இந்த அரசாங்கத்திற்கு இந்துக்கள் மீது கோபம் இருக்கிறது, துவேஷம் இருக்கிறது. அதனால், வெள்ளி,சனி, ஞாயிறு கோயில்களை பூட்டி வைக்கின்றனர் என்று நிச்சயமாக குற்றம் சாட்ட வாய்ப்பில்லை. தேர்தல் அறிக்கையிலும் சரி, பதவி ஏற்பிற்கு பின்பும் சரி இந்து அற நிலையத் துறைக்குத் தான் இந்த ஆட்சியாளர்கள் அதி முக்கியத்தும் கொடுத்து செயல்பட்டு வருகின்றனர்! எனில், கோயில்களை திறக்க எது உண்மையான தடை? இதன் பின்னணியில் இருப்பது யார் என பார்க்க வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்க சமரசமின்றி அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான அற நிலையத் துறை அயராது செயல்பட்டு வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் பெரும் திமிங்கலங்களிடம் மாட்டிக் கொண்டிருந்த கோயில் சொத்துகளில் சிலவற்றை மீட்டுள்ளதும் இதற்கு சாட்சியாகும்!
இது வரை ஒரு கால பூஜை கூட நடந்திராத பல்லாயிரக் கணக்கான கோயில்களில் ஒரு கால பூஜையேனும் நடக்க நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகின்றனர்! இப்படி சொல்வதற்கு நிறைய இருந்தாலும் கட்டுரையின் மையப் பொருளுக்கு வருவோம்!
தற்போது கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோயில்கள் மூடப்பட்டு வருகின்றன! இதை திறக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் வேண்டுகோள் வைத்து போராடி வருகின்றனர்.
அவர்கள் போராடுகிறார்கள் என்பதற்காக இதை உடனே ஏற்கவும் வேண்டாம், நிராகரிக்கவும் வேண்டாம்!
இந்த கோரிக்கையில் உள்ள நியாயங்களை சீர்ததூக்கி பார்ப்போம்!
பெரும்பாலான சாதாரண மக்களுக்கு கோயில் தான் ஆறுதல் பெறும் ஒரே இடம். கோயில்கள் என்பவை மனபாரத்தை இறக்கி வைக்கும் இடம். கோயில்கள் என்பவை தனிமைப்பட்ட மனிதர்களுக்கு ’’நான் தனி மனிதன் அல்ல, எனக்கு இறைவன் துணை ’’ என நம்பிக்கை தரும் இடம்!
கோயில்கள் மட்டும் இல்லாமல் போனால் பல குடும்பங்களில் அமைதி குலைந்துவிடும். குடும்பத்திலோ,அலுவலகத்திலோ ஒருவருக்கு அவமானங்கள் துன்பங்கள் ஏற்படும் போது, அவர் ஆண்டவனைத் தான் அடைக்கலம் தேடி வருகிறார். மன ஆறுதல் கிடைக்கிறது!
கோவில்கள் இல்லை என்றால் நிறையே பேர் மன நோயாளிகளாகிவிடுவார்கள்! பல கோவில்களின் பிரகாரங்களில் சில நிமிட நேரம் உட்கார்ந்து எழுந்தாலே போதும். மனம் பாரங்கள் குறைந்து லேசாகிவிடும். இவை எல்லாம் கோடனுகோடி மக்களின் அனுபவம்!
கோயில்கள் என்பவை சமூகக் கூடலுக்கான ஒரு களம். சமூக கூடல்களில் இருந்து மனிதனை பிரித்து வைத்தால் அது உளவியல் சிக்கலாக மாறும்! அதுவும் பெரும்பாலானவர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில் செல்வது பாரம்பரியமான பழக்கங்களில் ஒன்றாகும். அது தைபடும் போது அந்த இழப்பை எதனைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது.
தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்பு வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகள் உள்ளிட்ட வாரத்தின் அனைத்து நாட்களும் கோயில்கள் திறக்கப்பட்டு இருந்தன! ஆனால், தேர்தலுக்கு பிறகு கொரோனா பரவல் சற்று அதிகரித்ததால் கோவில்கள் பூட்டப்பட்டன. பிறகு திறக்கப்பட்ட போது வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் திறக்கக் கூடாது என சொல்லப்பட்டுவிட்டது.
இது மத்திய அரசு சொல்லிய அறிவுறுத்தல்படி தான் நடைபெறுகிறது என தமிழக அரசு சொல்கிறது! அப்படியானால், தமிழக பாஜக தலைவர்கள் தங்கள் டெல்லி தலைமையை தொடர்பு கொண்டு மாநில அரசுகள் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க மத்திய அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லச் சொல்லலாமே! அதைவிட்டு, இங்கே கோவில்கள் முன்னால் போராட்டம் நடத்தி இதை அரசியல் ஆக்குவானேன்.
மத்தியில் பாஜக கட்சி தான் ஆட்சி செய்கிறது! அந்த ஆட்சியாளர்களாவது தங்கள் அறிவுறுத்தல்படி தான் கோயில்கள் மூடப்பட்டு உள்ளன! ஆகவே, தங்கள் கட்சிக்காரர்கள் தேவை இல்லாமல் நெருக்கடி தரக்கூடாது என சொல்லலாமே! இது என்ன நாடகம் என்றே தெரியவில்லை. அல்லது மாநில அரசாவது மத்திய ஆட்சியாளர்களிடம் உங்கள் கட்சிக்கார்கள் போராடுகிறார்கள். ஒன்று, அவர்களை கண்டித்து வையுங்கள். அல்லது கோயில் திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம்! எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லிவிட வேண்டும்.
வருகிற 15 ஆம் தேதி வெள்ளிக் கிழமை விஜயதசமி! அன்று கோயில்களை திறக்க செய்ய வேண்டும் என வழக்கு வேறு போடப்பட்டு உள்ளது. ஏற்கனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயில்களை திறக்க சொல்லி வழக்கு போடப்பட்டது. ஒரு வேளை கோர்டில் தமிழக அரசு கோயில்களை திறக்கும் முடிவை அறிவித்தால் கூட நல்லதே!
தமிழக அரசின் கைகளை கட்டி போட்டு இருப்பது யார் என தெரியவில்லை.
நமக்கான சந்தேகம் எல்லாம் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது தான்! இவர் தான் அரசுக்கு ஆலோசனைகள் பலவற்றைக் கூறி நிர்பந்தித்து இந்த அரசை கோயில்கள் திறப்பதற்கு தடை செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இவர் தான் அமைச்சரைக் காட்டிலும் பவட்புல்லான ஆளாக வளைய வருகிறார். நாள் தவறாமல் மீடியாவில் வரும் ஒரே அதிகாரி இவர் தான்! ஒன்பது ஆண்டுகளாக யார் ஆட்சி செய்தாலும் சுகாதாரத் துறையில் இவர் தான் முடிசூடா மன்னனாக திகழ்கிறார்!
Also read
இவர் சொல்வதை அப்படியே இந்த ஆட்சியாளர்கள் ஏற்று செயல்படுகின்றனர்! ஊதிய உயர்வு கேட்டு போராடும் மருத்துவர்களுக்கு அதை வழங்காமல் தடுத்து நிறுத்தி இருப்பதற்கும் இவரை தான் காரணமாக சொல்கிறார்கள்!
தமிழக அரசு மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு நடைமுறை சாத்தியங்களுடன் கோயில் திறப்பு தொடர்பாக ஒரு முடிவுக்கு விரைந்து வருவது நலமாகும். திர்ப்பதி மற்றும் சபரி மலை அய்யப்பன் கோயில்களையே திறந்து உரிய பாதுகாப்புடன் செயல்படும் போது தமிழக கோயில்களும் அதற்கான விதிமுறைகளுடன் திறக்கலாமே! பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், சந்தைகள் யாவும் திறந்து விடப்பட்ட சூழலில் கோயில்களுக்கு மட்டும் தடை போடுவதை தவிர்த்தால் நலமே!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply