’’உள்ளாட்சிகளை ஊனமாக்கிவிட்டு,அதிகாரம் பறிக்கப்பட்ட அமைப்பாக நடத்திக் கொண்டு எந்த ஒரு அரசாங்கத்தாலும் மக்களுக்கு நல்லாட்சி என்பதை ஒரு போதும் தரமுடியாது’’ என்கிறார் தன்னாட்சி இயக்கத்தின் பொதுச் செயலாளரான நந்தகுமார்.தமிழக கிராமங்களில் உள்ளாட்சிக்கான கடமைகள்,உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது தன்னாட்சி அமைப்பு!
‘’அரசர் காலத்து பிரஜை(subject) என்ற நிலமையிலிருந்து குடிமக்கள் (citizen) என்ற நிலைக்கு இப்போது வளர்ந்துள்ளளோம். இதனால் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கிறது” என்பார் வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர். எனவே அரசைக் கேள்வி கேட்பது ஜனநாயகத்தில் அடிப்படையான ஒன்று.
அங்கன்வாடி, ரேஷன்கடை, ஆரம்பக் கல்வி போன்ற பணிகளை பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்த வேண்டும் என்பதற்கான பிரச்சாரத்தை ‘தன்னாட்சி’ என்ற அரசு சாரா அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளாட்சிகளின் கீழ்பணிபுரியும் போதுதான் பயனாளிகள்(மக்கள்) முழுமையான பயனை அடையமுடியும். அரசியல் அமைப்புச் சட்டம், உள்ளாட்சிகளுக்கு வகுத்துள்ள பணிகளை செய்வதன் மூலம் அதிகாரங்கள் பரவலாக்கப்படும்.
39 வயது பொறியியல் பட்டதாரியான நந்தகுமார், காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர் க.பழனித்துரையிடம் உள்ளாட்சி நிர்வாகங்கள் குறித்து பயிற்சி எடுத்தவர்; முன்மாதிரியான பஞ்சாயத்து என்று பெயர் பெற்ற குத்தம்பாக்கம் கிராமத்தில் தங்கி அதன் தலைவர் இளங்கோவின் அனுபவங்களைக் கண்டு ஆதர்சம் பெற்றவர். இவர் முதலில் 2016 ம் ஆண்டு முதல் ‘ உள்ளாட்சி உங்களாட்சி’ என்ற அமைப்பின் மூலம் செயல்பட்டு வந்தார்.
பிறகு 2018 ஆண்டு முதல் “உள்ளாட்சியில் நல்லாட்சி உள்ளூரில் வளங்குன்றா வளர்ச்சி ” என்ற நோக்கத்தோடு தன்னாட்சி என்ற அமைப்பில் செயல்பட்டு வருகிறார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தில் செயல்பட்டு வரும் க.சரவணன், ’ஊழலுக்கு எதிரான இந்தியா’ (India against corruption) என்ற அமைப்பைச் சார்ந்த ஜாகிர் உசேன், இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வழக்கறிஞர் சிவக்குமார், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் அறிவரசன் போன்ற இளைஞர்கள் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர்.
மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.ஆனால் கிராமப் பஞ்சாயத்து,ஒன்றிய பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து,நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை மாநில அரசு தர தயங்குகிறது. நூலகம், நூறுநாள் வேலைத்திட்டம், மருத்துவ நிலையம், அங்கன்வாடி,விளையாட்டு மைதானம், சிறுதொழில் வளர்ச்சி,கால்நடை, நீர்நிலைப் பாதுகாப்பு போன்ற 29 வகையான பணிகள் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வர வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டத்தின் பதினோராவது அட்டவணை ( 11th Schedule) கூறுகிறது.
Also read
இதனை நிர்வகிக்க துறை சார்ந்த பணியாளர்கள் தேவை.அதற்கான நிதி ஆதாரமும் தர வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி 9 ன் முக்கிய வழிகாட்டுதல். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளில் ஒரு எழுத்தர் மட்டுமே உள்ளார். மாநில அரசு தனது வரி வருவாயில் 5 % கூட உள்ளாட்சிகளுக்கு ஒதுக்குவதில்லை.
கேரளாவில் உள்ளாட்சிகள் சுயேச்சையாகச் செயல்படுகின்றன.கேரள அரசு தனது வரி வருவாயில் 40 சதத்தை உள்ளாட்சிகளுக்கு ஒதுக்குகிறது.
உள்ளாட்சித் தலைவர்கள் கேரளாவில் கண்ணியமாக நடத்தப்படுகிறார்கள்.உள்ளாட்சி தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மாதம்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. எப்படி தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எந்த அரசு வந்தாலும் ஏற்றுக் கொள்ளாதோ,அதே போல கேரளாவில் எந்த அரசு, காங்கிரசாக இருந்தாலும், கம்யூனிஸ்டாக இருந்தாலும் உள்ளாட்சிகளின் அதிகாரத்தை குறைக்க முடியாது.அந்த அளவுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அவர்களின் ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. உள்ளூர் மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு பணியாற்றுகிறார்கள்.வெள்ளப் பேரிடரை கேரளா நன்கு எதிர்கொண்டதற்கு அவர்களிடம் இருந்த உள்ளாட்சி கட்டமைப்பு வசதி ஒரு முக்கியமான காரணமாகும்.கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகள் இயற்கை வழி வேளாண்மைக்கும், கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கும் ஆதரவளிக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெறவில்லை. சமீபத்தில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பொறுப்பிற்கு வந்துள்ளனர்.ஆனால் அவர்களில் பலருக்கு தங்கள் அதிகாரம் என்ன என்பது தெரியவதில்லை. உள்ளாட்சி தலைவர்கள் பிடிஓ சொல்லுகிறபடி தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். உள்ளாட்சி நிர்வாகம் என்ற பெயரில் அலுவலர்களின் ஆட்சி நடக்கிறது.
“உள்ளாட்சிகள் வறுமை ஒழிப்பில் முக்கியப் பங்காற்ற முடியும்’’
’’நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை மேம்படுத்துதல்,சாலை போடுதல் போன்ற சமூக வளங்களை உருவாக்க முடியும்.எந்தப் பணிகளை செய்ய வேண்டும் என்பதை கிராம சபைகள்தான் முடிவெடுக்க வேண்டும். எனவே கிராம சபைகளில் பொதுமக்கள் பங்குபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தன்னாட்சி அமைப்பு 4000 கி.மீ. பயணித்து 21 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை 2017 ஆம் ஆண்டு பல தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து நடத்தியது.இதன் விளைவாக பல கிராமங்களில் கடந்த ஆண்டு கிராமசபைகளில் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன” என்கிறார் தன்னாட்சி அமைப்பின் தலைவர் க.சரவணன்.
பஞ்சாயத்துகளின் நிதி நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் (transparency ), நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பு, அரசு திட்டங்கள் போன்றவை குறித்து தொடர் பயிற்சி வகுப்புகளை களப்பணியாளர்களுக்கும், உள்ளாட்சி நிர்வாகிகளுக்கும் ‘தன்னாட்சி’ அளித்து வருகிறது.சிறு வெளியீடுகளையும், காணொளிகளையும் வெளியிடுகிறது.கேரள அரசு இது போன்ற பயிற்சி வகுப்புகளை சில ஆண்டுகளாக நடத்தி வருவது அதன் வெற்றிக்கு ஒரு காரணமாகும்.
நூறுநாள் வேலைத்திட்டத்தில் 90 சத பெண்கள் இப்போது தமிழ்நாட்டில் பலன் பெறுகிறார்கள்.அவர்கள் கண்ணியமாக வாழவும்,நியாயமான கூலி கிராமத்தில் அந்தந்த வேலைகளுக்கு கிடைப்பதற்கும் இந்த திட்டம் நல்ல பலன் உள்ளதாக இருக்கிறது.தலித் பகுதிகளில் வேலைகள் நடைபெற வேண்டும் என்பதற்கான கோரிக்கை கிராம சபைகளில் கேட்க தொடங்கி விட்டது.ஆனால் எதிர்பார்த்தபடி சமூக சொத்துகள் உருவாகவில்லை. ஏனெனில் பயனாளிகள் சரிவர வேலைகள் செய்வதில்லை. “இந்த திட்டத்தில் இளைஞர்களும் சேர்ந்து வேலை செய்தால் போலியாக வேலை அட்டை வழங்கப்படுவதையும்,நடக்காத வேலைக்கு பில் போடுவதையும் தடுக்க முடியும்.சமூக வளங்கள் அந்தந்த கிராமங்களில் உருவாகும்’’ என்கிறார் நந்தகுமார்.
“தமிழ்நாட்டில் எந்த கிராமத்திலும் ஒரு நாள் கூலியான 256 ரூபாயை யாரும் பெறுவதில்லை.
ஆனால் எங்கள் கிராமத்தில் நிர்ணயித்த வேலைகளை முழுமையாக முடித்தோம்.இதனால் பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் கொரோனா காலத்தில் மூன்று வாரங்களுக்கு கூலி கிடைத்தது ” என்கிறார் அரங்கூர் பஞ்சாயத்து தலைவர் ராஜா.இந்தக் கிராமம், கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியத்தில் உள்ளது.இது போன்று முழுமையாக சம்பளம் பெறும் கிராமப் பஞ்சாயத்து தமிழ்நாட்டில் வேறு எங்கும் இருக்கிறதா என்று கேட்கிறார் ராஜா.இவர் தன்னாட்சி அமைப்பு நடத்திய பயிற்சியில் கலந்த கொண்டவர்களில் ஒருவர்.
உள்ளூர் ஏரிகளின் பராமரிப்பு அந்தந்த கிராமக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மன்னர் காலத்தில் கூட ஏரி,குளம் போன்ற நீர்நிலைகள் அந்தந்த கிராமங்கள் வசம்தான் இருந்தன.இதனை மீண்டும் உள்ளாட்சிகள் பராமரிப்பு செய்வதன் மூலம் அந்த நீர்நிலைகளில் அந்தந்த கிராம மக்களுக்கு உரிமை(ownership) மனோபாவம் வரும்.இது அவர்களை நீர்நிலைகளை சரிவர பராமரிக்கச் செய்யும் பொறுப்பை உருவாக்கும்.
கிராமப் பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் வேண்டும்.இந்த கிராம சபைதான் அந்த கிராமத்திற்கு தேவையான பணிகள் குறித்து முடிவெடுக்கும். அதேபோல சட்டப்படி நகரங்களிலும் நகர சபை உருவாக்க வேண்டும்.இதற்காக தன்னாட்சி ‘உள்ளாட்சி மக்கள் தேர்தல் அறிக்கை’ தயாரித்து வெளியிட்டது; எல்லா அரசியல் கட்சிகளிடமும், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது அவைகள் வெளியிடயிருந்த தேர்தல் அறிக்கையில் இந்தக் கோரிக்கைகளை சேர்த்துக் கொள்ள வலியுறுத்தினோம். தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர், 1996 ஆம் ஆண்டு உள்ளாட்சிகளை வலிமைப்படுத்தும் நோக்கில் எல்.சி.ஜெயின் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழு பல நல்ல பரிந்துரைகளை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.29 துறைகளை உள்ளாட்சிகள் வசம், அதற்குரிய அலுவலர்கள்,நிதி ஆதாரத்தோடு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க பரிந்துரையாகும். ஆனால் தமிழக அரசு அதை இன்னமும் ஏற்று நடைமுறைப் படுத்தவில்லை.
நார்வே,ஸ்வீடன், சுவிட்சர்லாந்து போன்ற பல வளர்ச்சி அடைந்த மேலைநாடுகள் உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரங்கள் கொடுத்துள்ளன.உள்ளாட்சி பிரதிநிதி, தலைவர்களை உரிய அதிகாரம் கொள்ளச் செய்யும் விழிப்புணர்வுப் பணிகளில் தன்னாட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மாநில சுயாட்சிக்கு அதிக அதிகாரம் வேண்டும் எனக் கூறும் தமிழக ஆட்சியாளர்கள், தல அரசாங்கம் எனப்படும் உள்ளாட்சிகள் உரிய அதிகாரத்துடன் சுயமாகச் செயல்பட வழிவிட வேண்டும்!
கட்டுரையாளர் பீட்டர் துரைராஜ், பல்லாவரத்தில் சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பை 25 வருடங்களாக நண்பர்களோடு இணைந்து நடத்திவருகிறார். தொழிற்சங்க மற்றும் சமூக செயற்பாட்டாளர்! மக்கள் களச் செயற்பாட்டாளர், தீவிர வாசிப்பாளர்!
Leave a Reply