உலகத்தில் எத்தனையோ நதி நீர் பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளன! ஏன் வட இந்தியாவிலேயே கூட பல மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆற்று நீர் பகிர்வு சுமூகமாக முடிவடைந்துள்ளது. பக்ரா நங்கல் பயஸ் மேலாண்மை வாரியம் இதற்கு ஒரு உதாரணம்! ஆனால், காவிரி நீர் பங்கீட்டை மட்டும் ஏன் சுமூகமாக தீர்க்க முடியவில்லை…?
இத்தனைக்கும் கடந்த 50 ஆண்டுகளில் காவிரியில் நாம் பெற்று வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களால் தமிழகம் காலம்காலமாக பெற்று வந்த காவிரி தண்ணீரை காப்பாற்றிக் கொடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை!
1970 களில் கர்நாடகத்தில் காவேரி மூலமாக தமிழகம் சுமார் 350 டி.எம்.சி தண்ணீர் பெற்று வந்தது. ஆனால், நாம் நீதிமன்றம், நடுவர் மன்றம் என்று போராடி மேலும் கூடுதலாக பெற முடியும் என நம்பினோம். ஆனால், சட்டப் போராட்டம் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது! ஆகவே இடைகால தீர்வைக் கோரினோம்.ஆனால்,இடைக்கால தீர்ப்பிலேயே நமக்கு 205 டி.எம்.சி தான் தீர்ப்பானது! அதன் பிறகு இறுதி தீர்ப்பில் அதுவும் குறைக்கப்பட்டு 192 டி.எம்.சி எனத் தீர்ப்பானது. அதையும் ஏற்காமல் மேல்முறையீடு போனதில் 177.25 டி.எம்.சி என இன்னும் குறைக்கப்பட்டது. நல்ல வேளையாக இனி மேல்முறையீடு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
இந்த தீர்ப்பையாவது கர்நாடகம் முறையாக செயல்படுத்தினாலே போதும். நிம்மதியாக கிடைப்பதைக் கொண்டு சிக்கனமாக திட்டமிட்டு பயிர் செய்து கொள்ளலாம் என வாழ முடிந்ததா..?
இந்த தீர்ப்பை மதித்து கர்நாடகா முறையாக தண்ணீர்விடுவதை கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் போராடி தீர்ப்பு பெற்றோம் பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு.அந்த தீர்ப்பை மத்திய அரசு மதிக்காமல் காலம் தாழ்த்தி நம்மை காயப்படுத்தி வந்தது! பிறகு ஒரு வழியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது. ஆனால், அப்படி அமைக்கப்பட்டவாரியம் நடு நிலையோடு செயல்புரிவதற்கான தன்னாட்சி அதிகாரம் இல்லாமல் செய்துவிட்டது மத்திய பாஜக அரசு. அந்த மேலாண்மை வாரியத்தை மத்திய ஜலசக்தி துறையின் கீழ் உள்ள ஒரு அமைப்பாக்கிவிட்டது! மத்திய நீர்வள ஆணையரையே காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக்கிவிட்டது.
இதன் மூலம் காவிரி பிரச்சினையில் ஒரு நிரந்தர தீர்வை என்றுமே எட்ட முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது. கர்நாடகம் விருப்பட்டால் தண்ணீர் திறக்கும். இல்லையெனில், தமிழகம் கெஞ்சிக் கேட்டு தவிக்க வேண்டும் என்ற நிலையே தொடர்கிறது! இதனால், குறைந்தபட்ச உத்திரவாதம் கூட இல்லாத காரணத்தால் குறுவை, சம்பா, தாளடி என எந்த போகமும் நம்மால் சரியாக செய்ய முடியவில்லை. கர்நாடகம் ஒத்துக் கொண்ட தண்ணீரை எப்படியும் தந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ஏக்கரில் பயிர் செய்யும் காவிரி பாசன விவசாயிகள் ஏமாற்றப்பட்டு பயிர் கருகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது.
சமீபத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 14ஆவது கூட்டம் டெல்லியிலுள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் பேசிய பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, ‘‘கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 30.6 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடக் கூறி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகா முறைப்படி தண்ணீர் வழங்கவில்லை. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மட்டுமல்ல, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் அவமதிக்கும் செயல். தமிழ்நாட்டுக்கு 37.3 டிஎம்சி நீரை கர்நாடகா இன்னும் வழங்க வேண்டியுள்ளது. கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் நிலுவையில் உள்ள தண்ணீரை வழங்க உத்தரவிட வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை சாகுபடிக்கு நீர் தேவைப்படுவதால் கர்நாடக அரசு உடனடியாக நீரை திறக்க உத்தரவிட வேண்டும்” என்றார்.
கர்நாடக அரசு தரப்பில் அதன் பிரதிநிதிகள் பேசுகையில், ‘‘கர்நாடகாவில் கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்த அளவில் மழை பெய்துள்ளதால் கிருஷ்ண ராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. எனினும் தமிழ்நாட்டு முறையாக தண்ணீர் வழங்கப்படுகிறது” என்று பொத்தாம் பொதுவாக கூறிவிட்டனர்.
தமிழகத்துக்கான நீர் பங்கீட்டை கோரும் போதெல்லாம் கர்நாடகா மழைப் பொழிவின் அளவு குறைந்தது பற்றியும், மழைக்காலங்களில் திறக்கப்படும் உபரி நீரின் அளவையும் தெரிவிக்கிறது. இந்த விதமான போக்கு தமிழகம் தனது உரிமையை பெறுவதற்கு இடை யூறாக உள்ளது! அதாவது கர்நாடகத்தை பொறுத்த அளவில் காவிரியில் உபரியாக தண்ணீர் வரும் போது தமிழகத்திற்கு திறந்துவிட்டால் போதும் என்ற மன நிலையில் பிடிவாதமாக உள்ளது.
இதே சூழல் தான் காவிரி ஒழுங்காற்றுக் கூட்டத்திலும் சென்ற மாதம் நிலவியது! சென்ற மாதம் காவிரி ஒழுங் காற்று குழு தலைவர் நவீன்குமார் பேசும்போது, “ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரையும் ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரையும் கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும்” என அறிவுறுத்தினார். ஆனால், இன்று வரை அதை கர்நாடகா அமல்படுத்தவில்லை.
இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நமக்கு வர வேண்டிய 28 டி.எம்.சியும்,அக்டோபரில் நமக்கு வர வேண்டிய 20 டி.எம்.சியும் முறையாக வரும் என்பதற்கு உத்திரவாதமற்ற நிலையில் பல இடங்களில் சம்பா சாகுபடி தடைபட்டுள்ளது! கர்நாடகத்தின் நீதி, நியாயத்தை துச்சமாக கருதும் போக்கால் பல நேரங்களில் சம்பா சாகுபடி உழவர்களை சாகும்படியான நிலைக்கு தள்ளியுள்ளது.
பல வருட போராட்டங்களுக்கு பிறகு குறைந்தபட்சத் தண்ணீர் தர ஒரு தீர்ப்பு வந்தும் அதைக் கூட நாம் பெற முடியாதவர்களாக உள்ளோம் என்றால், இந்த நாட்டில் சட்டம், நீதி நியாயம் தர்மம் மனசாட்சி எதற்குமே மதிப்பில்லை என்பது தான் நிதர்சனமாகும். மத்திய அரசு என்ற மாபெரும் அதிகார அமைப்பு மாநில உரிமைகளை நாளும் குறைத்து நசுக்குவதில் தான் ஆர்வம் காட்டுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்திடம் தண்ணிர் திறந்துவிடும் உரிமையை ஒப்படைத்து இருக்க வேண்டும்.
Also read
ஒரு ஆறு என்றால், அதில் நாளும்,பொழுதும் தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். ஓடும் தண்ணீரை தடுத்து நிறுத்தி மாதாமாதம் தண்ணீர் திறப்பது மிகப் பெரிய அநீதியாகும்! தண்ணீர் என்பது தினசரிப் பயன்பாடு. அது மாதாந்திரப் பயன்பாடல்ல. பயிருக்கு தினசரி நீர் பாய்ச்சினால் தான் விவசாயம்! காவிரி தண்ணீரை பிடித்து தடுத்து வைத்து, மாதாமாதம் அதுவும் மனமிருந்தால் மட்டுமே அனுப்புவேன் என்பது இயற்கைக்கு மாறானது. தினசரி தண்ணீரை ஓடவிட்டு, குறிப்பிட்ட அளவு ஓட்டத்திற்கு பிறகு அதை நிறுத்திக் கொள்வதே முறையாக இருக்கும். இந்த உரிமையை ஏன் தமிழகம் தரப்பில் வலியுறுத்தவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது!
இவ்வளவு துயரங்கள் போதாது என்று வந்து கொண்டிருக்கும் குறைந்தபட்ச காவிரி தண்ணீரையும் சிறைபிடிக்க பல ஆயிரம் கோடி பணத்தை மேகதாது அணைகட்ட ஒதுக்கி செயல்பட்டு வருகிறது கர்நாடகா! நீதியை நிலை நாட்ட விருப்பமில்லாத மத்திய அரசு உள்ள வரை நியாயமான தீர்வு சாத்தியமில்லை.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply