அண்ணாத்தே, மதுவந்தி, கண்ணதாசன்,வனப் பாதுகாப்பு சட்டம்- கேள்வி,பதில்!

- சாவித்திரி கண்ணன்

ஹமீது, சென்னை

கேள்வி கேட்பது எளிதா? அல்லது பதில் சொல்வது எளிதா?

கேட்கப்படும் கேள்வியையும், சொல்லப்படும் பதிலையும் பொறுத்தது.

*******************************************

சுரேஷ்குமார், கும்பகோணம், தஞ்சாவூர்

பாஜகவுக்கு மாற்றான காங்கிரஸ் தடுமாற்றத்தில் இருக்கும் சூழலில் இடதுசாரிகளாவது தங்கள் பொறுப்பை உணர்ந்தார்களா?

அந்த நம்பிக்கை உங்களுக்காவது இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

கண்ணதாசன் எழுதிய ‘நான் பார்த்த அரசியல்’ போல போல ஒரு புத்தகம் இன்று யாரால் எழுத முடியும்?

கண்ணதாசனே ஒரு திறந்த புத்தகம்! அவரால் மட்டுமே எழுத முடியும் அது போல ஒரு புத்தகம்!

*******************************************

ச.பாண்டியன், குமாரபுரம், கடலூர்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும் என்கிறார்கள்? வருமா? வந்தால் யார் மாற்றப்பட வேண்டும் ?

இப்போதைக்கு வாய்ப்பு குறைவு! அப்படியான சூழல் வரும் போது அவசியம் பட்டியல் தருவேன்!

*******************************************

கே.எஸ்.கவின் மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

அதிமுக மீள தங்கள் யோசனை?

அதிமுக மீள நினைப்பவர்கள் அங்கிருக்கிறார்களா என்ன?

*******************************************

கார்த்திகேயன், சைதாப்பேட்டை, சென்னை

மதுவந்தி வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறித்து?

டெல்லி அதிகார மையத்துடன் மிக செல்வாக்கான குடும்பப் பெண்! ,முன்பு தவறான விசாவால் அமெரிக்க சிகாகோ விமான நிலையத்தில் கைதாகி, மத்திய பாஜக அரசு தலையீட்டால் விடுவிக்கப்பட்டார்!

எல்லா நேரங்களிலும் அதிகாரம் காப்பாற்ற முடியாது!

அறமும் சில நேரங்களில் வெல்லும்!

லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி வாடகை பாக்கி இரண்டு கோடிக்கும், ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம், தராதால் போராடும் பள்ளி ஊழியர்களுக்கும் விரைவில் இது போல நீதி கிடைக்கட்டும்!

*******************************************

எம்.ராமன், அல்சூர், பெங்களுர்

திருவனந்தபுரம் விமான நிலையம் அதானி குழுமம் வசம் சென்றுவிட்டதே?

குஜராத்தின் முந்திராவில் 3,000 கிலோ ஹெராயின் கடத்திவரப்பட்டதற்கு பாஜக அரசு தரும் பரிசோ என்னவோ!

இது கொஞ்சம் முன்னாடியே அதானிவசம் போயிருந்தால், தங்க கடத்தலுக்கு சிறைப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மகிழ்ந்திருப்பார்!

*******************************************

முருகானந்தம், பழங்காநத்தம், மதுரை

இன்றைய உலகின் மிகப் பெரிய ஆபத்து என்ன?

விஸ்வரூபம் எடுத்துள்ள சீனாவின் வியாபார பேராசையும், வெல்ல முடியாத அதன் கடற்படை விஸ்தரிப்பும்!

*******************************************

கே.நாகராஜன், திருவெறும்பூர்,திருச்சி

பெட்ரோல்,ஸ்டீல், நிலக்கரி,கேஸ் விலைகள் ஏறிக் கொண்டே செல்வதில் பாஜக அரசின் ரோல் என்ன?

இவற்றை எல்லாம் இன்றைக்கு கையாளுகின்ற தொழிலதிபர்கள் அம்பானி, அதானி போன்றவர்களின் ஆதாயத்திற்கு அரணாக விளங்குவது.

*******************************************

தீபக், கோபிசெட்டி பாளையம், ஈரோடு

ஒன்றிய அரசின் வனபாதுகாப்பு சட்ட திருத்த வரைவு 2021 எவ்வாறு காடுகளுக்கும், பழங்குடிகளுக்கும் ஆபத்தானது?

வனத்தை பாதுகாப்பற்றதாக்க கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தமே இது!

காடுகளில் புதைந்துள்ள கனிம வளங்களை அள்ள கார்ப்பேட்டுகளுக்கு அனுமதி!

காடுகளுக்குள் ரயில்வே பாதைகள்,சாலைகள் ஏற்படுத்த அனுமதி

இராணுவத் தளவாடங்கள் உள்ளிட்ட பெருந்த் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி

காடுகளை சுற்றுலா தளமாக்க ஊக்குவிப்பு!

ஆட்சியாளர்களின் நுகர்வு வெறி காடுகளை முற்றாக விழுங்கி செரிக்க துடிக்கிறது!

பழங்குடிகளுக்கு மட்டுமல்ல, இனி காட்டு விலங்குகள்,பறவைகள் உள்ளிட்ட எதற்கும் பாதுகாப்பில்லை!

தீவட்டிக் கொள்ளையர்களிடம் ஆட்சியைக் கொடுத்தால்..என்ன நடக்குமோ..அதை எதிர்கொள்ள வேண்டியது தான்!

*******************************************

அண்ணாதுரை, ஆத்தூர், திண்டுக்கல்

அண்ணாத்தே டீசர் பார்த்தீர்களா..? எப்படி?

உங்க கேள்விக்காக பார்க்க வேண்டியதாயிற்று!

70 வயது முதியவரை இன்னும் எவ்வளவு நாள் டூயட் பாடலுக்கு குதிக்கவிடுவார்களோ..?

 

குறிப்பு ;

கேள்வி கேட்க விரும்புபவர்கள் இந்த லிங்கை சொடுக்கி உங்கள் கேள்வியை பதிவு செய்யலாம்!

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time