ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் மார்ச் வரை பறவைகளின் மாதம் என்று சொல்லலாம். அந்த ஆறு மாதம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பறவைகள் சரணாலயங்களும் மிகச் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கிவிடும்.
செப்டம்பர் மாதம் முதல் வெளிநாடுகளிலிருந்து பறவைகள் இந்தியாவிற்கு வந்து கொண்டு இருக்கும். இமயமலையிலிருந்து தமிழகத்திற்கு வலசை வரும் சாம்பல் வாலாட்டி பறவை, வால்பாறைக்கு தற்பொழுது வந்து உள்ளது. அதன் வருகையை ஒட்டி அங்கு உள்ள இளம் பறவையாளர்கள் சாம்பல் வாலாட்டி பறவையை வரவேற்று சுவரொட்டி அடித்து ஒட்டி உள்ளனர்.
குளிர்காலத்தில், தமிழ்நாடு பறவைகளின் நாடு என்று சொல்லும் அளவு நம்மைச் சுற்றி பறவைகள் சூழ்ந்து இருக்கும்.. மழைக்காலத்தில் ஏரி, குளம், ஆறு, கண்மாய், சதுப்புநிலங்கள் என்று நீர் நிறைந்து உள்ளதால் பறவைகளுக்கான இரையும் நீரில் பெருகி இருக்கும். ஐரோப்பா மற்றும் வடக்கே இருந்து தமிழகம் வரும் பறவைகள் பெரும்பாலும் நீர் நிலை நோக்கியே வரும்..
பறவைகள் கொண்டாட்டம் ஆரம்பம்
தீபாவளி,பொங்கல் கொண்டாட்டம் போல் இந்த ஆறுமாதம் இந்தியா முழுவதும் பறவைகள் திருவிழா, கொண்டாட்டம், சந்திப்பு, கணக்கெடுப்பு என்று தொடர்ந்து நடைபெற்று வரும்.. பல மாநிலங்களில் மாநில அரசே பறவைகள் திருவிழாவை நடத்துகிறது.
பறவைகள் திருவிழா என்றால் என்ன
பறவை ஆர்வம் உள்ளவர்கள், புதியவர்கள்,சிறுவர்கள் என்று ஒரு இடத்தில் சந்தித்து பறவைகள் குறித்து விவாதிப்பது, குழுவாகப் பறவைகள் பார்க்கச் செல்வது, பல தலைப்புகளில் பறவைகள் குறித்து மேடை பேச்சுக்கள், பறவை ஓவியங்கள், பறவை நாடகங்கள் என்று மிகச் சிறப்பாக நடைபெறும்…
இதன் மூலம் மக்களுக்குப் பறவைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். புதியவர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும். சிறுவர்கள் தொடக்கத்திலேயே ஆரோக்கியமான பொழுதுபோக்கில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்..
பறவைகளுக்கு மனிதர்கள் உதவி தேவையில்லை ஆனால் மனிதர்களுக்கு நிச்சயம் பறவைகள் உதவி தேவை… மனிதன் தோன்றுவதற்குப் பல ஆயிரம் வருடங்கள் முன்பே பறவைகள் இந்த பூமியில் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது..
கோவா பறவைகள் திருவிழா
கோவா அரசு, பறவைகள் திருவிழாவை நடத்துகிறது. இந்த ஆண்டு ஜனவரி 17 முதல் 19 வரை நடந்தது. மாநில முதலமைச்சர் இவற்றைத் தொடங்கி வைத்தார்.. இதில் பறவைகள் நோக்குதல், காடுகளைச் சுற்றிப் பார்த்தல் என்று மிகச் சிறப்பாக நடத்துகிறார்கள். இந்தியாவிலிருந்து தலை சிறந்த பறவையாளர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு இளம் பறவை ஆர்வலர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்..
ஆந்திராவில் பூநாரை திருவிழா
ஆந்திரா, பழவேற்காட்டில் 3 நாட்கள் பூநாரை திருவிழா(Flamingo Festival) நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 3 முதல் 5 வரை நடைபெற்றது. இரண்டு வருடம் முன்பு இந்த திருவிழாவில் கலந்து கொண்டேன்.. ஷார் சாலை(SHAR Road) இரண்டு பக்கமும் நீர் சூழ்ந்த பகுதி. நிறைய வரவேற்பு பலகைகள் பூநாரை படங்கள் என்று மிக விமர்சையாக நடைபெற்றது. பள்ளி பிள்ளைகள் கலந்து கொண்டு அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.. ஆயிரக்கணக்கான பூநாரைகளை ஒரே இடத்தில் பார்க்க மிகச் சிறந்த வாய்ப்பு. குஜராத் கட்ச் பகுதியில் இனப்பெருக்கம் செய்யும் பூநாரைகள் தென் மாநிலங்கள் நோக்கி வலசை வருகிறது.. இலங்கைக்கும் செல்கிறது. சென்னை மாநகரத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் பார்க்கலாம்.பூநாரைகளில் பெரிய பூநாரை சிறிய பூநாரை என்று இரண்டு வகைகள் உண்டு.
அடுத்த ஆண்டு நடக்கும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்..
தமிழ் பறவை ஆர்வலர் சந்திப்பு
தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் பறவையாளர்கள் மாநாடு நடைபெறும். இதில் இந்தியா முழுவதும் பறவையாளர்கள் வருகை தருவார்கள்.. பறவையாளர் ஜெகநாதன் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்துகிறார். இதில் கடந்த ஐந்து வருடங்களாகக் கலந்து கொண்டு வருகிறேன்.. இரண்டு நாட்கள் நடைபெறும். பல நிகழ்வுகள் நடைபெறுவதால் பறவைகள் பற்றிய நினைப்பிலேயே இரண்டு நாட்கள் சென்றுவிடும்!
கடந்த ஆண்டு தேனி-கம்பத்தில் மாநாடு நடைபெற்றது.. சுற்றிலும் காடு சூழ்ந்த பகுதி. பச்சைக்கிளி, பாறு கழுகுகள், குழந்தைகளின் பறவை வேடம் கொண்டு நாடகம் என்று வேறு உலகமாக இருந்தது..!பெங்களூரிலிருந்து ஒருவர் தன் மகளுடன் இந்த பறவை மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து வேலைகளையும் வேகமாக முடித்து கம்பம் நோக்கிக் கிளம்பி வந்ததாக அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது..
நிறைய பள்ளி பிள்ளைகள் இந்த பறவைகள் சந்திப்பில் கலந்து கொண்டு எந்த நேரமும் தங்கள் கைகளில் பறவை புத்தகங்கள் வைத்துக் கொண்டு பறவைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்…

கழுகு கூடு பறவை திருவிழா!
அருணாசலப்பிரதேசத்தில் கழுகு கூடு பறவைத் திருவிழா என்ற பெயரில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மார்ச் 22 ந் தேதி தொடங்கி நடந்துமுடிந்தது..! இந்த திருவிழா காடுகள், பறவைகள், விலங்குகள் பாதுகாப்புக்கு வழிவகுக்கும். மற்றும் இதில் பொது மக்கள் கலந்து கொள்வதன் வழியாக மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள்..
இமயமலை கடந்து வரும் வரித்தலை வாத்து!
மிக உயரத்தில் பறந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வரித்தலை வாத்து (Bar Headed goose) குளிர்காலத்தில் தான் இங்கு வரும். மங்கோலியாவில் இருந்து கிளம்பி இமயமலையைக் கடந்து தமிழகத்திற்கு வருவது மிக ஆச்சரியம் தரக்கூடிய விஷயமாகும். காரணம் வேறு எந்த பறவையும் இமயமலை மேல் பறந்து வருவது இல்லை.. திருநெல்வேலி கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் வரித்தலை வாத்தைப் பார்க்க முடியும்.. இதன் தலையில் கருப்பு நிறத்தில் கோடு இருப்பதால் வரித்தலை வாத்து என்று சுலபமாகப் பெயர் வைத்துவிட்டோம்…

அமூர் வல்லூறு திருவிழா!
அதே மங்கோலியாவில் இருந்து அமூர் வல்லூறு(Amur Falcon) என்ற இரைக்கொல்லி பறவை வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து டோயங் ஏரியை வந்தடைகிறது. ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு வாரகாலம் நாகலாந்தில் தங்கி அதன் பின் ஒரே மூச்சில் ஆந்திரா மாநிலத்தைக் கடந்து தென்னாப்பிரிக்காவை சென்றடைகிறது. சில முறை தமிழகத்தையும் கடந்து செல்லும். அப்பொழுது பறவை ஆர்வலர்கள் அவற்றை ரசித்து படம் எடுப்பார்கள். லட்சக்கணக்கான அமூர் வல்லூறு நாகாலாந்தில் கள்ளச் சந்தையில் பிடித்து விற்கப்படுவதால் அவற்றைத் தடுக்க அம்மாநில அரசு பல முயற்சிகள் எடுத்து இன்று நல்ல நிலையில் அமூர் வல்லூறு உள்ளது அங்கு அமூர் வல்லூறு திருவிழா நடைபெறுகிறது..

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நேரத்தில் இந்த பண்டிகையை இன்னும் சிறப்பாகப் பறவைகளுடன் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்து அதில் பொது மக்களும் கலந்து கொள்ள வைத்து “பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு” நடைபெற்று வருகிறது..
Also read
ஒரு நாளில் சில நிமிடங்கள் பறவைகளை நின்று கவனித்து குறித்துக் கொள்ள வேண்டும்..! இப்படி தமிழகம் முழுவதும் நடைபெறும்பொழுது நம் மாநிலத்துப் பறவைகளின் உண்மை நிலைமை தெரியவரும்..! அடுத்த ஆண்டு இதே போல் செய்யும்பொழுது போன வருடப் பறவைகள் எவை இந்த வருடம் இல்லை, புதிய பறவை இந்த ஆண்டு வந்து உள்ளதா..? என்று அறிவியில் பூர்வமான தகவல்கள் தெரியவரும்..! ஒரு பறவை ஒரு வருடம் மட்டும் பார்த்து, பிறகு தொடர்ந்து பார்க்க முடியவில்லை என்றால் அவை ஏன் மீண்டும் இங்கு வரவில்லை என்ற கேள்வி எழுப்பி அதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கலாம்..
ஒரு இடத்தில் பறவைகளுக்கான இரை பற்றாக்குறை, தங்கும் இடம் இல்லாமை,வந்த இடத்தில் ஆபத்து போன்றவை இருந்தால் அங்குப் பறவைகள் வருவதில்லை. இந்த கணக்கெடுப்பு ஒவ்வொரு வருடமும் செய்வதால் பார்க்க முடிந்த பறவைகள் குறித்த உண்மை நிலைமை தெரியவரும்..!
சிட்டுக் குருவி பற்றிய உண்மை நிலைமையும் இப்படிதான் தெரியவந்தது.. செல்போன் கதிர்வீச்சால் சிட்டுக் குருவிகள் அழிந்து வருகிறது என்று சொல்ல பட்ட செய்திகளைத் தொடர்ந்து இது போல் செய்த கணக்கெடுப்பு ,மூலம் சிட்டுக் குருவிகள் அழியவில்லை. அவை போதுமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறது என்று தெரியவந்தது!
அதே போல் கேரளாவிலும் ஓணம் பண்டிகைக்குப் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. “ஓணம் பறவைகள் கணக்கெடுப்பு” என்ற பெயரில் அங்கு நடைபெறுகிறது. இதில் சில நிமிடங்கள் பறவைகளைக் கவனித்துப் பதிவு செய்ய வேண்டும். இப்படி பொது மக்கள் கலந்து கொண்டு செய்வதால் பறவைகளின் உண்மை நிலை தெரியவருகிறது.
இதுபோல் நடைபெறும் கணக்கெடுப்பில் யார் வேண்டுமென்றாலும் கலந்து கொள்ளலாம்! பறவைகள் பற்றி முழுமையாகத் தெரியவேண்டும் என்று இல்லை. புதியவர்களும் கலந்து கொண்டு அவர்கள் வீட்டைச் சுற்றி பறவைகள் பார்த்து பட்டியல் தயார் செய்யவேண்டும்… இவற்றை மக்கள் அறிவியல்(Citizen Science) என்று அழைக்கின்றனர் …
கர்நாடகாவில் பறவை திருவிழா!
கர்நாடக வனத்துறை பறவை திருவிழாவை வருடம் தோறும் நடத்துகிறது. இந்த ஆண்டு ஜனவரி 17 முதல் 19 தேதி வரை நடைபெற்றது. இதில் சாதாரணமாகப் பார்க்க முடிகிற பறவைகள் தவிர எப்பொழுதாவது பார்க்க முடிகிற பறவைகளை பார்த்துப் பதிவு செய்து இருந்தார்கள். குறிப்பாகக் கருங்கொண்டை வல்லூறு, சீகார்ப் பூங்குருவி, நீலகிரி காட்டுப்புறா போன்ற பறவைகளைப் பதிவு செய்து உள்ளனர்…
பறவைகள் திருவிழா மற்றும் பறவைகள் கணக்கெடுப்பால் என்ன நன்மை?
ஒவ்வொரு அரசும் மனிதன் இருப்பை பதிவு செய்வதால் தான் மனிதர்கள் எண்ணிக்கை தெரிய வருகிறது. இது போல் நடக்கும் கணக்கெடுப்பு மூலம் மனித எண்ணிக்கை தெரிய வருவது போல் மற்ற உயிரினங்கள் இருப்பையும் உறுதிப்படுத்தவே இப்படிக் கணக்கெடுக்கப்படுகிறது. இவற்றின் நிலை தெரிய வருவதன் மூலம் அவற்றை அழிந்துவிடாமல் காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன! இவ்வாறு செய்யாமல்விட்டால், ஒரு சில உயிரினங்கள் இந்த பூமியிலிருந்து முற்றாக அழிந்துவிட வாய்ப்பு உண்டு. பறவை ஆர்வலர்கள், சில மாநில அரசுகள் தொடர்ந்து இதுபோல் திருவிழா கணக்கெடுப்பு நடத்தி வருவதால் பறவைகளின் உண்மையான நிலைமைகள் தெரியவருகிறது. இதனால் பறவைகளின் எண்ணிக்கை குறையாமல் அதிகரிக்க வழிவகுக்கும்.. பறவைகள் இல்லையென்றால் இயற்கையின் சம நிலை குலைந்து மனிதனால் வாழமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
தமிழகத்தில் பரவலாகக் காணப்பட்ட பாறு கழுகு (பிணம் திண்ணி கழுகு) இன்று முற்றிலும் அழிவு நிலைக்குச் சென்று 200 எண்ணிக்கையில் மட்டுமே நீலகிரி-மாயாறு பகுதியில் வாழ்ந்து வருகிறது. இப்பொழுது இந்த பறவையைக் காப்பாற்ற நிறைய முயற்சிகள் நடந்து வருகின்றன!
தமிழகத்தில் பறவைகள் சரணாலயங்கள் !
பறவை சரணாலயங்கள் அனைத்தும் தமிழகத்தில் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்து உள்ளன. ஒரே இடத்தில் மிக அதிக பறவை வகைகளைப் பார்க்க மிகச் சிறந்த இடம் நீர் நிலைகள் ஆகும். அடுத்து ஆறு மாதம் உங்கள் ஊர் அருகில் இருக்கும் சரணாலயங்களுக்குச் சென்று வாருங்கள்.. முழு நாளையும் அங்கு செலவிடுங்கள். பல நாட்டுப் பறவைகள் உங்கள் கண் முன்பு பறந்து கொண்டு இருக்கும். முடிந்தால் பறவைகளின் பெயர்கள் அதன் எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ளுங்கள்..
அடுத்த வருடம் நீங்கள் அங்குச் செல்லும்பொழுது போன வருட பறவைகள் பட்டியலுடன் ஒப்பிட்டு இந்த வருட நிலைமையைத் தெரிந்து கொள்ளலாம். நாளடைவில் அந்த பகுதி பறவைகள் நிலைமை உங்களிடம் முழுமையாக இருக்கும்.
நம் நாடு வெப்ப மண்டல நாடாகும்! இங்கு அனைத்துவித உயிரினங்களும் வாழக்கூடிய அளவு சீதோஷ்ண நிலை உள்ளது. ஆனால், வெளிநாடுகளில் குறிப்பாக மேலை நாடுகளில் இப்படி இல்லை. குளிர் காலத்தில் பனிக்கட்டிகள் மரம், தரை என்று முழுவதும் சூழ்ந்து இருக்கும். பறவைகள் தங்கவும், இரை கிடைக்கவும் அங்கு வாய்ப்பில்லை. அதனால் அவை கிளம்பி இந்தியா-இலங்கை-ஆப்ரிக்கா-பாகிஸ்தான்-பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு வருகின்றன. நிலைமை சரியான பிறகு மீண்டும் அதனதன் நாடுகளுக்குச் சென்று விடும். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த நிகழ்வு நடந்து வருகிறது.
இதோ அடுத்த ஆறு மாதங்கள் உங்கள் வருகையை எதிர் பார்த்து இந்த பறவைகள் காத்திருக்கும். வீட்டுச் சிறுவர்களுடன் சென்று பார்த்து ரசித்து வாருங்கள்..!
பறவை சந்திப்பு, பறவைகள் திருவிழா, கணக்கெடுப்பு என்று இன்னும் நிறைய கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கிறது. அதிலும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
அன்பர்களே பறவைகளின் நண்பனாக மாறுங்கள்.…!
It is very interesting. Making awareness is must. I like to participate in the congress.