்டைகள் தேங்கியதைத் தொடர்ந்து, இன்று காலை நான்கு ரூபாய் ஐந்து பைசாவிற்கு இறங்கியது. இருந்தும் முட்டை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒபன் மார்க்கெட்டில் மொத்த கொள்முதல் 3.50 பைசாவிற்கே விற்கப்பட்டது, விற்கப்பட்டும் வருகிறது.

நாம் இது குறித்து இந்திய முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சென்னை தலைவர் மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரித்த போது, ”இல்லையில்லை நீங்கள் சொல்வது போல கிடையாது. கடந்த ஒரு மாதமாகவே தமிழகத்தில் மொத்த விற்பனை விலை 4.50 தான். இந்தியா முழுவதும் இந்த விலை தான் .கோழிக்கான தீவனத்தின் விலை மிக அதிகவிலைக்கு விற்கும் போது இந்த விலை வைத்தால் தான் கட்டுப்படி ஆகும்’’ என்றார்.

”ஆந்திராவில் சற்று குறைவாக விற்கிறதே..?” என்ற போது அங்கு கோழிக்கான மக்காசோளம் அதிகம் விளைகிறது. இந்தியா முழுமையும் ஒரு நாளைக்கு 28 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன! தமிழ் நாட்டில் தினசரி நாலரை கோடி முட்டைகள் தான் உற்பத்தி. ஆனால், அங்கோ தினசரி எட்டரை கோடி விற்பனையாகிறது…’’ என்றார்.

ஏற்கனவே அறம் இதழில் நாம் ஒரு  Rafoll retails என்ற போலி முட்டை நிறுவனம் முன்பணம் கட்டினால் ஆண்டு முழுவதும் நம்ப முடியாத குறைந்த விலைக்கு முட்டையை நேரடியாகவே வீடுகளுக்கு வினியோகம் செய்வோம் என தினசரிகளில் மூழு பக்க விளம்பரம் தந்தது. இது தொடர்பாக அறத்தில் ஒரு கட்டுரை வெளியானதை தொடர்ந்து அந்த நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டது.

ஏழைக் குழந்தைகளுக்காக மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் பணத்தை எப்படி சிக்கனமாக பயன்படுத்தி அரசுக்கு இழப்பில்லாமல் செயல்பட வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுடன் திமுக அரசு செயற்படும் என நம்புகிறோம். ஆகவே, டெண்டர் விடும் போது பக்கத்து மாநில நிலவரத்தையும் கணக்கில் எடுத்து அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time