குற்றவாளிகளை என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

-சாவித்திரி கண்ணன்

கொலைக் குற்றத்திற்கு ஆளாகியுள்ள கடலூர் திமுக எம்.பி, டி.ஆர்.வி.ரமேஷ், கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு ஆளான நெல்லை எம்.பி.ஞானதிரவியம் ஆகிய இருவர் மீதான நடவடிக்கைகள் எப்படி மேற்கொள்ளப்படும் என்பதைப் பொறுத்து தான் ஆளும் கட்சி மீதான மக்கள் மதிப்பீடு உருவாகும்! கட்சிக்காரர்களின் அராஜகச் செயலுக்கு அரசு ஆதரவளிக்காது என்பதை உத்திரவாதப்படுத்துவாரா..?

தமிழ்நாடு அமைதி பூங்கா என்று அடிக்கடி சொல்லப்படுகிறது.ஒரு நாடு அமைதி பூங்காவாக தொடர்வது என்பது, ஆட்சியில் உள்ள கட்சியானது அதிகாரத்தை எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பொறுத்து தான் உள்ளது!

எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு! அதிகாரத்தில் இருப்பவர்கள் அராஜகத்தை செய்ய ஆரம்பித்தால், ஆரம்பத்தில் அடங்கி போக நினைப்பவர்கள் காலப் போக்கில் கடும் எதிர்வினையாற்றத் தொடங்கிவிடுவார்கள்!

வட இந்தியா எங்கும் பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்துமே ஏறத்தாழ கலவர பூமியாக இருப்பதற்கு காரணம் அதிகாரத்தைக் கொண்டு யாரையும் ஒடுக்க முடியும் என்று பாஜக நம்புவது தான்! காஷ்மீரில் கடும் ராணுவ அடக்குமுறையைக் கையாண்டு அந்த மக்களின் அத்தியாவசிய தேவைகள் கூட நிறைவேற வழியின்றி சிறுபான்மையினரை அடக்கினர். அது எவ்வளவு நாள் நீடித்தது? இதோ தற்போது எதிர்வினைகள் ஆரம்பித்துள்ளன! தற்போது அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர்!

தமிழகத்தில் மக்கள் பலத்த எதிர்பார்ப்புகளுடன் திமுக அரசை தேர்ந்து எடுத்துள்ளனர். மதவாத, மற்றும் பொருளாதார பயங்கரவாத ஆபத்தை எதிர்கொள்ளவும், அதிமுக அரசின் அடிமை மனோபாவ, மோசமான ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டவும் திமுக மக்களின் தேர்வானது. அதனால் திமுக ஆட்சிக்கு ஏற்படும் சிக்கல்கள் மீண்டும் தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் கரத்தை வலுப்படுத்திவிடுமே என்ற கவலையும் திமுகவை வெற்றி பெற வைத்த மக்களுக்கு ஏற்படுமல்லவா?

பொதுவாக திமுக மீது வன்முறைக்கு அஞ்சாத கட்சி என்ற இமேஜ் கடந்த காலத்தில் பொது புத்தியில் படிந்துள்ளது. ஆட்சிக்கு வந்தால் திமுக காரர்கள் ஆங்காங்கே அராஜகத்தில் ஈடுபடுவார்கள் என்ற பேச்சும் உண்டு! ஆனால், அதற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வெளிப்பட்டது.

வெற்றிபெற்றதும் திமுக தொண்டர் ஒரு சிலர் அம்மா உணவகம் ஒன்றின் பெயர் பலகையை உடைத்து கழட்டி வீசினார்கள்! அவர்களை உடனே கட்சியில் இருந்தே விலக்கி வைத்தார் ஸ்டாலின். இந்த அணுகுமுறை அவர் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இது அராஜகத்தில் ஈடுபடும் கட்சிக்காரர்களை இந்த ஆட்சி தண்டிக்கும் என பட்டவர்த்தனமாக உணர்த்தியது.

சமீபத்தில் வடபழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தை திமுக கட்சிக்காரர்கள் ஆக்கிரமித்து, அங்கே வசூல் வேட்டை நடத்தி வந்ததை டைம்ஸ் ஆப் இந்தியா கவனப்படுத்தி இருந்தது. அடுத்த நாளே அங்கு சென்ற அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கட்சிக்காரர்களைக் கண்டித்து வெளியேற்றியதோடு, அந்த பிரச்சினைக்கு பொது மக்கள் மகிழும் வண்ணம் முற்றுபுள்ளி வைத்தார்! இவையாவும் திமுக மீதான பழைய இமேஜை மாற்றி அமைத்து ஒரு புதிய இமேஜுக்கு வழி வகுத்தது!

கடலூர் திமுக எம்.பியான டி.ஆர்.வி.ரமேஷ் விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதம் இன்றைய திமுக தலைமை கட்டிக் காப்பாற்ற துடிக்கும் கண்ணியமான ஆட்சி என்ற பெயருக்கு களங்கம் சேர்பித்து உள்ளது!

திமுக எம்.பியான டி.ஆர்.வி.ரமேஷ் தான் நடத்தும் முந்திரி ஆலையில் தொழிலாளியான கோவிந்தராஜ் முந்திரிபருப்பை திருடி விற்றதாக சந்தேகப்பட்டு, அவரை கடுமையாக தாக்கி உயிர் இழப்புக்கு காரணமாகி உள்ளார்.

அந்த தொழிலாளியை வேலையில் இருந்து நீக்கி இருக்க முடியும். அவர் மீது ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்து அவரை திருட்டு குற்றத்தில் சிறைக்கு அனுப்ப முடியும். அதுவும் அவர் எம்.பியாக இருப்பதாலும், ஆட்சியில் திமுக இருப்பதாலும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு நிறையவே உள்ளது! ஆனால், அவரும், அவரது ஆட்களும் மிகக் கடுமையாக அந்த  தொழிலாளியை தாக்கி, பிறகு காவல் நிலையத்திற்கு அவரை கொண்டு போயுள்ளனர். காவல்துறையினர் அந்த தொழிலாளியை மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், காவல்துறையினர் கைது செய்ய மறுத்ததால் எம்.பியின் ஆட்கள் அவரை மீண்டும் கொண்டு சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி கொன்று உள்ளனர். தலை பின்பகுதி மண்டை ஓடு உடைந்துள்ளது. இடது கண்ணில் கடுமையான காயம், காதுபக்க எலும்பு உடைந்துள்ளது. வயிற்றிலும் கடுமையான காயம் இருந்துள்ளது! இப்படி கடுமையாக கொன்றுவிட்டு விஷம் அருந்தி இறந்தார் என சொல்லி நாடகம் ஆடியுள்ளனர்.

இந்த ஆணவப் போக்கை அலட்சியப்படுத்தினாலோ அல்லது மறைத்து அவரை காப்பாற்ற முயன்றாலோ ஆட்சிக்கு நீங்காத அவப் பெயரைக் கொடுக்கும் என்று ஆரம்பத்திலேயே ஸ்டாலின் தனது கட்சி எம்.பியை ராஜுனாமா செய்யச் சொன்னதாக தகவல்கள் வெளியாயின! சம்பவம் நடந்த போது உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான ஒரு இக்கட்டான சூழலில், தேர்தல் முடிந்தவுடன் இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைதாகி உள்ளனர்! ஆனால், எம்.பி தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

நடந்த சம்பவத்தால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப் பெயர் ஏற்படும் என எம்.பி உணர்ந்திருந்தால் தன் குற்றச் செயலுக்கு வருந்தி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு ஒரு பெரும் நிதியை இழப்பீடாகத் தந்து பிரச்சினை பெரிதாகாமல் கூட செய்திருக்க வாய்ப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், எம்.பியின் ஈகோ அதை தடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

கட்சியில் இருந்து தலைமையால் நீக்கப்பட்டால், அவர் ஆளும் பாஜக ஆதரவுடன் எம்.பியாக தொடர வாய்ப்புள்ளதால், அவரே ராஜுனாமா செய்ய வேண்டும் என்பது திமுக தலைமையின் எதிர்பார்ப்பாக உள்ளது. கட்சி தந்த இந்த மரியாதையை காப்பாற்றத் தவறிவிட்டார் ரமேஷ்! ஆகவே, இனி விளைவுகளை பார்க்காமல் அவரை கொலைக் குற்றத்தில் கைது செய்வது தவிர வேறு வழியில்லை. அவரைக் கைது செய்தால் தான் கட்சிகாரர்களுக்கு இது ஒரு பாடமாகும்!

அடுத்ததாக நெல்லை திமுக எம்.பி ஞானதிரவியம் பொதுவெளியில் அராஜகத்தில் ஈடுபட்ட நிகழ்வாகும். வள்ளியூர் அருகே ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பாஸ்கர் மீது  ஹோட்டல் ஒன்றில் கடும் தாக்குதல் நடத்தியதோடு அங்கிருந்த சி.சிடிவி கேமராவையும் அடித்து நொறுக்கி உள்ளனர், எம்.பியும் அவரது ஆட்களும்! பாஜக பிரமுகர் மீது தவறு இருந்தால் காவல்துறையினரிடம் புகார் தந்து நடவடிக்கை கோரி இருக்கலாமே!

ஆளும் கட்சியினருக்கே காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா? சட்டம், ஒழுங்கை தாங்களே கையில் எடுத்துக் கொள்வார்கள் என்றால்,முதலமைச்சரின் கீழ் இயங்கும் காவல்துறைக்கு இவர்கள் தரும் மரியாதை தான் என்ன? இவை எல்லாம் பாஜக தமிழகத்தில் காலூன்றவே களம் அமைத்து கொடுக்கும்.

பணகுடி காவல் நிலைத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் தினகரன், ராஜா உள்பட 30 பேர் மீது 147, 294 b, 323, 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்ற செய்தி ஒரளவு ஆறுதல் தந்தாலும், நியாயமான விசாரணை நடத்தி, உரிய தண்டனை வழங்கினால் தான் இங்கு சட்டத்தின் ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார் என்ற நம்பிக்கை மக்களிடம் வலுக்கும்.

முன்னதாக கட்சியில் அமைச்சரானாலும், எம்.பி, எம்.எல்.ஏ யாராக இருந்தாலும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை தயங்காமல் நடவடிக்கை எடுக்கும் தைரியத்தை காவல்துறைக்கு முதல்வர் தர வேண்டும்! ஏனெனில், ஆளும் கட்சிக்காரர்களின் அராஜகத்தை அரசு ஆதரிக்கிறது என்ற எண்ணம் மக்கள் மனதில் நிலைபெற்றுவிட்டால், பிறகு நீங்கள் செய்யும் ஆயிரம் நன்மைகள் கூட எடுபடாமல் போய்விடும் வாய்ப்புள்ளது. ஆகவே, முளையிலேயே கட்சிக்காரர்களின் அராஜக போக்கை முதல்வர் கிள்ளி எறிய வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time