காங்கிரஸ் கேப்டன் இல்லாத கப்பலா..?

-சாவித்திரி கண்ணன்

காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத ஒரு இக்கட்டில் இருக்கிறது என்பது உண்மைதான்! அந்த இக்கட்டில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்..? குலாம் நபி ஆசாத்தும் கபிள்சிபலும் யாருக்காக பேசுகிறார்கள்..? அவர்களின் நோக்கம் என்ன..?

பஞ்சாபில் நடக்கும் சம்பவங்கள் காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரஸ் ஆதரவாளர்களையும் உலுக்கி வருகின்றன. காங்கிரஸ்        பலமாக இருக்கும் ஒரு சில மாநிலங்களில் பஞ்சாப் குறிப்பிடதக்கது! அங்கு காங்கிரஸ் பலவீனப்படுவதும், அப்படி பலவீனமடைய காங்கிரஸின் தேசிய தலைமையே காரணமாகிவிட்டதோ என்ற உணர்வும் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது!

அமரீந்தர் சிங் போன்ற செல்வாக்கான மூத்த தலைவர் தொடர்ந்து அவமானத்திற்கு ஆளாகி வெளியேறியதும், சித்து போன்ற சில்லறைத்தனமான சில்லுண்டிகள் மாநிலத்தின் தலைமை பதவிக்கு வந்து கட்சியை இஷ்டத்திற்கு ஆட்டி வைப்பதும் மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களாகும்! ஆனால், அதே சமயம் ஐம்பது ஆண்டுகளாக தன்னை அடையாளம் காட்டி ஆளாக்கிய கட்சிக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட அமித்ஷாவை அமீந்தர்சிங் சென்று சந்தித்தன் மூலம் தன்னைத் தானே தரம் குறைத்துக் கொண்டார்.

பஞ்சாப் விவசாயிகள் அதே தலை நகர் டெல்லியில் வெயில்,மழை,பனி எதையும் பாராமல் ஒராண்டாக தெருவில் இறங்கி போராடி வருகிறார்களே….! அவர்களை ஒரு கணம் மனதில் நினைத்து பார்த்திருந்தால் அவர் அமித்ஷாவை சந்திருக்க மாட்டார். அமீந்தர்சிங் பாஜகவில் சேர்ந்துவிட்டால் பஞ்சாபில் அவருக்கான மரியாதை எல்லாம் அடியோடு சரிந்துவிடும்! அதனால் தான் அவர் சந்திப்புடன் நிறுத்திக் கொண்டார்!

பஞ்சாப் விவகாரத்தைத் தொடர்ந்து காங்கிரஸின் அதிருப்தி தலைவர்கள் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல பொது வெளியில் பேசி வருவதும், தலைமைக்கு எதிரான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுவதும் அந்த கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே கோபத்தையும், குழப்பத்தையும் ஒரு சேர உருவாக்கியுள்ளன!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், சற்று அதிகமாகவே பேசுகிறார்! ”காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பவரே இல்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. ஆம், ஐயா என்று கூறி கீழ்படிந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் ஜி-23 குழுவை சேர்ந்தவர்கள். பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்போம். பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் ஏன் வெளியேறி வருகின்றனர்? ஒருவேளை அது நம்முடைய தவறா என்று நாம் ஆராய வேண்டும். உடனடியாக காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தலைவர்களிடையே குறைந்தபட்சம் ஒரு உரையாடல் நடைபெற வேண்டும். நாங்கள் கட்சியின் சித்தாந்தத்தை விட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல மாட்டோம். காங்கிரஸின் முரண்பாடு என்னவென்றால், தலைமைக்கு நெருக்கமானவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால், தலைமையிடம் நெருக்கமாக இல்லாதவர்களாக கருதப்படுபவர்கள் கட்சியில் இன்னும் உள்ளனர்.” என்று பேசியுள்ளார். குலாம் நபி ஆசாத்தும் இது போன்றே பேசி வருகிறார்.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த பேச்சு மிக நியாயமானதாகப்படும்! பலர் மனதிலும் உள்ளதைத் தானே பேசியுள்ளனர் என்றும் தோன்றும்.

ஆனால், எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்ற குறளின்படி கவனித்தால் பேசுவர்கள் யார்? அவர்களின் உள் நோக்கம் என்ன..? என்று பார்க்க வேண்டும்.

கட்சிக்குள் பேச வேண்டிய நியாயத்தை – தலைமையின் கவனத்திற்கு மட்டும் கொண்டு செல்ல வேண்டிய ஒரு கருத்தை – பொதுவெளியில் விவாத பொருளாக்குவது ஏன்? இப்படி பேசுவது கட்சியை வெகுஜனதளத்தில் பலவீனப்படுத்தும் என்பதை தெரியாத தலைவர்களா.. இவர்கள்? இப்படி தலைமையை பொதுவெளியில் விமர்சிப்பது பாஜகவை பலப்படுத்தும் என்பது ஒரு சாதாரணத் தொண்டனுக்கும் தெரியுமே!

கபில்சிபல், குலாம் நபி ஆசாத் ஆனந்த் சர்மா மனிஷ் திவாரி, சசி தரூர், முகுல் வாஸ்னிக், விவேக் தங்கா. பூபிந்தர் சிங் ஹுடா, மிலண்ட் தியோரா..இவர்களெல்லாம் சேர்ந்து ஜி23 தலைவர்கள் என்ற பெயரில் ஒரு குழுவாக இயங்கி வருகின்றனர். இவர்களில் யார் ஒருவரும் மக்களிடையேவோ அல்லது தொண்டர்களிடையேவோ செல்வாக்கான தலைவர்கள் அல்ல! கட்சியை வளர்க்க வியர்வை சிந்தியவர்கள் அல்ல. இவர்களில் யார் ஒருவரும் சுயேட்சையாக நின்றால் டெபாசிட் கூட வாங்க வக்கில்லாதவர்கள். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் பாஜகவின் செயல்பாடுகளை எதிர்த்து எந்த அளவுக்கு இவர்கள் களமாடி வருகிறார்கள்..?இன்றைக்கு பாஜகவை எதிர்ப்பதில் ஆயிரம் மடங்கு உழைப்பை செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதை இவர்கள் உணர்ந்ததாக தெரியவில்லையே!

குலாம் நபி ஆசாத் சொல்கிறார். கட்சி அவரை நன்கு பயன்படுத்திக் கொண்டு அலட்சியப்படுத்தி விட்டதாம்! தன்னை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொண்டதாகக் கூறிய  குலாம் நபி ஆசாத்தைத்  தான் காங்கிரஸ் கட்சி 7முறை எம்.பி.யாக்கியது. ஜம்மு காஷ்மீரின் முதல்வராக்கியது. இந்திரா காந்தி தொடங்கி பலரது அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பை தந்தது.  பொதுச்செயலாளராகப் பதவி வழங்கியது. நாடு முழுவதும் தமிழகம் உள்பட 20 மாநிலங்களைக் கண்காணிக்கும் பதவியைத்  தந்தது. இந்த பொறுப்புகளை எந்த அளவுக்கு அவர் சிறப்பாக செய்திருக்கிறார்? தமிழக காங்கிரஸீக்கு பல நேரங்களில் தவறான தலைமையை திணித்தவர் தான் குலாம் நபி ஆசாத்!

கபிள்சிபல் நல்ல பேச்சாற்றல் மிக்கவர். ஆனால், அவரும் கட்சியால் ஆதாயமடைந்தவரேயன்றி, கட்சிக்கு ஆதாயமாகத் திகழ்ந்தவர் அல்ல! சசிதரூர் கேட்கவே வேண்டாம். ஒரு சொகுசான ஷோக்கு பேர்வழி. இந்த ஜி 23 கூட்டத்தில் ஆரம்பத்தில் சேர்ந்துவிட்டு,பிறகு, ”வேண்டாமடா சாமி” என்று ஓடிவந்துவிட்டார் வீரப்ப மொய்லி! இந்த கூட்டத்தில் ஒருவராக இருந்த ஜதின்பிரசாதா தற்போது உத்திரபிரதேச பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். அவரை இவர்களால் தடுக்க முடிந்ததா..? பதவிக்காக யோகி ஆதித்திய நாத் போன்ற காட்டாட்சி நடத்தும் ஒருவரை ஏற்றுக் கொண்டு செயல்பட துணிந்தவர் காங்கிரஸில் இவ்வளவு நாள் எப்படி இருந்தார்..? எனத் தெரியவில்லை.

மத்திய பிரதேசத்திலே ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்! காங்கிரஸில் மிகப் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய அவர் இப்போது பாஜகவில் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார். அவர் பின்னால் சில எம்.எல்.ஏக்கள் சென்றனர். ஆனால், தொண்டர்கள் செல்லவில்லை.

கோவாவில் லூய்சின்ஹோ ஃபலேரோ, அசாமில் சுஷ்மிதா தேவ் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் லலிதேஷ் திரிபாதி ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறி ஆதாய அரசியலில் அமிழ்ந்து போனது தான் கண்ட பலன்!

எத்தனையோ பேர் காங்கிரஸுக்காக வாழ் நாளெல்லாம் உழைத்து கடைசி வரை எந்த ஆதாயமும் பெறாமல் வாழ்ந்து சென்றுள்ளனர். கொண்ட கடமையே பதவியாகக் கருதி செயல்பட்டவர்கள் பலர் அன்றும் உண்டு. இன்றும் உண்டு! அவர்கள் அனைவரும் அந்ததந்த பகுதி மக்கள் மனங்களில் நீங்காத மரியாதை பெற்றுள்ளனர்!

அரசியல் என்பது அர்ப்பணிப்புடன் இருக்கும் போது அதற்கு ஒரு மரியாதை எப்போதும் மக்களிடம் இருக்கவே செய்யும். சில நேரங்களில் கட்சித் தலைமைக்கு உரியவர்கள் மீது கவனம் இல்லாமல் போகும் வாய்ப்புள்ளது. ஆனால், எப்போதுமே அப்படி இருக்காது! உழைத்துக் கொண்டே இருப்பவர் ஒரு நாள் அங்கீகாரம் பெற்றே தீருவார்.

அமீந்தர்சிங் டெல்லியில் இரண்டு நாட்கள் இருந்தார்.அதற்கு பிறகே அமித்ஷாவை சந்தித்தார்.அவரை குலாம் நபி ஆசாத்தோ, கபிள் சிபலோ தடுத்து நிறுத்தி ஆற்றுப்படுத்தி இருக்கலாமே! கட்சிக்காக சிறு துரும்பை கூட எடுத்துப் போட துப்பில்லாமல் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு விமர்சனம் செய்யக் கூடாது.

உங்களை பிரச்சாரம் செய்யக் கூடாது என்று யாரும் தடுக்கவில்லை. எந்த மாநில தேர்தலுக்காவது களம் இறங்கி வேலை செய்துள்ளீர்களா..? மக்களை பாதிக்கும் எத்தனை விவகாரங்களில் குரல் கொடுத்துள்ளீர்கள்..? வரிந்து கட்டிக் கொண்டு எழுதி உள்ளீர்களா..?

ராகுல்காந்தி என்ற ஒற்றை மனிதன் சுழன்று, சுழன்று வேலை பார்ப்பார்! எல்லா எதிர்வினைகளையும் எதிர் கொள்வார். அவமானப்படுவார். அந்த நேரத்தில் எல்லாம் கூட அமைதி காத்துவிட்டு மிக இக்கட்டான கட்டங்களில் இவர்கள் கட்சியை விமர்சிப்பது முறையா..?

இந்தியாவை பேரழிவுக்கு கொண்டு சென்றுள்ளது பாஜக அரசு! இராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் ஆவடி டேங்க் பேக்டரி, ரயில்வே உள்ளிட்ட ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை எடுத்து தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது. ஒரு சில தனி முதலாளிகள் வளம் பெறுவதற்கு ஒட்டுமொத்த மக்கள் நலனையும் பலிகடாவாக்கி வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளை அம்பானியிடமும், அதானியிடமும் அடகு வைக்கிறது! தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து அவர்களை அடிமைகளாக்கத் துடிக்கிறது. ஜாதி,மத பேதங்களைத் தூண்டி வளர்த்து மக்களை கூறு போடுகிறது. மருத்துவ கல்வியை அபரிமிதமான வியாபார பொருளாக்கும் நீட் தேர்வை திணிக்கிறது. மொத்தத்தில் மனிதாபிமானத்தை அழித்து அதிகாரம்,செல்வம் ஆகியவற்றை மையப்படுத்திய ஒரு காட்டாட்சியை தந்து கொண்டுள்ளது.

இந்த நேரத்தில் தம்மிடையே உள்ள வேற்றுமைகளை,விருப்பு, வெறுப்புகளை தூக்கிப் போட்டு செயல்படுவர்கள் தான் நாட்டுக்கு தேவைப்படுகிறார்கள்! காங்கிரஸும், ராகுல்காந்தியும் தேசத்தின் தேவை. குற்றம்,குறை யாரிடம் இல்லை. உள்ளுக்குள் உட்கார்ந்து பேசுங்கள்! பொதுவெளியில் புலம்பாதீர்கள்!

காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத ஒரு இக்கட்டில் இருக்கிறது என்பது உண்மைதான்! அந்த இக்கட்டில் இருந்து மீண்டு வருவதற்கான கடமைகளை செய்ய ராகுல்காந்தியைத் தவிர்த்து இன்னும் ஒரு நம்பிக்கைக்குரிய தேசியத் தலைமையே இது வரை தென்படவில்லை என்பது தான் யதார்த்தம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time