சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஜனநாயக கோரிக்கையே !

- பீட்டர் துரைராஜ்

‘மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கு’  என்று சுவரில் எழுதி வைத்து இருப்பதை   சிறுவயதில்  பள்ளிக்கு நடந்து போகும்போது பார்த்து இருக்கிறேன். அதன் அருகில் பெரியார் படத்தை வரைந்திருப்பார்கள்.  ‘மண்டல்’ என்பது ஒரு  பெயர் என்பது உயர்நிலைப்பள்ளி மாணவர்களாகிய எங்களுக்கு அப்போது தெரியாது. வி்.பி. சிங் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் மண்டல் என்ற பெயர் இல்லாத செய்திப் பத்திரிகைகளைக்  காண முடியாது.

2021 க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் சாதிவாரியாக கணக்கு எடுப்பது சிரமம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்ற  உறுதிமொழிப் பத்திரத்தில்  தெரிவித்துள்ளது.

‘சாதிவாரிக் கணக்கெடுப்பு’ நடத்த வேண்டும் என்பதை திராவிடர் கழகம், திமுக,பா.ம.க, விடுதலை சிறுத்தைகள்..உள்ளிட்ட பல இயக்கங்கள் வெகுகாலமாக வலியுறுத்தி வருகின்றன.

திராவிடர் கழகத்தைச் சார்ந்த வீ.குமரேசன் இது குறித்துப் பேசும் போது “மக்கள்தொகையில்  பிற்படுத்தப்பட்டவர்கள் 52 சதம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு  27 சதம்தான் மத்திய அரசுப் பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அதற்கும் குறைவாக, அதாவது 13 சதத்திற்கும் குறைவாகவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறிய முடிகிறது.

விடுதலைக்கு முன்பு தமிழகத்தில் அனைவருக்கும், பார்பனர்கள் உட்பட, சாதிவாரியாக 100 சத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அப்போதும்  பார்ப்பனர்கள் அதிக இடங்களை அனுபவித்து வந்தனர். 1928 ல் சுப்பராயன், நீதிக்கட்சி ஆதரவோடு முதலமைச்சராக இருந்த போது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ( Communal G.O.) என்று சொல்லப்படும்  இட ஒதுக்கீடு கொள்கையை அமலாக்கினார். அதன் பின்பு பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஓமந்தூராரும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். அதாவது அனைத்து சாதியினருக்கும் 100 சதவீத இட ஒதுக்கீடு இருந்தது.

விடுதலைக்குப் பின்பு,  மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று செண்பகம் துரைராஜ் என்பவர் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை  எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவருக்காக வாதாடியவர் அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்கார்.(அவ்வளவு உயர்பொறுப்பில் இருந்தவர்கள், நீதிமன்றத்தில் வாதாட மாட்டார்கள் என்பது ஒரு மரபு). வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதுதான் செண்பகம் துரைராஜ் என்பவர் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கவே இல்லை என்பது தெரிய வந்தது. அதாவது பாதிக்கப்படாதவர்   எப்படி வழக்குத் தொடுக்க முடியும் ? ஒருவிதத்தில் இது  உயர்நீதிமன்றத்திற்கு சங்கடமாகிவிட்டது.  இறுதியில் தமிழக மக்களுக்கு 100 சத இட ஒதுக்கீட்டை உறுதிசெய்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இரத்து செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து பெரியார் தலைமையில் தமிழகம் போர்க்கோலம் பூண்டது. அதன் விளைவாக முதலாவது அரசியல் சட்டத்திருத்தம், பிரிவு 15(4)   கொண்டுவரப்பட்டது. அதாவது சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும்  பின்தங்கியவர்களின் (SC/ST/OBC)  நலனைப் பாதுகாக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய அரசுக்கு  வழி வகுக்கப்பட்டது. அதாவது இட ஒதுக்கீட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.

மற்ற மாநிலங்களை விட தமிழகம் சமூகநீதிப் போராட்டத்தில் முன்னணியில் உள்ளது. இங்குதான் 69 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. ஒன்றிய அரசிலும், மற்ற மாநிலங்களிலும் 50 சதத்திற்கு மிகாமல்  இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில்தான் கிரீமி லேயர் (creamy layer)  கொள்கை இல்லாமல்,  அனைத்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது ” என்றார்.

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்  சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். பீகாரின் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவும் சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த 33  தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அகிலேஷ் யாதவ், மாயாவதி, ஜிக்னேஷ் மேவானி..போன்ற வட இந்தியத் தலைவர்களும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றனர்.

” சாதி சமத்துவம் இருந்தால்தான் சாதி ஒழிப்பு இருக்கும். அதற்கு எந்த சாதி எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தால்தான் அதற்கேற்ற வகையில் அவரவர்களுக்கு உரியப் பங்கை கோர முடியும்  ” என்றார் திராவிடர் கழகப் பொருளாளரான வீ.குமரேசன்.

2011 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு சமூகப் பொருளாதார கணக்கெடுப்பை நடத்தியது. அதில் சாதி குறித்து விபரங்களும் சேகரிக்கப்பட்டன. ஆனால் அதன் விபரங்களை அரசு வெளியிடவில்லை. இதிலுள்ள புள்ளிவிபரங்கள் துல்லியமானவை அல்ல, பயன்படுத்த முடியாது என்று ஒன்றிய அரசின் சார்பாக சமூக நீதி அமைச்சகம் உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.” சென்சஸ் ஆணையர், 2011 ஆம் ஆண்டு எடுத்த சமூகப்,பொருளாதார கணக்கெடுப்புகள் 98.87 சதம் துல்லியமானவை என்று 2016 ம் ஆண்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த விபரங்களை வெளியிட வேண்டும்” என்றார் வீ.குமரேசன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த .சந்தானம் அவர்களைக் கேட்டபோது ” இப்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய அரசு ‘ இந்து ‘ என்ற அடையாளத்தைச் சொல்லி, மற்ற மத மக்களுக்கு  எதிராக அணிதிரட்டுகிறது. மக்களின் ஒற்றுமையைப்  பிரிக்கிறது. எனவே சாதியைச் சொன்னால் அவர்கள் அரசியலுக்கு உதவாது. எனவேதான் சாதிவாரிக் கணக்கெடுப்பை  பாஜக எதிர்க்கிறது.

1953 ல் காகா கலேல்கர் ஆணையம் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக சில பரிந்துரைகளை வழங்கியது. அந்த ஆணையத்தின் தலைவராக இருந்த காகா கலேல்கர், சாதிரீதியாக இட ஒதுக்கீடு தேவையில்லை என்று தனியாக ஒரு கடிதம் கொடுத்தார். அதோடு அந்த ஆணையம் மறக்கப்பட்டு விட்டது.

1821 முதல் 1931 வரை சாதி வாரியான கணக்கெடுப்பு நடந்தது. பிறகு இரண்டாம் உலகப்போரின்  விளைவாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடக்கவில்லை.

மொரார்ஜி தேசாய் பிரதம மந்திரியாக இருக்கும்போது,   1978 ஆம் ஆண்டு மண்டல் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மொத்தமுள்ள 406 மாவட்டங்களில், 405 மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் செய்து ஒரு அறிக்கை அளித்தது. வெள்ளம் காரணமாக அசாமில் இருந்த ஒரு மாவட்டத்திற்கு அது செல்லவில்லை. அது கல்விரீதியாக, சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக மூன்று அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொண்டது. குடிநீர் எவ்வளவு தூரத்தில் இருந்து எடுத்து  வருகிறார்கள் ? பள்ளிகளில் இடைநிற்றலான மாணவர்களின்  எண்ணிக்கை போன்ற அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது. இது ஆறு பரிந்துரைகளைச் சொன்னது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான முதல் முன்னெடுப்புகளை இந்திய அளவில் மேற்கொண்டவர் வி.பி.சிங்!

1.வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு 2.கல்வியில் இட ஒதுக்கீடு 3.கடனில் இட ஒதுக்கீடு 4.நில உரிமையில் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமை. 5.தனியார் துறையில் இட ஒதுக்கீடு

இந்தப் பரிந்துரைகளில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிலத்திற்கான உரிமை  என்பது  குறித்து  யாரும் பேசுவது கிடையாது. உற்பத்தி உறவுகளில் புரட்சிகரமான மாற்றம் வர வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. உற்பத்தி உறவு என்ற வார்த்தையை அந்த அறிக்கை கூறுகிறது.

அந்த அறிக்கையின் பரிந்துரைப்படி கல்வியில், வேலைவாய்ப்பில்  இட ஒதுக்கீடு கிடைக்கிறது. தமிழ்நாட்டில் 69 சத இட ஒதுக்கீடு நிலைபெற்று உள்ளது. அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சொன்ன செய்தியைச் சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ‘ இங்கு 6000 சாதிகள் உள்ளன. இவைகளை ஐந்து அல்லது ஆறு பிரிவாக பார்க்க வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்களை ஐந்து பிரிவாக பிரித்து ஒவ்வொரு பிரிவினருக்கும் 20 சத இட ஒதுக்கீடு தருவதாக வைத்துக்  கொள்வோம். அதில் ஒரு சதத்தை கலப்பு மணம் செய்தவர்களுக்கு வழங்க வேண்டும். படிப்படியாக கலப்பு மணம் செய்தவர்களுக்கான சதவீதத்தை உயர்த்த வேண்டும்’ என்றார். இதனால் சாதி மறுப்பினரின் சதவீதம் உயரும். இதை நாம் பரிசீலிக்கலாம்.இதற்கு பௌதீக அடிப்படை உள்ளது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு சாதி இருப்பை தக்க வைக்கிறது என்ற வாதம் தவறானது. இப்பொழுது என்ன வாழ்கிறது !  பிராமணிய கருத்தாக்கத்தை, அதாவது  பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரும் தனக்கு மேல்நோக்கி  இருக்கும் சாதியைப் பார்த்து பயணிக்கும் மனநிலை உள்ளது. தனக்கு கீழே ஒருவர் இருக்கிறார் என்ற மனநிலையை இது தக்க வைத்திருக்கிறது. இந்த பண்பாட்டுக் கூறை நாம் உடைக்க வேண்டும். முதலாளித்துவம் தனது இலாபத்திற்காக சாதியை வாழ வைக்கிறது. சாதி வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது. உதாரணமாக குப்பை எடுக்கும் தொழில் ஒரு சாதிக்கான தொழிலாக மாறிவிட்டது. ஏனெனில் சுத்தம், அசுத்தம் என்ற சமூக ஏற்பாடு மறைந்தால்தான் மனிதம் மலரும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி  சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரித்து,   தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

1988 ம் ஆண்டு நடந்த  வன்னியர்களின் போராட்ட முறையை எதிர்த்தாலும், அவர்களின் கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரித்தது.

தமிழ்நாட்டில், இட ஒதுக்கீடு ஒரு காலத்தில்100 சதம் அமலில் இருந்தது. இந்தியாவில்  உச்ச பட்சமாக 50 சதம்தான்  இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு என்ன அடிப்படை என்று வி.ஆர்.கிருஷ்ண அய்யர், பகவதி போன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளே கேள்வி கேட்டுள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது. அதுவும் முதலாம் ஆண்டு 9 சதம், இரண்டாம் ஆண்டு 4 சதம் என்று கூறியுள்ளனர். புதிய மத்திய தர வர்க்கம் இட ஒதுக்கீட்டை ஒரு எல்லைக்குள் சுருக்கப் பார்க்கிறது. ஆனால் சமூக நீதிப் போராட்டத்தின் அடுத்தக் கட்டம் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்று நான் கருதுகிறேன். இது ஒரு ஜனநாயகக்  கோரிக்கைதான் ” என்றார்  க.சந்தானம்.

பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time