உள்ளாட்சியின் ஓங்கார வெற்றி! அனுகூலமும், ஆபத்தும்!

-சாவித்திரி கண்ணன்

உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி மட்டுமல்ல, பிரமிக்கதக்க வெற்றியும் பெற்றுள்ளது! இந்த வெற்றி எப்படி சாத்தியமானது..? இந்த மிருகபல வெற்றி நியாயமானதா? இந்த வெற்றியில் அனேக அனுகூலங்கள் இருந்தாலும், சில ஆபத்துகளும் புதைந்துள்ளன!

மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

மொத்தமாக உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன!

இதில் முக்கிய பதவிகளான மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரண்டிலும் திமுக அபார வெற்றியை ஈட்டியுள்ளது! சில மாவட்டங்களில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியை கூட பெறவில்லை. தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் திமுக மட்டுமே மாவட்ட கவுன்சிலர் பதவிகளை கைபற்றியுள்ளது! காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் திமுகவைத் தவிர எந்த ஒரு எதிர்கட்சியும் மாவட்ட கவுன்சிலர் பொறுப்புக்கு வரமுடியவில்லை.

உள்ளாட்சி ஒன்றிய கவுன்சிலர் பொறுப்புகளில் திமுக 986 இடங்களிலும், அதிமுக 199 இடங்களிலும், மற்றவை 139 இடங்களிலும் வென்றுள்ளன!

9 மாவட்டங்களிலும் உள்ள ஒன்றியங்களில் கிட்டதட்ட அனைத்து ஒன்றியங்களையுமே  தி.மு.க கைப்பற்றி உள்ளதாகத் தான் சொல்ல வேண்டும்! ஒன்றியங்களை பொருத்தவரை அனைத்து இடங்களிலும் தி.மு.க. 90 சதவீதத்துக்கு மேல் வெற்றியை ஈட்டியுள்ளது!

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் தி.மு.க. கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க. 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மற்ற கட்சிகளின் நிலை இன்னும் பரிதாபம்! சுயேட்சைகள் ஒரளவு வெற்றி பெற்றுள்ளனர்!

நடைபெற்ற மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்களில் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவீத இடங்களை தி.மு.க கைப்பற்றி உள்ளதாக தெரிய வருகிறது!

அதிமுகவின் அவலமான தோல்வி

சட்டசபை தேர்தலில் கவுரவமாக 66 இடங்களை பெற்ற அதிமுக இந்த தேர்தலில் படு தோல்வியை சந்தித்ததற்கு அதன் உள்கட்சி பூசல்களும், பாஜக ஆதரவு நிலையும் முக்கிய காரணம்! சில மாவட்டங்களில் அதிமுக முற்றாக துடைத்து எறியப்பட்டுள்ளது ஒரு வரலாறு காணாத தோல்வியாகும்! எடப்பாடியும், பன்னீரும் ஒன்றுபட முடியாததின் விளைவை இந்த உள்ளாட்சி தேர்தல் உணர்த்தியுள்ளது! ஆட்சியில் இருந்த போது பணத்தை அள்ளி இறைத்த பணமுதலைகள் இப்போது கையை இறுக்கமாக வைத்துக் கொண்டன! கட்சி அணிகளுக்கு கட்டளையிட்டு வேலை வாங்கக் கூடிய வலுவான தலைமை தற்போது இல்லை. இந்த தோல்வி அந்த கட்சிக்குள் பலத்த விளைவுகளை உருவாக்கும்!

உள்ளாட்சிகளில் திமுகவின் பலமான அடித்தளம்!

ஆட்சி அதிகார பலத்தில் 2019 தேர்தலில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி அன்றைக்கு சுமார் 40 சதகித இடங்களை பெற்ற போதிலும், திமுக கூட்டணி அன்றே 60 சதவிகித இடங்களை பெற்றது என்பது கவனத்திற்கு உரியது! 2011 உள்ளாட்சி தேர்தலில் கூட தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாகக் கூட வரமுடியாத திமுக அன்றைக்கு மாநகராட்சிகளை தவிர்த்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 40 சதவிகித இடங்களை பெற்றது! ஆகவே, திமுக எந்தக் காலத்திலும் அடித்தள அளவில் அறுபடாத ஒரு வலுவான இயக்கமாகவே இருந்துள்ளது. இதை எம்.ஜி.ஆர் ஆட்சி செய்யும் போதும் நிரூபித்துள்ளது.

திமுக வெற்றிக்கான காரணங்கள்;

ஊரக பகுதிகளில் வாழும் ஏழை பெண்களுக்கு இலவச பஸ் சேவை கிடைத்தது, பெண்களின் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷனில் ரூபாய் 4,000 தரப்பட்டது. இது போன்ற இலவசங்கள் அதன் செல்வாக்கை கூட்டியுள்ளன! இந்த ஆட்சியைப் பற்றி பொதுவாக நல்ல அபிப்பிராயமே மக்களிடம் உருவாகியுள்ளது.ஆளும் கட்சிக்கு வாக்களிப்பது நமக்கு கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் எனவும் மக்கள் கருதுகிறார்கள்!

அது மட்டுமின்றி கடந்த ஐந்து மாதங்களாக உள்ளாட்சி தேர்தலை கவனத்தில் கொண்டு திமுக தீவிரமாக செயல்பட்டது. அதிலும் குறிப்பாக அதிமுக,பாமக,அமமுக..ஆகிய கட்சிகளில் இருந்து அணியணியாக ஆட்கள் சேர்க்கப்பட்டனர்! உள்ளாட்சிகளில் சீட் வாங்கி வெற்றி பெறுவதற்காகவே கூட பலர் வந்தனர்!

பரிதாபத்துக்குரிய பாஜக!

உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக அடைந்துள்ள படுதோல்வியானது அந்த கட்சிக்கு தமிழகத்தில் சரியான அடித்தளமில்லை என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்தி விட்டது! மீண்டும்,மீண்டும் துவேஷ அரசியல், மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கு மாற்றாக மதம் சார்ந்த நோக்கம், அதிகார பலத்தை மட்டுமே நம்பும் மன நிலை அந்தக் கட்சியை மேன்மேலும் மக்களிடமிருந்து அப்புறப்படுத்தி வருகிறது!

கப்சிப்பான கமலஹாசன்

சட்டப் பேரவை தேர்தலில் தன்னை முதலமைச்சராக முன் நிறுத்தி பிரச்சாரம் செய்த கமலஹாசனின் மக்கள் நீதி மையம் இந்த உள்ளாட்சி தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை! அடித்தளத்தில் கட்சி பலமாக இல்லாததால் போட்டியிட ஆள் கிடைக்குமா என்பதால் மக்கள் நீதி மையம் போட்டியிடுமா என்பது கூட உறுதி இல்லாமல் தான் இருந்தது! கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்ததால் கடைசி நாள் தான் ஒரு சில இடங்களில் சில நிர்வாகிகள் போட்டியிட முடிந்தது. அப்படி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்!

விருப்பத்திற்குரியவராக மாறிய விஜய்!


ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர்  169 இடங்களில்  சுயேட்சையாக போட்டியிட்டனர் என்பதும், அதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான வெற்றியை பெற்றுள்ளனர் என்பதும் புதிய இளைஞர்களின் வருமையை மக்கள் விரும்புவதைக் காட்டுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களே தோல்வியை தழுவியுள்ள நிலையில், அரசியலில் வெளிப்படையாக ஈடுபடாத நடிகர் விஜயின் ரசிகர்களின் வெற்றி மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது! அதே சமயம் இந்த வெற்றியை அவர்கள் எவ்வாறு கையாண்டு மக்கள் நம்பிக்கையை பெறுகிறார்கள் என பார்க்க வேண்டும்!

பாட்டாளி மக்கள் கட்சி படு தோல்வி!

2011, 2019 உள்ளாட்சி தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டி நான்காது பெரிய கட்சியாக அறியப்பட்டது! இன்று பெரும் சரிவை சந்தித்துள்ளது. வன்னியர்களின் வாக்கு வங்கியில் கணிசமானவை திமுக பக்கம் திரும்பியுள்ளது மட்டுமல்ல, அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையும் குறைந்து வருகிறது.

சீமான் என்ற ஒற்றை மனிதரின் அதிரடி பேச்சுகளால் மட்டுமே நாம் தமிழர் கட்சி மக்கள் நம்பிக்கையை பெற முடியாது. அடித்தள அணிகளிடம் அன்பு, அரவணைப்பு இல்லாமலும், அவர்களின் உழைப்பை அங்கீகரிக்க மறுத்தும் இருக்கும் ஒரு தலைமையால் உள்ளாட்சி தேர்தலில் எப்படி வெற்றி பெறும்? போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் அந்த கட்சி டெபாசிட் இழந்துள்ளது அதன் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது!

கிராம பஞ்சாயத்துகள்;

கிராம பஞ்சாயத்து தலைவர் பொறுப்புக்கோ, உறுப்பினர் பொறுப்புக்கோ கட்சி அடையாளம் கூடாது! ஆகவே, அதில் கணிசமாக கட்சி சார்பில்லாதவர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது! அது சம்பந்தமான முடிவுகள் இனிமேல் தான் தெளிவாக தெரிய வரும்!

சில ஏமாற்றங்கள்;

இந்த தேர்தலில் பணபலம் ஆதிக்கம் செலுத்தியது மிகுந்த வருத்தமளித்தது. பணம் கொடுப்பவர்களிடம் நேர்மையான நிர்வாகத்தை தர முடியாது என்ற அடிப்படை புரிதல் மக்களுக்கு வரவில்லையா? அல்லது யார் வந்தாலும் நேர்மையான நிர்வாகம் இருக்க போவதில்லை. ஆகவே,கிடைத்த வரை லாபம் என நினைக்கத் தொடங்கிவிட்டார்களா தெரியவில்லை. இதையெல்லாம் மீறி சேவை நோக்கத்துடன் சில பகுதிகளில் இளஞர்கள் போட்டியிட்டனர். அவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றனர் என்பது இனிதான் தெரிய வரும்!

அசூர வெற்றிக்கு பின்புள்ள ஆபத்துக்கள்!

ஆளும் கட்சியான திமுக வெற்றி பெற்றுள்ளது ஆச்சரியமில்லை. ஐந்து மாத ஸ்டாலின் ஆட்சித் தலைமை மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை துளிர்ந்துள்ளதை இது காட்டுகிறது. எதிர்கட்சிகளை கிட்டதட்ட துடைத்தெறியக் கூடிய வெற்றியை ஆளும்கட்சி பெற்றுள்ளது. ஆனால், கிடைத்துள்ள அசூரபல வெற்றி பதவியில் உள்ளவர்களுக்கு அதிகார மயக்கத்தை ஏற்படுத்த வல்லது! கேள்வி கேட்க கூட எதிர்கட்சி இல்லாத இடங்களில் மனசாட்சி தான் துணை நிற்க வேண்டும். மமதை தலைகேறினால் ஆபத்தாகிவிடும்!

இந்த வெற்றி ஒரு வகையில் ஆட்சியாளர்களுக்கு அரசின் திட்டங்களை அடித்தளம் வரை கொண்டு சேர்ப்பதற்கு உவப்பாக இருக்கும்! அதே சமயம் இது போன்ற மிருக பல வெற்றி என்பது ஜனநாயகத்திற்கு பெரும்பாலும் ஆபத்தாகவே முடிந்துள்ளது என்பதை கவனப்படுத்த வேண்டியது நம் கடமையாகிறது! ஜனநாயகத்தில் எதிர்கட்சிகளுக்கான ஒரு இடம் என்பது ஆரோக்கியமாக அமைவது தான் ஆட்சியாளர்களை வரம்பு மீறாமல் காப்பாற்றும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time