அரும்பெரும் சோசலிச, காந்தியத் தலைவர் ராம்மனோகர் லோகியா!

-சாவித்திரி கண்ணன்

காந்திக்கு நிகரான மாபெரும் இந்தியத் தலைவராக – அதிகார அரசியலில் இருந்து விலகி, மிகத் துணிச்சலுடன் மக்கள் நலன் சார்ந்த தொலை நோக்கு சித்தாந்தத்துடன் இயங்கிய – ஒருவர் உண்டென்றால், அது ராம் மனோகர் லோகியா தான்!

காந்தியச் சிந்தனைகளை உள்வாங்கி, மண்ணுக்கேற்ற சோசலிச பார்வையோடு திகழந்தவர் சமரசமற்ற மாபெரும் தலைவர் ராம் மனோகர் லோகியா! பாசாங்குத்தனத்தையே பண்பாடாகக் கொண்ட இந்திய சமூகத்தில் தன்னை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி உண்மையின் ஒளியாய் ஜொலித்தவர் லோகியா!

தனது பத்தாம் வயதிலேயே பொது வாழ்க்கைக்கு வந்த தலைவர் அவர்! எதிலும் சுயம்புவாக சிந்திப்பவர்! காந்தியை குருவாகக் கொண்டு மிக நெருக்கமாக இருந்த போதிலும் பல விஷயங்களில் அவரிடமிருந்து தான் மாறுபடுவதை நேர்படப் பேசியவர்! லோகியா ஒரு பிறவி மேதை! பல்மொழி வல்லுனர்! களப் போராளி! கொடுமைகளுக்கு அஞ்சாத மாவீரர்!

அஞ்சாமைக்கு இலக்கணமாக இந்திய வரலாற்றில் ஒரு தலைவரைச் சொல்ல முடியுமானால், அது ராம்மனோகர் லோகியா தான்! பயந்து, நயந்தும் பேசும் பாசாங்குத்தனம் அவரிடம் அறவே கிடையாது. எதுவும் பளிச்சென்று பேசிவிடுவார்!

உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூரில், காந்தியப் பற்றாளர் ஹிராலாலுக்கும் ஆசிரியை சாந்தாவுக்கும், 1910-ஆம் ஆண்டு  லோகியா பிறந்தார். சமண  சமூகத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை பம்பாயிலும், இண்டர்மீடியட் படிப்பை காசி ஹிந்து பல்கலைக்கழகத்திலும் முடித்து, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் படித்தார். ஜெர்மன் மொழியைப் பயின்று, ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பைப் படித்தார். அங்கு தான் காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றி ஆய்வு செய்து டாக்டரேட் பட்டம் பெற்றார்! 1933 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்ததும், காங்கிரஸில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். காங்கிரசுக்கு உள்ளேயே ஒரு சோசலிச அணியை கட்டமைத்தார்!

சுதந்திரப் போராட்டத்தில் கடும் சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர் லோகியா! படு கொடூரமான சிறை சித்திரவதைகள் எதுவுமே அவரது சித்த உறுதிப் பாட்டை சிறிது கூட சிதைக்கவில்லை! சிறைக் கொடுமைகளின் போது அவர் நடந்து கொண்ட விதத்தை கேள்விப்படும் யாருமே வியக்காமல் இருக்கமுடியாது!

அதனால் தான் லோகியா சிறைபட்ட போது மிகுந்த வருத்ததுடன் காந்தி சொன்னார்; ” உண்மை, எளிமை, துணிவு இவற்றில் லோகியாவிற்கு இணையாக இன்னொரு மனிதனை நான் பார்த்ததில்லை’’ என்றார்!

ராம் மனோகர் லோகியா ஒரு சமத்துவ நோக்கம் கொண்ட சோசலிச காந்தியவாதி. மகாத்மா காந்தி உயிரோடு இருந்த வரை காங்கிரசில் இருந்தார். 1948 ல் அங்கு நடந்த அதிகார போட்டிகளில் இருந்து விலகி காந்திய கோட்பாட்டுகளுடன், சோசலிச சித்தாந்தப்படியான தன் அரசியல் பணிகளை பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் மூலம் செயல்படுத்தினார்!

லோகியா அதிகாரத்தை துச்சமாக மதித்தவராவார்! அன்றைய திருவிதாங்கூரில் பட்டம் தாணுப்பிள்ளையின் தலைமையிலான பிரஜா சோசலிச கட்சியின் அரசு ஆட்சியில் இருந்தது! அப்போது 1954ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் மொழிவாரிமாநிலம் கோரிக்கைக்காக  நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்.!

அப்பொழுது அலகாபாத் சிறையில் இருந்த லோகியா, செய்தியைக் கேட்டவுடனேயே, ”இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பட்டம் தாணுப்பிள்ளையின் அரசு கலைக்கப்பட வேண்டும்’’ என்று அறிவித்தார். இந்தியாவில் ஒரு சோசலிஸ்ட் கட்சி தேர்தலில் வெற்று பெற்று ஆட்சியில் அமர்வது அபூர்வத்திலும் அபூர்வமாக பார்க்கப்பட்ட காலம் அது! ஆனால், லோகியா ”இப்போது நாம் பதவி விலகவில்லை என்றால், அரச வன்முறைக்கு எதிராகப் பேசும் தார்மீக உரிமையை நாம் இழந்துவிடுவோம். ஆகவே, பதவி விலக வேண்டும்’’ என்றார். ஆனால், ”பதவியை துறக்க முடியாது’’ என்று அவர் உருவாக்கிய சொந்தக் கட்சியே முடிவெடுத்தபோது, லோகியா அவர்கள் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியிலிருந்து தன்னையே விலக்கிக் கொண்டார்!

சுயநலமிக்க உள்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டிய கடமையை இடைவிடாது செயல்படுத்தியவர் ராம் மனோகர் லோகியா. ”அரசாங்க சட்டதிட்டங்களால் நாடு முன்னேறாது, மக்கள் பங்களிப்பு தேவை. அதிகாரம் அரசாங்கத்திடம் குவியக் கூடாது” என்றார். நேருவுடன் விடுதலை போராட்டத்தில் நெருங்கி செயல்பட்டவர் என்றாலும், நேருவின் ஆட்சி காலத்தில் கடும் விமர்சனங்களை வைத்து போராடினார்!

”நாட்டின் முன்னேற்றத்தில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம்” என்று வலுவாக பேசி வந்தார். ”மக்களே கால்வாய்களையும் சாலைகளையும் அமைக்க வேண்டும்” என்று கூறிய ராம், ‘பணியாரி’ நதியின் குறுக்கே, மக்களை ஒருங்கிணைத்து அணைக்கட்டு ஒன்றை மக்களின் பங்களிப்புடன் கட்டினார். அது இன்றும் ‘லோகியா சாகர் அணை’ என்ற பெயருடன் திகழ்கிறது!

”இன்றைய நவீன நாகரிகத்தின் முக்கிய விளைவானது, தனிமனிதர்களை பொது நலன் சார்ந்து நல்ல வழியில் சிந்திக்க முடியாமல் செய்துவிட்டது. நவீன நாகரீகம் தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால், மனிதப் பண்புகள்  அழிந்துபோவது நிச்சயம்.’’என்றார்! அவர் சொன்னது தான் தற்போது நிகழ்ந்துள்ளது!

லோகியா தன் வாழ்நாள் முழுமையும் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக சமரசமின்றி போராடினார்! சாதி அநீதிகளுக்கு எதிராக, சாதியப் பாகுபாட்டிற்கு எதிரான அவரது முன்னெடுப்புகள் அந்த நாட்களில் கடும் அதிர்வலைகளை உருவாக்கின! ‘’வர்க்கம் என்பது இஷ்டப்படி உயரவோ, தாழவோ கூடியதாகும்! ஆனால், சாதி என்பது  இஷ்டப்படி உயரவோ, தாழவோ முடியாததாகும்! ஒருவனின் வருமானமும், அந்தஸ்த்தும் உயர்வதன் மூலம், அவன் உயர்ந்த சாதிக்காரனாக அங்கீகரிக்கப்பட்டுவிடுவதில்லை,’’ என்றார் லோகியா.

லோகியாவின் தாக்கத்தால் அரசியலுக்கு வந்தவர்கள் தான் வி.பி.சிங், முலாயம் சிங்,லாலுபிரசாத் யாதவ் போன்ற எண்ணற்ற தலைவர்கள்! வி.பி.சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதில் லோகியாவின் தாக்கம் அதிகமாக இருந்தது!

எதிலும் சுயம்புவாக சிந்தித்தவர் லோகியா! ”விஞ்ஞானரீதியான வளர்ச்சி போக்குகள் நல்லதா, கெட்டதா என்பது, அதைப் பயன்படுத்தும் விதத்திலேயே இருக்கிறது,” என்று தெளிவாக சொன்னவர் ராம் மனோகர் லோகியா! ”அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள், மனித மனங்களை மாற்றி தனி மனிதர்களை மிகுந்த சுயநலமிகளாக வளர்த்தெடுக்கிறது” என்றார்! இது குறித்த  பற்றிய விழிப்பு உணர்வே இல்லாமல் சமூகம் உழல்வதையும் அவர் அன்றே சுட்டிக் காட்டினார்!

”நமது நாட்டிற்கு சீதைகளைக் காட்டிலும் அநீதிகளுக்கு எதிராக தார்மீக கோபம் கொள்ளும் திரெளபதிகளே தேவை’’ என தைரியமாக பேசியவர்! ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தியதோடு, தன் வாழ்விலும் அதை செயல்படுத்தினார்!

”ஐரோப்பிய அறிவியலும், தொழில் நுட்பமும்,விவசாயமும் எல்லா நாட்டிற்கும் பொருந்தாது” என்று லோகியா உறுதிபட கூறியிருக்கிறார். தற்போது தாரளமயம், உலகமயம் என்ற கண்ணியில் மாட்டிக் கொண்டு வளரும் நாடுகள் அழிவதை பார்க்கும் போது, இதை தடுக்க லோகியா இல்லாத வெற்றிடம் நம்மை உலுக்குகிறது.

”தொழில் நுட்ப உதவிகள் என்பவை பரஸ்பரம் கொடுப்பதும் பெறுவதுமாக இல்லாமல், வளர்ந்த நாடுகள் தங்களின் தொழில் நுட்பங்களை வளரும் நாடுகள் மீது வலிந்து திணிக்கின்றன. பேராசை கொண்ட வியாபார நோக்கத்திலேயே இவை அமைகின்றன! இதனால் கெடு விளைவுகளே உருவாகின்றன’’ என்றார்! இன்றைக்கும் இது எவ்வளவு பொருந்துகிறது! உண்மையிலேயே லோகியா ஒரு தீர்க்கதரிசி!

இன்றைய தினம் ராம் மனோகர் லோகியாவின் நினைவு நாள் !

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time