அதிமுகவிற்கு விளக்கம் அடிமை திமுகவா…?

-சாவித்திரி கண்ணன்

நீட் விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு என்னவென்பது இன்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. ”நீட் தேர்வை நிரந்தரமாக விலக்க கோரும் மசோதாவை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தவுடன் படபடவென்று திமுக மீது குற்றம் சுமத்திவிட்டு அதிமுக வெளி நடப்பு செய்துள்ளது!

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசியிருப்பதை கவனியுங்கள்;

நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதை எதிர்த்து யாரும் செயல்பட முடியாது. மாநில அரசுகள் இதை எதிர்க்க முடியாது. ஆனாலும், நாங்கள் சட்ட போராட்டம் தொடர்ந்து நடத்தினோம். உச்ச நீதிமன்றம் நீட்டை உறுதிபடுத்திவிட்ட பிறகு எப்படி எதிர்க்க முடியும்? தமிழ்நாடு தவிர வேறு மாநிலங்கள் எதுவும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு மட்டும்தான் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறது…திமுகதான் மக்களை ஏமாற்றியது…” என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறையை தீர்மானிக்க மாநில அரசிற்கு உரிமை உண்டு என்ற அடிப்படை உண்மையை அவர் இத்தனை நாள் உணராமல் இருந்துள்ளார் என்பது தான் அவரது பேச்சின் சாராம்சமாகும்!

இந்த விவகாரத்தில் தெளிவான புரிதலுக்கு வர கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் சிறுவிளக்கம் போதுமானது;

”நீட் தேர்வை குஜராத் மாநில மக்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர். அப்போது முதல்வராக இருந்த மோடியும் அந்த எதிர்ப்பை தானும் பிரதிபலித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆகவே, 2014ல் மோடி பிரதமரானவுடன், பேராசிரியர் ரஞ்சித் ராய் சௌத்ரி தலைமையில் வல்லுநர் குழு அமைத்தார். அந்த வல்லுநர் குழு நீட் தேர்வை பரிந்துரைக்கவில்லை. புதிதாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கவும், அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தவும் பரிந்துரைத்து.

அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, தானும் ஒரு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில் சுயநிதி மருத்துவக் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் மிக அதிக கட்டணம், அதன் விளைவாக பணம் என்பது மட்டுமே தகுதி என்ற நிலை ஏற்பட்டு, தரமற்ற மருத்துவர்கள் உருவாக வழி செய்கிறது என்பதை விளக்கிக் கூறி, தனியார் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் நடைபெறும், பணத்தை மட்டுமே குறியாகக் கொண்ட மாணவர் சேர்க்கையை ஒழுங்குப்படுத்த,  அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடத்தவும், அத்தகைய‌ நுழைவுத் தேர்வை ஏற்காத மாநிலங்களைத் தவிர்த்துவிட்டு நுழைவுத் தேர்வை நடத்தவும் மிகத் தெளிவாகப் பரிந்துரைத்தது.

நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த பரிசீலிக்கும் படி இந்திய அரசிற்கு  ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2016, மே 2 அன்று உத்தரவிட்டது.

ஆக, வல்லுநர் குழுவலோ, நாடாளுமன்ற நிலைக் குழுவாலோ, உச்சநீதிமன்றத்ததாலோ “நீட்” பரிந்துரைக்கப்படவில்லை.

மருந்துக் கல்வி கட்டுக்கடங்காமல் வணிகமயம் ஆவதை தடுத்திடுவதே வல்லுநர் குழு, நாடாளுமன்ற நிலைக் குழு, உச்சநீதிமன்ற ஆகியவற்றின் நோக்கமாக இருந்தது.

இந்த நோக்கத்திற்கு நேர் எதிராக, நிதி ஆயோகக் பரிந்துரை அமைந்திருந்தது. தனி முதலாளிகளின் தாசானுதாசர்களான நிதி ஆதியோக் நபர்கள் தான், ”தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை அரசு கட்டுப்படுத்த முயன்றால் தனியார் மருத்துவக் கல்லூரி திறக்க முன்வரமாட்டார்கள், அதனால் மருத்துவர் பற்றாக்குறை ஏற்படும்” என்று எச்சரித்து, நீட் தேர்வை கட்டாயப்படுத்தியது. ஆக, இந்த நீட் தீமை என்பதை ‘நிதி ஆதியோக்’ எனப்படும் நிதி அயோக் தான் திணித்தது.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 246 யின் கீழ் 7 வது அட்டவணை பட்டியல் இரண்டில் வரிசை 32ல் பல்கலைக்கழகமங்களை உருவாக்க, ஒழுங்குப்படுத்த, கலைக்க மாநில அரசிற்கு மட்டுமே உரிமை உண்டு. அதற்கான சட்டத்தை மாநில சட்டப் பேரவையே உருவாக்க முடியும்.”

இந்த அடிப்படை உண்மை தெரியாத எடப்பாடி பழனிச்சாமி நான்கு வருடம் முதல்வராக இருந்துள்ளதோடு, ஒப்புக்கு சப்பாக தானும் நீட்டை எதிர்த்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பிவிட்டு, அது மீண்டும் குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பட்டதைக் கூட மறைத்து கமுக்கமாக தன் ஆட்சிகாலத்தை கடந்துவிட்டார். ஆனால், முறையாகவும், முழு மனதுடனும், தெளிவான பார்வையுடனும் நீட்டை எதிர்க்கிறது திமுக என்பதற்கு  இன்றைக்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையே சாட்சியாகும்!

வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டமாகாது தம்பி,

பிறர் வாழ நினைத்து உழைப்பவர் சொல்வது எல்லாம் சட்டமாகணும் தம்பி!

நல்ல சமத்துவம் வந்தகாணும்!

அதிலே மகத்துவம் உண்டாகணும்!

என்ற எம்.ஜி.ஆர் படப்பாடலை பழனிச்சாமியே மறந்துவிட்டால் எப்படி..?

தங்களால் சாதிக்க முடியாத ஒன்றை திமுக முயற்சிக்கும் போது பழனிச்சாமிக்கு ஏன் பதற்றம்..?

மருத்துவக் கல்வியில் வணிகமயத்தை ஒழிப்பதற்காக என்று கதை அளக்கப்பட்ட “நீட்”, மருத்துவக் கல்விக் கட்டணத்தை குறைக்கவில்லை மாறாக இரட்டிப்பாக்கிவுள்ளது. “நீட்” முன்பு சட்டத்திற்கு புறம்பாக வசூலிக்கப்பட்ட நன்கொடைத் தொகை, “நீட்” நடைமுறைக்கு வந்த பின் சட்டப்படியான கட்டணமாக மாறிவிட்டது என்பது தெரிந்தும் எதிர்க்காவிட்டால் எப்படி..?

இது தமிழக மாணவர்களின் வாழ்வாதார பிரச்சினை மட்டுமல்ல, நீட் தேர்வை அனுமதிப்பதன் மூலம் மருத்துவ கல்வியில் எளிய, நடுத்தர வர்க்கத்தை நாம் முற்றிலும் விலக்கி வைப்பதோடு, மருத்துவத்தை மனிதாபிமற்ற வணிகமாக மட்டும் அணுகும் தன்மையால் எதிர்கால சமூகமே பெரும் இருளுக்கு தள்ளப்படும்!  அனிதா தொடங்கி நேற்று மரணித்த தனுஷ் உள்ளிட்ட 14 மாணவச் செல்வங்கள் மறைந்த பிறகும், மனசாட்சியே இல்லாமல் ”நீட்டை எதிர்க்க முடியாது..” எனப் பேச எடப்பாடிக்கு எப்படித் தான் மனம் வந்ததோ..?

விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, சிறுபான்மையினர் விரோத குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவு என்ற ரீதியில் தற்போது நீட் விவகாரத்தில் இரட்டை வேடம்!

இன்னும், ‘பாஜகவிற்கு வேலை செய்வதே அரசியல்’ என்று அதிமுக தொடருமானால், ‘அந்த கட்சி அழிவதை  தடுக்க யாரால் முடியாம்..?  அண்ணா திமுகவின் பெயர், இனி அடிமை திமுக என வரலாற்றில் பதிவாகுமோ…!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time