‘சித்து’ விளையாட்டில் பஞ்சாபை பறி கொடுக்கும் காங்கிரஸ்!

-சாவித்திரி கண்ணன்

தேசப்பற்றுக்கும் ,போராட்ட குணத்திற்கும் பேர் போன மாநிலம் பஞ்சாப்! தமிழக மக்களை போலவே பஞ்சாப் மக்களும் பாஜகவை இன்று வரை முற்றிலும் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்தியாவிலேயே காங்கிரஸ் வலுவாக காலூன்றி நிற்கும் மாநிலங்களில் பஞ்சாப் முதன்மையானது! அந்த பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் கட்சி கலகலக்கத் தொடங்கியுள்ளது! சென்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வெற்றியை சாத்தியப்படுத்தி முதலமைச்சர் ஆன, கேப்டன் அமீந்தர்சிங் மனம் வெதும்பி முதல்வர் பொறுப்பில் இருந்து ராஜீனாமா செய்துள்ளார். இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

சென்ற தேர்தலில் 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் 77 தொகுதிகளை பெற்றது! ஆம் ஆத்மி 20 இடங்களை பெற்றது! சிரோன்மணி அகாலிதளம் 14 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான பாஜக,எல்.ஐ.பி தலா இரண்டு இடங்களும் பெற்றன! பிறகு இடைத் தேர்தல்களில் படிப்படியாக தன் செல்வாக்கை வளர்த்து தற்போது காங்கிரசுக்கு 80 இடங்கள் உள்ளன!

கேப்டன் அமீந்தர் சிங் பஞ்சாபில் அனைத்து மக்களும் ஏற்கக் கூடிய ஒரு காங்கிரஸ் தலைவராவார். இவர் ராஜிவ் காந்தியுடன் ஒரே பள்ளியில் படித்தவர். ராஜகுடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், சராசரி மனிதராக வளம் வந்தவர். இரணுவத்தில் இருந்தவர். பாகிஸ்தான் போரில் சீக்கிய ரிஜிமிற்கு தலைமை தாங்கியவர்! இன்றைக்கு டெல்லியில் வீரா ஆவேசத்துடன் போராடும் பஞ்சாப் விவசாயிகளின் பின்னணியில் இருப்பவர்! ஏற்கனவே இவர் ஐந்தாண்டுகள் பஞ்சாப் முதல்வராக இருந்தவர் என்றாலும், இந்த முறை அவரால் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியவில்லை. காரணம், அவருக்கு உள்கட்சிக்குள் பெரும் தலைவலியாக உருவெடுத்து சதா சர்வகாலமும் குடைச்சல் கொடுத்து வந்தார் சித்து!

யார் இந்த சித்து?

பிரபல கிரிக்கெட் வீரர் சித்து என்பது அனைவருக்கும் தெரியும். இவர் 1999 உடன் கிரிக்கெட்டுக்கு முற்றுபுள்ளி வைத்தவர். அதன் பிறகு ஒரு சில சினிமாக்களில் தலைகாட்டினார். அரசியல் ஆசையால் உந்தப்பட்டு முதலில் பாஜகவில் சேர்ந்தார். அங்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றார். இவர் பத்தாண்டுகளுக்கும் அதிகமாக பாஜகவில் இருந்தும் கூட பஞ்சாபில் பாஜகவை ஒரு சிறிதும் வளர்க்க முடியவில்லை. ஆகவே, பஞ்சாபில் காங்கிரஸ் தான் பலமான கட்சி. அதில் சேர்ந்தால் தான் நமக்கு எதிர்காலம் என கணித்து 2017ல் தான் காங்கிரஸில் சேர்ந்தார். சேர்ந்தவுடன் சட்டசபைக்கு போட்டியிட வாய்ப்பு பெற்றார். உடனே தனக்கு துணை முதலமைச்சர் வாய்ப்பு கேட்டார். ஆனால், அமைச்சர் பதவி தரப்பட்டது! அதனால் வெறுப்படைந்த சித்து தனக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டும் என தொடர்ந்து நிர்பந்தித்து தலைவர் பதவி பெற்றார்! அது முதல் அமீந்தர் சிங்கிற்கு நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமும் பிரச்சினையை கிளப்பிய வண்ணம் உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவாலும் சித்துவை கண்டித்து வைக்க முடியவில்லை.

பஞ்சாபின் எதிர்கட்சிகளே தோற்கும் அளவுக்கு சொந்த கட்சியின் முதல்வரை விமிர்சித்து தினசரி பேட்டி தந்தார்! ஒரு முறை, ’’பஞ்சாபில் இவ்வளவு மின்வெட்டு ஏற்படுகிறது. என்ன ஆட்சி நடக்கிறது…’’என்று சித்து பேசினார். உடனே பஞ்சாப் சமூக தளங்களில், ’’ஐயா சித்து அவர்களே..உங்களை போன்றவர்கள் பல மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாமல் இருந்தால் எப்படி மின்வாரியம் செயல்பட முடியும். உங்கள் நிலுவைத் தொகை 17 லட்சம் இருக்கிறது. அதை முதலில் கட்டுங்கள்.. என நெட்டிஷன்கள் வெளுத்து வாங்கினர். அதன் பிறகு தான் தனது நிலுவைத் தொகையில் பாதியை கட்டினார்.

கொலைக் குற்றவாளி!

சித்து ஒரு பொது நலப் பார்வை கொண்ட தலைவரல்ல.அவர் ஒரு கொலைக் குற்றத்தில் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தால் தண்டனை உறுதிபடுத்தப்பட்டவர். அவருடைய தண்டனையை சுப்ரீம் கோர்ட் செயல்படுத்தவிடாமல் நிறுத்தி வைத்துள்ளது. இதை வைத்து இப்போதும் சித்துவிற்கு பாஜகவில் செல்வாக்கு உள்ளது என விவாதிப்பவர்களும் உள்ளனர்!

சித்துவிற்கு வேலை, வெட்டி இல்லாததால் அடிக்கடி காமெடி ஷோவில் கலந்து கொள்வார்! பல டெலிவிஷன் புரோகிராமில் பங்கெடுப்பார். அடிக்கடி டெல்லி சென்று ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரை சந்தித்து அளவளாவி வருவார். அப்போது அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு காங்கிரஸ் மேல்மட்டத்தில் தனக்குள்ள செல்வாக்கை காட்டிக் கொள்வார்! முதலமைச்சர் அமீந்தர் சிங் கடும் உழைப்பாளி. அவர் இவரது லாபிகளை பொருட்படுத்துவதில்லை. எனினும், எல்லை மீறி தன்னை விமர்சிக்கும் போது மேலிடத்திற்கு கவனப்படுத்துவார். ஆனால், அது கொஞ்சம் கூட பலனளிக்கவில்லை என்பது தான் துர்அதிர்ஷ்டம்.

சித்துவின் சித்து விளையாட்டிற்கு காங்கிரஸ் மேலிடமே தன்னை களபலியாக்கிக் கொண்டதோ..என எண்ணத் தோன்றும் வகையில் முதலமைச்சருக்கே தெரியாமல் சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வருக்கு எதிரான கருத்துருவாக்கம் வலுப்பெற்றது! மேலிடத்து செல்வாக்கால் எல்லை மீறிச் செல்லும் சித்துவின் சில்லறைத் தனங்கள் ஏற்படுத்திய அவமானம் தாங்காமல் அமீந்தர் சிங் ராஜினாமா செய்துவிட்டார்.

சித்துவின் ஆதரவாளரான ஒரு தலித்தான சரண்ஜித்சிங் சன்னி தற்காலிக முதலமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்! வரும் தேர்தலில் சித்து காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது. சித்துவிற்கு பஞ்சாப் மக்களிடம் செல்வாக்கும் இல்லை. மரியாதையும் இல்லை. மாறாக அமீந்தர் சிங் மீது சகலதரப்பு மக்களுக்கும் ஒரு மரியாதை உண்டு. அமீந்தர் சிங் என்ன முடிவு எடுக்க போகிறார்..? என தெரியவில்லை. அவர் காங்கிரஸில் தொடர வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

காங்கிரஸிற்கு அடுத்தபடியாக வலுவான கட்சியாக ஆம் ஆத்மி பஞ்சாபில் காலூன்றி வருகிறது. காங்கிரஸில் ஏற்பட்டுள்ள விரிசல் ஆம் ஆத்மிக்கு பலம் சேர்க்கலாம் என நம்பப்படுகிறது. எப்படி பார்த்தாலும் பஞ்சாபில் பாஜக ஒரு நலிந்த கட்சி தான். சீக்கியர்களால் சீண்டப்படாத கட்சி! தலித்துகள் தாங்க விரும்பாத கட்சி! மக்களிடம் மரியாதை இல்லாத கட்சி. தன்னால் வெற்றி கொள்ள முடியாத காங்கிரஸை சித்து மூலம் பாஜக சின்னாபின்னமாக்குகிறதோ என்ற சந்தேகமும் மக்களிடம் வெளிப்படுகிறது! கஷ்ட காலத்திலும் காங்கிரஸுக்கு கை கொடுத்த பஞ்சாபும் மெல்ல,மெல்ல அதன் கைகளில் இருந்து நழுவியவண்ணமுள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time