‘காடுகளை அழித்தால் நாடுகள் இல்லை’ – சண்முகானந்தம் நேர்காணல்

-செழியன்.ஜா

காடுகள், காட்டுயிர்கள், சுற்றுச் சூழல் தொடர்பாக கடந்த 30 வருடங்களாக  அக்கறையுடன் இயங்கியும், இவைசார்ந்த ஒளிப்படத் துறையில் செயலாற்றியும் வருபவர்  சண்முகானந்தம். இவர் தமிழகக் காடுகளில் மாதக்கணக்கில் தங்கி காட்டுயிர்களை படம் எடுத்தவர். அவரிடம் சமகால சூழலியல் பிரச்சினைகள், குறைந்து வரும் அரிய விலங்கினங்கள், அழிக்கப்பட்டு வரும் காடுகள் ஆகியவை தொடர்பாக நிகழ்த்தப்பட்ட உரையாடல்!

சமீபமாக காட்டுவிலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. தற்போது டி-23 புலியை தேடும் விவகாரம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சூழலியலாளரான நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு காட்டுயிர் எந்தக் காரணத்திற்கு மனிதர்கள் அருகில் வருகிறது என்று ஆராய வேண்டும்.  புகழ்பெற்ற வேட்டையாளரான ஜிம் கார்பெட் புலி ’ஆட்கொல்லி’யாக மாறுவதற்கான சில வரையறைகளை கூறியுள்ளார்.

வயது முதிர்வு, வேட்டையாட முடியாத கடுமையான காயம், குட்டிகளுடன் கூடிய பெண் புலி போன்ற காரணங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்துடன் இந்திய சுதந்திரத்திற்குப் பின் காடுகளின் பரப்பளவு பெருமளவில் சுருங்கி, இன்று தீவுகளாகக் காட்சியளிக்கின்றன.  இச்சூழலில் புலிகள் மட்டுமின்றி, பல காட்டுயிர்கள் இன்று காடுகளை விட்டு வெளிப்பகுதிகளில் வரத் தொடங்கி உள்ளன. இதற்கான காரணங்களை அறிவியல் அடிப்படையில் ஆய்விற்குட்படுத்த வேண்டிய தேவையுள்ளது. டி-23 புலியில் இருந்து இத்தகைய ஆய்வை முன்னெடுக்கலாம்.

கடந்த காலங்களில் தொட்டபெட்டாவில் புலியை சுட்டுக் கொன்றதும், திருவண்ணாமலை யானை நிகழ்வும் நமக்கு முன்னுதாரணங்களாக உள்ளன. மரண தண்டனை கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் இக்காலத்தில், இப்புவியில் ஆகக் கடைசியாக பரிணமித்த ‘மனிதன்’ என்ற உயிரி மற்றொரு உயிரியை கொல்வதற்கான எந்த அடிப்படை உரிமையும் இல்லை. மயக்க மருந்து செலுத்தி பிடித்து உயிரியல் பூங்காக்களில் பாதுகாப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். ஒரு உயிரினத்தை சுடுவது என்பது தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு உயிரினம் காட்டை விட்டு வெளியே வருவது, வேட்டையாடிகள் ‘ஆட்கொல்லி’யாக மாறுவதற்கான காரணத்தையும், அதனை தடுப்பதற்கான அறிவியல்ரீதியான காரணங்களையும் கண்டறிய அரசு துறை சார்ந்த அறிவியலாளர்களை உள்ளடக்கிய நிபுணர் குழுவை நியமிக்கலாம். இது தொலைநோக்கு பார்வையில் அமைய வேண்டியது, அவசியமானது.

‘ஊருக்குள் நுழையும் காட்டுயிர்களை மனிதர்கள் கொல்வது’ தான் சரியெனில், காடழிக்கும் மனிதர்களை என்ன செய்வது? என்ற கேள்விக்கான விடை நம்மிடையே இல்லை. காடுகளை அழித்தால் நாடே அழியும்!

காட்டை பாதுகாக்க வேண்டும் என்றால், அங்குள்ள மனிதர்களை வெளியேற்ற வேண்டும். அப்பொழுதான் காடு பாதுகாப்பாக இருக்கும் என்று காட்டில் வாழும் மனிதர்களை வெளியேற்றி கொண்டு இருக்கிறார்கள் இவை சரியான அணுகுமுறையா?

காட்டில் வாழும் பழங்குடி மக்களை வெளியேற்றி காட்டை ஒரு நாளும் பாதுகாக்க முடியாது. காட்டுயிர்களும்-பழங்குடிகளும் ஒன்றி வாழ்ந்து வருவது இன்று நேற்று உருவானது  இல்லை. பல நூற்றாண்டாக இருப்பதுதான்.

பழங்குடி மக்களால்என்றுமே காடுஅழியாது.  காட்டின் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்குத் தெரியும். பழங்குடி மக்களை வெளியேற்றி ‘காட்டைப் பாதுகாப்பது’ என்பது அறிவியல் முறைப்படி சாத்தியம் இல்லை.

சிற்றுயிர்கள் முதல் பேருயிர்களின் வாழ்வியல் செயல்பாடுகளை பழங்குடிகள் நுட்பமாக அறிந்தவர்கள். எந்தளவிற்கு எனில், ஒவ்வொரு உயிரினத்தின் காலடித் தடங்களை வைத்து அவ்வுயிரினத்தைப் பற்றி நுட்பமாக கூறுமளவிற்கு அவர்களது ‘காட்டுயிர் நடைமுறை அறிவு’ உள்ளது. அதனை முறையாக பயன்படுத்த வேண்டியது அவசியமானது.

காட்டை , காட்டுயிர்களை, பழங்குடிகளை பாதுகாக்க  வேண்டும் என்கிறோம். ஆனால், மறைந்த  பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த Project Tiger, Project Elephant போன்ற திட்டங்களைத்தான் இன்றும் நாம் பேசுறோம். அதற்கடுத்து வந்த அரசுகள் எந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள்?  என்ன விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன? 

பதில்: சில பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத்தான் இன்றளவும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். துர்அதிர்ஷ்டவசமானதுதான்.

மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க இயற்கை அறிஞர் மாதவ் காட்கில் தலைமையிலான குழுவொன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்திருந்தது. அந்த அறிக்கையில் உள்ளதை தமிழக நிலப்பரப்பிற்குட்பட்டு செயலாக்கம் செய்வது முதன்மையானதாகும். அதுபோலவே, தமிழகத்திலுள்ள நீர்நிலைகள், பறவைகள் காப்பிடங்கள், காட்டுயிர் காப்பிடங்கள், தேசியப் பூங்காக்களை பாதுகாப்பது என்பதை அறிவியலடிப்படையில் தொலைநோக்கு பார்வையில் செயல்படுத்த வேண்டும்.

அதுபோலவே, அழிவின் விளிம்பிலுள்ள காட்டுயிர்கள், புல்வெளியை வாழிடமாகக் கொண்டிருந்த – தமிழக அளவில் இருந்து இன்று அற்றுப்போன – கானமயில் (Great Indian Bustard), வரகுக்கோழி (Lesser Florican) இவை இரண்டும் வட இந்தியாவில் குறைவான எண்ணிக்கையில் வாழ்கின்றன!

உலகளவில் அதிவேகமான ஓட்டத்தை கொண்ட பாலூட்டியான, இந்தியளவில் அழிந்து போன சிவிங்கிப்புலி (Cheetah) நமது சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வாழ்ந்து அழிந்துபோனது! இது போன்ற காட்டுயிர்களை மறு அறிமுகம் செய்வது காலத்தின் தேவையாக உள்ளது.

அதனை நோக்கி சிந்திப்பதும், செயல்படுத்துவதும்தான் இன்றைய ஆட்சியாளர்களை நினைவுப்படுத்தி அடுத்தடுத்து வரும் இளம் தலைமுறையினரை பேச வைக்கும்.

இந்திராகாந்திக்கு இயற்கை மீது ஆர்வம் இருந்தது. அதனால்தான் பல திட்டங்களை கொண்டு வந்து காட்டுயிரிகளைப் பாதுகாத்தார் என்று சொல்லலாமா?

இயற்கையையும், காட்டுயிர்களையும் ரசிக்காத மனித மனம் இல்லையென்று கூறலாம். இந்திரா காந்தியின் சமகாலத்தில் ‘இந்தியாவின் பறவை மனிதர்’ முனைவர் சாலிம் அலி இருந்தார்.  இருவருக்கும் நல்லதொரு நட்புறவு இருந்தது. இன்று நாம் பார்த்து ரசிக்கும் பல தேசியப் பூங்காக்கள், காட்டுயிர் காப்பிடங்கள் சாலிம் அலியால் பாதுகாக்கப்பட்டவை. இன்றளவும் இவற்றை நாம் பார்த்து ரசிக்கிறோம். அவற்றை மாசுபடுத்தாமல் அடுத்த தலைமுறையிடம் சேர்க்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. ஏனெனில் பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை.

புலி, யானை மட்டுமின்றி பறவைகள், புழு, பூச்சிகளும் அதனதன் இயல்பில் சமநிலையில் செயல்படும்போது மட்டும்தான், மனிதர்களின் இயல்பான வாழ்வு நிலைத்திருக்கும். ஒரு உயிரினத்தின் அழிவு மற்றொரு இடத்தில் கடுமையான எதிர்வினைகளை உருவாக்கவே செய்யும். பல்லுயிர்களை, உயிர்களின் பன்மைத்துவத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

இதனை டோடோ பறவை-கல்வாரி தாவரத்தின் அழிவு மட்டுமின்றி, பயணப்புறா, வெள்ளை காண்டாமிருகம் போன்ற பல்வேறு உயிரினங்களின் அழிவில் இருந்து மனித சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில், கடந்த இரு நூற்றாண்டுகளில் இப்புவி எண்ணிலடங்கா காட்டுயிர்களை இழந்துள்ளது.

இன்றைய மாநில அரசு கூட காட்டின் பரப்பளவை அதிகப்படுத்த பல திட்டங்களை வகுத்துள்ளது. உண்மையில், இன்று காட்டில் ஏராளமான கட்டிடங்கள், தார் சாலைகள், கல்குவாரிகள், மின்சார கோபுரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றையெல்லாம் அகற்றாமல் எப்படி காட்டின் பரப்பளவை அதிகப்படுத்த முடியும்?

நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மரங்களை வெட்டி டன்கணக்காக கடத்தி காட்டுச் சூழல் அழிக்கப்டுவது முடிவுக்கு வர வேண்டும்! காட்டின் பரப்பளவை அதிகரிக்க ஒரு கட்டிடத்தை அல்லது சில கட்டிடங்களை  இடித்தால் மட்டும் முடியாது. காட்டின் பரப்பளவை குறுகிய காலத்தில் அதிகப்படுத்த முடியாது.  5 ஆண்டு,    10 ஆண்டு காலம் நிர்ணயித்து முழு ஆர்வத்தில் செயல்படுத்த வேண்டும். இதற்கு துறைசார் அறிவியலாளர்கள், காட்டுயிர்ப் பாதுகாவலர்கள் (Wildlife Conservationist) சூழலியலாளர்கள் அடங்கிய குழுவை அரசு நியமிக்க வேண்டும். இக்குழு அறிவியலடிப்படையில், தொலைநோக்கு பார்வையில் செயல்படவேண்டும்.

காட்டுயிர் ஒளிப்படக்கலையில் 30 வருடங்களாக இயங்கி வருகிறீர்கள் அந்தத் துறை என்ன மாற்றங்களை மக்களுக்கும், காட்டுயிரிகளுக்கும் ஏற்படுத்தி உள்ளது?

காட்டுயிரிகளைப் பற்றிய விழுப்புணர்வை பள்ளி மாணவர்கள், பொது மக்களுக்கு ஏற்படுத்த காட்டுயிர் ஒளிப்படங்கள் அவசியமானது. சிறுவர்களுக்கு காட்டுயிர்களை ஒளிப் படங்கள் வழியே விளக்கி சொல்லும்பொழுது ஆர்வமாக கற்றுக் கொள்கிறார்கள். பள்ளிக்குழந்தைகள், சிறுவர்களுக்கு காட்டுயிர்களின் ஒளிப்படங்கள் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அவர்களது மனங்களில் பதிகின்றன. அக்காட்டுயிர்களைப் பற்றிக் கூறும்போது, அவை அவர்களது நினைவடுக்கில்பதிகின்றன. அதுபோலவே, பள்ளிச் சிறுவர்களுக்கு இந்திய, தமிழக நிலப்பரப்பில் வாழும் காட்டுயிர்களைப் பற்றிய பாடங்கள் ‘சூழலியல் கல்வி’யில் இடம் பெறவேண்டும். ஏனெனில், ஒட்டகச்சிவிங்கியைப் பற்றி அறிந்துள்ள நம் மாணவர்கள் (பெரியவர்களும் தான்) வெளிமானை (Blackbuck) அறியாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது.

மொழிக்கும், இயற்கைக்கும், காட்டுயிர்க்குமான உறவு முதன்மையானது. அதற்கேற்ப சூழலியல் பாடங்களில் புறச்சூழலில் வாழும் உயிரினங்கள் பற்றிய கல்வி இடம்பெற வேண்டும். அப்போதுதான் இயற்கையை, காட்டுயிர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்வார்கள்.

ஒரு காட்டுயிர் ஒளிப்படக்கலைஞனாக என்னால் முடிந்தளவு காட்டுயிர் விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறேன் என்பதே மனநிறைவாக இருக்கிறது.

‘உயிர் சூழல்’ என்ற பெயரில் காட்டுயிர் இதழை தமிழில் கொண்டு வருகிறீர்கள். அந்த இதழின் நோக்கம் என்ன?

மேலே கூறிய பதில் இதற்கும் பொருந்தும். பாலூட்டிகள்கள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகள், கடல்வாழ் உயிரினங்கள், ஊர்வனங்கள், பூச்சிகள் போன்ற காட்டுயிர்களை எளிய தமிழில், அறிவியலடிப்படையில் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற உந்துதல்தான்  ’உயிர் சூழல்’ இதழை ஆரம்பிக்க வைத்தது. பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், காலதாமதத்துடன் இதழ் வந்துக் கொண்டிருக்கிறது.

சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வியில் இருந்தே சூழலியலை எளிமையாக கற்றுக் கொடுத்தால் அவர்கள் இயற்கையையும், காட்டுயிர்களையும் புரிந்து கொள்வதுடன், பாதுகாக்கவும் செய்வார்கள். நிறைய பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் இதழை படித்து அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.

தமிழகத்தின் இரவாடிகள், தமிழகத்தின் பறவை காப்பிடங்கள், பூச்சிகள் – ஓர் அறிமுகம் போன்ற பல்வேறு நூல்கள் வழியே அரிய உயிரினங்களை அறிமுகப்படுத்தினீர்கள். தற்பொழுது என்ன புத்தகங்கள் எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள்?

குழந்தைகளுக்காக இரண்டு சூழலியல் நூல்களைத் தற்பொழுது எழுதி வருகிறேன். இரவாடிகள் குறித்த விரிவான கையேடு மற்றும் பூச்சிகளுக்கான கையேடும் தட்டச்சு அளவில் இருக்கிறது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் குறித்த ஆவணப்படம் இறுதி கட்ட பணியில் இருக்கிறது.

நேர்காணல்; செழியன்.ஜா

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time