புலம் பெயர் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இன்று புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ என்பதாகவெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் தோற்றுவிக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் புலம் பெயர் தமிழர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன! அவற்றை கீழே தந்துள்ளோம். அதே சமயம் விடுபட்ட முக்கியமான ஒரு சிலவற்றை கவனப்படுத்துவதே கட்டுரையின் நோக்கமாகும்!
தேர்தலுக்கு முன்பே ஸ்டாலின் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான கட்சி அமைப்பாளர்களை அறிவித்து இருந்தது கவனத்திற்குரியது! வெற்றி பெற்று வந்ததில் இருந்து தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தானும் இதை அடிக்கடி சொல்லி வந்தார்! அந்த வகையில் ஸ்டாலின் சொல்லப்பட்டவற்றை இன்று முதல் அமலாக்கத்திற்கு கொண்டு வந்துள்ளார்!
உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம்தான் இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இப்படிப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழக அரசு முன்வந்துள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 2011ஆம் ஆண்டு திமுக அரசால் இயற்றப்பட்டுள்ளது.
அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த ஆட்சியாளர்களும் இதனை அமைக்கவில்லை. இந்த நிலையில் அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ ஒன்று அமைக்கப்படும். மாநில அரசின் 5 கோடி ரூபாய், முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும்.
இதன் சிறப்பு அம்சங்கள்;
# புலம்பெயர் தமிழர் குறித்த தரவுத் தளம் (Database) ஏற்படுத்தப்பட்டு, இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு திட்டங்கள் அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.
# வெளிநாட்டுக்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கப்படும்.
# கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகத் தமிழர்கள் புலம்பெயரும்போது, பயணப் புத்தாக்கப் பயிற்சி சென்னை , ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படும்.
# வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு ஆலோசனை பெற வசதியாகக் கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலைதளம், கைப்பேசி செயலி (Mobile application) அமைத்துத் தரப்படும்.
* புலம்பெயர் தமிழர்களுக்கு எனத் தனியாகச் சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.
* கோவிட்-19 பெருந்தொற்று சூழலால் சுமார் ஏழு லட்சம் தமிழர்கள் வேலையிழந்து தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக குறு தொழில்கள் செய்திட, இரண்டரை லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் தரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
# புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டில் பாதுகாப்பான முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்யப்படும்.
# புலம்பெயர்ந்த தமிழர்கள், தமது சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், கல்வி, மருத்துவம் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் ‘எனது கிராமம்’ திட்டம் தொடங்கப்படும். இதற்கான அனைத்து ஒருங்கிணைப்பும் அரசின் தரப்பில் எளிய முறையில் செய்து தரப்படும்.
# வெளிநாடுகளில் நிரந்தரமாகக் குடியுரிமை பெற்றுள்ள தமிழர்களின் வாரிசுகளுக்கு தமிழ் மொழியைக் கற்றிட ஏதுவாக தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலமாக தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி, அங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவிக்க ஊக்கத்தொகை மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
# புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும். இச்சங்கங்களின் மூலமாக நம்முடைய கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு பரிமாற்றங்கள் நடைபெறும். இதற்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
# பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் ‘புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாளாகக்’ கொண்டாடப்படும்.
# புலம்பெயர் தமிழர் நல வாரியம் மற்றும் புலம்பெயர் தமிழர் நல நிதிக்காக 6 கோடியே 40 லட்சம், நலத்திட்டங்களுக்காக 8 கோடியே 10 லட்சம் மற்றும் தமிழ்க் கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றத்துக்காக 5 கோடியே 50 லட்சம் என, மொத்தம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முதல்வரின் அறிவிப்புகள் வரவேற்கதக்கவை. புலம் பெயர் தமிழர்களால் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி அன்னிய செலவாணி கிடைக்கிறது! ஆனால், அவர்கள் அங்கு சந்திக்க நேரும் இக்கட்டுகளுக்கு இந்தியத் தூதரகங்கள் பல சமயங்களில் போதுமான முக்கியத்துவம் தருவதில்லை. அப்படிப்பட்ட நேரங்களில் தமிழ் அதிகாரியோ அல்லது அங்குள்ள தமிழ் சங்க பிரமுகர் வாயிலாகவோ அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
Also read
வெளி நாடு வாழ் தமிழர்கள் சந்திக்க நேரும் மற்றொரு பிரதானமான பிரச்சினை என்னவென்றால் மோசடி ஏஜெண்டுகளால் அவர்கள் ஏமாறுவது. ஆகவே, அத்தகைய மோசடி நிறுவனங்களையும், மோசடி பேர்வழிகளையும் உடனே பிளாக்லிஸ்ட் செய்து, கண்காணித்து தண்டிக்க வேண்டும். அவர்களின் சொத்தை கைப்பற்றி ஏமாந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வகை செய்ய வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான ஏழைத் தமிழர்கள் இது போன்ற மோசடி பேர்வழிகளால் வெளிநாட்டு சிறைகளில் எந்தக் குற்றமும் செய்யாமல் உழல்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்டு மறுவாழ்வு அளிக்க வேண்டும்!
மற்றபடி வெளிநாடு வாழ் தமிழர்கள் விவகாரத்தைப் போலவே வெளி மாநிலத் தமிழர்களுடனும் கூட ஒரு பிணைப்பை உருவாக்க தமிழக அரசு திட்டமிடலாம்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
வெளி மாநிலங்களில் இருப்பவர்களையும் கவனிக்க வேண்டும். இது கோரிக்கை.
நன்றி நன்றி