அறம் வாசகர்கள் கேள்விகளுக்கு சாவித்திரி கண்ணன் பதில்கள்!

வெற்றிச் செல்வி, மனநல ஆலோசகர், சென்னை.

தமிழகத்தில் ,தமிழ் தேசியம் ஆட்சி செய்யும் காலம் வருமா ஐயா.?

தமிழகத்தில் முதன்முதலாக தமிழர் கழகம் உருவாக்கியவர் தமிழ்தாத்தா கி.ஆ.பெ.விசுவநாதம்! காங்கிரஸிலிருந்த பெரியாரை நீதிக்கட்சிக்கு அழைத்து வந்த கி.ஆ.பெ, இருபதாண்டுகள் பெரியாரோடு இணைந்து களம் கண்டவர்! பெரியாரும், அண்ணாவும் திராவிடர் கழகம் தொடங்கியதால் கருத்து மாறுபட்டு தமிழர் கழகம் உருவாக்கினார்!

மாபெரும் தமிழ்ப் போராளியும்,முத்தமிழ் அறிஞருமான கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தமிழர் கழகம், இந்திய தேசியத்திற்கு அனுசரணையான தமிழ் தேசியத்தை பேசிய சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசு கழகம்..ஆகியவற்றால் தமிழ்நாடும், தமிழர்களும் பெற்ற பலன்கள் சொல்லில் அடங்கா! ஆயினும், இவை இங்கு நின்று நிலைபெறவில்லை! இவர்களைப் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் பேசிய தமிழ்த்  தேசியத்தையே ஒப்புக் கொள்ளாத தமிழர்களா இன்றைய தமிழ் தேசியம் பேசுவோரை ஏற்பார்கள்?

அதுவும் இன்று தமிழ் தேசியம் பேசுபவர்களின் அதீத திராவிட வெறுப்பானது ஒன்றுபட வேண்டிய தமிழர்களை பிரிக்கும் முயற்சியாகவும் உள்ளது. இன்று இந்து தேசியத்தை பின்னணியாகக் கொண்டு செயல்படும் தமிழ்த் தேசியம் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை!

…………………………………………………………..

ராகவ ராஜ், ஆறுமுகநேரி, தூத்துக்குடி.

இப்போதைய தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவற்றுக்குஉலக வர்த்தகக் கழகஒப்பந்தத்தில் ( W T O ) இந்திய அரசு இணைக்கப்பட்டது தான் காரணமா?உலக வர்த்தகக் கழகஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதில் இந்திய அரசை இணைத்தது யார், எந்தக் கட்சி, எந்த ஆண்டு ?

இப்போதைய தனியார்மயமாக்கல்,உலகமயமாக்கல்,தாரளமயமாக்கல் ஆகியவற்றுக்கு அடித்தளமிட்டது காங்கிரஸ் கட்சியின் நரசிம்மராவ்-மன்மோகன்சிங் கூட்டணியே! ஆண்டு 1991. இதனால் டாலருக்கு ஒரளவு இணையாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியது.சிறு,குறு தொழில்கள் பாதுகாக்க முடியாமல் அழியத் தொடங்கின! இறக்குமதி, ஏற்றுமதி கொள்கை தாறுமாறாக ஆனது! விவசாயிகள் தற்கொலை லட்சக்கணக்கில் அதிகரித்தது, இந்த காலகட்டத்தில் தான்! அதே சமயம் காட் ஒப்பந்தத்தில் கல்வி,மருத்துவம் ஆகியவற்றை இணைத்து அவற்றை சேவை நோக்கத்தில் இருந்து வணிக நோக்கத்திற்கு மாற்றியது வாஜ்பாய் ஆட்சி தான்!

…………………………………………………………..

மருதமுத்து, கரூர்

தன்னலமற்ற தலைவர் வைகோ அவர்களின் செயல்பாடுகளை பற்றி கருத்து?

‘தன்னலமற்ற தலைவர்’ என்ற அடைமொழியோடு கேள்வி கேட்பதில் இருந்தே உங்களுக்கு அவரது செயல்பாடுகளில் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பது தெரிகிறது. உங்கள் நம்பிக்கையை அடுத்தவர் மதிப்பீடுகளைக் கொண்டு அளவீடு செய்யாதீர்கள். உங்கள் சொந்த அறிவு, அனுபவம் சார்ந்து முடிவெடுங்கள்! ஒருவர் நம்பிக்கை குறித்து விமர்சிப்பது நாகரீகமல்ல!

…………………………………………………………..

கே.எஸ்.கவின், மணலூர்ப்பேட்டை.

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆளும் கட்சிக்கு வாக்களித்தால்தான் நல்லது நடக்கும் என பொன்முடி பேசுகிறார்…. பதவி கிடைக்காத கட்சியினருக்கு கூட்டுறவு சங்க தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என துரைமுருகன் பேசுகிறார்முதல்வரின் தற்போதைய இயல்புக்கு மாறாக செயல்படும் சீனியர்களை முதல்வர் ஓரம்கட்டினால்தான் என்ன…?

உங்கள் கேள்விக்கு உள்ளேயே சரியான பதிலும் வைத்துள்ளீர்கள்!

…………………………………………………………..

சரவணன், சாலிகிராம், சென்னை

வைகைப் புயல் வடிவேலுவை அவருக்கு முந்தைய நகைச்சுவை நடிகர்களோடு ஒரு ஒப்பீடு செய்ய முடியுமா..?

நகைச்சுவை நடிப்பு என்பது ஆகப் பெரிய திறமைசாலிகளுக்கே கைகூடும்!

கலைவாணர் என்.எஸ்.கேவின் நகைச்சுவையில் மக்கள் அறியாமையை விலக்கவும், சமூக அவலங்களைச் சாடி முற்போக்கான பார்வையை முன்னெடுக்கவுமான ஒரு நோக்கம் இருந்தது! அவை அந்த காலகட்டத்தில் தேவையாக ஏற்கப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு நகைச்சுவை நடிகருக்கு சிலை வைக்கப்பட்டதென்றால் அது என்.எஸ்.கேவுக்குத் தான்!

கலைவாணர் காலத்தில் இருந்த காளி என்.ரத்தினமும் அபாரமான திறமைசாலி தான்! சபாபதி படம் ஒன்று போதும் காளி என்.ரத்தினத்தை காலமெல்லாம் நினைவு கூற! இவர்கள் இருவரும் அந்தக் கால எம்.ஜி.ஆர் போன்ற இளம் நடிகர்களுக்கு ஆசான்களாகத் திகழ்ந்தவர்கள்!

சந்திரபாபுவும் ஒரு பிறவி மேதை! நவரசபாவமும் வெளிப்படுத்த தெரிந்த அபார நடிகன்! நடனம், பாடல்களிலும் கொடிகட்டிப் பறந்தார்! அடுத்து நாகேஷ் ஒரு சகாப்தமாக எழுந்து நின்றார்! சோவுக்கு அழகான அப்பாவி முகம், முட்டைக் கண்கள் ப்ளஸ் பாயிண்ட்! அத்துடன் அரசியல் நையாண்டி அவருக்கு கைகொடுத்தது. அரசியல்வாதிகளின் போலித்தனங்கள், பேராசை, சுயநலம், அடாவடித்தனங்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்தியதில் வெற்றி பெற்றார். எனினும், காலப் போக்கில் அது திராவிட இயக்க வெறுப்பு என்பதாக சுருங்கி போனதால் நீர்த்துப் போனது!

சுருளிராஜன் அப்பாவித்தனமான பாத்திரங்களில் மனதை அள்ளிச் சென்றார்!

கவுண்டமணி-செந்தில் காமெடி ஒரு குறிப்பிட்ட காலம் மக்கள் மனதை கொள்ளையிட்டது!

இந்த இருவர் அணியும், ஜனகராஜனும், சார்லியும், விவேக்குமாக மிகப் பெரிய ஜாம்பவான்கள் கோலோச்சிய ஒரு காலகட்டத்தில் வத்தலும், தொத்தலுமாக, கருப்பாக வறுமையில் அடிபட்ட அடையாளங்களுடன் வந்தவர் தான் வடிவேலு!

நகைச்சுவை மேதமைக்கு மனித மனங்களின் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். மனித மனங்களில் தோன்றும் பேராசை, அகம்பாவம், அறியாமை, இயலாமை, அவசரக் குடுக்கைத்தனம்.. ஆகியவற்றை துல்லியமாக உள்வாங்கி, வெளிப்படுத்த முடிந்தவர்களாலேயே நகைச்சுவையை உருவாக்கமுடியும். இதில் முன்னவர்கள் ஓவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் மேதைகள்! இதில் அனைவரும் வியக்கதக்க வகையில் ஆகச் சிறந்த நகைச்சுவை நிபுணத்துவம் பெற்றவர் வடிவேலு! அவர் பிஸியாக நடிப்பதை நிறுத்தி பத்தாண்டுகளாகியும் கூட இன்னும் மக்களுக்கு அரசியல்,சமூக பிரச்சினைகளின் வெளிப்பாட்டுக்கு அவர் முகபாவங்களே அடையாளமாகிறது என்றால், இதைவிட வேறென்ன வேண்டும்!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time