உள்ளாட்சி தேர்தல், சாட்டை துரைமுருகன், ஏர் இந்தியா! கேள்வி-பதில்

- சாவித்திரி கண்ணன்

எஸ்.லஷ்மி, காஞ்சிபுரம்

உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளதே?

வாழ்த்துகள்! ஆளும் கட்சியின் விஸ்வரூப வெற்றி, ஜனநாயகத்தின் வீழ்ச்சியாக மாற வாய்ப்புண்டு!

ஆர்.நாராயணன், ஆத்தூர், சேலம்

மனித வெடிகுண்டு தாக்குதல் என்றெல்லாம் வன்முறையைத் தூண்டும் வகையில் சாட்டை துரைமுருகன் சீமானை வைத்துக் கொண்டே பேசியிருப்பது பற்றி?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சட்டம், ஒழுங்கிற்கு மொத்த குத்தகையாளராக காட்டிக் கொள்ளும் தமிழக பாஜக, இதில் அமைதியாக ரசிப்பதை கவனியுங்கள்!

மு.பாண்டியன், அனுப்பானாடி, மதுரை

திமுகவின் சீனியர் தலைவர் துரைமுருகன் குறித்து?

அவர் சீனியர் தலைவர் மட்டுமல்ல, நகைச்சுவையை தெறிக்கவிடும் சிரிப்பு தலவைவரும் கூட!

எம்.ஜி.ஆரிடம் காலேஜ் பீஸ்!

கலைஞருக்கோ டைம் பாஸ்!

அரசியலிலோ காமெடி பீஸ்!

ஸ்டாலினுக்கோ அனுகூல சத்ரு!

எம். ஸ்ரீதர், மருதமலை, கோவை

பாஜகவின் இரும்பு மனிதராக அடையாளப்படுத்தப்படும் அமித்ஷா பற்றி?

அதிகாரமெனும் காற்று ஊதி வானில் பறக்கவிடப்பட்டுள்ள ராட்ஸச பலூன்!

ஒரு சின்னக் குத்தூசி போதுமே பலூனை பஞ்சராக்க!

கே.ரங்கநாயகி, மயிலாப்பூர்,சென்னை

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இவர்களை பற்றி?

எம்.எஸ்.வி ஒரு இசைக் குழந்தை! இசையைத் தவிர வேறொன்றும் அறியாத அப்பாவி!

இளையராஜா இசையை அதிகாரமாக்கிக் கொண்ட அகங்கார ஆளுமை!

ஏ.ஆர்.ரகுமான் இசையின் சர்வதேச சந்தையை சாத்தியப்படுத்திக் கொண்ட சாது!

எஸ்.பாலாஜி, மூசாபேட், ஹைதராபாத்

ஜம்மு காஷ்மீரின் தற்போதைய தீவிரவாத தாக்குதல்கள் பற்றி..?

பாஜக அரசு அங்கே கடந்த சில ஆண்டுகளாக எதை விதைத்ததோ, அதை அறுவடை செய்து கொண்டிருக்கிறது.

எம்.கிருஷ்ணன், சிவாஜி நகர், பெங்களுர்

ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமை தாங்காமல் டாடா நிறுவனத்திற்கு விற்கப்பட்டுவிட்டதே?

1953 தொடங்கி கால் நூற்றாண்டு காலம் லாபகரமாக – காமதேனுவாக – இருந்த பொதுத் துறை நிறுவனம் தான் ஏர் இந்தியா! பிறகு வந்த ஆட்சித் தலைமைகள் அலங்கோலப்படுத்தி கடன்கார நிறுவன மாக்கிவிட்டனர். பொதுத் துறை நிறுவனங்களை பொறுப்பாக கையாளத் தெரியாத அரசியல் ஆளுமைகள் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் இதைத் தவிர வேறென்ன நடக்கும்?

குறிப்பு ;

கேள்விகளை அனுப்ப விருப்பமுள்ளவர்கள்  [email protected] க்கு அனுப்பவும்!

அல்லது, கீழ் கண்ட இணைப்பை சொடுக்கி, உங்கள் கேள்வியை பதிவு செய்யலாம்!

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time