அறத்தில் ஆரம்பமாகிறது கேள்வி – பதில்!

-சாவித்திரி கண்ணன்

அன்பு நண்பர்களே, நமது வாசக நண்பர்கள் சிலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஒன்றை நடைமுறைப் படுத்தலாம் என முடிவெடுத்துள்ளேன்! ஒவ்வொரு நாளும் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன! அவற்றில் ஒன்று அல்லது இரண்டு விவகாரத்தை மட்டுமே விளக்கி கட்டுரை எழுதுகிறீர்கள். மற்ற பல விஷயங்களில் உங்கள் நிலைபாடு என்ன என்று தெரிவதில்லை! ஆகவே கேள்வி,பதில் பகுதி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். என்பது சில வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்!

சில விஷயங்களை நேரமின்மை காரணமாக நான் எழுத வாய்ப்பில்லாமல் கடக்கும் போது ஒரு சிலர் வேண்டுமென்றே நான் அதை பேசாமல் கடப்பதாகவும் குறைபடுகின்றனர்!

உண்மையில் வேலைப் பளுவின் காரணமாக நான் நினைக்கும் பல விவகாரங்களை எழுத முடியாமல் போகிறது.

‘’அவற்றை விளக்கி விரிவாக எழுத வாய்ப்பில்லாவிட்டாலும் குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிய உங்கள் பார்வை என்ன என்று சுருக்கமாகச் சொல்லலாமே! ஒரு தெளிவை பெறுவதற்கு அவை உதவும்…’’ என்கிறார்கள் இளம் வாசகர்கள்! குறிப்பாக பத்திரிகைத் துறையில் உள்ள இளம் தோழர்கள் பலரும் கேள்வி-பதில் பகுதியை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டவண்ணம் உள்ளனர்!

ஒரு இருட்டான இடத்தில் வந்து விழும் மின்னல் வெளிச்ச கீற்று போல கூட பல குழப்பமான விஷயங்களில் ஒரிரு வரியில் சொல்லப்படும் உண்மை கூட மிகவும் உதவிகரமாக அமையலாம்! அந்த வழியில் தொடர்ச்சியான தேடல்களை வாசகர்களே உருவாக்கிக் கொண்டு கண்டடைவார்கள்! ஆகவே, தயக்கத்தை விட்டொழித்து கேள்வி பதில் பகுதியை தொடங்குங்கள்’’ என்று தம்பி செழியன் ஜா அவர்களும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்!

நான் பொதுவாக உணர்ச்சிகரமான மனிதன்! விளைவுகளை பார்க்காமல் உண்மையை உரத்துச் சொல்லிவிடுபவன்! இதனால் நிறைய இழப்புகள் நிகழ்ந்த நிலையிலும் என் இயல்பு பெரிதாக மாறவில்லை! கேள்வி – பதில் பகுதி இந்த இழப்புகளை இன்னும் அதிகப்படுத்திவிடுமே என்ற தயக்கமும் ஏற்படத்தான் செய்கிறது!

இந்த சமூகம் உண்மையை உள்வாங்கத் தயாராக இல்லை! உண்மை போன்ற பாசாங்குத்தனங்களையே தலையில் வைத்துக் கொண்டாடுகிறது! உண்மையை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாத சமூகத்தில்  நான் மட்டும் பேசுவது முறையாகுமா..? இதனால் சில விஷயங்களை பேசித் தான் என்ன பயன் என்ற சலிப்பும் பல்வேறு நேரங்களில் ஏற்படுகிறது! இருந்தாலும், உண்மைகள் என்பவை விதைகள்! அவை நிச்சயம் அதற்குரிய விளைவை இந்த சமூகத்தில் விளைவிக்காமல் விடாது! சில நேரங்களில் உணரப்பட்ட உண்மைகள் நம்முள் உறங்க மறுத்து பீறிட்டு வெளி வந்துவிடுகிறது! அப்போது தான் ஒரு நிம்மதி ஏற்படுகிறது. உண்மையை நேசிக்கும் ஒரு சில நல்ல உள்ளங்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்!

ஆகவே கேள்வி – பதில் பகுதி வரும் ஞாயிறு முதல் தொடங்க உள்ளது! ஞாயிற்றுக் கிழமை, புதன் கிழமை, வெள்ளிக் கிழமை ஆகிய மூன்று நாட்கள் உங்கள் கேள்விகளுக்கான பதில்களை காலை பத்து மணிக்கு www.aramonline.in இணைய தளத்தில் நீங்கள் பார்க்கலாம்! உங்கள் கேள்விகளை முகநூலிலோ, முகநூல் இன்பாக்ஸிலோ, வாட்ஸ் அப்பிலோ அனுப்பாதீர்கள்!

கேள்விகளை [email protected] மின்னஞ்சலுக்கு மட்டும் அனுப்புங்கள்! இந்த மின் அஞ்சலுக்கு வரும் கேள்விகள் மட்டுமே கேள்வி-பதில் பகுதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். பெயர், ஊர்,மாவட்டம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிடவும். வெளிநாடுகளில் இருந்து கேள்விகள் அனுப்புபவர்கள் அந்த நாடு மற்றும் வாழும் ஊர் பெயரை தவறாமல் எழுதவும்!

நண்பர்களே, ஒருவரே நிறைய கேள்விகள் கேட்க வேண்டாம். ஒருவர் ஒன்று அல்லது இரண்டு கேள்விகளுக்கு மேல் அனுப்ப வேண்டாம்! சமூகம் குறித்த அக்கரையும், உண்மைக்கான தேடலும் உள்ள கேள்விகளுக்கே விடை கிடைக்கும். குதர்க்கத்தோடும், உள்நோக்கத்தோடும் கேட்கப்படும் கேள்விகள் புறம் தள்ளப்படும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time