அடித்த கொள்ளையில் பாதியைத் தந்தால் பதவியா..?

- சாவித்திரி கண்ணன்

ஒரு அரசு எப்படிப்பட்ட அரசு என்பதும், ஒரு ஆட்சியாளரின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதும் அதன் முக்கிய பதவிகளில் எப்படிப்பட்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை பொறுத்துத் தான் உள்ளது. தலைமைச் செயலாலாளராக இறையன்பு, தனிச் செயலாளராக உதயச்சந்திரன் போன்றோர்களை துணைக்கு வைத்துக் கொண்டார் ஸ்டாலின்! அதே போல நேர்மையும், திறமையும் ஒருங்கே பெற்ற பி.டி.ஆர்.தியாகராஜன், மா.சுப்பிரமணியம், சேகர்பாபு, மகேஷ்பொய்யாமொழி..போன்ற செயல் ஆற்றல் மிக்கவர்களை அமைச்சர்களாக்கியதன் மூலம் மேலும் நம்பிக்கை ஏற்படுத்தினார் ஸ்டாலின்! இப்படியாக ஒரு நல்ல ஆட்சியைத் தர வேண்டும் என்று முதல்வர் நினைத்தாலும், நாம் கேள்விப்படும் சம்பவங்கள் அதற்கு சவாலாக உள்ளன!

சென்ற ஆட்சியில் ஊழல் செய்த பல அதிகாரிகள் இந்த ஆட்சியிலும் முக்கியத்துவம் பெற்று வருவதை நாம் தொடர்ந்து அறத்தில் கவனப்படுத்தி வருகிறோம்! அந்த வகையில் அதிகாரி என்ற போர்வையில் அரசியல்வாதியாக சென்ற ஆட்சியில் வலம் வந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை ஊழல்மயமாக்கிய கோ.விஜயராகவன் இந்த ஆட்சியாளர்களிடமும் அதி முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு, தன் தகுதிக்கு முற்றலும் பொருந்தாத பெரும் பொறுப்பை வாங்கியுள்ளார் என்பது உண்மையிலேயே தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது!

தமிழ்நாடு அரசின் அகரமுதலித் திட்டம் என்பது மாபெரும் மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களால் உருவாக்கப்பட்டது. தேவநேய பாவாணர் பல மொழிகளில் புலமை பெற்றவர். திராவிட மொழிகள், இந்திய மொழிகள், உலகமொழிகள் ஆகியவற்றில் பெருமொழிகளாய் அமைந்த 23 மொழிகளைக் கற்று, அவற்றின் இலக்கண அறிவும் பெற்றவர்! அப்படிப்பட்ட தேவநேய பாவணரால்  ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் அகரமுதலி. 1974-ஆம் ஆண்டு பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகத் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் பணியமர்த்தம் செய்யப்பட்டார்.

அகரமுதலித் திட்ட பணியென்பது மிக ஆழமான பணி!. மொழியியல் துறையில் ஆழ்ந்த அறிவாற்றலும் மிகுந்த பட்டறிவும் கொண்டவர்களுக்கே சாத்தியப்படும் பணி! பல்வேறு அகராதிகளை அலசி ஆராயத் தெரிந்திருக்க வேண்டும்!. பன்மொழி அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், திணை நூல்கள் இன்னும் ஆயிரக்கணக்கான நூல்களைத் படித்திருக்க வேண்டும்! அப்படிப்பட்ட ஆராய்ச்சி அறிவு தேவைப்படும் பணிக்கு அடிவருடி அரசியல்,பொதுச்சொத்தை அபகரிக்கும் அரசியல் ஆகியவை மட்டுமே கற்றுத் தேர்ந்த ஒருவரை எப்படி இயக்குனராக நியமித்தனர்…என்று பல தமிழ் அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளன!

பல ஆண்டுகளாக முடங்கிப் போயிருந்த அகரமுதலி இயக்ககத்தை பதவிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் கடுமையாக உழைத்து தூக்கி நிறுத்தினார் அதன் முந்தைய இயக்குநர் தங்க.காமராசு என்பவர்! கல்லூரிகள் தோறும் சென்று மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்ற ஆட்சியில் மாணவர்களின் பங்களிப்புடன் 10,000க்கும் மேற்பட்ட கலைச் சொற்கள் கண்டெடுக்கப்பட்டு நூல்வடிவம் கண்டன! இந்த நிலையில் புதிதாக வந்த திமுக அரசால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கோ.விஜயராகவன் அதிரடியாக அகரமுதலித் திட்ட இயக்குனராக பதவி கொடுக்கப்பட்டுள்ளார்!

இது குறித்து நாம் இத் துறை சம்பந்தப்பட்ட ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரிடையே விசாரித்ததில், ”இங்கு ஏற்கனவே பொறுப்பில் இருந்த தங்க காமராசு மீது ஊழல் முறைகேடு போன்ற எந்தப் புகாரும் கிடையாது. எவ்வித சிக்கல்களிலும் மாட்டாமல் நேர்மையாக நிர்வாகம் செய்த தங்க.காமராசுவை கடந்தமாதம் திடீரென்று தமிழ்நாடு அரசு பதிவியிறக்கம் செய்து திருப்பூருக்கு மாற்றம் செய்ததால் அவர் விருப்ப ஓய்வு பெற்று விரக்தியுடன் வெளியேறிவிட்டார். அவருக்கு மாற்றாக அகரமுதலி இயக்குநராக விஜயராகவன் நியமிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே அனைவருக்கும் அதிர்ச்சி தான்!  ஏன் இயக்குனர் மாற்றம் என்பதற்கு எந்தவிதமானக் காரணமும் தெரியவில்லை” என்றனர்!

நாம் விசாரித்த வகையில் அமைச்சர் துரைமுருகன் விஜயராகவன் விவகாரத்தில் தீவிர ஆர்வம் காட்டியதாகவும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உதவியாளர் கோபால் தான் விஜயராகவனோடு டீல் பேசி முடித்ததாகவும் பரவலாக தமிழ்வளர்ச்சித் துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது! அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உதவியாளர் கோபால் ஏற்கனவே திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் கையூட்டு வாங்கி கைதாகி இன்றுவரை கோர்ட், வழக்கு என்று அலைந்து கொண்டிருப்பவர்!

கடந்த ஆட்சியில் தன் அதிமுக அரசியல் பின்புலத்துடன் தமிழ்வளா்ச்சித்துறை மற்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டிலும் ஏழு ஆண்டுகளாக இயக்குநராகப் பணியாற்றியவர்  விஜயராகவன். அப்போது அரசு செயலாளா்களின் ஆதரவோடு பல முறைகேடுகளிலும், ஊழலிலும் ஈடுபட்டு கோடிகோடியாக சொத்துக் குவித்தார் என்பது சகலருக்கும் தெரிந்த விஷயம் தான்! இவருக்கு பல பினாமிகள் உள்ளனர். அவர்களில் ரமேஷ், பாரதி போன்றவர்கள் குறிப்பிடதக்கவர்கள்!

விஜயராகவனை பொறுத்த அளவில் அரசியல் லாபிகளில் கைதேர்ந்தவரே அல்லாமல் இலக்கணமும் இலக்கியமும் அவருக்கு சுட்டுப்போட்டாலும் வாராது. அவர் எப்படி அகரமுதலி இயக்குநர் பதவிக்கு பொருத்தமானவராக இருக்க முடியும்..? ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டால் வெறும் அதிகாரியான அவரை வேறு ஏதாவது பணிக்கு நியமித்துவிட்டு போகட்டும்! ஆனால், ஆராய்ச்சி பணிகளை அலங்கோலப்படுத்தி, ஆதாய அரசியலை செய்வதற்கு அகரமுதலித் திட்ட இயக்குனர் பதவியை இழிவுபடுத்துவதா..? எவ்வளவோ தமிழ் அறிஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களில் யாருமே இந்த அரசின் கண்களுக்கு தெரியவில்லையா..?’’ என்பது தான் திருவாரூர் தமிழ் வளர்ச்சி கழகம் உள்ளிட்ட அமைப்புகள் வைக்கும் கேள்வியாகும்!

அக்மார்க் அ.தி.மு.க. காரரான விஜயராகவன் மீது 36 வகையான ஊழல் குற்றச்சாட்டுகள் விஜிலென்சில் புகாராகவும், வழக்காகவும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறது! குறிப்பாக போலி பில் மூலம் சுமார் 30 இலட்சம் மதிப்புள்ள அகரமுதலி வெளியீடுகளை விற்று ஆதாயமடைந்தார் என்ற செய்தி அதிரவைத்தது!

மொத்தமே ஆறு பணியாளா்களைக் கொண்டு 1985 – ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை 31 பேரகராதித் தொகுதிகளை அகரமுதலி இயக்ககம் வெளியிட்டது. அகரமுதலி இயக்ககம்  சிறிய வாடகை இடத்தில் செயல்பட்டது., மிகக் குறைந்தப் பணியாளர்களைக் கொண்டிருந்தது. ஆகவே, அகராதிகளை அச்சிடுவதற்கும்,  விற்பனை செய்வதற்குமான பொறுப்பு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் நிறுவன இயக்குநர்களாக இருந்தவர்களும் விற்று, அதற்கானத்தொகையை முறையாக அரசு கணக்கில் செலுத்தி வந்தார்கள். 2012 ஆம் ஆண்டு வரை சுமார் 50 இலட்சம் ரூபாய் அகராதிகள் விற்ற  பணமாக செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக விஜயராகவன் பொறுப்பேற்ற 2013ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை விற்பனைத்தொகை எதுவும் அரசுக்கணக்கில் செலுத்தப்படவில்லை. 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு நடமாடும் நூல்விற்பனை ஊர்தி பயன்படுத்தப்பட்டும்,  தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியிலும், பொருட்காட்சியிலும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டும் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அகராதிகள் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம்  விற்பனை செய்யப்பட்டுள்ளது! ஆனால், அத்தொகை இதுவரை அரசுக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் அகரமுதலி இயக்ககம் அண்ணாநகரிலிருந்து உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டு இயக்ககத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருந்த கோ.செழியன் என்பவருக்கு அகராதிகளின் விற்பனைக் கணக்கு கேட்டு ஏ.ஜி.எஸ் அலுவலகத்திலிருந்து தொடர்ந்து கடிதங்கள் வரத்தொடங்கியது. எனவே, அவா் விஜயராகவனிடம் கணக்குக் கேட்டு அழுத்தம் கொடுத்திருக்கிறார். விஜயராகவனோ வாய்மொழியாக ஏதேதோ காரணம் கூறி கோ.செழியனை சமாளித்து வந்திருக்கிறார்.

அவருக்குப்பின் 2018 ஆம் ஆண்டு தங்க.காமராசு அகரமுதலியின் இயக்குநராகப் பொறுப்பேற்று விஜயராகவனைக் கணக்கு கேட்டிருக்கிறார். அதனால் அவருக்கு விஜயராகவன் தொடர்ந்து இன்னல்கள் கொடுத்து வந்தார். உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்திற்குள் அகரமுதலி ஊர்தியை நிறுத்த இடம் கொடுக்காமலும், இயக்கக பெயர்ப் பலகையை வைக்கக்கூட இடம் தராமலும், இயக்ககத்தின் கழிவறைக்குச் செல்லும்தண்ணீர் குழாயை  துண்டித்தும், அவ்வியக்ககத்தை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தும் அராஜக வேலையில் விஜயராகவன் இறங்கி, அந்தப்படியே சாதித்தார்!’’ என்று பணியாளா்கள் பதட்டத்துடன் தெரிவித்தனா்.

பேராசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 14 பேர் நேர்காணலுக்கு வந்தனர்! ஆனால், அதில் நல்ல திறமையாளர்களை தேர்வு செய்யாமல் விண்ணப்பமே தராத – நேர்காணலிலும் பங்கு பெறாத – தாமரைச் செல்வன்,சுலோச்சனா ஆகியோரிடம் பல லட்சம் பணம் பெற்று பணி நியமனம் கொடுத்துள்ளார் விஜயராகவன். இந்த முறைகேடுகள் தணிக்கை அறிக்கையில் அம்பலப்பட்டுவிட்டது!

மேலும் அவர்கள் கூறும்போது, “உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்திற்குள் இருக்கும் மரங்களை கூட விஜயராகவன்  வெட்டி தன் சொந்த ஊருக்கு கொண்டு போனார்!. கணினிகள், மடிக்கணினிகள், மேஜை நாற்காலிகளைக்கூட அவர்  ஊர்க்காரர்கள் வந்து திருடிச்சென்றனர்.

இங்கிருக்கும் அரங்கத்தை தொடர்ந்து தனியாருக்கு வாடகைவிட்டு அந்தப்பணத்தை அரசுக்கணக்கில் செலுத்தமல் வைத்துக் கொண்டார்!. சமஸ்கிருத வகுப்பு, அக்குபஞ்சர் வகுப்பு, சித்தா வகுப்பு என்று பல்வேறு வகுப்புகள் நடத்துவதாகக்கூறி, மகாலட்சுமி என்ற பேராசிரியை உதவியுடன் அரசு முத்திரையிட்ட சான்றிதழ்களை இலட்சக்கணக்கில் விற்று சம்பாதித்தார். நூல்கள் அச்சடிப்பதிலும் விற்பனை செய்வதிலும் இவரும், மகாலட்சுமியும் சேர்ந்து செய்த அடித்த கொள்ளைகள் கொஞ்ச, நஞ்சமல்ல!  அனைத்திற்கும் போலி பில் புத்தகம் பயன் படுத்தப்பட்டுள்ளது.

ஒருமுறை விசாரணைக்கு வரப்போவதாகச்சொன்ன அன்று அதிகாலையிலேயே கணினிகள், கணக்கு கோப்புகள் அனைத்தையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு போலீசில் புகார் கொடுத்தார் விஜயராகவன். பணம் பதவிக்கான தடைகளை கடக்க வன்முறை, கொலை போன்றவற்றையும் செய்ய கூடியவர்! இங்கு நடக்கும் எல்லா ஊழல்களிலிருந்தும் அவர் பாதுகாக்கப்பட்டார். காரணம், இங்கு முக்கியமான பதவிகளில் உள்ளவா்கள் அனைவரும் விஜயராகவனால் முறைகேடாக பணியமர்த்தப்பட்டவர்கள்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயங்காதவர் விஜயராகவன் என்பதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி, பிரஞ்சு மொழிகளை கற்றுக் கொடுக்கிறேன் என அறிவித்து அவர் கல்லா கட்ட ஆரம்பித்ததே சாட்சி! அப்போது இந்த இழி செயலை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என ஆவேசத்துடன் அறிக்கைவிட்டவர் தங்கம் தென்னரசு! இன்றைக்கு எப்படி அவர் விஜயராகவனோடு கைகோர்க்கிறார் என்பது தான் தெரியவில்லை!

தமிழ் வளா்ச்சித் துறையில் சீனியாரிட்டியில் 11-வது இடத்திலிருந்த விஜயராகவனை இயக்குநராக பணியமர்த்தியவர் அப்போதைய தமிழ் வளா்ச்சித் செயலாளா் இராஜாராம் ஐ.ஏ.எஸ் என்பது அனைவரும் அறிந்தது. விஜயராகவனைக்கொண்டு இராஜாராம் அதிகம் ஆதாயமடைந்தார். “உலத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஓலைச்சுவடி ஊழல், நூல்பதிப்பு ஊழல், கட்டட ஊழல் என பல முறைகேடுகளில் விஜயராகவனுடன் சம்மந்தப்பட்டிருப்பவர் அப்போதைய அரசு செயலாளா் இராஜாராம்!

மார்ட்டின் செல்லதுரை என்பவர் இவர்கள் மீது விஜிலென்சில் புகார் தந்துள்ளார்! இந்த  ஊழல்களைப் பற்றி விஜிலென்சில் வழக்குப் பதிந்திருக்கும் மார்ட்டின் செல்லதுரையை போன் மூலம் மிரட்டி வருகிறார்கள்!. காரணம், இந்த ஊழல் விசாரணையில் இராஜாராம், வெங்கடேசன், மகேசன் காசிராஜன் போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதும் உறுதியாகியிருக்கிறது” என்று மாணவர்கள் மனக்குமறலை கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.

அகரமுதலி இயக்ககத்தின் உழைப்பில் விளைந்ததுதான் பேரகராதித் தொகுதிகள். அவைதாம் இந்த இயக்ககத்தின் சொத்து. அவற்றையே களவாடி, விற்று ஆதாயமடைந்து முறைகேடு செய்த அதே விஜயராகவன் இப்போது, அகரமுதலி இயக்ககத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார் என்றால், இந்த ஆட்சியாளர்களை நாம் எப்படி மதிப்பிடுவது?

“தன்மீதுள்ள அகராதி விற்பனை ஊழலை கொஞ்சம் கூட தடயமில்லாமல் அழித்துவிடும் மெகா திட்டத்துடன், ஆதாயமடைந்த ஒரு பகுதிப் பணத்தை இன்றைய ஆட்சியாளர்களிடம் கொடுத்துவிட்டு அகரமுதலி இயக்கக இயக்குநர் பதவியினை விஜயராகவன் பெற்று இருக்கக்கூடும்” என்பதே தமிழ் அறிஞர்கள் பலரின் பொதுக் கருத்தாக உள்ளது.

விஜயராகவன் குறித்து ஒரு விசாரணை அமைத்தால் ஏராளமான அமைப்புகள் ஆதாரங்களுடன் புகார் தரத் தயாராக உள்ளனர்! விஜயராகவன் விவகாரத்தில் பல தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி பேசி வருகிறார்கள்! பெரும் திரளான மாணவர்கள் விரைவில் போராட்ட களத்திற்கு வரவாய்ப்புள்ளது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time