திருநெல்வேலியை திவாலாக்கும் கல்குவாரிகள்!

-மாயோன்

அல்வாவிற்கு பேர் போனது திருநெல்வேலி! ஆனால், அந்த திருநெல்வேலியையே அல்வா துண்டுகள் போல வெட்டி விழுங்கிவருகிறார்கள் கல்குவாரி முதலாளிகள்! ஆளும் கட்சியின் எம்.பி ஒருவரே இதற்கு அனுசரணையாக இருப்பது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது..!

மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவிற்கு கிடைத்த கொடை எனலாம். பசுமை மாறாக் காடுகளும்  அரிய வகை உயிரினங்களும் இங்கு ஏராளமாக உள்ளன. நர்மதை, தபதி நதிகளை தவிர மற்ற தென்னிந்திய நதிகள் அனைத்துக்கும் இதுதான் பிறப்பிடம். தமிழ்நாட்டின் ஜீவாதார நதிகளான காவிரி, வைகை ,தாமிரபரணி போன்றவற்றிற்கு தாய்மடி இம்மலைதான்.

தொன்மையும் வளமையும் மிக்க இம்மலைத் தொடரின் தென் கோடியில் ஓர் அங்கமாக மகேந்திரகிரி மலை உள்ளது. இது திருநெல்வேலி மாவட்டத்தின் தெற்குப் பகுதியாகும் .

மகேந்திரகிரி மலை அடிவாரத்தில் உள்ளது ராதாபுரம் தாலுகா. தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள இருக்கன்துறை, ஊரல் வாய்மொழி சூட்சி குளம், பொன்னார் குளம் ,சங்கநேரி உட்பட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு போர்க் குரல் எழுந்தது.

“எங்கள் பகுதி நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கும் கல் குவாரிகளை உடனே அகற்ற வேண்டும் என்பது இந்த மக்களின் கோரிக்கையாகும்”

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் களைச் சேர்ந்த விவசாயிகள் ,பெண்கள் மற்றும் பொதுமக்கள். அனைத்துக் கட்சிகளிலும் அங்கம் வகிப்பவர்கள்.

கல்குவாரிகளுக்கு  ஆதரவளிக்கிறார் என்று குற்றஞ்சாட்டி, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திற்கு எதிராக பல்வேறு ஊர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி ஒரு நல்ல முன் மாதிரி ஆட்சி என்று தேசிய அளவில் பல்வேறு ஊடகங்களால் பேசப்பட்டு வரும் நிலையில் தி.மு.க., எம். பி .க்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்தது பற்றி விசாரித்தோம்.

சூட்சி குளம்  கிராமத்தை சேர்ந்த பெண்களும், பொதுமக்களும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் அணிதிரண்டு நின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று முறையிட முடிவு செய்திருந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை எடுத்து அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏன் இந்தப் போராட்டம்? என்று கேட்டபோது நம்மிடம் அவர்கள் கூறியது,

” திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம்  மழை மறைவு  பிரதேசத்தில் உள்ளது. தமிழகத்தில் விவசாயத்திற்கு  தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

கூடங்குளம் அணு உலை, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் , காற்றாலைகள் என்று இயற்கைக்கு மாறான பல பிரச்சனைகளை நாங்கள் சந்தித்து வருகிறோம்.

அண்மைக்காலமாக கல்குவாரிகள் இங்கு புற்றீசல்கள் போல தோன்றி இந்த மண்ணை பொத்தல் ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

ராதாபுரம் தாலுகாவில் மட்டும் ஏறக்குறைய இருபது குவாரிகள் உள்ளன.

அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட மூன்று அல்லது நான்கு மடங்கு ஆழம் தோண்டி எடுக்கிறார்கள்.

மாலை 6 மணிக்கு மேல் இவர்கள் செயல்பட தடை உள்ளது. ஆனால் அதற்குப் பிறகுதான் இவர்களுடைய வேட்டை அதிகமாகிறது. இரவில் கல் குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்வது கிராம சாலையில் தொடர் ரயில் வண்டி செல்வது போல உள்ளது.

விவசாய இடத்திற்கும் கல்குவாரிக்கும்  குறைந்தது 50 மீட்டர் இடைவெளி வேண்டும்.

ஆனால், விதிமுறைகளை பின்பற்றாமல் விளைநிலங்களை கல்குவாரி களாக மாற்றும் பணி நடைபெறுகிறது.

பின்னணியில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் இருப்பதால் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் அலுவலர்கள் மௌனம் காக்கின்றனர்.

நெறிமுறைகளுக்கு  புறம்பாக வெடி மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு வாகனத்தில் ஏற்றப்படும் அளவைக் காட்டிலும் மூன்று மடங்கு பாரம் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். நூற்றுக்கணக்கான லாரிகளில் அதிக பாரம் ஏற்றப்படுவதால் கல் குவாரிகளுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக கிடக்கின்றன.

ஒவ்வொரு குவாரியை சுற்றிலும் சத்தம் மற்றும் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக பசுமைப் போர்வை அமைக்கப்பட வேண்டும். அது எந்த குவாரியிலும் இதுவரை அமைக்கப்படவில்லை.

குளம் மற்றும் நீர் நிலைகளின் சராசரி மட்டத்தை விட கல் குவாரிகளில் ஆழம் அதிகரித்து விட்டது எனவே குளம் ,நீர் நிலைகளை நீரை தேக்கி வைக்க முடியவில்லை. கிணறுகளில் உள்ள தண்ணீர் குவாரி பள்ளத்திற்கு  செல்லும் நிலைமை உள்ளது.

ராதாபுரம் பகுதி வறட்சிப் பகுதியாகவும், மழை குறைவான பகுதியாகவும் உள்ளது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் பெருவாரியாக மரங்கள் வெட்டப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது.

புவியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன.

இந்த சூழலில் விவசாயத்தைப் பற்றியோ, நிலத்தடி நீர் பற்றியோ சுற்றுச்சூழல் பற்றியோ, எவ்வித அக்கறையும் இன்றி இங்குள்ள   அதிகாரிகள் செயல்படுகின்றனர்‌.

ராதாபுரத்தில் மட்டும் ஏறக்குறைய 20 கல்குவாரிகள் உள்ளன. விவசாயம் காக்க, நிலத்தடி நீரை பாதுகாக்க, சுற்றுச்சூழலை பேண செயல்பாட்டில் இருக்கும் 20 கல் குவாரிகளை மூட வேண்டும்.

மேலும் 10 கல் குவாரிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது’’ இவ்வாறு அவர்கள் கூறினர்.

கட்டுரையாளர்; மாயோன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time