இந்தியா ஏறத்தாழ சுயச்சார்பை இழந்து கொண்டுள்ளது. எந்தெந்த விசயங்களில் எல்லாம் நாம் அந்நிய தேசத்தவரை அண்டிப் பிழைக்கிறோம் தெரியுமா..? காந்தி அன்று ஆடையைத் துறந்தார்! நாம் நம் சொந்த ஆன்மாவையே தொலைத்துக் கொண்டுள்ளோம்.
காந்தி ஆடைமாற்றம் கண்ட நூற்றாண்டு நினைவு தமிழகத்தில் பரவலாக நினைவு கூறப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும், காந்தியை வெறுமனே பேசுவதிலும், சிலாகிப்பதிலும் நாம் திருப்தியடைந்துவிடுகிறோம். அவர் வாழ்நாளெல்லாம் போராடி நமக்கு பெற்றுத் தந்த சுயராஜ்ஜியத்தை – சுயச் சார்பை இன்று ஏறத்தாழ நாம் இழந்து நிற்கிறோம் என்பதையே உணர முடியாதவர்களாகவுள்ளோம்.
இன்று விவசாயத்தில் நாம் முற்றிலும் சுயச்சார்பை இழந்து நிற்கிறோம். இந்தியா சுதந்திரம் பெற்ற போது விவசாயத்தில் இருந்த சுயசார்பு தற்போது இல்லை. அன்று எந்த அந்நிய நாட்டையும் நம்பி நம் விவசாயம் இல்லை. இயற்கை உரங்களுக்கு நம்மிடம் அபரிமிதமான கால் நடைகள் இருந்தன! ஆனால், இன்று அந்நிய நாடுகளில் இருந்து உரங்கள் இறக்குமதி ஆகவில்லை என்றால், இந்தியாவில் விவசாயமே கிடையாது! அதுவும் கொஞ்ச, நஞ்சமல்ல! 500 லட்சம் டன்கள் இரசாயன உரங்களை கப்பல்,கப்பல்களாக இறக்குமதி செய்கிறோம். யூரியா, டை அமோனியம் பாஸ்பேட், என்.பி.கே, மூரியா ஆப் பொட்டாசியம்..என நஞ்சான உரங்களை நாளும் நிலத்தில் கொட்டி நிலவளத்தையே நீர்மூலமாக்கிக் கொண்டுள்ளோம். இந்த இரசாயன உரங்களால் இந்திய விவசாய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு கட்டிதட்டி மலடாகிவிட்டது. நமது உடல் நலமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது. எனினும், பல ஆயிரம் கோடிகள் கொடுத்து நாம் உரங்களை விலைக்கு வாங்குகிறோம்!
நமது சமையலறைகளே அந்நிய நாட்டுப் பொருட்களால் நிறைந்து வழிகிறது! அதில் மிக முக்கியமானது நமது சமையல் எண்ணெய்! எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை, எள்ளு, தேங்காய் உற்பத்தியில் தலை சிறந்து விளங்கும் நம் நாடு அவற்றை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு அந்நிய தேசங்களின் சாப்பிடத் தகுதியற்ற பாமாயிலையும், பெட்ரோலிய குரூடிலிருந்து எடுக்கப்படும் ரீபைண்ட் ஆயிலையும் இறக்குமதி செய்கிறது. நமது மொத்த தேவையான 260 லட்சம் டன் சமையல் எண்ணெய்யில் 170 லட்சம் டன்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
நமது பாரம்பரிய உணவு கலாச்சாரமே மறக்கடிக்கப்பட்டு வெளி நாட்டு வீரிய ஒட்டுரக விதைகளால் உருவாக்கப்பட்ட அரிசி,கோதுமையை உண்கிறோம். நம் மரபிலேயே இல்லாத மைதா, வெள்ளைச் சீனி,ரீபைண்ட் ஆயில் ஆகியவை தான் இங்கு கோலோச்சுகின்றன! நம் பெரும்பாலான நோய்களுக்கு இவையே காரணம்! இள நீரும், பதநீரும் பின்னுக்கு தள்ளப்பட்டு அந்நிய குளிர்பானங்களை அருந்த பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். பீட்சா,பர்க்கர்,சமோசா உள்ளிட்ட ஆபத்தான அன்னிய உணவு கலாச்சாரம் மேலெழுந்து வருகிறது!
பனை வளத்தில் உலகத்திலேயே முதன்மையானது தமிழகம். ஆனால், அந்த பனைமரத்தில் ஏறுவதை குற்றச்செயலாக்கி அந்நிய மதுபான விற்பனைக்காக எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சட்டம் இன்னும் அமலில் உள்ளது! பனை சுதேசியத்தின் அடையாளம்! அதை இன்று அழித்துக் கொண்டுள்ளோம்!
நமது துறைமுகங்களில் பல இன்று வெளி நாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. நமது நாட்டில் உள்ள முக்கிய பல நகரங்களின் குடி நீர் விநியோகப் பொறுப்பு வெளி நாட்டு நிறுவனங்களின் தயவில் உள்ளன! இன்னும் சில நகரங்களில் குப்பை அள்ளும் பொறுப்பு கூட வெளி நாட்டு நிறுவனங்கள் வசம் தான் உள்ளன!
நாம் பயன்படுத்தும் எலக்ரானிக் பொருட்களில் மிக பெருமளவிலானவை வெளி நாட்டில் இருந்து இறக்குமதியாகின்றன!
நம் நாட்டின் இயற்கை வளங்களான காடுகள்,மலைகள் அனைத்தையும் சுரண்டி அழிக்கிறோம்! கைத்தறியே காணாமலடிக்கப்பட்டு வருகிறது! நாட்டு பருத்தி அழிக்கப்பட்டு பி.டி.பருத்தி கொண்டுவரப்பட்டுள்ளது! இதன் தொடர்பில் மட்டுமே பல்லாயிரம் விவசாயத் தற்கொலைகள் நடந்துள்ளன! மரபணு மாற்றப் பயிர்கள் நம் மண்ணை ஆக்கிரமிக்க தலைப்பட்டுள்ளன!
நாம் ஐரோப்பிய தேசத்தவரின் அலோபதி மருத்துவத்தை அதிகம் நம்புவதால் அந்த மருத்துவத்திற்கான மூலப் பொருட்களை சுமார் 90 சதவிகிதம் சீனாவில் இருந்து தருவிக்கிறோம். நாளையே நமக்கும் சீனாவிற்கும் பகையோ,போரோ ஏற்படுமானால் சீனா நம்மை ஒன்றும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆங்கில மருந்து பொருட்களுக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தினாலே போதுமானது! இந்திய மக்களில் கணிசமானவர்கள் செத்துவிடுவார்கள்! வந்துவிட்ட நோயை எதிர் கொள்வதிலும் சரி, வரப் போகிற வியாதியை தடுப்பதிலும் சரி வெளிநாட்டு மருந்துகளுக்கும் ஊசிகளுக்கும் மட்டுமே அங்கீகாரம் என்பதும் இங்குள்ள பாரம்பரிய மருத்துவத்தை நம்புபவர்களைக் கூட நாங்கள் விட்டுவைக்க மாட்டோம் என்பதும் எந்த அளவுக்கு நாம் சுயச் சார்பை மட்டுமின்றி, சுய அறிவைக் கூட நம்ப மறுக்கும் ஒரு அரசை பெற்றுள்ளோம் என்பதற்கான அத்தாட்சியாகும்!
Also read
இதையெல்லாம் காந்தி இருந்தால் அனுமதிப்பாரா..? இதற்காகவா பாடுபட்டு சுயராஜ்ஜியம் அடைந்தோம் என்று நம்மை உலுக்கி எடுத்திருப்பாரே! காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமத்தையே சீரழித்து, உருக்குலைக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடக்கின்றன. அதையும் தடுக்க முடியாதவர்களாகத் தான் நாம் வேடிக்கை பார்க்கிறோம்! காந்தி குறித்த எழுத்தும் ,பேச்சும் நினைவு கூறலும் மாற்றத்திற்கான விதை நமக்குள் விழச் செய்ய வேண்டும். அதற்காகவே இவற்றை எல்லாம் எழுதினேன்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply