தமிழகத்தின் அரிய சமுக வரலாற்றை பேசும் ஆவணம்!

-சாவித்திரி கண்ணன்

மூத்த பத்திரிகையாளர் மணா எழுதியத் தமிழகத் தடங்கள் எனும் இந்த நூல், சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சமூக கலைக் களஞ்சியம் என்றால் மிகையல்ல!

நாம் வாழும் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய கலாச்சாரத் தடயங்கள், வரலாற்றுக் குறியீடுகள், மிகப் பெரிய ஆளுமைகளின் வாழ்ந்த சுவடுகள், சமூக அடையாளங்கள்..  குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய – ஆனால், தெரியாமலே கடந்து போகின்ற – நுட்பமான செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார் பத்திரிகையாளர் மணா!

முதல் கட்டுரை சாம்பல் நத்தம் தொடங்கி 75வது கட்டுரை கீழடி முடிய அனேக அரிய பதிவுகளை, கேள்விப்பட்டிராத உண்மைத் தகவல்களை மிக இயல்பாக தந்து செல்கிறார் மணா!

ஒவ்வொரு கட்டுரையும்,

”அடடா..அற்புதம்!”

”ஓ அப்படியா..!”

”வாவ் சூப்பர்!”

”ஓ இது தான் இந்தப் பேருக்கான பின்னணியா..?”

என சில தகவல்கள் நம்மை நெஞ்சைக் குடையும் துக்கத்திலும், மற்றும் சில மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும்!

மதுரை அருகேயுள்ள சம்பல் நத்தம் ஊரின் பெயருக்கான காரணம் நம்மை உலுக்கிப் போடுகிறது. மதவெறியில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட மனித உயிர்கள் (சமணர்கள்) சாம்பலான சம்வத்தின் சாட்சியாகத் திகழும் அந்த ஊரை மணா நமக்கு அறிமுகப்படுத்தும் பாணி தனித்துவமானது. சைவர்கள் தெய்வத்திற்கு நிகராக கருதும் திருஞான சம்பந்தரே இந்தச் தீச் செயலுக்கு பிள்ளையார் சுழி போட்ட வரலாற்று நிகழ்வை விருப்பு, வெறுப்பின்றி எழுதிச் செல்கிறார்.

கன்னியாகுமரியின் நுழைவு வாயிலாக இருக்கும் ‘தாலியறுத்தான் சந்தை’க்கான பெயர் காரணத்தில் புதைந்திருக்கும் செய்தி, அடக் கொடுமையே..’ என நம்மை அரற்ற வைக்கிறது!

பாளையங் கோட்டையில் அவர் நமக்கு பார்க்கத் தரும் இடம், இன்றைய அருங்காட்சியகமாகவும் முன்னாளில் ஊமைத் துரை சிறைவைக்கப்பட்டதுமான வரலாற்றுச் செய்தியின் பின்புலத்தை! அதே பாளையங் கோட்டையில் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆஷ் துரையின் கல்லறைக்கு பின்னுள்ள வரலாறையும் தருகிறார்.

‘பெரியாரின் மஞ்சள் மண்டி’ அந்தக் கால அவரது வியாபார பின்புலத்தைச் சொல்கிறது!

திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் நடிகர் திலகம் சிவாஜி சின்னஞ் சிறிய பருவத்தில் வாழ்ந்த வீட்டை சொல்கையில் சிவாஜி கலைத் துறைக்குள் நுழைந்த அரிய வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார்.

திருக்குவளையில் கலைஞர் பிறந்து வளர்ந்த வீட்டை மட்டுமா சொன்னார். கோயிலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உள்ள நெருக்கத்தை மிக அற்புதமாக விவரித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தின் வரலாற்றை மட்டும் மணா சொல்லவில்லை. எம்.ஜி.ஆரின் நாம் அறிந்திராத பழக்க வழக்கங்களை, பழமையிலும்,பாரம்பரியத்திலும் அவருக்கு இருந்த பிடிப்பை துல்லியமாக படம் பிடித்துள்ளார். 11 வருடமாக முதலமைச்சராக இருந்தவர் வீட்டிற்கு குடிநீர் இணைப்பே இல்லை. வீட்டுக் கிணற்று நீரைத் தான் எம்.ஜி.ஆர் குடித்தார் என்பதும், 60 மாடுகளை வளர்த்தார் என்பதும், அவரே தரையில் அடுப்பு வைத்து சமையல் செய்த ஆர்வத்தையும், தீபாவளியை அவர் குடும்பத்தினர் கொண்டாடியதே இல்லை, பொங்கலை மட்டுமே தான் கொண்டாடினர் என்பதும் சொல்லப்பட்டுள்ளது!

”பிறப்பால் மலையாளி, வளர்ப்பால் தமிழன்.எந்த மொழி என் சொந்த மொழி’’ என தனக்குத் தானே கேள்வி கேட்டு தன் டைரியில் எம்.ஜி.ஆர் எழுதியுள்ளதை சொல்லி, அவர் டைரிகள் முழக்க தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது என்ற செய்தியையும் மணா சொல்லும் போது நமக்கு பல கேள்விகளுக்கான விடை தெரிய வருகிறது.

சுப்பிரமணிய சிவாவின் ‘பாப்பாரப்பட்டி ஆசிரமம்’, திருச்சி கான்மியான் மேட்டுத் தெருவில் உள்ள ‘தியாகராஜ பாகவதரின் பூர்வீக வீடு’, ஆந்திரா உருவாக 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்த பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர் பிரிந்த மயிலாப்பூரில் அவர் வாழ்ந்த இல்லம்..ஆந்திர அரசால் நினைவு சின்னமாக்கப்பட்டுள்ளது ..என ஒவ்வொரு நினைவிடத்திற்கும் பின்னுள்ள வரலாற்றைத் தோண்டி துருவி மிக கச்சிதமாக சொல்லியுள்ளார் மணா!

சென்னை ஏழு கிணறு வீராசாமி தெருவில் வாழ்ந்த வள்ளலார் வீடும், அது குறித்த தகவல்களும் உயிர்ப்போடு சொல்லப்பட்டுள்ளன!

பாஞ்சாலக் குறிச்சி கோட்டை, மருத நாயகம் தர்ஹா, மருது பாண்டியர்  நினைவிடங்கள், வ.உ.சி இழுத்த செக்கு, ராமநாதபுரம் அரண்மணை..என ஒவ்வொரு வரலாற்று இடங்களிலும் புதைந்திருக்கும் நினைவலைகளை சமகாலத்தில் அதன் நிலையை நேரில் கண்டும், அதில் சம்பந்தப்பட்டவர்களை தேடி விசாரித்தும் அரிய தகவல்களை தந்துள்ளார். இதற்காக எத்தனை ஆண்டுகள் எத்தனை தூரப் பயணங்களை அவர் மேற் கொண்டுள்ளார் என்பதை ஊகித்துப் பார்த்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

நாம் வாழும் மண்ணையும், அதில் வாழ்ந்த மகத்தான மனிதர்களின் நினைவுகளைச் சொல்லும் இடங்களின் பின்னுள்ள மறைந்தும், மறந்தும் போய்விட்ட அரிய தகவல்களை ஆவணப்படுத்தியுள்ள மணாவின் இந்த நூல் காலம் கடந்து பேசப்படக் கூடிய ஒன்றாகவும், நிகழ்கால, வருங்கால வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரு பொக்கிஷமாகவும் திகழும். ஒவ்வொரு கட்டுரைக்கும் சம்பந்தப்பட்ட போட்டோவை தந்துள்ளது சிறப்பு! யாரும் அலட்சியபடுத்த முடியாத அளவுக்கு – எந்த தரப்பு வாசக ரசனைக்கும் – பொருந்தக் கூடிய வடிவில் பாகுபாடில்லாமல் பொதுத் தன்மையில் ஒவ்வொரு கட்டுரைகளும் உள்ளன!

படிக்க வேண்டிய பயனுள்ள நூல்!

தமிழகத் தடங்கள்

ஆசிரியர்; மணா

வெளியீடு; அந்தி மழை,

சென்னை – 600117

கைபேசி ; 9443224834

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time