குறையும் நிலக்கரி கையிருப்பு! இருளில் மூழ்கப் போகும் மாநிலங்கள்!

- ஆர்.எம்.பாபு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்ததாக சென்ற ஆண்டு தம்பட்டம் அடித்தது ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சகம்! இந்த ஆண்டு நிலக்கரி உற்பத்தி குறைந்ததால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தன்னை திட்டமிடல் இல்லாத ஓர் அரசாகத் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே வருகிறது.  கொரோனா தடுப்பூசிகளிலும் கூட உற்பத்தி செய்த தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது!  அப்படியான ஒரு நிலையை தான் இப்போது நிலக்கரித்துறை அமைச்சகம் சந்திக்க இருக்கிறது.

டெல்லி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிக அளவில் பெய்த மழையால் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியில் சிக்கலும், இருக்கும் நிலக்கரியை மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிரமமும் ஏற்பட்டு இருக்கிறது.  நிலக்கரியின் அதீத விலை உயர்வு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தடையாகிவிட்டது.  ஆகவே, இப்போது தமிழகம், குஜராத் பஞ்சாப், தில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தின் அளவு சரி பாதியாக குறைந்துள்ளது.  இதனால் இந்த மாநிலங்கள் மின் பற்றாக்குறையால் பாதிப்படையக்கூடும்.

சில நாட்களாகவே மின்சாரத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக ஒன்றிய நிலக்கரி அமைச்சகத்திற்கு எச்சரிக்கை கொடுத்திருந்தார்கள்.  ஆனால், நிலக்கரி அமைச்சகமோ நாட்டில் போதுமான நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும்,  பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நிலக்கரி விநியோகிக்கப்படும் என்றும் எந்த திட்டமும் இல்லாமல் சமாளித்துவிட்டது!

ENERGY SECTOR தனியார்மயம் ஆவதை நாம் பலமுறை எதிர்த்தும், கண்டித்தும் இருக்கிறோம்.  தனியார்த்துறை என்றாலே லாபம் மட்டுமே அவர்களது இலக்கு.  நாட்டின் மீது அக்கறை இருக்காது என்பதற்கு இன்றைய நிலைமைகளே சாட்சி.

மின்சாரம் தயாரிக்க இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை மட்டுமே பயன்படுத்திய மின் உற்பத்தி நிலையங்கள், சர்வதேச நிலக்கரி விலை உயர்வால் இறக்குமதி செய்யாமல் மின்சார உற்பத்தியைக் குறைத்துவிட்டன! சில மின் நிலையங்கள் முற்றிலுமாக செயல்படவில்லை. அவர்களின் உற்பத்தியில் இருந்து மாநிலங்களுக்கு உத்திரவாதம் கொடுத்த அளவுக்கான மின்சாரத்தை வழங்குவது நிறுத்தப்பட்டு இருக்கிறது.  இதனால் சமாளிக்க முடியாத மின் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

குஜராத்தில் 1,850 மெகாவாட்,

பஞ்சாபிற்கு 475 மெகாவாட்,

ராஜஸ்தானுக்கு 380 மெகாவாட்,

மகாராஷ்டிராவுக்கு 760 மெகாவாட்

ஹரியானாவிற்கு 380 மெகாவாட்

என்பதாக மின்சாரம் வழங்க ஒப்பந்தம் செய்த டாடா பவர், குஜராத்தில் முந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை நிறுத்திக்கொண்டது!

அதானி பவரின் முந்த்ரா மின் உற்பத்தி நிலையமும் தனது உற்பத்தியை நிறுத்திக்கொண்டது.

“முந்திராவில் உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டோம், ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் அதிக விலை தற்போதைய PPA விதிமுறைகளின் கீழ் வழங்க இயலாது” என்று  கூறிவிட்டனர்.

நிலக்கரியின் பற்றாக்குறையை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் குறைந்த பட்சம் 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பும் அதிகபட்சமாக 30 நாட்களுக்கான நிலக்கரியை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒழுங்குமுறை விதியை ஒன்றிய அரசு அறிவித்தது.   இந்த அறிவிப்புக்கு பின் நாட்டின் 135 நிலக்கரி மின்சார உற்பத்தி ஆலைகளில் 2 நாட்களுக்கு குறைவாகவே எரிபொருள் இருப்பு உள்ளது.

இருப்பினும், நிலக்கரி அமைச்சகம், மின் உற்பத்தி நிலையங்களால் அறிவிக்கப்படும் அறிக்கைகள் அவர்களிடம் தற்போது கைவசம் உள்ள இருப்பு மட்டுமே என்றும் ஒவ்வொரு நாளும் நிலக்கரியை விநியோகித்து வருவதாகவும் அறிக்கை கொடுக்கிறது.

“சுரங்கங்களில் சுமார் 40 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளது மற்றும் மின் நிலையங்களில் மேலும் 7.5 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது” என்று அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சுரங்கங்கள் வெள்ளத்தில் மூழ்குவதால் அதிக மழை பெய்வதால் சுரங்கங்களில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு வெளியேற்றப்படுவது ஒரு பிரச்சனையாக உள்ளது. ஆனால் இது இப்போது ஒழுங்குபடுத்தப்பட்டு, மின் உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறுகிறார்.

டாடா பவர் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்)- தேசிய தலைநகரின் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குகிறது. நிலக்கரி இருப்பு 2 நாட்களுக்கு மட்டுமே இருப்பதால் தேவையான நிலக்கரி வரும் வரை சுழற்சி முறையில் மின் வெட்டுடன் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் சீனிவாசன் எச்சரித்து இருக்கிறார்..

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி எதிர்கொள்ளக்கூடிய “மின் நெருக்கடி” குறித்து “நான் தனிப்பட்ட முறையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதைத் தவிர்க்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம், ”என்று கூறினார்.

பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் கூட மாநிலத்தின் பல இடங்களில் சுழற்சி 3-4 மணிநேர மின்வெட்டுக்காக நிலக்கரி பற்றாக்குறை  காரணத்தைக் குறிப்பிட்டுள்ளது.

பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், 475 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்திப்படி , பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியிடம், மாநிலத்தில் உள்ள 5 அனல் மின் நிலையங்களில் ஒன்று முதல் இரண்டு நாட்களுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்திக்குரிய நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கிறது.

டிஎன்ஏ செய்தியின்படி உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் எட்டு மின் நிலையங்கள் இப்போது செயல்படுவதை நிறுத்திவிட்டன, மற்றவை ஏற்கனவே மற்ற காரணங்களால் செயல்படவில்லை. கிராமப்புறங்களில் 4-5 மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

ராஜஸ்தானில் தினமும் ஒரு மணி நேர மின்வெட்டு உள்ளது. நிலக்கரி நெருக்கடியால் தமிழ்நாடு, ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில், தினசரி ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, அதே நேரத்தில் சென்னையில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி பற்றாக்குறையால் ஜார்க்கண்ட் மற்றும் பீகாரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில், கடுமையாக மின்பற்றாக்குறைகள் திட்டமிடப்படாத மின் வெட்டுக்களை நோக்கி தள்ளுகின்றன, மேலும் விவசாயத்திற்கான பம்புசெட்களுக்கு மின்சாரம் இல்லாவிட்டால் பயிர்கள் காய்ந்துவிடும்.

“அறுவடையின் கடைசி கட்டத்தில் அதிக தண்ணீர் தேவைப்படுகிறது, அது மறுக்கப்பட்டால், வயல்கள் வறண்டு போகும், விவசாயிகள் இழக்க நேரிடும்” என்று ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருக்கிறார்.

ஒடிசாவில், தொழிலதிபர்கள் கூட்டமைப்பு தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கும் விதத்தில் நிலக்கரியின் கையிருப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.

பல மாதங்களாகவே மாநிலங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. கோவிட் -19 தாக்கத்தின் இரண்டாவது அலைக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதால், மின் தேவை கடுமையாக உயர்ந்தது. 2019 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மின்சார நுகர்வு கிட்டத்தட்ட 17% அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் உலகளாவிய நிலக்கரி விலைகள் 40% அதிகரித்துள்ளதால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு வரலாறு காணாத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

உலகின் நான்காவது மிகப்பெரிய நிலக்கரி இருப்பு கொண்ட நாடாக இந்தியா இருந்தபோதிலும், நிலக்கடி இறக்குமதியில்  உலகின் இரண்டாவது பெரிய நாடாகவும் இந்தியா இருக்கிறது.

வழக்கமாக இறக்குமதியை நம்பியிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் இப்போது இந்திய நிலக்கரியை பெரிதும் சார்ந்துள்ளன!

நிலக்கரி அமைச்சகத்தின் தலைமையிலான ஒரு அமைச்சுக்கு உட்பட்ட துணைக்குழு நிலக்கரி இருப்பு நிலைமையை வாரத்திற்கு இரண்டு முறை கண்காணித்து வருகிறது. நிலக்கரி கையிருப்பை நிர்வகிப்பதற்கும், நிலக்கரியின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், மின்சக்தி அமைச்சகம் ஒரு நிர்வாக குழுவை (சிஎம்டி) அமைத்தது! இது தினசரி ஒவ்வொரு நாளும் நிலக்கரி பங்குகளை உன்னிப்பாக கண்காணித்து நிர்வகிக்கிறது.  கோல் இந்தியா லிமிடெட் மற்றும் ரயில்வேயுடன் இணைந்து நிலக்கரி தேவையான இருப்பு இருக்குமாறு உறுதி செய்கிறது.  மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்த. நிலக்கரி அனுப்புதல் அக்டோபர் 7 அன்று 1.501 மில்லியன் டன்களை எட்டியது!

நுகர்வுக்கும் உண்மையான விநியோகத்திற்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்தது. அடுத்த மூன்று நாட்களில் மின் துறைக்கு அனுப்புதல்களை ஒரு நாளைக்கு 1.6 மில்லியன் டன்னாக அதிகரிக்க முயற்சிகள் சேர்க்கப்பட்டு 1.7 மில்லியன் டன் முயற்சி செய்யப்படுகிறது.

மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைவதற்கான காரணங்கள்;

#  பொருளாதார வளர்ச்சியாலும், அதிக நுகர்வாலும் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது.

#  நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் செப்டம்பர் மாதத்தில் பெய்த கனமழையானது, உற்பத்தியை பாதித்ததுள்ளது!

#  நிலக்கரியின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்ததால் இறக்குமதி செய்ய இயலாத நிலை!

# பருவமழை தொடங்குவதற்கு முன் போதுமான நிலக்கரி கையிருப்பை ஏற்படுத்த தவறியது.

#  மின்சாரத்தின் தினசரி நுகர்வு ஒரு நாளைக்கு நான்கு பில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது.

இந்தோனேசிய நிலக்கரியின் விலை மார்ச் மாதத்தில் டன்னுக்கு 60 டாலரிலிருந்து 160 டாலராக உயர்ந்தது!  இதன் விளைவாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியிலிருந்து 43.6% மின் உற்பத்தி குறைந்தது!  இது ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் 17.4 மில்லியன் டன் உள்நாட்டு நிலக்கரியின் கூடுதல் தேவையை ஏற்படுத்தியது.

மின்வாரியத்தின் தேவைகளுக்கு ஏற்ப, மின் உற்பத்தி நிலையங்களின் உகந்த பயன்பாட்டை செயல் படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மின் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இந்த வழிகாட்டுதல்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான ஆலைகளை (போதுமான நிலக்கரியைக் கொண்டு) செயல்படவேண்டும் என்றும், இது உள்நாட்டு நிலக்கரியின் சுமையை எளிதாக்க உதவும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

‘கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்’ என்பதாகத் தான் பாஜக ஒன்றிய அரசின் செயல்பாடுகள் உள்ளன!

கட்டுரையாளர்; ஆர்.எம்.பாபு

இடதுசாரி சிந்தனையாளர்

+919600276131

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time