விசாரணையாவது, கைதாவது..? உ.பி அரசின் அயோக்கியத்தனம்!

-சாவித்திரி கண்ணன்

சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆஜரான அசிஷ் மிஷ்ரா, ஆஜர் செய்யப்பட்ட விதம் இந்த வழக்கில் இனியும் நியாயம் எதிர்பார்க்க முடியுமா..? என வலுவான சந்தேகத்தை நாட்டு மக்களிடம் எழுப்பி உள்ளது. குற்றவாளியை காப்பாற்ற உ.பி அரசும், ஒன்றிய அரசும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடும் என்று தெரிய வருகிறது!

விவசாயிகள் மீதான தாக்குதலில் கொலை குற்றவாளிகள் பட்டியலில் ஆசிஷ் மிஷ்ரா பெயர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது அவர் மீது முதல் குற்றப் பத்திரிகை பதிவாகி உள்ளது. ஆனால் காவல்துறையினர் சாட்சி என்ற வகையில் அவருக்கு சம்மன் அனுப்பி வர சிறப்பு புலனாய்வு குழுவை சந்திக்க அழைத்து வந்தனர். ஆசிஷ் மிஷ்ராவிற்கு, சிஆர்பி 160 பிரிவின்கீழ் சம்மன் அனுப்பப்பட்டது ஏன் என்று தெரியவில்லை! அதாவது சம்பவத்தின் சாட்சிக்கு அனுப்படும் சம்மனை சதிச் செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு அனுப்ப வேண்டிய நிர்பந்தம் என்ன..? இந்த பிரிவின் கீழ் சம்மன் அனுப்பியதன் மூலம் காவல்துறை மத்திய அமைச்சர் மகனை கொலை குற்றவாளியாக கருதாமல் சாட்சியாக கருதி சம்மன் அனுப்பியுள்ளது என்பது தெளிவாகிறது!

அப்படி அழைத்து வரப்பட்ட அவரை மிகப் பெரிய வி.வி.ஐபிக்கு உரிய மரியாதையுடன் அதிக காவலர்களை பாதுகாப்பாக நிறுத்தி அழைத்து வந்தனர். விசாரணை முடிந்த பிறகு அவரை பத்திரிகையாளர்கள் அணுகமுடியாதவண்ணம் பின்வாசல் வழியாக பாதுகாப்பாக காவல்துறை அழைத்துச் சென்றுவிட்டனர். அவரும் வரும் போதும், போகும் போதும் மிக கம்பீரமாக நடந்து வந்ததை பார்க்க முடிந்தது. . எனவே அவரிடம் அடுத்தடுத்த நாட்களில் எந்த மாதிரி விசாரணையை காவல்துறை மேற்கொள்ளப் போகிறது என்பது பலத்த கேள்விக்குறியாகி உள்ளது!

 

உத்திரபிரதேச அரசின் கடும் மெத்தன போக்கைக் கண்டு அதிருப்தி உற்று உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை தானே எடுத்து கேள்வி கேட்டதை நாம் அறிவோம்!

“மத்திய அமைச்சர் மகன் என்பதற்காக நீங்கள் சிறப்பு உரிமை வழங்குகிறீர்களா, வேறு ஒருவராக இருந்தால் இப்படித்தான் போலீசில் ஆஜராக வேண்டுமென்று கெஞ்சிக் கொண்டிருப்பீர்களா, மத்திய அமைச்சர் மகன் என்பதற்காக சிறப்பு சலுகை கொடுக்கிறீர்களா..’’ என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் ‘’அனைவரையும் பாதுகாக்கும் வகையில் சட்டம் இருக்கும்போது, அதை யாரும் கையில் எடுக்க வேண்டிய அவசியமில்லை. விவசாயிகள் மீது கார் மோதிய விவகாரத்தில் வீடியோ ஆதாரத்தை யார் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான வீடியோக்களில் காருக்குள் யார் இருந்தது என்பது தெரியவில்லை. ஆதாரமில்லாமல் வெறும் அழுத்தத்தின் பேரில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது.  யுகங்கள் அடிப்படையில் நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம். ஆதாரம் இருந்தால் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆணவத்தை உள்ளடக்கிய சாதுரியத்துடன் கூறினார்.

உ.பி.முதல்வரின் போக்கை பார்த்தால் அடுத்த முறை காவல்துறை ஆசிஷ் மிஷ்ராவை விசாணைக்கு அழைத்து வரும் போது மாலை மரியாதை செய்து அழைத்து வந்தால் அவர் பெரு மகிழ்ச்சி அடைவார் போலும்!

சம்பவம் நடந்த இடத்தில் அமைச்சரின் மகனை காரில் பார்த்த விவசாயிகள் விரிவாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தனர்! அது தொடர்பான வீடியோவும் கூட வெளியாகி இருந்தது. பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு அனைத்து உண்மைகளும் வைக்கப்பட்ட பிறகும் அரசாங்கம் அதையெல்லாம் பார்க்க மறுத்து கண்ணை மூடிக் கொண்டு, ”ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள்’’ எனக் கேட்கிறது.ஆதாரத்தை கொடுத்தால், அதை முதல் வேலையாக அழித்து விடுவீர்களே ஐயா! உங்களைப் பற்றி தான் எல்லோருக்கும் தெரிகிறதே!

மத்திய உள்துறை இணை அமைச்சர் கொலை செய்த தன் மகனை பாதுகாப்பாக ஒளித்து வைத்துக் கொண்டு, ”அவன் அப்பாவி, குற்றமற்றவன்.அவன் சம்பவம் நடந்த ஸ்பாட்டிலேயே இல்லை” எனக் கூறிக் கொண்டு இருந்தால் எப்படி உண்மையான விசாரணை இந்த வழக்கில் நடக்கும்?

ஒரு கொலைக் குற்றவாளியை விசாரணைக்கு அழைக்கும் லட்சணமே இப்படித் தான் இருக்கும் என்றால் இவர்கள்  எப்படி உண்மையான விசாரணை மேற்கொள்வார்கள்..? நீதி நிலை நாட்டப்படுமா? என்ற சந்தேகம் இன்று அனைத்து மக்களுக்கும் ஏற்பட்டுவிட்டது!

உண்மையை வெளிக் கொண்ர உ.பி அரசும் விரும்பவில்லை. ஒன்றிய அரசும் விரும்பவில்லை. குஜராத்தில் இஸ்லாமியர்களை கொல்ல துணை போனதற்குத் தான் குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு இந்திய பிரதமராக பதவி உயர்வு வழங்கப்பட்டது என்ற கடந்த காலத்தை பார்க்கும் போது, நிச்சயம் ஆசிஷ் மிஷ்ராவிற்கும் வருங்காலத்தில் பெரிய பதவி காத்து இருக்க கூடும்’ என்றே தோன்றுகிறது.

இறைவா..இறைவா இந்திய மக்களின் விதியை எப்படி நீ எழுதி வைத்துள்ளாயோ…?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time