கொலைகார ஆட்சியாளர்களும், கொதித்தெழுந்த நீதித் துறையும்!

-சாவித்திரி கண்ணன்

ஓட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்துவிட்டது! உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை உலுக்கி எடுத்துள்ளது! ஆனால், இன்று வரை இந்த மனிதாபிமானமற்ற கொடூர செயலைக் கண்டிக்கவோ, வருத்தப்படவோ பிரதமர் மோடியும்,,உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்வரவில்லை! எனில், நடந்த சம்பவங்களுக்கு இவர்களின் ஒப்புதல் இருந்தது என்று நாம் புரிந்து கொள்ளலாமா?

உலகில் நடக்கும் பல சம்பவங்களுக்கு டிவிட் போடுபவர் மோடி! தமிழ்நாட்டில் திண்டுக்கல் லியோனி பேசிய ஒரு பேச்சுக்கு டெல்லியில் இருந்து வந்து கண்டனம் தெரிவித்தவர். இந்தப் படுகொலைகளை செய்தவர் சொந்த கட்சியின் அமைச்சரின் மகன், அவனும்,பாஜகவினரும் இத்தகு கொடிய செயலை  நிகழ்த்துவதற்கு பின்னணியில் இருந்தது அமைச்சரின் பகிரங்கமான மிரட்டல் பேச்சு!

இப்படிப் பேசியவர் உள்துறையின் இணை அமைச்சர் அஜய்மிஷ்ரா பதவி விலகவில்லை! அவர் மகன் கைதாகவில்லை. அஜய்மிஷ்ராவைத் தேடிச் சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று பேசியது என்ன..? அவர் பேசியது அவரை காப்பாற்றும் முயற்சியாகவா..? அல்லது ஆட்சியைக் காப்பாற்ற அவரை ராஜினாமா செய்யச் சொல்லி கெஞ்சினாரா..?

ஹரியானாவின் முதல்வர் மனோகர்லால் கட்டார் என்ன பேசினார். ”போராட்டமா பண்ணுறீங்க, அடங்கமாட்டீங்கிறீங்க, இந்த மாதிரி விவசாயிகளை அடித்து நொறுக்குவார்கள் பாஜகவினர். இதற்காக சிறை செல்ல நேர்ந்தாலும், நீங்கள் வெளியே வரும் போது தலைவர்களாக வருவீர்கள்” என்றார்! ஆக, இந்த கொலையை செய்யச் சொல்லி அவர் பகிரங்கமாகவே தூண்டியுள்ளார்! இவர்கள் தான் மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருப்பார்கள் என்றால், இந்த நாட்டில் நியாயம் கேட்டு போராடும் மக்களுக்கு ஒரு போதும் நியாயம் கிடைக்காது.

பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதி சுதேச மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது! இந்த சுதேச மன்னர்கள் மக்களை கொடுமைப்படுத்தி, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சேவை செய்து வந்தார்கள்! அப்போது இந்த சுதேச மன்னர்கள் ஆட்சியின் கீழ் சொல்லொணா துயரத்துடன் வாழ்ந்த மக்கள் மகாத்மா காந்திக்கு கடிதங்கள் எழுதினார்கள். எங்கள் பகுதியில் காங்கிரஸ் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும். மன்னர்களை எதிர்த்து போராட எங்களுக்கு வழிகாட்டுங்கள் என்று கண்ணீர் மல்க மன்றாடினார்கள்!

ஆனால், மகாத்மா காந்தி மறுத்துவிட்டார்.சுதேச மன்னர்கள் இருக்கும் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி செயல்படாது.உங்களுக்கு உதவவும் எங்களால் இயலாது என்றார். அதன் காரணம் கேட்ட போது, சுதேச மன்னர்கள் சட்டத்திற்கோ, மனசாட்சிக்கோ அஞ்சாதவர்கள். பிரிட்டிஷாரிடம் உள்ளதைப் போன்ற குறைந்தபட்ச தர்ம நியாயங்களைக் கூட அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்களை எதிர்த்து போராடுவது வீழலுக்கு இறைத்த நீராகிவிடும். அவர்களை எதிர்த்து போராடும் ஆற்றல் எனக்கோ,காங்கிரசுக்கோ கிடையாது. அந்த பகுதியில் உள்ளவர்கள் தாங்களாகவே போராட வேண்டியது தான்! மன்னித்து கொள்ளுங்கள், இவர்களை எதிர்க்கும் சக்தி எனக்கோ, காங்கிரசுக்கோ இல்லை’’ என்றார் காந்தி!

அந்த சுதேச மன்னர்களின் வகையறாக்களே இந்த பாஜக ஆட்சியாளர்கள்! இவர்கள் சட்டத்தை மதிக்கமாட்டார்கள். அராஜகத்தின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள். இவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தது மக்கள் செய்த மாபெரும் தவறாகும்! மகாத்மா காந்தியே பின்வாங்கிய அந்தக் கொடியவர்களின் வாரிசுகளால் நடத்தப்படும் ஆட்சியாளர்களைத் தான் இன்று ராகுல்காந்தியும், பிரியங்காவும் எதிர்த்து போராடி வருகிறார்கள்!

சட்டபூர்வமான வழிமுறைகளில் தீர்வு காண முடியாத இந்த கோழைகள் ஒரு வருடமாக உறுதி குலையாமல் போராடி வரும் உழவர்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி பணிய வைத்துவிட முடியும் என நம்புகிறார்கள்! நம்மை கொலை செய்தால் அதை மத்திய, மாநில அரசுகள் தட்டி கேட்க மாட்டார்கள்! ஜனாதிபதியும் ஒரு பொம்மை. அவரும் கேட்கமாட்டார். ஆகவே பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் வழிக்கு வருவார்கள் என இந்த ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள்!

மோடியும்,அமித்ஷாவும் திடீரென்று செவிடர்களாகவோ, குருடர்களாகவோ மாறிப் போனார்களா..?

அப்படி மாறிப் போனது போல காட்டிக் கொள்வதன் மூலம் அந்த படுபாதகச் செயலுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நமக்கு உணர்த்த முயற்சிக்கிறார்கள்!

அதன் தொடர்ச்சியாகத் தான் இன்று காலை அதே போல மற்றொரு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்! இன்று காலை அம்பாலாவில், லக்கிம்பூர் கேரி சம்பவங்களை நினைவூட்டும் வகையில், பாஜக எம்பி நயப் சைனி மற்றும் ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் ஆகியோருக்கு எதிராக கறுப்புக் கொடிகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் நயாப் சைனியின் இன்னோவா கார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி பவான்பிரீத் சிங் மீது சீறிப் பாய்ந்தது. படுகாயமடைந்த பவான்பிரீத் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்!

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் நேபாளத்துக்குத் பாதுகாப்பாக தப்பிச் செல்ல மத்திய, மாநில அரசுகளே உதவியுள்ளதாக தெரிய வருகிறது! லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலையை  “விபத்து” என்று உத்தரபிரதேச மந்திரி பல்தேவ் சிங் அவுலாக் கூறியது கவனத்திற்கு உரியதாகும்!

வடஇந்தியாவின் “பக்த” என்ற பிரபல தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா டேனி மற்றும் அவனது கூட்டாளிகள் ஆகியோர் போராட்டத்திலிருந்து அமைதியாக திரும்பி கொண்டிருந்த போராட்டக்காரர்களை, அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ‘தார்’ வாகனத்தை ஓட்டி வந்ததை பல நேரில் கண்ட சாட்சிகள் அந்த வீடியோக்களில் விரிவாகப் பேசி பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் கீழே இறங்கி, காவல்துறையினரால் மறைக்கப்பட்டு, அவர்கள் ஆதரவுடன் ஓடினார். அதே நேரத்தில் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த போரட்டக் களத்தில் தன் உயிரை இழந்து நாட்டுக்கு வீடியோ பதிவை தந்துவிட்டுச் சென்ற இளம் பத்திரிகையாளர் ராமன் காஸ்யப் விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டதாக வட இந்திய ஊடகங்கள் பலவும் எழுதியுள்ளன! ஆனால், அவர் விவசாயிகளால் தாக்கப்படவில்லை.மாறாக காரில் வந்தவர்கள் சுட்டுத் தான் உயிர் இழந்துள்ளார். ஊடங்கங்கள் பொய்யை பரப்ப வேண்டாம் என்று அவரது பெற்றோர்கள் கதறி உள்ளனர். உயிரைக் கொடுத்து ஒரு உண்மையை உலகுக்கு தந்த பத்திரிகைக்காரனுக்கே இந்த நாட்டில் ஊடகங்கள் அநீதி இழைக்கின்றன! அந்த அளவுக்கு மனசாட்சியில்லாத விலை போகும் ஊடகங்கள் நிறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

போராட்டக்காரர்களில் ஒருவரை, அமைச்சரின் ஆட்கள் சுட்டுக் கொன்றதற்கும் சாட்சியாக மக்கள் உள்ளனர். இவை எல்லாம் தான் உச்ச நீதிமன்றம் உக்கிரமாக கொதித்து தானே முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க காரணமாகும்!

2002 குஜராத்தில் அன்றைய மோடி அரசாங்கம் இதைவிட பெரிய காட்டுதர்பாரை நிகழ்த்தி சுமார் 2,000 இஸ்லாமியர்களைக் கொன்றொழித்த போது, இன்றைக்கு இருக்கும் அளவுக்கு டிஜிட்டல் தொழில் நுட்பம் வளரவில்லை. இருந்திருந்தால் மோடி இன்றுவரை ஜெயிலில் களி தின்று கொண்டு இருந்திருப்பார்!

லக்கிம்பூர் கலவரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்தக் கலவரம் தொடர்பாக எத்தனை பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது, யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர், இறந்தவர்கள் விவரம் ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி போலீஸார் சம்மன் அனுப்புவது போலவும், அவர் வீட்டில் இல்லாததால் அந்த நோட்டீசை அவர் வீட்டு சுவற்றில் ஒட்டியதாகவும் ஒரு நாடகம் நடத்தப்பட்டு உள்ளது! இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது! இவையாவும் கண் துடைப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் உச்ச நீதிமன்றத்திற்கே தோன்றியுள்ளது தான் ஹைலைட்டாகும்!

‘’குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யாமல் இருப்பதற்கு இன்னும் என்னென்ன காரணங்களை சொல்வீர்கள்…?  லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா?. லக்கிம்பூரில் மிக மோசமாக படுகொலை நடந்து இருக்கிறது. துப்பாக்கிச்சூடு எல்லாம் நடந்து இருக்கிறது. உ.பி.யின் லக்கிம்பூரில் நடந்துள்ள நிகழ்வுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர். ஐபிசி 302ன் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது. ஆனால் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராக அழைப்பாணை கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரண நபர் என்றால் இதற்குள் கைது செய்திருக்க மாட்டீர்களா?.வேறு யாராவது இதை செய்திருந்தால் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா ?

லக்கிம்பூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையும் தீர்வாக இருக்காது. கொலைக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவரை கைது செய்யாமல் போலீஸ் கெஞ்சிக் கொண்டு இருப்பது ஏன்?.தயவு செய்து வாருங்கள், தயவு செய்து கூறுங்கள் என்று ஆஷிஷ் மிஸ்ராவிடம் போலீஸ் கெஞ்சுவது ஏன்?. கொலை வழக்கில் மற்ற கைதிகளை எப்படி நடத்துவீர்களோ அந்த முறையிலேயே ஆஷிஷ் மிஸ்ராவை நடத்த வேண்டும்.எதிரிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளோம் என்று கூறுவது சரியல்ல. லக்கிம்பூர் விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. மாநில அரசும் போலீசும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறை தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை பாதுகாக்க வேண்டும்,’’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதானது  ஒரு அசாதரணமான அணுகுமுறையாகும்.

இத்தனைக்கு பிறகு அமைச்சர் மகனுக்கு உடல் நிலை சரியில்லை நாளை காவல்துறை விசாரணைக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அவர் மருத்துவமனையில் வசதியாக சென்று படுத்துக் கொள்ள வாய்ப்புண்டு! ஆனால், நீண்ட நாள் இந்த நாடகத்தை நடத்த நீதித்துறை அனுமதிக்காது! வாழ்க நீதித்துறை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time