ஆளுனர் ஆர்.என்.ரவி டிஜிபி சைலேந்திரபாபுவை அழைத்துப் பேசினார் செப்டம்பர் 22 ந்தேதி! அதற்கடுத்த நாளிலிருந்து அதாவது 23-ந் தேதி இரவு முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடியாக ரவுடிகள் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் செப்.23 அன்று இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (Storming Operation) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது! நான்கைந்து நாட்களில் நடந்த இந்த வேட்டையில் 21 ஆயிரத்து 592 பழைய குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர் என்ற செய்திகள் வருகின்றன!
மேலோட்டமாக பார்த்தால் ஆகா ரவுடிகளை எல்லாம் ஒரு வழி பண்றாங்க! இனி, நம்ம சமூகத்தில் அமைதி தான் அப்படின்னு தான் தோணும்.
ரவுடிகளை கைது செய்யட்டும்! ஆனால், குற்றச்செயல்கள் நடக்கும் போதோ அல்லது நடந்ததின் தொடர்ச்சியாகவோ அந்த நடவடிக்கைகள் இருந்தால் வரவேற்க வேண்டியதே! ஆனால், யாரோ ஒரு ஆளுனர் ஏதோ கூப்பிட்டு பேசினார் என்பதற்காக போனவன், வந்தவன் ஏழெட்டு வருஷத்திற்கு முன்பு ஏதோ ஒரு வழக்கிலே சம்பந்தப்பட்டவன் என எல்லாரையும் அள்ளி எடுத்துட்டு போய் கணக்கு காட்டுவது தான் வருத்தமளிக்கிறது! எத்தனை நிரபராதிகளை தூக்கத்தில் தட்டி எழுப்பி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்க என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!அவங்க வீட்டுல பெண்டாட்டி,பிள்ளைகள் எப்படி பரிதவித்திருப்பாங்களோ..?
இவர்களில் 294 பேர் வழக்குகள் சம்பந்தமாக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அந்த கைதுகள் அவசியமானவையே! அதையும் கூட இவ்வளவு நாள் செய்யாமல் தவிர்த்துவிட்டு மொத்தமாக செய்வானேன்?
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 972 பேர் இந்த கைதில் அடங்குவார்கள் என்கிறார்கள்! அந்த வழக்கிற்கும், இந்த கைதுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா..? அல்லது முடிந்து போன போன வழக்கில் கைது செய்தார்களா..? என்பது ஆராய்ச்சிக்குரியது.
கைதான ரவுடிகளிடம் இருந்து 7 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்கள், கத்திகள் உள்பட மொத்தம் 1117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாம்! இதெல்லாம் ஷோ காட்டுவதற்குத் தானே! இத்தனை நாள் இவை அவர்களிடம் இருப்பது போலீசுக்கு தெரியாதது போலவும், இப்போது தெரிய வந்தது போலவும் என்ன டிராமா இது! புதிய கவர்னரை மகிழ்விக்க, அவரை திருப்திபடுத்தி நல்ல பெயர் வாங்க என்னென்னவோ செய்கிறார்கள் என்று தான் மக்கள் எண்ணுகிறார்கள்! அதே சமயம் 2,526 ரவுடிகளிடமிருந்து நன்னடத்தைக்காக பிணை ஆணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதில் இருந்து திருந்தி வாழ்ந்த ரவுடிகளை மீண்டும் கைது செய்து நன்னடைத்தை சான்று வாங்கி விடுவித்துள்ளனர் என்பது ஒரு வகையில் நல்ல அணுகுமுறையே!
இதே போல சுமார் 9 ஆண்டுகள் முன்பு ஜெயலலிதா ஆட்சியில் 2012ல் டிஜிபி ராமானுஜம் இதே போல தமிழகம் முழுக்க அதிரடியாக ரவுடிகள் வேட்டை நடத்தினார். அப்போது அவர் 16,500 பேர் கொண்ட ஒரு லிஸ்ட் எடுத்தார்! அப்போதும் பல அப்பாவிகள் அதில் அல்லாடினார்கள்! அந்த வருஷம் தான் பசுபதி பாண்டியன் கொலையுண்டதாக நினைவு! தற்போதும் அவர் கொலைக்கு பழி வாங்குவதாக ஒரு மூதாட்டியின் தலை பட்டபகலில் துண்டிக்கப்பட்டது இந்த Storming Operation னுக்கு ஒரு காரணமாகிவிட்டது எனலாம்!
Also read
பொதுவாக திறமையான அல்லது சாதுரியமான ரவுடிகள் ஆட்சிகள் மாறியதும் தங்கள் விசுவாசத்தையும் மாற்றிக் கொள்வார்கள்! அவர்கள் ஒரு போதும் அரெஸ்ட் ஆவதில்லை. இன்றைக்கு அதிக ரவுடிகளை கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்துள்ள கட்சி தமிழக பாஜக தான்! அந்த ரவுடிகளில் யாரும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வரவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
உண்மையில் இன்று கைது செய்யப்பட வேண்டியவர்கள் வைட் காலர்ஸ் கிரிமினல்ஸ்கள் தான்! அவர்களை கைது செய்யக் கூடிய அளவுக்கு காவல்துறை தன்னை தொழில் நுட்ப ரீதியாக இன்னும் மேம்படுத்திக் கொண்டு துரிதமாக இயங்க வேண்டும்.
புதிய கவர்னரை தமிழக அரசு பொறுமையாக ஸ்டடி பண்ணட்டும். அவரை திருப்திபடுத்துவதென்று போனால், அப்புறம் அதற்கு எல்லையே இருக்காது!பாஜக ஆட்சி செய்யும் உத்திரபிரதேசத்தைவிட தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாகவே உள்ளது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
இன்றைக்கு அதிக ரவுடிகளை கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்துள்ள கட்சி தமிழக பாஜக தான்! அந்த ரவுடிகளில் யாரும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வரவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!