நடிகர் ஸ்ரீகாந்த்திடம் ஏற்பட்ட ஜெயகாந்தனின் தாக்கங்கள்!

- சாவித்திரி கண்ணன்

நடிகன் என்பவன் சுய சிந்தனையாளனாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவன் தனிமைப்பட்டு போவான் என்பதற்கு நடிகர் ஸ்ரீகாந்த் வாழ்க்கை ஒரு நிதர்சனமான உண்மையாகும்! எழுத்தாளர் ஜெயகாந்தனோடு அவருக்கு இருந்த ஆழமான பிணைப்பு அவரது வாழ்க்கையில் பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது!

ஸ்ரீகாந்த் ஒரு தீவிர இலக்கிய வாசகர்! ஜெயகாந்தனின் மிக நெருங்கிய நண்பர்! எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆழ்வார்ப்பேட்டை சபையில் ஸ்ரீகாந்த்தை அந்த நாட்களில் அடிக்கடி பார்க்கலாம்! ஜெயகாந்தனோடு தோழமை பாராட்டுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல, சற்று கரடு முரடானவர் ஜேகே! எந்த நேரம் எப்படி ரியாக்ட் பண்ணுவார் என்பதை யாராலும் கணிக்க முடியாது! பழகியவர்களிடம் சில நேரம் குழந்தையாகவும் இருப்பார்!

ஜெயகாந்தனின் பழக்கம் ஸ்ரீகாந்திடம் கணிசமான தாக்கத்தை உருவாக்கியதாகவே நினைக்கிறேன்! ஜேகேவின் மேனரிசங்கள் பலவும் ஸ்ரீகாந்திடமும் தொற்றிக் கொண்டதை ஜேகேவின் சபைக்கு அவ்வப்போது செல்லக் கூடிய பலரும் அறிவார்கள். அவரது பேச்சு, சிந்தனை, நடவடிக்கைகள் அனைத்திலும் ஜேகேவின் தாக்கம் ஆழமாக இருந்தது. இது ஒன்றும் வியப்பல்ல! ஜேகேவிடம் பழகியவர்கள் மட்டுமல்ல, ஜேகேவை நேரில் பார்த்திராமல் படித்த வாசகர்களிடமே ஜேகேவின் ஆழமான தாக்கங்கள் ஏற்பட்ட காலகட்டம் அது!

ஸ்ரீகாந்த் புகழ்பெற்று விளங்கிய 1970 களின் மத்தியில் சென்னையில் உள்ள பல சலூன் கடைகளில்,’ ஸ்ரீகாந்த் ஹேர்ஸ்டைல் இங்கு செய்யப்படும்’ என விளம்பரம் செய்திருந்ததை நான் பார்த்துள்ளேன். உண்மையில் அந்த ஹேர்ஸ்டைல் ஜேகேவின் தாக்கத்தில் ஸ்ரீகாந்த் வைத்துக் கொண்டது தான்! ஸ்ரீகாந்திடம் எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை. நான்கைந்து முறைகள் அவரோடு பேசி இருக்கிறேன்! ஜெயகாந்தனுக்கு அடுத்தபடியாக ஜெயமோகனை ஒரு முறை சிலாகித்து என்னிடம் விரிவாகப் பேசியுள்ளார்!

ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலும் அவரை அடிக்கடி பார்ப்பேன்! கர்ம சிரத்தையுடன் அந்த ரோட்டோர கோவிலில் ஆஞ்சநேயரை மூன்று சுற்று சுற்றி வந்து வணங்கிச் செல்வார்!

அவர் நாடக உலகில் மிகப் பெரிய ஹீரோவாக ஒரு காலகட்டத்தில் திகழ்ந்தார்! அவர் அமெரிக்க தூதரகத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் திருவல்லிக்கேணியில் நெருக்கடி மிகுந்த தோப்பு தெருவில் ஒரு சிறு அறையில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி இருந்தார்! அப்போது ஏஜி ஆபிஸில் வேலை பார்த்த கே.பாலச்சந்தரும் நாடக உலகில் நுழைய போராடிக் கொண்டிருந்தார்! ஸ்ரீகாந்த் வேலைக்கு போன பிறகு அந்த ரூமிற்கு கே.பாலச்சந்தர் வந்து உட்கார்ந்து தன் நாடகங்களை உரக்க வாசித்தபடியும் ,சிகரெட் புகைத்தபடியும் எழுதிக் கொண்டிருப்பார்! அதற்காகவே அவரிடம் ஒரு சாவி கொடுத்துவிட்டு செல்வார் ஸ்ரீகாந்த்! இந்த வகையில் கே.பி எழுதும் நாடகங்களுக்கு ஸ்ரீகாந்த் ”இப்படி வச்சுக்க பாலு நல்லாயிருக்குமே..’’ என்று ஆலோசனை சொல்லும் அளவுக்கு நட்பு கொண்டிருந்தார்!

கேபியின் புகழ் பெற்ற ‘மேஜர் சந்திரகாந்த்’ மற்றும் ‘எதிர் நீச்சல்’ ஆகிய நாடகங்கள் ஸ்ரீகாந்த் அறையில் உருவானவையே! பாலச்சந்தரின் சுயசரிதை நூலில் இவற்றை அவரே கூறியுள்ளார்! பாலச்சந்தரின் ஆரம்பகால படங்களில் நடித்த ஸ்ரீகாந்த், பிறகு ஏனோ தொடரவில்லை.

200க்கு மேற்ப்பட்ட படங்களில் நடைத்தவர்! நடிகர்திலகம் சிவாஜிக்கு சவால்விடக் கூடிய வகையில் அவருக்கு தம்பியாக,மகனாக பல வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளார்! அதில் தங்க பதக்கம் மறக்க முடியாதது! அதைப் பார்க்கும் யாருக்குமே ஸ்ரீகாந்த் மீது கடும் கோபம் ஏற்படும்!ராஜபார்ட் ரங்கதுரை,வசந்தமாளிகை இப்படி பல படங்களில் சிவாஜியோடு நடித்துள்ளார்!

ஸ்ரீகாந்த் தியாகராய நகரில் ரூம் எடுத்து தங்கி இருந்த காலகட்டத்தில் அவரது அறையில் அடைக்கலமாகி, அவரது அரவணைப்பில் போஜனம் உள்ளிட்டவற்றை பெற்று சினிமாவில் வாய்ப்பு தேடிய ஜாம்பவான்கள் தான் கவிஞர் வாலியும், நாகேஷும்! பிரதிபலன் பாராது நண்பர்களுக்கு உதவுவதில் ஸ்ரீகாந்த் ஒரு ஜெண்டில்மேன் என சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்!

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் ஸ்ரீகாந்திற்கு நல்ல இமேஜை பெற்றுத் தந்தது. அதே போல ஜேகேவின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்திலும் ஸ்ரீகாந்த் தான் ஹீரோ!

ஜேகேவுடன் நெருக்கமான நட்பு பாராட்ட ஆரம்பித்த பிறகு தான் ஸ்ரீகாந்த்திற்கு பட வாய்ப்புகள் குறைந்தன! அதை பற்றி அவர் பொருட்படுத்தவில்லை! யாரையும் பொருட்படுத்தாத தனித்ததொரு சுயம்புவாக வாழ்வது ஜெயகாந்தனுக்கு மட்டுமே சாத்தியப்பட்டது. அவரைப் பார்த்தோ, உள்வாங்கியோ ஜெயகாந்தனாக வாழ ஆசைப்பட்ட பலர் வாழ்க்கையில் இழப்புகளையே சந்தித்தார்கள்! அந்த வரிசையில் ஸ்ரீகாந்தும் ஒருவர்!

பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த போதிலும், கடைசி வரை அவரது நடிப்பில் உரக்கப் பேசி நடிக்கும் நாடகத்தின் சாயல் இருந்து கொண்டே இருந்தது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time