ஏர் இந்தியாவின் 111 விமானங்களை டாடாவிற்கு பரிசளித்த பாஜக அரசு!

- சாவித்திரி கண்ணன், பீட்டர் துரைராஜ்

இப்படி எல்லாம் கூட நடக்குமா..? என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாவின் மாபெரும் நிறுவனமான ஏர் இந்தியா விற்பனை நடந்துள்ளது. நஷ்டத்திற்கே வழியில்லாத லாபகரமான விமான சேவைத் தொழிலை அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமாக கூட்டுச் சேர்ந்து சீரழித்தது போதாது என்று இன்று கிட்டத்தட்ட அடிமாட்டு விலைக்கு டாடாவிற்கு தந்துவிட்டனர்!

கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி இந்த விற்பனை குறித்து கொந்தளித்துள்ளார் “நாட்டின் தேசிய சொத்துகளை மத்திய அரசு இடைவிடாமல் சூறையாடி வருகிறது. டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது, டாடாவுக்கு மோடி அரசு அளிக்கும் இலவச பரிசு போன்றதுதான். இது பட்டப்பகலில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் கொள்ளையை போல் நடந்துள்ளது.

பெரும் சொத்து மதிப்புள்ள ஏர் இந்தியாவின் 64,262 கோடி கடனில் டாடா நிறுவனம் ரூ.15 ஆயிரத்து 300 கோடி கடனை ஏற்றுக்கொண்டு, ரூ.2 ஆயிரத்து 700 கோடியை மட்டுமே மத்திய அரசுக்கு கொடுக்கிறது. ஏர் இந்தியாவின் மீதி கடன் ரூ.46 ஆயிரத்து 262 கோடி கடனை மத்திய  பொதுமக்கள் தலையில்தான் கட்டப் போகிறது! அதே சமயத்தில், ஏர் இந்தியா வாங்கிய சொத்துகள், விமானங்கள் உட்பட டாடா நிறுவனத்துக்கு சொந்தமாகி விடும்.” என்கிறார் சீதாராம் யெச்சூரி.

ஏர் இந்தியா விற்பனை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, “மோடிஜி தனக்காக 2 விமானங்களை ரூ.16,000 கோடிக்கு வாங்கியுள்ளார். ஆனால் இந்திய அரசின் சொத்தாகிய  நூற்றுக்கும் அதிகமான விமனங்களை கொண்டுள்ள ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு மோடிஜி தன் பில்லியனர் நண்பர்களுக்கு பரிசாக அளித்துள்ளார்” என்று கிண்டலடித்ததுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களும், இண்டரப்ஸ் நிறுவனமும் இணைந்து தாங்கள் வாங்கி ஏர் இந்தியாவை லாபகரமாக நடத்த விண்ணப்பித்தனர். இண்டரப்ஸ்  நிறுவனத் தலைவர் 51 சதவிகித பங்குகளை ஏர் இந்திஆ ஊழியர்களுக்கும், 49 சதவிகித பங்குகளை தங்களுக்கும் எடுத்துக் கொள்வதாகவும், இந்த 51 சதவிகித பங்கிற்காக ஊழியர்கள் பணம் எதுவும் தரத் தேவையில்லை என்றும், . 51 சதவிகித கட்டுப்பாட்டு பங்குகள் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களின் ஆழமான மதிப்பிட முடியாத பங்களிப்புக்காக அவர்கள் வசம் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்! ஆனால், இதை பாஜக அரசு நிராகரித்துவிட்டது!

“இரண்டு ஆண்டுகளுக்கு அரசின் தலையீடு இல்லாமல் சுயேச்சையாக  நிர்வாகத்தை  நடத்த ஏர் இந்தியாவிற்கு  அனுமதி கொடுங்கள், இலாபத்தைக் காட்டுகிறோம் என ஊழியர் சங்கங்கள் ஒருமித்த குரல் எழுப்பின. இதனை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு 12 சங்கங்கள் உள்ளன. அரசுக்கு சங்கடமான நிலை வரக் கூடாது என்பதற்காக சங்கங்களின் ஒற்றுமையை அரசு குலைத்து விட்டது” என்றார் அகில இந்திய சேவைப் பொறியாளர்கள் தொழிற்சங்கத்தின் விலாஸ் கிரிதர்.

கிரிதர் விலாஸ்

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியுள்ள நிலையில், ஊழியர்கள் தங்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான  குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று   ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இதை கண்டித்து நவம்பர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய விமான போக்குவரத்து  அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,  ஏர் இந்தியா நிறுவனத்தை கைமாற்றும் ஒப்பந்தம் கையெழுத்தான ஆறு மாதங்களுக்குள் ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று சுமார் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  அவ்வாறு குடியிருப்புகளை காலி செய்யவில்லை என்றால்  ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டுமாம்!


இந்த ஊழியர்கள் ஏர் இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போதுவரை பங்கேற்றி கொண்டிருப்பவர்கள்.  அவர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். தனியார்மயம் குறித்து கருத்து கூறுவது என நோக்கம் அல்ல. ஆனால், தனியார் மயத்துக்கு பின் ஊழியர்களின் நிலை என்ன என்பதை நிர்வாகத்தின் அணுகுமுறை காட்டுகிறது.  அவர்களின் மதிப்புக்கு  சவால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கேட்டுகொண்டுள்ளார்!

ஆனால், அரசும் டாடா நிறுவனமும் செய்த ஒப்பந்தப்படி, ”ஊழியர்கள் யாரையும் ஒரு வருடத்திற்கு வேலை நீக்கம் செய்ய மாட்டோம்” என்றது! ”ஒரு வருடத்திற்கு பிறகே, விருப்ப ஓய்வு திட்டம் அறிவித்து வெளியேற்றப்படுவார்கள்” என்றது கவனத்திற்கு உரியது!

1932 ஆம் ஆண்டு ஜே ஆர்டி டாடாதான் இந்தியாவில் முதலில்  விமான சேவையை தொடங்கினார். 1948 ஆம் ஆண்டு ‘டாடா ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா’  என்று இருந்த வந்த விமான சேவையின் 49 சத பங்குகளை, விடுதலை அடைந்த இந்தியா வாங்கியது. அதைத் தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு அதனை தேசியமயமாக்கியது. பிறகு ஏர் லைன்ஸ் என்ற பெயரில் உள்நாட்டு சேவையையும், ஏர் இந்தியா என்ற பெயரில் வெளிநாட்டு சேவையையும் நடத்தி வந்தது. இதன் சேவை உலகம் முழுவதும்    விரவிக் கிடக்கிறது. 1980 வரை லாபகரமாக இயங்கிய ஏர் இந்தியா அதன் பிறகான தவறான நிர்வாகத்தால் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வந்தது. இதை சாக்கிட்டு இந்திய அரசு விற்க முடிவெடுத்தது.

ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அலையன்ஸ் ஏர், ஏர் இந்தியா சாட்ஸ் ஏர்போர்ட்  சர்வீஸஸ், ஏர் இந்தியா சார்ட்டர்ஸ், ஓட்டல் கார்பரேஷன் ஆப் இந்தியா, ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் என 6 துணை நிறுவனங்கள்  உள்ளன. இவற்றில் 3 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குபவை. இவற்றின் சொத்து மதிப்பு ரூ.29 ஆயிரம் கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது.  இந்நிறுவனத்தின் 2 ஓட்டல்கள் உட்பட ரியல் எஸ்டேட் சொத்து மட்டுமே ரூ.8 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பும் மேலும் கூடுதலாக இருக்கும். அனைத்து  சொத்துக்களையும் இன்னும் யாரும் முழுமையாக மதிப்பிடவில்லை.

” ஏர் இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களாகிய நாங்கள் 15, 20 ஆண்டுகளாகவே வெறுப்படைந்து விட்டோம். எங்களுக்கு மாத சம்பளம் கூட ஒழுங்காக   கிடைப்பதில்லை. சில சமயங்களில் 15 தேதி, 20 தேதிகளில்தான் சம்பளம் கிடைக்கும். எங்களுக்கான  வருங்கால வைப்பு நிதி போன்றவை சிக்கலாகியுள்ளன. வான் வழி தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டது மட்டுமல்ல, அவர்களுக்கு முன்னுரிமையும், சலுகைகளும் வழங்கி ஏர் இந்தியாவை பின்னுக்கு தள்ளினார்கள். இதனால், தனியார் விமான நிறுவனங்கள் இலாபம் அடையத் தொடங்கினார்கள். ஏர் இந்தியா நட்டம் அடையத் தொடங்கியது ” என்றார், விலாஸ் கிரிதர்.

ஓய்வு பெற்ற பிறகும் பொது மேலாளர், கேப்டன் போன்ற உயர் பதவிகளில் உள்ளவர்களில் தங்களுக்கு வேண்டியப்பட்டவர்களுக்கு  இரண்டு ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என அதே சம்பளம், சலுகை கொடுத்து பதவி நீடிப்பு கொடுத்தார்கள். ஏர் இந்தியாவில் எடுத்த முடிவுகளுக்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. குறிப்பிட்ட முடிவினால் குறிப்பிட்ட வழித்தடத்தில் நட்டம் ஏற்பட்டால் அந்த முடிவுக்கு  யாரும் பொறுப்பாளியாக்கப்படவில்லை.

அதே போல ஏர் இந்தியா வசம் இருந்த இலாபம் ஈட்டும் வழித்தடங்கள் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் போன்ற தனியார்  நிறுவனங்கள் பலன் அடையும் வகையில் ஒதுக்கப்பட்டது. உதாரணமாக  மும்பையிலிருந்து, நியூயார்க் செல்லும்  பயணத்திற்கு முதலில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை அனுமதித்தார்கள். அதன்பிறகு செல்லும் ஏர் இந்தியா விமானம் பயணிகள் இல்லாமல் செல்லும். அதே போல தனியார் நிறுவன விமானங்களுக்கு பயணிகள் அதிகம் பயணிக்கும்  நேரத்தை (Prime time)  ஒதுக்கிவிட்டு, ஏர் இந்தியா விமானங்களுக்கு மற்ற நேரத்தை ஒதுக்கினார்கள். இது போன்ற  ஒரவஞ்சனை முடிவுகளால்தான் ஏர் இந்தியா நட்டத்தை சந்தித்தது. வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் டாடாவிற்கு  கிடைக்கும். இப்போது ஏர் இந்தியாவிடம் 111 விமானங்கள் உள்ளன. இவைகளை ஏறக்குறைய இலவசமாக டாடாவிற்கு விற்பனை செய்கிறார்கள்” என்றார் மும்பையைச் சார்ந்த விலாஸ் கிரிதர்.

டாடாவிடம் போன பிறகு நிலமை என்னவாகும்? என்று கேட்டதற்கு “ஏர் இந்தியாவின் வழித் தடமும் (Slot), பயணிகள் எண்ணிக்கையும்தான் டாடாவிற்குத் தேவை. அவர்களிடம் ஏற்கனவே ஏர் ஏசியா, விஸ்டாரா ஏர்லைன்ஸ் உள்ளது. அதிலுள்ள கட்டமைப்புகளைப் பயன்படுத்தி இலாபம் சம்பாதிப்பார்கள். இப்போது ஏர் இந்தியா வசம் உள்ள  பாதுகாப்பு, மனித வள ஊழியர்கள் அவர்களுக்குத் தேவைப்பட மாட்டார்கள் ” என்றார் விலாஸ் கிரிதர்.

“வளைகுடாப் போரின் போது  440  விமானங்கள் மூலம்,  தவித்துக் கொண்டிருந்த  ஒரு இலட்சம் இந்தியரை ஏர் இந்தியா காப்பாற்றியது. சமீபத்தில் இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் மாட்டிக் கொண்ட போது இந்திய அரசு நமது ஏர் இந்தியா விமானத்தை அனுப்பி, அங்கு தத்தளித்துக் கொண்டிருந்த 129 இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்தது கொரோனா நெருக்கடி காலத்திலும் சேவை செய்துள்ளது. பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது இது போன்ற கட்டமைப்புகள் அவசியமானது. இந்தியா விடுதலை அடைந்த 75 ஆம் ஆண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், இலவசப் பரிசாக,  ஏர் இந்தியாவை, டாடாவிற்கு  வழங்கியுள்ளது. இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் ” என்று ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட பத்து மத்திய தொழிற்சங்கங்களும், சுயேச்சையான சம்மேளனங்களும் அரசின் இந்த முடிவைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

அமர்ஜித் கெளர்

“சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறாத கட்சி ஆர்எஸ்எஸ். அவர்களுடைய பாஜக ஆட்சிதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் கொள்கை ரீதியாகவே முதலாளிகளுக்கு ஆதரவான நிலை எடுப்பவர்கள். இதுபோன்ற பெரிய ஆலைகளை, பொதுத்துறைகளை நிறுவும்போதே எதிர்த்தவர்கள். எனவே தான் அவர்கள் ஆட்சி நடைபெறும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைத்தையும் தனியார்மயமாக்கி வருகிறார்கள்.

ஏர் இந்தியா, இந்தியன் ஆயில் நிறுவனத்தில்தான் பெட்ரோலை நிரப்பும். டாடாவிடம் ஏர் இந்தியா நிறுவனம் சென்ற பிறகு, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் எரிபொருளை நிரப்ப மாட்டார்கள். இதனால் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் பாதிப்படையும். அதே போல இப்போது அரசின் வசம்  உள்ள கிட்டங்கிகளை ஏர் இந்தியா பயன்படுத்தாது. தனியார் கிட்டங்கிகளை பயன்படுத்துவார்கள். ஏற்கனவே விமான நிலையங்களை தனியார்மயமாக்கி வருகிறார்கள். இந்திய நாட்டின் சொத்துகளை திட்டமிட்டு தனியாருக்குச் சொந்தமாக்கி வருகிறது பாஜக ” என்றார் ஏஐடியுசியின் பொதுச் செயலாளரான அமர்ஜித் கௌர்.

ஏர் இந்தியாவின் சின்னமான (symbol) மகாராஜா நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒருகாலத்தில் பிரியமான அடையாளம். அடித்தட்டு மக்களும் விமானத்தை பயன்படுத்தும் வகையில் வாய்ப்புகளும், சந்தையும் அதிகமாகி வரும் வேளையில் ஏர் இந்தியாவை விற்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

சாவித்திரி கண்ணன், பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time