பித்தலாட்டத்திற்கு மறு பெயர் தானோ பி.எம்.கேர்ஸ் பண்ட்…?

- சாவித்திரி கண்ணன்

சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட சட்டபூர்வமாக தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு பெயர் தான் பி.எம்.கேர்ஸ் பண்ட்!

”அரசாங்கத்தின் அதிகாரம் எங்களுக்கு தேவை! ஆனால், அரசின் சட்டங்கள்,கட்டுப்பாடுகள் எங்களுக்கு தேவையற்றது! எங்களை தணிக்கைதுறை கட்டுப்படுத்தக் கூடாது. தகவல் அறியும் உரிமை சட்டம் கேள்வி கேட்கக் கூடாது! இப்படி தானடித்த மூப்பாக செயல்படுவதற்கான ஒன்றை உருவாக்கி கல்லா கட்டத்தானே பதவிக்கே வந்தோம்..” என்பவர்களிடம் என்ன பேச முடியும்?

நாட்டுத் தலைமையே இந்த லட்சணம் என்றால், அப்புறம் தனி முதலாளிகளை யார் கேட்பது..?

கொரோனா தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கட்டுப்பாட்டுக்காக தொடங்கப்பட்ட பி.எம். கேர்ஸ் நிதி அறக்கட்டளை தொடர்பாக நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதம மந்திரி பெயரில் தொடங்கப்பட்டு, அரசு இலச்சினை, அரசு இணையத்தளம், அரசு சமூகத்தளங்களில் விளம்பரம் என அரசின் சர்வ அதிகாரங்களையும் பயன்படுத்திக் கொண்டு செயல்படும் அமைப்பு மக்களிடம் நிதி கேட்குமாம். ஆனால், மக்கள் அதனிடம் கணக்கு கேட்கக் கூடாதாம்!

பக்கா அரசாங்க அமைப்பு போலவே செயல்பட்டு வரும் இந்த நிதி அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதி அறக்கட்டளைக்கு இது வரை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை, செலவு விவரம் உள்ளிட்டவைகளை வெளியிடுமாறு ஆர்.டி.ஐ மூலம் தகவல் கோரப்பட்டது. அப்போது இது தனியார் அறக்கட்டளை, அரசுக்கு சொந்தமானது அல்ல’’ என்ற காரணம் கூறி ஆர்.டி.ஐ தகவல் தர மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ”பிஎம் கேர்ஸ் நிதியை பொதுச் சொத்தாக அறிவிக்க வேண்டும், பிஎம் கேர்ஸ் நிதியைத் தணிக்கை செய்து அவ்வப்போது அறிக்கை வெளியிட வேண்டும். பிஎம் கேர்ஸ்க்கு வழங்கப்பட நன்கொடைகள் மற்றும் அதன் விவரங்களை வெளியிட வேண்டும்” என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது!

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலானது,”பிஎம் கேர்ஸில் உள்ள நிதி அரசாங்கத்தின் நிதி அல்ல. பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உருவாக்கப்படவில்லை. எந்தச் சட்டத்தாலும் உருவாக்கப்படவில்லை. மத்திய அரசின் எந்த விவகாரத்துக்கும், செயலிலும் ஒரு பகுதியாக பிஎம் கேர்ஸ் நிதி இல்லை. மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையால் தணிக்க செய்யவும் முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற பிஎம் கேர்ஸ் நிதி பொது அமைப்பு அல்ல,” என்று கூறப்பட்டுள்ளது.

“சட்டத்தின் மூலமாக இது கொண்டுவரப்பட்டிருந்தால், இது சி ஏ ஜி தணிக்கைக்கு உட்பட்டிருக்கும். அதனால் தான் சட்டத்தைப் புறக்கணித்துவிட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது”, என்பது  ஷாஷ்வத் என்பவரின் வாதம்.

“பி எம் கேர்ஸ் நிதி, அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும், என்பது மட்டுமல்ல, பிஎம்என்ஆர்எஃப்-ம் அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்று அறிவிக்கக் கோரியும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஷாஷ்வத் என்பவர். மேலும் அவர், ”இப்படி ஒரு அறக்கட்டளையை உருவாக்கவே முடியாது. சட்டமியற்றியே இதை உருவாக்க முடியும். ஆனால், இது சட்டப்படியன்றி, அரசால் தன்னிச்சையாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இது சட்ட விரோதமானது” என்று கூறுகிறார்.

கொரானோ எனும் கொடும் துயரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக பணம் ஈட்டும் அதிகாரத்தை- அதுவும் அரசுத்துறையிலேயே பணம் ஈட்டும் அதிகாரத்தை – எந்த ஒரு தனி நபருக்கும் அரசியல்சட்டம் வழங்கவில்லை.

கொரானா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பல கீ,மீ நடந்து பசி,பட்டினியோடு சுருண்டு விழுந்து இறந்தனர். இந்த நிதி அவர்களை காப்பாற்றப் பயன்படவில்லை..!

இந்த பி.எம்.கேர்ஸ் நிதி மார்ச்- 27, 2020ல் தொடங்கப்பட்டது! தொடங்கப்பட்ட ஐந்தே நாளில் இதற்கு 3,076.62 கோடி நிதி குவிந்துவிட்டது.ஏகப்பட்ட தனியார் நிறுவனங்கள் இவற்றை தந்தன. ஆன போதிலும் அரசுத் துறை நிறுவனங்களையும், அரசு ஊழியர்களையும் தொடர்ந்து நிர்பந்தித்து பணம் வசூலித்தனர்.

மத்திய அரசின் 50துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், பி.எம்.கேர்ஸ் நிதியத்துக்கு ரூ.157.23 கோடி வழங்கிஉள்ளனர். இதில் ரயில்வே ஊழியர்கள் மட்டும் அதிகபட்சமாக 93 சதவீதம், அதாவது ரூ.146.72 கோடி நன்கொடை அளித்துள்ளனர். இந்த தொகைமுழுவதும் ஊழியர்கள், தங்கள்ஊதியத்தில் இருந்தே வழங்கி உள்ளனர்!

பி.எம்.கேர்ஸ் நிதியத்துக்கு 38 பொதுத் துறை நிறுவனங்கள், சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) திட்டத்தின்படி ரூ.2,105 கோடி வழங்கி உள்ளன. 7 பொதுத் துறை வங்கிகள், மற்ற நிதி நிறுவனங்கள் ரூ.204.75 கோடி, மத்திய கல்வி நிறுவனங்கள் ரூ.21.81 கோடி நிதியுதவி அளித்துள்ளன. இந்நிறுவனங்களின் ஊழியர்களும் தங்கள் ஊதியத்தில் இருந்தே நன்கொடையை வழங்கி உள்ளனர் என்று தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் தெரிய வந்துள்ளது.

இதேபோல் மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத் துறை ஊழியர்கள் ரூ.1.14 கோடி, வெளியுறவுத் துறை ஊழியர்கள் ரூ.43.26 லட்சம், பாதுகாப்புத் துறை ஊழியர்கள் ரூ.26.20 லட்சம், சுகாதாரத் துறை ஊழியர்கள் ரூ.18.51 லட்சம் வழங்கி உள்ளனர்.

எனினும், மத்திய உள்துறைஅமைச்சகத்தின் கீழ் இயங்கும்பிரதமர் அலுவலகம், அஞ்சல் துறை அலுவலகம் போன்ற சில முக்கிய துறைகள் எவ்வளவு நன்கொடை வழங்கி உள்ளன என்ற விவரங்களை அளிக்கவில்லை.கொரோனாவை எதிர்த்துப் போராட, ‘பிஎம் கேர்ஸ்’  நிதிக்கு  நன்கொடை அளிக்குமாறு கடந்த மார்ச் 27 ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.  அறிவிப்பு வெளியான 52 நாட்களில் ரூ. 9 ஆயிரத்து 677 கோடியே 90 லட்சம் வசூலானதாக தெரிய வந்துள்ளது.

இந்த பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் பல செயல்படவில்லை எனக் கூறப்பட்டது நினைவிருக்கலாம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பல முறை பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

பி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு சீனாவிடமிருந்து பணம் பெறப்பட்டுள்ளதை காங்கிரஸ் தலைவர் அபிஷேக்சிங்வி கண்டித்துள்ளார். சீனாவின் ஹூவேய் நிறுவனம் ரூ.7 கோடியும், ‘டிக் டாக்’ ஆப் உரிமையாளரின் நிறுவனம் ரூ.30 கோடி வழங்கியுள்ளது. 38 சதவீத சீன முதலீடை கொண்டுள்ள பேடிஎம் நிறுவனம் ரூ.100 கோடியும், ஜியோமி நிறுவனம் ரூ.15 கோடியும், ஓப்போ நிறுவனம் ரூ.1 கோடியும் பி.எம் கேர்சுக்கு வழங்கியுள்ளது. இப்படி பெறப்படும் நிதி எவ்வாறு கையாளப்படுகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. வெளிப்படையின்றி இருக்கும் பி.எம் கேர்ஸ் நிதியை பிரதமர் மட்டும் தான் கையாள்வதாக தெரிகிறது.’’என அவர் கூறியுள்ளது கவனத்திற்குரியதாகும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ட்விட்டரில், 2020 ஏப்ரல் மாதம் ஒன்றிய அரசு அறிவிப்பில் 2021 மார்ச் மாதம் வரை அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. பிஎம் கேர்ஸ் நிதி அர சாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல என்றால், எதற்காக அந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பிஎம் கேர்ஸ் கொள்ளையை நிறுத்துங்கள். இந்த மோசடி, கொள்ளை நிறுத்தப்பட வேண்டும், அதில் உள்ள நிதி அனைத்தும் தணிக்கை செய்யப் பட்டு கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், ”ஜனநாயகத்தை தடம்புரள வைக்க தவறாக பயன்படுத்த அனுமதிக்க கூடாது!பி.எம்.கேர்ஸ். நிதி பீகார் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக செலவு செய்ய வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, இந்த தனியார் நிதி வெளிப்படைதன்மை உடையதாக ஆக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு பிரித்து தரப்பட வேண்டும்.தேர்தல் பத்திரங்களை போல நமது ஜனநாயகத்தை தடம்புரள வைக்க தவறாக பயன்படுத்த அனுமதிக்க கூடாது.’’ என வலியுறுத்தி உள்ளார்.

நமக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால், இந்த நிதியை மோடியும், அவரது கூட்டாளிகளும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ இயக்கங்களுக்கு எடுத்துக் கொடுக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது? மக்களுக்கு தருவதற்குத் தான் பெறுகிறோம் என்றால், அதை மறைக்க வேண்டிய அவசியம் ஏன் வருகிறது..?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time