ஆட்சித் தலைமையில் அடிமைகளை மாற்றும் மோடி – அமித்ஷா ஸ்டைல்!

-ச.அருணாசலம்

கர்நாடகாவின் எடியூரப்பா, உத்திரகாண்டின் திரிவேந்திர சிங், அஸ்ஸாமின் சர்வானந்தா ஆகியோரைத் தொடர்ந்து அதிரடியாக குஜராத்தில் விஜய் ரூபானி முதல்வர் பதவியிலிருந்து தூக்கப்பட்டுள்ளார். ஏதோ ஒரு சதுரங்க ஆட்டத்தில் கிங் வீழ்த்தப்படுவது போல மோடியும், அமித்ஷாவும் தங்கள் சி.எம் கேமில் காய்களை நகர்த்திக் கொண்டுள்ளனர்! குஜராத்தில் நடந்த அரசியல் என்ன..?

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா ஊடகங்களுக்கே ஒரு ஆச்சரியத்தை கொடுத்த செய்தியாகும்! அரசியல் சாணக்கியர்களாக மீடியாவால் பாராட்டப்பட்ட மோடி – ஷா தலைமை இந்த முடிவிற்கு வர என்ன காரணம்? குஜராத் மாடல் ஆட்சியும், அரசாங்கமும் ஏன் மாற்றத்திற்குள்ளாகியது?

ஓரிரு வாரங்கள் முன்புதான் விஜய் ரூபானியின் ஐந்தாண்டு நிறைவு விழா விமரிசையாக குஜராத் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ‘ஹை கமான்ட் ‘ ( மோடி & ஷா) இப்பொழுது ரூபானியை ஏன் பதவி விலகச் செய்தனர்?

விஜய் ரூபானி 2016ல் ஆனந்தி பென் பட்டேலுக்கு மாற்றாக முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

ஆனந்தி பென்,  பட்டீல் போராட்டத்தை சரிவரக் கையாளவில்லை என்ற நிலையில் அவருக்கு மாற்றாக ஆச்சர்யமூட்டும் வகையில் விஜய் ரூபானி அமீத் ஷாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆம், நிதின் பட்டேல் (துணை முதல்வர், பட்டீல் வகுப்பின் தலைவர்) தான் தேர்ந்தெடுக்கப் படுவோம் என்ற மேலிட உறுதி மொழியை நம்பி இனிப்புகளுடன் காத்திருந்த வேளையில் விஜய் ரூபானி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

விஜய் ரூபானி ஜைன வகுப்பை சேர்ந்தவர், ஜைன சமூகம் குஜராத்தில் மிகச்சிறு பான்மையினரே!

 விஜய் ரூபானி மீது பல்வேறு புகார்களும் விமர்சனங்களும் எழுந்தன. அவர் கொரோனா அலைத்தாக்குதலை எதிர்கொண்டவிதம் பெரும் கொந்தளிப்பை குஜராத் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஆனால் அதையெல்லாம் மறைத்து,புள்ளிவிவரங்களை ஜோடித்து பாஜக தலைமையும், குஜராத் அரசும் ” குஜராத் மாடல்” அரசுதான் கோவிட் தாக்குதலை மிகச்சரியாக எதிர்கொண்டு மக்களை காப்பாற்றியது என்று புளுகுமூட்டையை நாடுமுழுவதும் அவிழ்த்துவிட்டதை குஜராத் மக்களே சகித்துக்கொள்ளவில்லை.

மோடி நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு செய்த ‘கொரோனா சேவை’ யைத்தான் விஜய் ரூபானி குஜராத் மக்களுக்குச் செய்தார்.குஜராத் முழுவதும் மக்களின் வரிப்பணத்தில் ‘அரசு சாதனையை ‘பாராட்டி விளம்பர கட்வுட்கள் பல வைத்தனர், ஆனால் குஜராத் உயர் நீதிமன்றம், மாநில அரசின் கையாகாலாத்தனத்தை கணக்கில் கொண்டு, அகமதாபாத் மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் மக்கள் படும் வேதனையை தானே முன்வந்து கணக்கில் எடுத்து பல்வேறு உத்தரவுகளை அதிரடியாக பிறப்பித்தது மறந்து விட்டதா? குஜராத் அரசை கடுமையான வார்த்தைகளால் கண்டனம் செய்ததும்  மறந்து போயிற்றா?

விஜய் ரூபானி பட்டீதார் பிரச்சினையை (பட்டேல் வகுப்பின மக்களை) சரியாக கையாளவில்லை , அதனால்தான் பாஜக தலைமை இவரை தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கும் தறுவாயில் வேறுவழியின்றி கழட்டி விடுகிறதென்று ஒருசில பத்திரிக்கைகளும் கருத்து தெரிவித்துள்ளன.

பாவம் , ரூபானி என்ன செய்வார். அவரை வேலைக்கு அமர்த்தியதே பாஜக தலைமை இடும் கட்டளையை ஏன் ஏதற்கு என்ற எந்த கேள்வியுமில்லாமல் நிறைவேற்றுவதற்குத்தான்!

எந்த முடிவும், எந்த உத்தரவும் அவர் தானாக எடுத்ததில்லை, தானாக நிறைவேற்றியதில்லை.

இதற்கென்று டெல்லியால் நியமிக்கப்பட்ட சில முன்னாள் உயரதிகாரிகள் டெல்லியின் கண்ணும் காதுமாக குஜராத்தில் இருக்கின்றனர், மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து மாநில அதிகாரிகளும் அவர்களிடமே தகவல்களை, நடப்புகளை தெரிவிப்பார்கள், முதல்வரிடம் அல்ல. அவர்கள் கொடுக்கும் தகவலடிப்படையில் உத்தரவுகள் டெல்லியில் பிறப்பிக்கப்பட்டு அது விஜய் ரூபானிக்கு தெரிவிக்கப்படும், அவர் அதை வெளியிடுவார்,அவ்வளவுதான்! அதாவது சிறந்த அடிமைகளே முதல்வராக்கப்படுவார்கள்!

உண்மையில் அவர் ஒரு நல்ல தலையாட்டி பொம்மை என்பது ஊரறிந்த ரகசியம்! அரசியல் முடிவுகளும், நிர்வாக ரீதியான முடிவுகளும் ஏன் மாறுதல் உத்தரவுகளும்கூட ரூபானி தானாக எடுத்ததில்லை.

இதில் எல்லாப் புகழும் பாஜக தலைமைக்கே என்று ரூபானி நினைப்பதில் தவறேதுமுண்டோ?

இந்த மாதிரியைத்தான் பாஜகவினர் டபுள் என்ஜின் மாடல் என்கிறார்கள் -அதாவது மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி (பாஜக) ஆட்சி செய்து முன்னேற்றத்தை கட்டியமைப்பார்களாம். யாருடைய முன்னேற்றம் என்று சொல்ல வேண்டியதில்லை.

போலி இந்துத்துவ மேட்டுக்குடி அரசியலால் சமூக தளதில் ஏற்பட்டுள்ள அதிருப்திகள், ஜிக்னேஷ் மேவானி போன்றவர்களால் ஏற்பட்டுள்ள தலித் மக்களின் எழுச்சி, சமீப காலமாக காங்கிரசை பின்னுக்குத் தள்ளி அங்கே ஆம் ஆத்மி எடுத்து வரும் வேகமான வளர்ச்சி..ஆகிவற்றை அடிமை முதல்வர் எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்தார்!

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் ஆட்சி செய்யும் பாஜக ,  குஜராத் சமூகத்தில் ஊடுருவாத அமைப்புகளோ, சங்கங்களோ மற்றும் கூட்டமைப்புகளோ இல்லை என்றுதான் கூற வேண்டும் . ஊடுருவுவது மட்டுமின்றி, அவற்றை ஆட்டிப்படைத்து தனது கட்டுக்குள் வைத்திருப்பது எல்லோரும் அறிந்த உண்மைதான்!

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள பாஜகவினர், பல்கலைக்கழகங்கள், மாணவர் அமைப்புகள், சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்றழைக்கப்படும் வணிக கூட்டமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் வங்கிகள், ஜாதிய அமைப்புகள், மத நிறுவனங்கள்,மடாலயங்கள் , விளையாட்டு அமைப்புகள் மற்றும் கழகங்கள்ஏன் கிரிமினல் தாதாக்கள் உலகத்தையும் விட்டுவைக்காது எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளனர் ஆளும் பா ஜ கட்சியினர். இவ்வளவு ஆதிக்கம் இருந்தும் அடுத்து வரும் (2022) தேர்தலில் வெற்றிபெறுவது சிம்ம சொப்பனமாக உள்ளது பாஜக தலைமைக்கு!

சமுதாயத்தின் அடித்தட்டு மக்களும், தலித் சமூகத்தினரும், விவசாயிகளும் தொழிலாளர்களும் வெகுண்டெழுந்துள்ள நிலையில் பட்டேல் சமூகத்தினரின் வெறுப்பை சம்பாதித்துள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை ,கொரோனா காலத்தில் மத்திய , மாநில அரசுகள் நிகழ்த்திய குளறுபடிகளும், பொறுப்பற்ற செயல்களும், பாராமுக நடவடிக்கைகளும் அவர்கள் செல்வாக்கை மேலும் சரித்துள்ளதை உணர்ந்துள்ளனர்.

2017 தேர்தலில் 100 இடங்களைக்கூட கைப்பற்றாத பாஜக, தனது லட்சியம்150 என்ற இலக்கும் கணக்கும் தவிடுபொடியாகிவிட்டதை உணர்ந்துள்ள டெல்லி தர்பார் தனது முகத்தை காப்பாற்றிக்கொள்ள தனது அடியாளின் முகத்தை மாற்ற துணிந்துள்ளது.பூபேந்திர பட்டேல் என்ற முதன்முறை எம்எல்ஏ இப்பொழுது புதிய குஜராத் முதல்வராக பதவியேற்றுள்ளார் .

இந்நடவடிக்கையை சாமர்த்தியமான செயல் என்று ஒருசில ஊடகங்கள் வருணித்தாலும், வேறுசில ஊடகங்கள் இதை யோகி ஆதித்யநாத்திற்கு மோடி விடும் எச்சரிக்கை என்றும் வர்ணித்துள்ளனர்.

ஆனால் ஆடிப்போயுள்ள பாஜக தலைமை நடுக்கத்தை வெளிக்காட்டாது வீரவசனம் பேசும் வேளையாகவே இது உள்ளது என்பதில் சந்தேகமில்லை!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time