இளைஞர்களை தூண்டில் போட்டு அழிக்கும் கடன் திட்டங்கள்!

-ஜெ. இளஞ்செழியன்

சம்பாதிக்க கற்றுக் கொள்வதற்குள் கடன் வாங்க கற்றுக் கொடுக்கும் வங்கிகள்! தனி நபர் கடன்கள்,கிரடிட் கார்டுகள், Lazypay.. இந்த வலைப் பின்னலுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சிகள் என்ன..? கண்ணை மூடிக் கொண்டு கடன் வாங்கியவர்களின் கதி என்னவாகிறது..?

இந்தியாவில் பெரும்பாலான மக்கள், அடி நிலை, நடுத்தர நிலை மக்களாகும். இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் பணத் தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும்.  இவர்களிடம் வங்கிகளே நாங்கள் தனிநபர் கடன் கொடுக்கிறோம், அதற்கு எந்த வித அடமானமும் தேவை இல்லை. உங்கள் சம்பள விவரம், வங்கி ஸ்டேட்மென்ட் கொடுத்தால் போதும்! 5 நாட்களில் பணம் உங்கள் வங்கி கணக்கில் சேர்ந்துவிடும் என்று பேசும்பொழுது, எந்த நேரமும் பணம் தேவை இருக்கும் நபர்கள் சுலபமாக இதில் விழ்ந்து விடுகிறார்கள்.

வியாபாரக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், நகைக் கடன் இப்படித்தான் வங்கிகள் தங்களிடம் வரும் பணத்தை கடனாக வெளியே கொடுத்து, வாங்கிக் கொண்டு இருந்தன. இதில் நடுத்தர மக்கள் பெரும்பாலும் வாகனக் கடன் அல்லது வீட்டுக் கடன் வாங்க வங்கிக்குச் செல்வார்கள். மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம்  நகை கடன் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் தொழில் கடன் பெறுவார்கள். படிப்பு முடித்து வேலைக்கு செல்லும்  இளைஞர்கள்  மனதில் வங்கி கடன்  என்பது அவர்கள் நினைவில் இருப்பதில்லை.  காரணம், அவர்கள் வீடு வாங்கும்பொழுதோ அல்லது வாகனம் வாங்கும் போதோ தான் வங்கி நோக்கி செல்கிறார்கள்.

இங்குதான் பெரும் மாற்றங்கள் தனியார் வங்கிகள் மூலம் வரத் தொடங்கின. பல லட்சம்  இளைஞர்கள் கடன் சிக்கலில் மாட்டத் தொடங்கினார்கள். புதிதாக தனிநபர் கடன்(Personal Loan) என்று ஒன்றை தனியார் வங்கிகள் உருவாக்கினார்கள்.

சமீபமாக Lazypay என்ற கடன் முறை வந்து உள்ளது. அவற்றை கடைசியாக பார்ப்போம்.

தனியார் வங்கிகள் யோசித்தார்கள்.  வீட்டுக் கடன் அனைத்து வகை மக்களுக்கும் வழங்க முடியாது. சம்பளம் கொஞ்சம் உயர்வாக வாங்குபவர்கள் மட்டுமே திருப்பிக் கட்ட முடியும். நடுத்தர, தொடக்க நிலை மக்களை நோக்கி  தனிநபர் கடன் முறையை கொண்டு வந்தார்கள்! சந்தையில் இருக்கும் மொத்த கடன் முறையையும்  இதன் மூலம் மாற்றிவிட்டார்கள்.

இதனால் பெரும் கடன் சிக்கலில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மாட்டிக் கொண்டார்கள். 10,000 ரூபாய் வருமானம் இருந்தாலும் 1 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் கொடுக்கத் தொடங்கினார்கள்.  நாம்  வங்கிக்கு சென்று கடன் கேட்கும் முறை இல்லாமல் வங்கி பணியாளர்கள் தனியார் நிறுவனங்கள் முன்பு நின்று அழைக்கத் தொடங்கினார்கள்.

ஒரு தனிநபர் கடன் வாங்க தொடங்கிவிட்டால் மீண்டும், மீண்டும் அதை நோக்கி நம் கவனம் செல்ல தொடங்கிவிடும். ஏற்கனவே வாங்கிய கடனை 95 சதவிகிதம் நபர்கள் வீண் செலவுகள் செய்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.  மற்ற கடனுக்கு எல்லாம் ஒரு குறிக்கோள் உண்டு. வீட்டு கடன், வாகனம் வாங்க வாகன கடன் இவற்றில் நோக்கம் உள்ளது! ஆனால் தனிநபர் கடனுக்கு எந்த குறிகோளும் இல்லை.  இந்த கடன் வாங்குபவர்கள் அந்த பணத்தை என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளும் வாய்ப்பே அதிகம் உள்ளது. கட்டவில்லையென்றால், இவர்களை மிரட்டுவது, அடியாட்களை அனுப்பி அச்சுறுத்துவது என்று பல நெருக்கடிகள் தருவது அனைவருக்கும் தெரியும்.

இளம்  வயதில் சுலபமாக கடன் கிடைக்கும்பொழுது அவர்களுக்கும் பணம் தொடர்பான  எந்த குறிக்கோள்கள் இருப்பதில்லை. வாங்கிய கடனை கட்ட இன்னொரு வங்கியில் தனிநபர் கடன் வாங்க செல்வார்கள்! இப்படி வேலைக்கு சேர்ந்த சில வருடங்களில் மூன்று, நான்கு கடன் அவர்கள் பெயரில் இருக்கும். முடிவில் இந்த கடன்களை கட்டவே வாங்கும் சம்பளம் முழுவதும் போய்விடும்! இன்னும் சிலருக்கு மேலும், மேலும் கடன் வாங்கி கட்டிக் கொண்டு இருப்பார்கள். அப்பொழுது எப்படி வாடகை, சாப்பாடு ? சேமிப்பு? எதிர்க்கலாம்?

இதற்கு அடுத்து வங்கிகள் யோசித்தது. தனிநபர் கடன் ஒருவருக்கு கொடுத்துவிட்டோம். அதை கட்டிய பிறகுதான் மீண்டும் கடன் கொடுக்க முடியும். அதுவரை அந்த நபருக்கு வேறு எப்படி கடன் கொடுக்கலாம் என்று சிந்தித்து  கிரெடிட் கார்டு என்ற முறையை கொண்டு வந்தார்கள்.

நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் பணம் செலுத்தி விடுகிறோம் 30 அல்லது 40 நாட்களுக்கு பிறகு நீங்கள் திருப்பி கொடுத்தால் போதும்! அதற்கு எந்தவித வட்டியும் நீங்கள் செலுத்த வேண்டாம் என்று சொல்லி மீண்டும் அனைத்து நிறுவனங்கள் முன்பு வங்கி பணியாளர்கள் நின்று அழைத்தார்கள்.

ஒரு வங்கியில் தனிநபர் கடன் வாங்கிய நபருக்கு அதே வங்கி பணியாளர்கள் போன் செய்து நீங்கள்  கிரெடிட் கார்டு வாங்க தகுதி உள்ளதால் ஒரு கையெழுத்து போட்டால் போதும் 10 நாட்களில் உங்கள் முகவரிக்கு கடன் அட்டை வந்துவிடும் என்று சொல்லும்பொழுது, இந்த நபர் வேண்டாம் என்று சொன்னாலும் மீண்டும் மீண்டும் போன் செய்து கொண்டே இருப்பார்கள். பெரிய தொல்லையாக மாறிவிடும். ஒரு கட்டத்தில் சரி என்று  கடன் அட்டை  வாங்கிவிடுவார். இப்பொழுது ஒரு வங்கியில் அவருக்கு தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என்று இரண்டு கடன்கள் இணைந்துவிடும்.

நாம்  யோசிக்கலாம் வாங்கும் பொருட்களுக்கு எந்தவித வட்டியும் இல்லாமல் அந்த பணத்தை திருப்பி கொடுத்தால் போதும் என்று வங்கிகள் சொல்லும்பொழுது அவை எப்படி கடன் ஆகும் ?

நமக்கு எதற்கு வட்டி இல்லாமல் வங்கிகள் பணம் கொடுக்கிறது? என்று எப்போதாவது நாம் யோசித்து பார்த்து இருக்கிறோமா?

வீட்டின் மின்சார கட்டணம், வருடம் ஒரு முறை செலுத்தவேண்டிய வாகன காப்பீடு கட்டணம் போன்ற அத்தியாவசிய கட்டணத்தையே பெருபாலானவர்கள் அந்த நாட்களை கடந்து தான் கட்டுவார்கள். ஒன்று மறதியாக இருக்கலாம். அல்லது அதற்கான பணம் அந்த நேரம் இல்லாமல் இருக்கலாம். இது தான் வங்கிகளுக்கு லாபம். சரியான நேரத்தில் கட்ட மாட்டார்கள் என்று திடமாக நம்பினார்கள். அப்படியே நடந்தது.

இன்றும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வட்டியில்லாமல் செலுத்தும் மக்கள் மிக மிக குறைவானவர்களே. குறிப்பிட்ட நாட்கள்  கடந்துவிட்டால் வங்கிகள் நாம் கட்டவேண்டிய தொகைக்கு வட்டி போடத் தொடங்கி விடுவார்கள். தனிநபர் கடன் வட்டியை விட கிரெடிட் கார்டு வட்டி மிக மிக அதிகம். செலுத்தவே முடியாத நிலையே வரும். இன்று ஐ.டி.யில் பணிபுரியும் பெரும்பாலானோர் இப்படி பெரும் கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிப்பதை நேரடியாக அறிவேன். இப்படி வங்கிகள் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்கும் கலைதான் இவையாவும்!

ஒரு கிரெடிட் கார்டு வாங்கிவிட்டால் போதும், அதைக் கொண்டே அடுத்த வங்கி கிரெடிட் கார்டு கொடுத்துவிடும். இப்படி என் நண்பர் 20 கிரெடிட் கார்டு வைத்து இருந்தார்.

நீங்கள் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு வாங்குவது குறித்து உங்கள் எண்ணத்தில் இருக்காது. ஆனால் உங்கள் சம்பளத்தை தனியார் வங்கியில்  உங்கள் நிறுவனம் செலுத்துவார்கள். இது போதும் வங்கிகளுக்கு.  அவர்களும் அதைப் பார்ப்பார்களே.

உங்கள் சம்பளத்திற்கு இவ்வளவு தனிநபர் கடன், கிரடிட் கார்டு போன்றவை வழங்கப்படும் என்று ஓயாமல் போன் செய்து சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஒரு கட்டத்தில் வாங்கிவிடுவீர்கள்.கட்டாயப்படுத்தி ஓயாமல் நம்மை தொந்தரவு செய்து கடன்வாங்கச் செய்வதும் ஒரு வகையில் சூழ்ச்சியே!

இதைத்தான் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு வங்கியில் இருந்து இவருக்கு போன் செய்து கிரெடிட் கார்டு பற்றி பேசி இருந்ததை வெளிப்படையாகவே சொன்னார்.

புதிதாக தற்போது Lazypay என்ற முறை வந்துள்ளது. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த வேண்டாம். பிறகு EMI வழியில் பணம் செலுத்தினால் போதும் என்ற முறையை இன்று நிறைய ஆன்லைன் வலைத்தளங்கள் கொண்டு வந்துள்ளன. பெரும் பொருட்களை விற்கும் நிறுவனங்களும் இதை

தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடனாளியாக இருக்கும் நம் மக்களை மேலும் கடன் வாங்க வைக்கும் முறை தான் lazy pay ஆகும்.

பணம் இருந்தால் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவார்கள். பிறகு கட்டலாம் என்றால் தேவையில்லாமல் வாங்கி கொண்டு இருப்பார்கள். வீட்டிலும் தேவையில்லாத பொருட்கள் சேரும். கடனும் சேர்ந்து கொண்டு இருக்கும்.

Lazypay முறையும்  கிரெடிட் கார்டு போன்றே செய்லபடும். குறிப்பிட்ட காலத்தில்  திருப்பி செலுத்தினால் வட்டி கிடையாது. இல்லையென்றால் அதன் பிறகு வட்டி வசூலிப்பார்கள். எப்படியும் வாங்கும் நபர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்ட மாட்டார்கள் என்ற எண்ணம்  காரணம் தான்.

தவறு செய்யாத மனிதர்கள் இந்த உலகில் இருப்பதில்லை. இவைதான் இந்த கடன்களுக்கு அஸ்திவாரமே. மனிதர்கள் தனக்கு இந்த கடன் முறைகள் வேண்டாம் என்று உறுதியாக இருந்தால் இத்தகைய கடன் திட்டங்கள் காணாமல் போய்விடும். ஆனால் அப்படி எந்த காலத்திலும் முடியாது என்பதே உண்மை.

இன்றும் ஏதாவது ஒரு வங்கியில் இருந்து கடன் வாங்கிக்குங்க என்று வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து பேசிக் கொண்டுதான்  இருப்பார்கள். நமக்கு விழிப்புணர்வு இல்லையென்றால் கடன் சிக்கலில் மாட்டும் சூழல் வந்தே தீரும்.

-ஜெ. இளஞ்செழியன்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time