தூக்கி எறிவோம் தொழிலாளர் விரோத சட்டங்களை!

-பீட்டர் துரைராஜ்

சத்துணவு, அங்கன்வாடி, ரேஷன்கடை போன்ற பல திட்டங்களில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாகும்! நம்மைப் பார்த்து மற்ற மாநிலங்கள்  பின்பற்றின.  தற்போது நீட் தேர்வு எதிர்ப்பிலும் இந்தியாவிற்கே முன்னோடி முன்னோடியாக உள்ளது! ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு எதிர்த்ததை போல, தொழிலாளர் விரோத சட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது தமிழக தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கட்டடத் தொழிலாளர், ஆட்டோ தொழிலாளர், விவசாயத் தொழிலாளர், வீட்டுவேலை   செய்பவர்களின் நலனுக்காக   அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளைப்  பாதுகாக்கும் வகையில்,  ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள  புதிய  தொழிலாளர் சட்டத்தொகுப்பில் இருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும், இதற்காக சட்டமன்றம் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்த தொழிலாளர்களில் தொன்னூறு சதத்திற்கும் அதிகமானோர் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்களுக்கான தொழிற்சங்கங்கள் வலிமையாக  இல்லை. 1994 ஆம் ஆண்டில் சென்னை, மதுரை, கோயமுத்தூர் என மூன்று மாநகராட்சிகளில் இருக்கும் தொழிலாளர்களுக்காக ,  கட்டட தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்,  விவசாயத் தொழிலாளர், மீனவர், ஆட்டோ தொழிலாளர், தையல், வீட்டுவேலை  என 18 நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாரியங்களுக்கு, ஒன்றிய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றியுள்ள சமூகப் பாதுகாப்பு சட்டத் தொகுப்பினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில், சென்னையில் பல்வேறு அமைப்புச் சாரா  சங்கங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. அதனை ஏற்பாடு செய்த ‘அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பைச்’ சார்ந்த ஆர்.கீதா அவர்களிடம் பேசினோம் ” தமிழ்நாட்டில் உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டம் 1982 ல்  இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் கட்டடம், ஆட்டோ , வீட்டுவேலை,  தையல் வேலை, மண் பாண்டம் என  தொழில் சார்ந்த வாரியங்கள் உள்ளன. இந்தச் சட்டம் ஒரு முன்னுதாரணமான சட்டம். இதைச் சரிவர அமலாக்கினால்,  அமைப்புச்சாரா தொழிலாளர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்கமுடியும். இந்தச் சட்டத்தின்கீழ்  இயற்கை மரணம், விபத்து மரணம், கல்வி, திருமணம், மகப்பேறு என பல்வேறு நிகழ்வுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி எல்லா தொழில்களுக்கும்  தொழில்வாரியான வாரியங்களை உருவாக்குவது சாத்தியமாகும். இது தவிர 2006 ம் ஆண்டு மீன் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும்;  விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும்  என தனியான சட்டங்களை மாநில அரசு இயற்றி உள்ளது.

அதாவது ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் முன்பாகவே, தமிழக அரசு வாரியங்களை உருவாக்கி உள்ளது. அவை நிதி ஆதாரத்தோடு சுயேச்சையாக செயல்பட்டு வருகின்றன. இந்த வாரியங்களின் பலன்களை  தமிழ்நாட்டு தொழிலாளர்கள் அனுபவித்து வருகிறார்கள்.

ஆனால், ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்துள்ள சமூகப்பாதுகாப்புச் சட்டப்படி  இரண்டு வாரியங்கள் மட்டுமே செயல்படும். கட்டடத் தொழிலாளர்களுக்காக ஒரு வாரியமும், அமைப்புச் சாராதொழிலாளர்களுக்காக ஒரு வாரியமும் செயல்படும். இந்த வாரியங்கள் உருவான பிறகு, தற்போது தமிழ்நாட்டில் செயல்படும் வாரியங்கள் கலைக்கப்பட்டு, அவை மத்திய வாரியங்களோடு இணைக்கப்படும். எனவே அதை நாங்கள் எதிர்க்கிறோம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தொகுப்பில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. தொழில்வழி  பிரச்சினைகளை எதிர்கொள்ள மத்திய சட்டத்தில் போதுமான வழிமுறைகள் இல்லை. ஆனால் தமிழ்நாட்டு சட்டப்படி ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்வழி பிரச்சினைகளை எதிர்கொள்ள தனித்தனியாகவும், ஒட்டுமொத்தமாகவும் விதிகளை உருவாக்க முடியும். ‘எளிதாக தொழில் நடத்துவது’ என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு சட்டம் இயற்றியுள்ளதால்,  தொழிலாளர்களின் பாதுகாப்பு அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசாங்கத்தின் விவசாயச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைப் போல, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டமன்றம் சட்டம் இயற்றி,  குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதைப் போல,தொழிலாளர் சட்டங்களை தமிழக அரசு  எதிர்க்க வேண்டும்.

ஏனெனில், ஒன்றிய அரசு ஏற்கனவே இருந்த 40 தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை இயற்றியுள்ளது. இந்த சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக உள்ளது;  தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கிறது. எனவே,  மாநிலச் சட்டத்தின் கீழ், நிறுவப்பட்டுள்ள வாரியங்களுக்கு,  ஒன்றிய சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும் வகையில், தமிழக சட்டமன்றம் தீர்மானம் இயற்ற வேண்டும். தமிழக முதலமைச்சர்,  இதற்காக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும். ” என்றார் ஆர். கீதா.

” தமிழ்நாட்டுச் சட்டம்,  அமைப்புச்சாரா தொழிலாளர்களின் பணிநிலமைகளை (service conditions)  மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது. இதன் கீழ் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ போன்ற முழுமையான மருத்துவ வசதிகளைத் தர முடியும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்தான் ஓய்வூதியமாக 2010 முதல் வழங்கப்பட்டு வந்தது. புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இப்போதுதான் 1500 ரூபாய் ஓய்வூதியம் தருவதாக அறிவித்து உள்ளது. இதனை குறைந்தபட்சம் மாதம் 3500 ரூபாயாக உயர்த்தி வழங்கலாம். ஐம்பது வயதான பெண்களால் கட்டுமான வேலைகளைச் செய்ய இயலாது. அவர்களுக்கான ஓய்வூதிய வயதை குறைக்கலாம். ஓய்வூதியத்தை வழங்க போதுமான நிதி கட்டுமான வாரியத்தில் உள்ளது.

இது அரசினுடைய பணம் அல்ல. கட்டடம் கட்டுபவர்கள், திட்ட மதிப்பீட்டில் தரும் ஒரு சத நலவரியானது, கட்டடத் தொழிலாளர்களின் நலனுக்காகத் தரும் நிதியாகும். இந்த நலநிதியை கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்திற்கு செலவழித்தார்கள். கட்டடத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உபகரணங்களுக்காக செலவழிக்கப்போவதாகச் சொல்லுகிறார்கள். பாதுகாப்பு உபகரணங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது வேலை அளிப்போரின் பணியாகும்.

இஎஸ்ஐ, பணிக்கொடை,  போன்றவைகளைச்  செய்யாமல், கல்வி உதவி, இயற்கை மரண உதவி என்று  அடையாளப்பூர்வமான அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிடுகிறார்கள் ” என்றார் புதிய தொழிலாளர் முனைப்பினைச் ( New Trade Union Initiative) சார்ந்த சுஜாதா மோடி .

“புலம் பெயரும் தொழிலாளர்கள் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உள்ளூரில் மற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். அடையாள அட்டை, ரேஷன் அட்டை போன்றவை இருந்தால்தான் பதிவுசெய்ய முடியும் என்ற கட்டுப்பாடுகள் இருப்பதால்,  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்ய முடிவதில்லை. கட்டாயப் பதிவை அமலாக்க வேண்டும்” என்றார் சுஜாதா மோடி.

“நார்வே, ஸ்வீடன் போன்ற மேலை நாடுகளில் எல்லா தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அட்டை உண்டு. அதன் மூலமாகத்தான் ஓய்வூதியம், மருத்துவ வசதி போன்றவை வழங்கப்படுகின்றன. அங்கு  பதிவு செய்த தொழிலாளர்கள்தான் வேலை செய்ய  முடியும்” என்றார் பன்னாட்டு பொதுத்துறை தொழிற்சங்க கூட்டமைப்பின் ( Public Services International) தெற்காசியச் செயலாளரான ஆர். கண்ணன்.

“தமிழ்நாட்டில் ஐம்பது இலட்சம் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டு கட்டுமான நலவாரியத்தில் 4,000 கோடி ரூபாய் நிதி இருந்தும், கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் வேலையில்லா காலத்திற்கான நிவாரணம் நிருணயிக்கப்படவில்லை. கட்டுமானத் தொழிலாளி விபத்தில் இறந்தால், வேலையாள் இழப்பீட்டுச் சட்டப்படி இழப்பீடு சுமாராக 13 இலட்சம் வழங்க நேரிடும். எனவே, அதற்கேற்ற விபத்து இழப்பீட்டை வாரியம் வழங்க வேண்டும். மற்ற தொழில்களில் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதியளவுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எனவே குறைந்த பட்சம் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்” என்றார் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கே.இரவி.

சென்னையில் நடந்த கருத்தரங்கில் பல சங்கங்கள் கலந்து கொண்டன.” வீட்டுவேலை செய்பவர்களுக்கு மத்திய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஜிஎஸ்டியில் ஒரு சதம், சாலைவரியில் ஒரு சதம், வீட்டுவரியில் ஒரு சதம், மத்திய – மாநில பட்ஜெட்டில் மூன்று சதம்  நலநிதியாக வாரியங்களுக்கு வசூலிக்கப்பட வேண்டும்” என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

எம்ஜிஆர் காலத்தில் (1982) கொண்டுவரப்பட்ட சட்டத்தை நன்கு அமலாக்கினால், உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு ‘சம்பளம், வேலைநேரம், மிகைநேர ஊதியம், விடுப்பு, பணிக்கொடை (Gratuity), வாராந்திர விடுமுறை, பண்டிகைக்கால விடுமுறை’ போன்றவைகளை அமலாக்கமுடியும். சட்டம் போட்டு 40 ஆண்டுகள் கடந்தும்  இவை அமலாகவில்லை. வாரியம் ஆரம்பிக்கப்பட்டு (1994) இருபத்தி ஏழு  ஆண்டுகள் கடந்தாலும்,  இத்தனை பேர்களுக்கு நிதி உதவி அளித்தோம் என்ற புள்ளிவிபரங்களைச்  சொல்லி,வெற்று விளம்பரம் செய்யும் நிலையில்தான் தொழிலாளர் துறை அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தினால், தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பெற்றுவரும் குறைந்த பட்ச பலன்களுக்கும் பாதிப்பு ஏற்பட உள்ளது. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு ?

பீட்டர் துரைராஜ்.

 

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time