வள்ளலார் எனும் கலகக்காரரும், திராவிட அரசியலும்!

- சாவித்திரி கண்ணன்

வள்ளலார் மறைந்து 145 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டு அரசாங்கம் அவரை கெளரவித்து உள்ளது! முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்! வள்ளலாருக்கு வடலூரில் 72 ஏக்கர் பரப்பளவில் பெரிய மணிமண்டபம் கட்டும் முயற்சியையும் இந்த அரசு மேற் கொண்டு வருகிறது! வள்ளலார் சென்னை தங்கசாலையில் வாழ்ந்த இடத்திற்கு அண்மையில் அமைச்சர் சேகர்பாபு சென்ற போது சொன்னார். முதன்முறையாக வள்ளலார் இல்லம் வந்த அமைச்சர் நான் தான்! இது மதவாத பாஜக அரசை எதிர்கொள்ள ஸ்டாலின் கை கொள்ளும் யுத்த தந்திரங்களில் ஒன்றாகும்!

திராவிட இயக்கம் தோன்றியதன் பின்புலத்தில் வள்ளலாரின் தாக்கம் இருந்தது என்பது இன்றைக்கு பலருக்கு தெரியாது! வள்ளலாரை சனாதனிகள் மிகப் பெரிய எதிரியாக கருதினார்கள்! அவருக்கு இடையறாது துன்பங்கள் விளைவித்தனர்! அப்படிப்பட்ட வள்ளலாருக்கு இந்த அரசு கொடுக்கும் முக்கியத்துவம் சனாதனிகளை எரிச்சலுக்கு ஆளாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கருணா நிதியைக் காட்டிலும் ஸ்டாலின் மிக ஆபத்தானவர் என்று ஹெச்.ராஜா சொல்லி இருப்பதை கவனம் கொள்ள வேண்டும். கருணாநிதி வைதீகத்தை எதிர்ப்பவர் போல வாய்ப் பந்தல் போடுவார்! ஆனால், ஸ்டாலின் அமைதியாக செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்து செயல்பாட்டாளராக விளங்குகிறார்!

19 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஆன்மீக அதிர்வாக வெளிப்பட்டவர், மத மாயையில் இருந்த மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை அடையாளம் காட்டிய கலக்காரர் ராமலிங்க அடிகள் என்ற வள்ளாலார் தான்!

அவர் ஏற்படுத்திய ஆன்மீக சமூக அதிர்வின் தாக்கம் மிகப் பிரம்மாண்டமானது! அளப்பரியது….! அதுவே அவரது உயிருக்கும் உலைவைத்தது!

சாதாரண பக்திக் கதைகளை சொல்லி சொற்பொழிவாற்றும் ஆன்மீக சொற்பொழிவாளராக ஆரம்பித்தது அவரது வாழ்க்கை! ஆனால், அவரது சுயநலமற்ற தூய கருணை உள்ளம் கால பரிமாணத்தில் அவரை மத மயக்கங்கள்,மாயைகள் ஆகியவற்றிலிருந்து அவரை முற்றிலுமாக விடுவித்தது. திருவருட்பா ஆறாம் திருமுறை மிகவும் புரட்சிகரமானது!

இதை அவரே வெளிப்படுத்தி உள்ளார்!

”சாதியும்,மதமும்,சமயமும் தவிர்த்தேன்

சாத்திரக் குப்பையும் தவிர்த்தேன்!”

என்றார்!

மக்கள் பக்தியின் பெயரால், கடவுளின் பெயரால், சடங்குகளின் பெயரால் மேன்மேலும் ஏமாற்றப்பட்டு துன்பத்திற்கு ஆளாவதை காணச் சகியாதவராக பொங்கி எழுந்தார்!

”மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்

வழிதுறை தெரியாமல் மண் மூடிப் போக!”

என்று ஆவேசமாகப் பாடினார்!

”முயன்றுலகில் பயன் அடையா மூடமதமனைத்தும்

முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாததே!”

மதங்கள் அனைத்தும் அழிந்து போனாலும் அதனால் ஒரு மோசமும் ஏற்படப் போவதில்லை என்று கூறுமளவுக்கு ஒரு புரட்சியாளராகத் திகழ்ந்தவர் வள்ளலார்!

சிவனை உருகி, உருகிப் பாடியவர் வள்ளலார்! அவரது திருவருட்பாக்கள் எளிய முறையில் படித்தவர்களை பற்றி ஈர்க்கும் வகையில் இருந்தன! குறிப்பாக படிக்காத பாமர மக்கள் எளிதில் புரிந்து பாடத் தக்கவையாக இருந்தன! சமஸ்கிருத மந்திரங்கள் கோலோச்சிய இடங்களில், தேவாரமும், திருவாசகமும் கொலுவீற்று இருந்த கோவில்களில் மக்கள் வள்ளலாரின் பாடல்களை நெஞ்சுருகப் பாடியதே சனாதவாதிகளுக்கும், ஆன்மீக ஆதிக்கத்தில் திளைத்தவர்களுக்கும் எரிச்சல் தந்தது.

இப்படிப்பட்ட பல புரட்சிகரமான – சனாதன மோசடிகளுக்கு எதிரான – பாடல்களை எல்லாம் தொகுத்து ஒரு சிறு புத்தகமாக்கி அவற்றை வீடுவீடாகக் கொண்டு சேர்த்து வளர்ந்தது தான் திராவிடர் இயக்கம்! பெரியார் அவர்கள், ”நான் சொன்னால் ஏற்கமாட்டீர்கள்! இதோ தூய துறவி இராமலிங்க அடிகளார் சொல்கிறார். சிந்தித்து பாருங்கள்” என்றார்! அறிஞர் அண்ணா அவர்களும் வள்ளலார் குறித்து சிறிய தனி நூல் ஒன்று எழுதி வள்ளலாரின் புரட்சிக் கருத்துகளை திராவிட இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார்!

ஆனால்,வள்ளலார் நாத்திகத்தை ஏற்கவில்லை! அதே சமயம் வள்ளலாரின் பழுத்த ஆன்மீகப் பார்வை உருவ வழிபாடுகள்,சடங்குகள்,வேதங்கள்,ஆகமங்கள் ஆகிய அனைத்துக்கும் எதிரானதாக இருந்தது! இறைவனை ஜோதி வடிவில் உணரச் சொன்னார்! கருணையுடன் எளியோருக்கு செய்யும் தொண்டே இறை தொண்டாகும் என்றார்.

சனாதனிகள் வள்ளலாரை பெரும் எதிரியாக பாவித்தனர்! அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இருந்தது தான் அவர் செய்த பெரும் பிழையாகும்! அவருக்கு எதிரான பரப்புரைகளுக்கு மறுப்புரை வழங்கும் ஒரு படையை அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை! ”வள்ளலார் பாடியவை அருட்பாக்கள் அல்ல மருட்பாக்கள்’’ என்றெல்லாம் நிறுவ முயன்ற சனாதனக் கூட்டத்தினர் ‘திருவருட்பா தூஷன பரிகாரம்’,’மருட்பா’ உள்ளிட்ட  12 நூல்களை எழுதி அவருக்கு எதிராக வழக்குகள் தொடுத்தும், மக்களை திரட்டியும் அணி சேர்க்க முயன்றனர்!

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய வள்ளலார் , சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கிவிட்டு, ஆன்மீக உணர்விலும், மக்கள் தொண்டிலும் மூழ்கி இருந்தாரேயன்றி இந்த எதிர்ப்புகளுக்கு சரியாக எதிர்வினையாற்றவில்லை!

மநுமுறை கண்ட வாசகத்தில் வள்ளலார் தனக்கு சனாதனிகள் இழைத்த துரோகங்களை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்!

“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ..”

எனத் தொடரும் இந்த பாடல் முழுவதுமே அவர் பட்ட துன்பத்தையும், அவர் காலத்தில் சமூகத்தில் நிலவிய அநீதிகளையும் அடையாளப்படுத்துகின்றன!

வள்ளலாரின் இறுதிகால பாடல்கள், வாழ்க்கை பதிவுகள் ஆகியவை அவர் சுழன்றடித்த வைதீக சூறாவளியால் கடும் இன்னல்களுக்கு ஆளானதை உறுதிபடுத்துகிறது. அவரது மரணத்தை கொலை என்றே திருவிகவும், மறைமலை அடிகளாரும் உறுதிபடக் கூறி வந்தனர்! ”அவர் தற்கொலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்பதை புறம் தள்ள முடியாது” என பேராசிரியர் வீ.அரசு அந்தக் கால பத்திரிகை பதிவுகளை ஆராய்ந்து எழுதியுள்ளார்!

வள்ளலாரை வழிபாட்டுக்கு உரியராக கருதும் யாருமே அவரது எழுத்துக்களின் உண்மை பொருளையோ,அவரது உச்சபட்ச ஆன்மீக முதிர்ச்சியையோ  உணர்ந்து வழிகாட்டியாக அவரை கருதுவதில்லை! அவரை மிகைப்படுத்தப்பட்ட கதாநாயக பிம்பத்தில் கண்டு இன்பூறுவதே அவர்களுக்கு உவப்பாக உள்ளது!

உண்மையான சமூக போராளிகளுக்கு வள்ளலாரின் இறுதி வாழ்க்கையும், மர்ம மரணமும் பல பாடங்களை உணர்த்திய வண்ணம் உள்ளது! வள்ளலாரின் மீட்டுருவாக்கம் என்பது மனிதநேயமற்ற  சனாதனத்திற்கு கொடுக்கப்படும் சவுக்கடி என்பது வள்ளலாரை உள்வாங்கியவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time