வரலாற்றைக் கண்டு வதைபடும் முதல்வர் ஆதித்திய நாத்!

-சாவித்திரி கண்ணன்

வரலாற்றைக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்வதும், துக்கபட்டுக் கொள்வதும் அவரவர் மன நிலை சார்ந்த விஷயம்! அதனால், நடந்த வரலாறு ஒரு போதும் மாற்றமடைய போவதில்லை!

எந்த ஒரு நிகழ்வையும் ஆக்கம் சார்ந்து புரிந்து மேலெழவும் வாய்ப்புண்டு! ஆக்ரோஷம் கொண்டு புரிந்து அமிழ்ந்தழிந்து போகவும் வாய்ப்புள்ளது!

இதில் இரண்டாவது வாய்ப்பை வலிந்து தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் தான் பாஜகவினர்! அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தும் ஆனந்தம் பெறமுடியாதவர்களாக உள்ளனர். காரணம், அவர்கள் மனதில் எந்த நேரமும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்மம் அவர்களை அமைதி கொள்ளவிடுவதில்லை!

இதில் உத்திரபிரதேச பிரதேச முதல்வர் ஆதித்திய நாத் முதலாமவர்! அவர் சதாசர்வ காலமும் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆக்ரோச நாத்தாகவே வெளிப்படுகிறார்! இதனால்,அவர் உத்திரப் பிரதேசத்தையே உக்கிரப்பிரதேசமாக மாற்றி வருகிறார்!

அவருக்குக் கீழ் உள்ள காவல்துறை அப்பாவி இஸ்லாமியர்களைக் கண்டால் கூட வேட்டை நாயாகப் பாய்கிறது! பொய் வழக்கு புனைகிறது! அடித்து துவம்சம் செய்கிறது. இது அந்த ஆட்சியில் ஏற்கப்பட்ட பொதுவிதியாகவே சில இடங்களில் மாறியுள்ளது!

பாவம் அவர் என்ன செய்வார்..! வரலாறு அவரை வதைத்து கொண்டே உள்ளது! ’’ஆகா,மொகலாயர்கள் நம்மை முந்நூறு ஆண்டுகளாக ஆட்சி செய்துவிட்டார்களே… இந்த அநீதியை நான் எங்கனும் பொறுப்பேன்?’’ என ஆவேசம் கொண்டவராகவுள்ளார்!

அதன் விளைவு தற்போது ஆக்ராவில் உள்ள மொகலாய அருங்காட்சியகம் சிவாஜி மகராஜ் அருங்காட்சியகமாகப் போகிறது! ’’நம் கதாநாயகர்களாக நாம் முகலாயர்களை எப்படிக் கருதமுடியும்? இந்த மாநிலத்தில் அடிபணிந்த அடிமை மன நிலையின் அடையாளங்கள் அகற்றப்படும்..’’ எனக் கூறியுள்ளார்!

உத்திரபிரதேச தொல்லியல்துறை மற்றும் வரலாற்றுத் துறை அதிகாரிகள் அரண்டு போயுள்ளார்கள்! ஏனென்றால், இந்த மொகலாய அருங்காட்சியகம் 2016ல் அன்றைய முதல்வர் அகிலேஷ் யாதவால் அடிக்கல் நாட்டப்பட்டுக் கட்டப்பட்டு வருகிறது! காரணம் இஸ்லாமிய மன்னர்கள் காலத்து அரிய பொக்கிஷங்கள், நாணயங்கள்,ஓவியங்கள் ஆவணங்கள்..ஆகியவை தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருந்ததால், அவற்றுக்கு ஒரு அருங்காட்சியகம் தேவைப்பட்டது.அவர் பொறுப்பில் இருந்திருந்தால் இரண்டாண்டுகளுக்கு முன்பே இது முழுமைபெற்று திறக்கப்பட்டிருக்கும்!

தற்போது சிவாஜி மகராஜ் அருங்காட்சியகமாக மாறுமென்றால்,சிவாஜி தொடர்பான எதுவுமே உத்திரபிரதேசத்தில் கிடையாது! அவர் ஒளரங்கசீப்பால் சிறை வைக்கப்பட்டு தப்பித்தார் என்ற அளவுக்குத் தான் அவருக்கும், உத்திரபிரதேசத்திற்குமான தொடர்பாகும்! இதனால்,பொய்யாக,புனைவாக முதலமைச்சரின் திருப்திக்காக எதையாவது செய்தாக வேண்டிய நிலைமை! மற்றொன்று தற்போது சேகரிக்கப்பட்டுள்ள மொகலாய பொக்கிஷங்களை என்ன செய்வது? அதைப் பார்த்தாலே அவருக்கு பொத்துக் கொண்டுவருமே!

மூர்க்கத்தனம் எப்போதுமே முட்டாள் தனமான காரியங்களுக்குத் தான் வழிவகுக்கும்! ஏற்கனவே புகழ்பெற்ற அலகாபாத் நகரை பிரயாகராஜ் என்று பெயர் மாற்றியதைப் போன்ற ஏராளமான பெயர் மாற்றங்கள்! இதிலேயே மக்கள் குழம்பிப் போயுள்ளனர்!

போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் என்னென்ன செய்வாரோ தெரியவில்லையே…! வட இந்தியாவில் தற்போதுமே கூட சுமார் 700க்கு மேற்பட்ட நகரங்கள்,சிற்றூர்கள்,கிராமங்கள் வரை இஸ்லாமிய மன்னர்கள் பெயரில் உள்ளன! புகழ்பெற்ற தாஜ்மகால்,ஆக்ரா கோட்டை ஆகியவை மொகலாய மன்னர்கள் கட்டியவை தான்! ஆக்ராவை தலை நகராக்கி மொகலாய மன்னர்கள் ஆட்சி செய்து தான் ஆக்ராவே வளம் பெற்றது, புகழ்பெற்றது இது போன்ற சுற்றுலா தளங்களிலிருந்து தான் உ.பிக்கு நல்ல வருமானம் வந்து கொண்டுள்ளது! இவர் பாட்டுக்கு நாளை தாஜ்மகால் பெயரை மாற்றி இந்து மன்னர் ஒருவரின் பெயரை வைக்கப் போகிறேன் என்றால்,அதை உலகம் எப்படி எதிர்கொள்ளுமோ..என கலக்கமடைந்துள்ளனர்!

அய்யா,ஆக்ரோஷநாத்தே ஆத்திரம் வந்த இடத்தில் அறிவு விடை பெற்றுக் கொள்ளும் என்று நமது முன்னோர்கள் சொன்னது உங்களைப் போன்றவர்களைப் பார்த்து தான் போலும்! எப்படிப்பட்ட மேன்மைமிக்க ஆட்சியாளர்களையெல்லாம் வரலாற்றில் பார்த்த நம் நாடு இப்படிப்பட்ட ஆதித்திய நாத்களையும் பார்க்க நேரிட்டுவிட்டதே! எதிர்கொள்ளத் தான் வேண்டும்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time