எம்.ஜி.ஆரின் பலவீனமே ஜெயலலிதாவை தலைவியாக்கியது!

-சாவித்திரி கண்ணன்

இதைவிட கேவலமாக சமகால வரலாறை படமாக்க முடியாது. ராயப்பேட்டை உட்லாண்ட்ஸ் தியேட்டரில் மொத்தமே அதிகபட்சம் 35 பேர் மட்டுமே படம் பார்த்தனர்.

அதிமுகவினரே இந்த படத்தை ஏற்கமாட்டார்கள்! ஜெயலலிதாவை மிகைப்பட உயர்த்தி சொல்ல வேண்டும் என நினைப்பது தவறல்ல. ஆனால், அதற்காக அவரைத் தவிர அவர் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் – எம்.ஜி.ஆர் உட்பட – டம்மியாக்கி இருக்க வேண்டியதில்லை.

ஒரு வரலாற்றை சற்று அலங்காரப்படுத்தி தோற்றம் தருவது என்பது வேறு! உள் நோக்கத்துடன் சிதைப்பது வேறு!

எம்.ஜி.ஆருக்கு வணக்கம் போடுவது நாய்க்கு வணக்கம் வைப்பதற்கு சமானம் என ஜெயலலிதா அவமானப்படுத்துவது தொடங்கி..எம்.ஜி.ஆரை வற்புறுத்தி தன்னை மனைவியாக்கி கொள்ள ஜெயலலிதா சதா சர்வகாலமும் தவித்தார் என்பதாக இஷ்டத்திற்கு அளந்து விட்டுள்ளனர்!

உண்மையில் எம்.ஜி.ஆர் கட்டுபாட்டிலும், கண்காணிப்பிலும் இருப்பதை ஜெயலலிதா விரும்பவில்லை என்பதை பலமுறை நாசுக்காக தன் பேட்டிகளில் கூறியுள்ளார். ஜெயலலிதா தன் சம வயதுள்ள ஆண் நண்பர்களோடு மிக நெருக்கமாக பழகியதை எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. ஜெயலலிதாவே விரும்பி ஒரு குறுகிய காலம் வாழ்ந்தது ஆந்திர நடிகர் சோபன்பாபுவுடன் தான்! அந்த காலகட்டங்களில் தான் ஒரு சராசரிகுடும்பத் தலைவியாக வாழ்வதை விரும்பியதாக அவரே கூறியுள்ளார்!

திருச்செந்தூர் கோயில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியபிள்ளை கொலையில் அதிமுகவினருக்கு உள்ள தொடர்பை மறைக்க ஆர்.எம்.வியும், எம்.ஜி.ஆரும் முயன்றனர். இதில் எம்.ஜி.ஆர் பெயர் டேமேஜ் ஆனது. இந்த காலகட்டத்தில் ஜெயலலிதா கட்சிக்குள் வரவே இல்லை. ஆனால், திருச்செந்தூர் கோயில் விவகாரத்தில் எம்.ஜி.ஆரையே ஜெயலலிதா வந்து தான் காப்பாற்றினார் என்ற கதையளப்பு!

திருச்செந்தூர் கோயில் விவகாரத்தால் தன் மீது அதிருப்தியாக இருந்த எம்.ஜி.ஆர் மனதில் இடம் பெற ஆர்.எம்.விதான் ஜெயலலிதாவிற்கு உலகத் தமிழ் மாநாட்டில் காவிரி தந்த கலைச்செல்வி என்ற வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். ஆனால், நாட்டியமாட வந்த வாய்ப்பை நாடாளுவதற்கு மாற்றிக் கொள்ளும் சாமார்த்தியம் ஜெயலலிதாவுக்கு உண்டு என்பதை கணிக்கத் தவறினார்!

எம்.ஆரின் பலவீனம் ஜெயலலிதா!

கட்சிக்குள் வந்த இரண்டாண்டில் ராஜ்யசபா வாய்ப்பு! தன் ஆங்கிலப் புலமையாலும், அழகின் வலிமையாலும் டெல்லி அரசியலை தன் வசமாக்கினார் ஜெயலலிதா. அகில இந்திய அளவிலான பிராமண லாபி அவரை எம்.ஆருக்கு மாற்றான தலைவராக அவரை அரியணையில் வைக்க காய் நகர்த்தியது. வளர்த்தகிடா மார்ப்பில் பாய்ந்தது! கடைசி காலத்தில் ஜெயலலிதாவிடமிருந்து தன் கட்சியை மீட்க எம்.ஜி.ஆர் மேற்கொண்ட முயற்சி முழுமையான பலனைத் தரவில்லை.

எம்.ஜி.ஆரை கடவுளாக்கிய காலாவதியாகிப் போன கழிசடை கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் அசிங்கமான முயற்சியை இன்றைய சூழல் அனுமதிக்காது. இன்றைக்கு பத்து எம்.ஜி.ஆர் வந்தாலும் சினிமா கவர்ச்சி என்ற பாச்சா பலிக்காது மக்களிடம்!

எம்.ஜி.ஆர் ஒரு மக்கள் தலைவராக என்றைக்குமே இருந்ததில்லை. அவர் மக்களின் மனம் கவர்ந்த நாயகன்! சினிமாவில் சிகரம் தொட்ட சாதனையாளர். ஆனால்,சராசரி மனிதனைப் போன்ற பல பலவீனங்களைக் கொண்டிருந்தார். அதன் விளைவைத் தான் இன்று வரை நாடும், மக்களும் அனுபவிக்கின்றனர்.

படம் ஒரு சில இடங்களில் அரைகுறை உண்மைகளை பேசுகிறது! அரைகுறை உண்மை மிக ஆபத்தானது! இதற்கு உதாரணம் சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்படும் காட்சியாகும்! இன்னும் பல இடங்களில் அப்பட்டமாக வலிந்து பொய் பேசுகிறது! சத்துணவு திட்ட அமலாக்கம் தொடங்கி எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தில் அவரது சடலம் இருந்த ராணுவ வண்டியில் ஐந்தாறு தலைவர்கள் ஏறி நின்று கொண்டு, ஜெயலலிதா ஏறுவதை மட்டும் தடுத்தாகவும் காட்டப்படுவது வரை அளவில்லா பொய்கள்!

பொய் அருவருக்கதக்கது, ஆபாசமானது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை! அந்த பொய் ஒவ்வொன்றையும் தோலுரித்து தோரணம் கட்டி போடத் தோன்றுகிறது! ஆனாலும், இந்தப் படம் குறித்து இவ்வளவு மெனக்கெட்டதே அதிகம் என்றும் தோன்றுகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time