ஊராட்சி தேர்தல்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தட்டும்!

- நந்தகுமார் சிவா

ஊராட்சி தேர்தல் அறிவிப்பு வந்தது தொடங்கி அரசியல் கட்சிகள் பரபரப்பு அடைந்துள்ளன! கட்சி செல்வாக்கோ, கட்சித் தலைமையின் செல்வாக்கோ கருதி விழும் ஓட்டுகளை விட ஒருவர் உள்ளூருக்கு உண்மையாக உழைக்கக் கூடியவரா.? என மக்கள் கணித்து ஓட்டுப் போடும் ஒரே தேர்தல் இது தான்! இந்த தேர்தலை எதிர் கொள்வது எப்படி..?

மகிழ்ச்சி! நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறுத்தப்பட்டிருந்த ஒன்பது மாவட்டத்தில் ஊராட்சி தேர்தல் வரவுள்ளது! விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், அவற்றிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடக்கிறது.

ஏற்றத்திலிருந்து அகலப் பாதாளத்துக்கு!

தமிழகத்தில் 1996 முதல் 2001 ஆண்டுக் காலம் தமிழகத்தின் ஊராட்சிகளுக்கு ஒரு முன்னேற்றமான காலம் என்று சொல்லலாம். உள்ளாட்சிகளுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயல்படுத்துவதற்கும், உள்ளூர் தேவைகளுக்கான பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் உரியச் சூழல் இருந்தது. இன்று முன்மாதிரிகள் எனக் கொண்டாடப்படும்  பல ஊராட்சிகளுக்கான அடித்தளமாக இருந்தது அந்த காலகட்டம் தான்.

ஆனால், அதன்பிறகு படிப்படியாக உள்ளாட்சிக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. இதற்கு எந்த அரசும் விதிவிலக்கல்ல. தங்கள் மக்களுக்காக உள்ளாட்சிகள் எடுத்து வந்த பல முடிவுகள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் எடுக்கும் சூழல் உருவாக்கப்பட்டது. அரசாணை என்ற பெயரில், உள்ளாட்சி நிர்வாகத்தின் கைகள் கட்டப்பட்டன. இப்படி படிப்படியாக நடந்தேறிய அதிகாரக் குவிப்பில் உச்சமாக இருந்தது 2016 முதல் 2021 வரையிலான காலகட்டம்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல்  இழுத்தடித்தது, நிதிகளை விடுவிக்காமல் முடக்கியது, கட்டுக்கடங்காமல் கட்சி அரசியல் தலையீடுகளை உள்ளாட்சி நிர்வாகத்தில் கட்டவிழ்த்துவிட்டது, உள்ளாட்சிகளைக் கட்டாயப்படுத்தி தீர்மானங்கள் பெற்றுக்கொண்டது என ஜனநாயகத்துக்கும் சட்ட விதிகளுக்கும் புறம்பான பல செயல்பாடுகள்  அரங்கேற்றப்பட்டன. இக்காலம், தமிழக உள்ளாட்சி வரலாற்றின் இருண்ட காலம் என்று சொல்லலாம்.

கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சிகளுக்கு வர வேண்டிய நிதிகளை முறையாக ஒதுக்காமல்,  ஊரடங்கு காலத்திலும் அவற்றை தவிக்க விட்டுவிட்டனர். அதனால் தான் தற்போது சென்னை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் குவிகின்றன என  நமது தலைமை செயலாளர் இறையன்பு  ஆதங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வரும் மனுக்கள் பெரும்பாலும் உள்ளூர் அளவிலேயே முடிக்கப்படக் கூடியவை.

அரசியல் பிரமுகர்களின் அதிதீவிர தலையீட்டாலும், மாநில அரசின் கவனக்குறைவாலும், அலுவலர்களின் ஆதிக்கத்தாலும் உள்ளாட்சிகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன என்பது தான் உண்மை. உரிய நிதிப் பகிர்வு வழங்கப்பட்டு,  பணிகளைச் செய்வதற்கு ஊக்கப்படுத்தி, அலுவலர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்களின் தேவையற்ற  தலையீடுகளைத் தவிர்த்தால், இன்று மக்களின் பெரும்பான்மையான தேவைகளை அந்தந்த  சிற்றூராட்சி அளவிலேயே முடித்துக் கொள்ள முடியும்.

கடந்த காலத்தில், ஒவ்வொரு முறை இவ்வாறு அதிகாரக்குவிப்பும், உள்ளாட்சி நோக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போதும் இவ்வாறு பேசிக்கொள்வோம். இதுபோன்றதொரு அரசாணை கேரளத்தில் வந்திருக்க முடியுமா? அல்லது இதுபோன்ற முடிவுகளுக்கு எந்தவித எதிர்ப்புமின்றி மௌனமாகக் கடந்து  சென்றிருப்பார்களா கேரளத்தில்? என்றெல்லாம் பேசிக்கொள்வோம். காரணம், 30 ஆண்டுகளுக்கு மேலாகவே அங்கு உள்ளாட்சிகளை வெவ்வேறு தளங்களில் வலுப்படுத்தி வளர்த்தெடுப்பது என்பது திட்டமிடப்பட்ட வெற்றிகரமான ஒரு செயல்பாடாகவே இருந்திருக்கிறது. இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

ஒரு இணைய வழி நிகழ்வில், கேரள உள்ளாட்சிகளை வலுப்படுத்தியவரான கேரள முன்னாள் தலைமைச் செயலர் எஸ்.எம்.விஜயானந்த் அவர்களிடம் கேட்டோம், “தமிழகத்திலும் உள்ளாட்சிகளை வலுப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும், ஐயா?” என்று,

“அதற்கான Political Will (அரசியல் கடப்பாடு) வேண்டும்”, என்றார்.

“அரசியல் கடப்பாடு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்..?’ என மீண்டும் அவரிடமே கேட்டோம்.

“Proof of concept”, என்றார்

அதாவது, நாம் வலியுறுத்துகிற கருத்தினை  ஆதாரத்துடன் நிரூபிப்பது…. அதற்கான சாட்சியங்களைக் கண்கூடாகக் காட்டுவது.

முன்மாதிரி முயற்சிகள்!

ஊராட்சி நிர்வாகம் மூலம் மக்களுக்கு  முன்னேற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதற்கு முன் உதாரணமாகவும் தங்கள் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றிக் காட்டவும் இன்றைக்கு பல இளம் ஊராட்சித் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வரவு – செலவு கணக்குகளை அச்சடித்து தனது ஊராட்சி மக்களுக்கு வழங்கிவரும் கருப்பம்புலம் ஊராட்சி, தங்கள் கிராமத்தின் பழங்குடி  மக்களுக்குப் பல காலமாக மறுக்கப்பட்டு வந்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் சிட்டிலிங்கி ஊராட்சி, கிராம சபை கூட்டுவதற்கான அதிகாரங்களை ஊராட்சிகளுக்கு மறுக்கக் கூடாது என முறையிட்டு முயற்சிகள் மேற்கொண்டு வரும் ராஜேந்திரபட்டினம் எனக் கடந்த 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில் பொறுப்பேற்ற இந்த இளம் தலைவர்கள் தற்போது Proof of Concept க்கான  மாதிரிகளாக உருவெடுத்து வருகிறார்கள்.

இந்த எண்ணிக்கை இன்னும் பெருகுவதற்கான சூழல் இந்த தேர்தலில் களம் காண இருக்கும் பலரின் முயற்சியால் சாத்தியமாக இருக்கிறது .சாத்தியமாக வேண்டும். நேர்மையாகவும், ஜனநாயகத் தன்மையோடும் தேர்தலை அணுகும் இளைஞர்களுக்கும், மகளிருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நாம் வலு சேர்க்கும் வகையில் இயங்க வேண்டும்.

மகளிர் சக்தி

நமது கிராமத்தில் உள்ள சமூக அக்கறை கொண்ட, தலைமைப் பண்புள்ள மகளிரை இந்த உள்ளாட்சித் தேர்தலில் களம் காண ஊக்கப்படுத்த  வேண்டும். 50 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் ஏதோ ஒரு கட்சி பிரமுகரின் மனைவியையோ சகோதரியையோ வேட்பாளராக நிறுத்திவிட்டுத் தேர்தலுக்குப் பின் அப்பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக ஆண்களே ஆதிக்கம் செலுத்துவது பல இடங்களில் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலை, இந்த முறை மாற வேண்டும்.

அதேபோன்று பட்டியலின, பட்டியல் பழங்குடி வேட்பாளர்களுக்கும், மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என நினைக்கும் இளம்  வேட்பாளர்களுக்கும், மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கும் நாம் ஆதரவாக நிற்க வேண்டும்.

வேட்பாளருக்கும் மக்களுக்கும்

ஜனநாயகத்தில் நாம் பங்கெடுப்பதற்கான ஒரு களம் தேர்தல். ஆனால் எப்படி வேண்டுமானாலும் இந்த தேர்தலை எதிர்கொள்ளலாம் என்கிற மனப் போக்கினை நாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது! இதை முற்றிலும் அறம் சார்ந்து ஜனநாயக முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்பதை  வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். காரணம், மிகச்சிறந்த பணிகளை சாதித்த ஊராட்சித் தலைவர்கள் அனைவரும் அடிப்படையில் நேர்மையாகத் தேர்தலைச் சந்தித்தார்கள் என்பதே வரலாறு. நல்லதொரு மாற்றத்தை நல்லதொரு முறையிலேயே என்றைக்கும் அடையமுடியும். குறுக்கு வழியில் அதனை நெருங்கக்கூட முடியாது. எனவே, உங்களைச் சுற்றிப் பல அழுத்தங்கள் ஏற்பட்டாலும் நேர்கொண்ட பார்வையில் பயணித்து மக்களின் மனதில் நாம் மாற்றத்திற்கான நபர் என்கிற இடத்தினை பெற முயற்சிகள் மேற்கொள்வோம்.

நடக்க இருக்கின்ற பஞ்சாயத்துத் தேர்தல் என்பது வேட்பாளர்களுக்கு மட்டுமானதல்ல, பொதுமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் மிக முக்கியமான ஒன்று. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நமது ஊரின் மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பார்க்க வேண்டும். காரணம், இன்றைக்கு  நம்பிக்கையே இல்லாத பல ஊர்களை மாற்றி வரும் தலைவர்களின், உறுப்பினர்களின் முயற்சிகளை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். அதேபோல நமது ஊரிலும் அடிப்படை வசதிகளும், கல்வியும், சுகாதாரமும் சுற்றுச்சூழலும் மேம்பட நமது ஊருக்கான ஒரு தலைவரை, பிரதிநிதிகளை நாம் அடையாளம் காண வேண்டும்.

இப்படியாக, வேட்பாளர்களும், பொதுமக்களும் இந்த தேர்தலை அணுகும்போது உண்மையில் இந்த தேர்தலுக்கான அறிவிப்பு ஒரு வரலாற்று மாற்றத்திற்கான அறிவிப்பாகவே இருக்கும். இருட்டிலிருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அறிவிப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.

கட்டுரையாளர்; நந்தகுமார் சிவா

பொதுச் செயலர், தன்னாட்சி இயக்கம்

மின்னஞ்சல் : [email protected]

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time