துரத்தி அடிக்கப்பட்டவரை ஏன் தூக்கி வருகிறார்கள்…?

-சாவித்திரி கண்ணன்

எந்த காலகட்டத்திலும் நடந்திராத வகையில் ஒரு கவர்னர் நியமனம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. தமிழக கவர்னராக ரவீந்திர நாராயண ரவி (ஆர்.என்.ரவி) நியமிக்கப்படுகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் இ.பி.எஸ், ஒ.பி.எஸ், மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் தொடையைத் தட்டிக் கொண்டு, கும்பிடு போட்டு வரவுள்ள கவர்னரை வரவேற்று அறிக்கை வெளியிட்டனர்! ”இது என்னடா வம்பா போச்சே முதல்வராக இருக்கும் தான் வரவேற்பு அறிக்கை வெளியிடாவிட்டால் வேறுவிதமாக புரிந்து கொள்ளப்படுமே..”என ஸ்டாலினும் வரவேற்பு அறிக்கை தந்துவிட்டார்.

ஆனால், காங்கிரஸ் தரப்பு சுதாரித்துக் கொண்டது. அது தேசிய கட்சியல்லவா..? வரவுள்ள கவர்னரின் யோக்கியதையையும், பாஜகவின் உள் நோக்கத்தையும் அது பகிரங்கப்படுத்தி அறிக்கை தந்தது. அவ்வளவு தான் அடுத்து கம்யூனிஸ்டு கட்சிகளும், விடுதலை சிறுத்தைகளும் கவர்னர் நியமனத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுவிட்டனர்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது சர்ச்சைக்குரிய நபரை பிரச்சினையின்றி எல்லோரும் ஏற்க வேண்டும் என்பதற்காக பாஜகவின் பாதம் தாங்கிகள் மூவர் அறிக்கைவிட தூண்டப்பட்டனர். அதையடுத்து தேவையில்லாமல் ஒரு நெருக்கடியை முதல்வர் மீது திணித்து ஆழம் பார்க்கிறார்கள்! அவரும் வருவதை எதிர் கொள்வோம் என எண்ணி ஒரு அறிக்கை விடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்!

‘ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கவர்னராக வருவதற்கு முன்பே அவசரப்பட்டு எதிர்க்கத்தான் வேண்டுமா..?’ என்று எல்லோரையும் போல நமக்கும் தோன்றியது.

”மிகப் பெரிய உளவுத் துறை வல்லுனர். வடகிழக்கு மாநில அரசியலில் கை தேர்ந்தவர்! தேசிய பாதுகாப்பு அமைப்பின் துணை ஆலோசகராக இருந்தவர். மோடியின் நேரடி நம்பிக்கையை பெற்றவர். ஆர்.எஸ்.எஸ்சின் ஆசீர்வாதம் பெற்றவர், நல்லவர், வல்லவர்..”என பாஜகவும் தன் தரப்பில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளது.

ஆகவே, ‘இவரை அவசரப்படாமல் சரியாக புரிந்து கொள்வோமே..’ என்ற உணர்வுடன் நாகலாந்தில் இருந்து வெளிவரும் பல பத்திரிகைகளை தேடிப் பார்த்தோம்.

2019ல் நாகலாந்து கவர்னராக நியமிக்கப்பட்ட இவரை கடந்த ஓராண்டுக்கும் மேலாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற போராட்டங்கள் அங்கு நடந்துள்ளன. நாகலாந்து பழங்குடியின அமைப்புகள் அனைத்துமே இதில் ஒன்றுபட்டு அவரை எதிர்த்துள்ளன என தெரிய வருகிறது. இவர் கவர்னராக நியமிக்கப்பட்டவுடன் பழங்குடியின அமைப்புகளிடையே பிரிவினையை உருவாக்கும் நோக்கத்தில் சில அமைப்புகளை புறக்கணித்து ஒரு சிலவற்றை அங்கீகரித்து அவர்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பது போல ஐஸ் வைத்து பேசியுள்ளார். ஆனால், காலப் போக்கில் அனைவரையும் ஒட்டுமொத்தமாக காலி பண்ண வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது.

அதனால், அவரால் ஒரு காலத்தில் முக்கியத்துவம் தரப்பட்ட என்எஸ்சிஎன் (ஐஎம்) குழுவே பொறுமை இழந்து இந்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதி பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை அகற்ற வேண்டும் என்று சென்ற ஆண்டு குரல் கொடுத்தது. நாகாலாந்து அமைதிக்கு அரசியல் தீர்வு கிடைக்க தடங்கலாக ஆர்.என்.ரவி இருப்பதாக அந்த குழுவின் தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், நாகாலாந்து தேசிய கவுன்சில் காப்லாங் (என்எஸ்சிஎன்-கே) பிரிவின் அங்கமான நிகி சுமி பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அரசு டெல்லியில் சண்டை நிறுத்த உடன்பாட்டில் சமீபத்தில் கையெழுத்திட்டது.

அதன்படி, அந்த குழுவைச் சேர்ந்த 200க்கும் அதிகமான ஆயுதக்குழுவினர் அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கையில் பங்கெடுக்க ஆர்.என் ரவியை விலக்கி கொள்ள வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக முன் வைத்தே பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளனர். அதன்படியே மத்திய உள்துறை அமைச்சகம், ‘ஆர்.என்.ரவியை விலக்கி கொள்ளாமல், அங்கு ஒரு சூமுகமான தீர்வை எட்டமுடியாது என்பது மட்டுமல்ல, இவரால் மோடிக்கும் எதிர்ப்பு வலுக்கிறது’ என முடிவெடுத்து பிரதமரிடம் கூற அவர் தமிழகத்திற்கு கவர்னராக நியமிக்கப்படுகிறார்.

ஆர் என் ரவியை பொறுத்த வரை அவர் நரித்தனம் மிக்க ஒரு உளவு அதிகாரியாக நீண்ட காலம் வளைய வந்தவர்! காஷ்மீர் பிரச்சினைகளிலும் கடும் விமர்சனங்களுக்கு ஆளானவர். தீவிர வலதுசாரி சிந்தனையாளர். அப்பாவி பழங்குடிகளை நம்ப வைத்து கழுத்தறுத்தவர். அவர்களுக்கு எதிரான கருத்துகளை அவ்வப்போது உதிர்த்து கடும் சர்ச்சைக்கு ஆளானவர். ஆகவே தான் அவருக்கும் பல மக்கள் அமைப்புகளுக்கும், முட்டல்களும், மோதல்களும் ஏற்பட்டுள்ளன.

இது ஒருபுறமிருக்க, நாகலாந்தில் பாஜக ஆதரவுடன் உள்ள கூட்டணி அரசு தான் ஆள்கிறது! அந்த ஆட்சியாளர்களே இந்த கவர்னர் அடிக்கடி அத்து மீறி அரசு விவகாரங்களில் தலையிடுகிறார், இடையூறு செய்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இத்தகு சூழலில் தான் ஒன்றிய பாஜக அரசு ஆர்.என்.ரவியை இன்னும் அங்கு வைத்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறது!

ஆர்.என்.ரவி கவர்னர் பதவியில் இருந்து விலக்கப்பட்டதற்கு நாகா மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகள் பட்டாசு கொளுத்தி கொண்டாடி உள்ளனர் என்பதில் இருந்து, இவர் அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டவர் என நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், இவ்வளவு நச்சுமிக்க நபரை சும்மா வீணடிப்பதா..? நமக்கு பிடிக்காதவர்கள் மீது ஏவி வேடிக்கை பார்க்க வேண்டுமே! இலட்சத்தீவுக்கு ஒரு நச்சு அதிகாரியை நியமித்து இஸ்லாமியர்களை இக்கட்டில் ஆழ்த்தியது போல, தமிழகத்தில் புதிதாக பொறுப்பு ஏற்று உள்ள திமுக ஆட்சியாளர்களை அச்சுறுத்துவதற்கு ஆகச் சிறந்த நபர் கிடைத்துவிட்டார் என இங்கே அனுப்புகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தீராத வயிற்று எரிச்சலுடன் தினசரி திட்டித் தீர்த்து எழுதி வரும் தினமலர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி போன்ற ‘பிராமண லாபி’ இவர் நியமனத்தில் வலுவாக உள்ளது என்பது மட்டும் நன்கு தெரிகிறது!

கவர்னர் நியமனத்தில் தமிழக கட்சிகள் பீதி அடைவதாக முதல் பக்க தலைப்பு செய்தி போட்டு தினமலர் பூரிக்கிறது. மேலும் அந்த செய்தியில் தினமலர் இவ்விதம் குறிப்படுகிறது; தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டம்,வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பாதுகாப்பு துறையில் இருந்து ஒருவர் கவர்னராக வருவது பலருக்கு பீதியை கிளப்பி உள்ளது…’’ என தினமலர் எழுதியுள்ளதிலேயே இவர்களின் உள்நோக்கம் என்னவென்று புரிந்து கொள்ளலாம்.

அத்துடன் சமீபத்தில் திமுக ஆட்சியாளர்களை ஒடுக்கி வைக்க 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என பிரதமருக்குக்கு சுப்பிரமணியசாமி எழுதிய கடிதத்தின் ஒரு சிறுபகுதியை  இங்கே தந்துள்ளோம். வாசகர்கள் படித்து தெளிவு பெற இதுவே போதுமானது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது மக்களால் ஏகோபித்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிமுகவின் அதீத பணபலம், பாஜகவின் அராஜக அதிகாரபலம் ஆகியவற்றை முறியடித்து, மக்கள் தந்த தீர்ப்பால் ஆட்சிக்கு வந்துள்ள கட்சியையும், அதன் ஆட்சியையும் கவர்னர் என்ற அதிகார பலத்தைக் கொண்டு ஆட்டி வைக்கலாம் என மனப்பால் குடிப்பவர்கள் ஒரு யதார்த்ததை புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றை அதிகாரம், ஒரே கலாச்சாரம், வெறுப்பு, வன்மங்களை வளர்க்கும் அரசியல் தமிழகத்தில் எடுபடாது. நாகலாந்து பழங்குடியின மக்களிடம் பெற்ற அனுபவங்களில் கவர்னர் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளாதவராக இருப்பார் என்றால், அவருக்கு திராவிடர்கள் – குறிப்பாக – தமிழர்கள் நல்ல பாடம் கற்றுத் தந்து அனுப்புவார்கள். சுயமரியாதை உணர்வில் நாகர்களும், தமிழர்களும் வேறு, வேறு அல்லர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time