இளம் தலைவர்களே போராட்டக் களத்தில் உள்ளனர்! – சோனியா

-சாவித்திரி கண்ணன்

மிகுந்த ஏதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கபிள்சிபில், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அதன் 52 செயற்குழு உறுப்பினர்களுடன் கூடி அனைத்து பிரச்சினைகளையும் மனம் திறந்து விவாதித்துள்ளது! கட்சித் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கபட்டதோடு, காங்கிரசுக்கு சித்தாந்த பிடிப்புள்ள – போராட குணம் வாய்ந்த – களத்தில் நின்று போராடக் கூடியவர்களே இன்றைய தேவை என்பதை சோனியாவும், ராகுலும் சூசகமாக தெளிவுபடுத்தினர்!

காங்கிரஸ் தலைமையை விமர்சித்து  பகிரங்கமாக பொதுவெளியில் பேசிய கபிள்சிபிள், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அனைவரும் கூடி விவாதித்தனர்! மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தள்ளி வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நேரத்தில் சொன்ன வாக்கை காப்பாற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் செயற்குழு கூடி மன்மோகன்சிங் உடல் நலன் தேறி வருவதற்கு உளமாற வாழ்த்து தெரிவித்து நடந்தது.

காங்கிரஸ் செயற்குழு மூன்று விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் தொடங்கி உறுப்பினர் சேர்க்கையை நாடு முழுவதும் நடத்தி முடித்து மாவட்ட மற்றும் மா நில அளவிலான முக்கிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த நிலையில் அடுத்த வருடம் செப்டம்பரில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அது வரை காங்கிரஸின் இடைக்கால தலைவராக நான் (சோனியா) செயல்படுவேன். ராகுல் காந்தியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சி தொடர்பான விவகாரங்களை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் என்னிடம் எப்போதும் பேசலாம். ஊடகங்களின் வழியாக எனக்கு தெரியப்படுத்த வேண்டியதில்லை.என்றார் சோனியா!

இந்தக் கூட்டத்தில் செயற்கு உறுப்பினர்கள் பலரும் ராகுல் காந்தி அவர்கள் சோனியாவின் உடல் நிலை கருதி தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என்றதற்கு, ராகுல் காந்தி பேசும் போது, ”என்னை தலைமை ஏற்க அழைத்த உங்கள் ஒவ்வொருக்கும் நன்றி! கட்சியின் சித்தாந்தத்திலும், நோக்கங்களிலும் பற்று உள்ளவர்களைத் தான் நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். பஞ்சாப்பிலே நாம் தலித் ஒருவரை முதல் அமைச்சர் ஆக்கியுள்ளோம். இது மற்ற கட்சியில் நடக்காது. மதவாதமும், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியும் கொண்ட பாஜக அரசுக்கு மாற்றாக மக்களை ஒன்றுபடுத்த நாம் போராடி வருகிறோம்.”என்றார்.

உத்திரபிரதேச லக்கிம் கேரியில் பிரியங்கா நடத்திய போராட்டத்திற்கு செயற்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அடுத்து வரக்கூடிய பஞ்சாப், உத்திரபிரதேச தேர்தல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது!

வீறு கொண்ட விவசாயிகள் போராட்டம்

இந்த அரசு விவசாயிகளை மிக மோசமாக நடத்துகிறது. விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் அயராது தொடர் போராட்டம் நடத்தும் சூழலில் நாம் சந்திக்கிறோம். கடந்த ஓராண்டுக்கு முன்பு 3 கறுப்புச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதிலிருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சட்டங்களை சட்டரீதியான ஆய்வுக்கு உட்படுத்த நான் நம்மால் இயன்றதைச் செய்தோம்.

சில தனியார் நிறுவனங்கள் பயனடையும் வகையில் 3 விவசாய சட்டங்களையும் மோடி அரசு நிறைவேற்றியது.  போராட்டக் களத்தில் குதித்த விவசாயிகள், அப்போதிலிருந்து சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சமீபத்தில் லக்கிம்பூர்-கேரி சம்பவம் பா.ஜ.க.வின் மனநிலையை வெளிப்படுத்தியது. இரக்கமற்ற வகையில் கார் ஏற்றி விவசாயிகளை நசுக்கி கொன்ற மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஷ்ரா மீது நடவடிக்கை வேண்டும் விவசாயிகளின் பிரச்சினைகளை எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதையும், விவசாயிகள் தங்கள் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க நடத்தும் இந்த உறுதியான போராட்டத்தை எவ்வாறு கையாண்டார்கள் என்பதையும் பார்த்தோம்.

சரியும் பொருளாதாரம்

பொருளாதாரச் சூழல் நன்றாக இருப்பதாக நம்மை நம்ப வைக்க அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால்,  நிலைமை கவலை தரும் வகையில்  இருக்கிறது. பொருளாதார மீட்சிக்கு அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே பதில், பல ஆண்டுகளாக பெரும் முயற்சியுடன் கட்டமைக்கப்பட்ட தேசிய சொத்துகளை விற்று விடுவது தான்!

பொதுத்துறை நிறுவனம் என்பது வெறும் வியூகமோ, பொருளாதார சாராம்சமோ மட்டும் கொண்டதல்ல. அது சமூக இலக்கும்,பாதுகாப்பும் சார்ந்தது. பெரும் வேலைவாய்ப்பு சார்ந்தது. எஸ்சி., எஸ்டி., மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் வளர்ச்சி சார்ந்தது. ‘விற்பனை, விற்பனை, விற்பனை’ என்ற மோடி அரசின் ஒற்றை நிரல் ஆபத்தானதாக இருக்கிறது.

இதற்கிடையே, அத்தியாவசியப் பொருட்களின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 க்கும் விற்கும் என்று நாட்டில் எவரேனும் கற்பனை செய்திருப்பாரா? சமையல் கேஸ் விலை ரூ.900 ஆக உயர்ந்து விட்டது. சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.200 ஐ நெருங்கிவிட்டது. இவையெல்லாம் நாட்டு மக்களை வாழவே முடியாத சூழலுக்குத் தள்ளியுள்ளன.

கூட்டுறவு கூட்டாட்சி என்பது ஒரு வெற்று முழக்கமாகவே இருக்கிறது.  பா.ஜ.க. அல்லாத மாநிலங்களைப் பாகுபாட்டோடு தான் மத்திய அரசு அணுகியது.

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்கள்

சமீப  காலமாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் திடீர் படுகொலைகள் நடக்கின்றன. சிறுபான்மையினர் குறிவைத்து கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். இத்தகைய செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. இன்று காலை நாம் கண்டித்தோம். ஜம்முவும் காஷ்மீரும் யூனியன் பிரதேசமாகி 2 ஆண்டுகளாகிறது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான குற்றங்களைச் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது மத்திய அரசின் முழுப் பொறுப்பாகும். ஜம்மு காஷ்மீரில் மக்களிடையே சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும்  நம்பிக்கையையும் மீட்டெடுப்பது மோடி அரசாங்கத்தின் கையில் உள்ளது.

நம் நாட்டின் எல்லையில் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம். இந்தியாவில் சீன ஆக்கிரமிப்பு இல்லை என்று கூறிய பிரதமர், அதன்பிறகு அமைதி காப்பது நம் நாட்டுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும்.

இப்போது சட்டப்பேரவை தேர்தல்களை நோக்கித் திரும்பியுள்ளோம். சந்தேகத்துக்கு இடமின்றி நாம் ஏற்கெனவே தேர்தலுக்குத்  தயாராகிவிட்டோம்.  கட்சியின் நலனில்  மட்டும் அக்கறை செலுத்தினால், நாம் ஒற்றுமையாக இருந்தால், நாம் கண்ணியத்துடன் இருந்தால் நிச்சயம் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இது குறித்து தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களின் பொதுச் செயலாளர்களும் பொறுப்பாளர்களும் விளக்குவார்கள்.    நான்  ஏதும் சொல்லவிரும்பவில்லை.

இறுதியாக கட்சியின் அமைப்புத் தேர்தலுக்கு வருவோம். காங்கிரஸ் கட்சியை சீரமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த அமைப்பும் விரும்புகிறது. இதனைச் செயல்படுத்த ஒற்றுமையும் கட்சியின் நலனும் அளவுகோலாகவும் இருக்க வேண்டும்.

நான் காங்கிரஸ் தலைவராக முழுநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் கட்சிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் குறிப்பாக, இளைஞர்கள் அதிகமாக பங்களித்துள்ளனர்! விவசாயிகள் போராட்டம், கொரோனா நிவாரணம் , இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீதான அக்கறை, தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மை  தாக்குதல்களுக்கு எதிரான போராட்டம், விலைவாசி  உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டு வருவது குறித்து  நமது கட்சினர் போராடியிருக்கிறார்கள்.

பொது மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் எதையும் நாம் ஒருபோதும் கவனிக்காமல் விட்டதில்லை. டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைப் போல், இந்த பிரச்சினைகளை எல்லாம் நானும் பிரதமரிடம் கொண்டு சென்றுள்ளேன் . ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். நாங்கள் தேசிய பிரச்சினைகளில் கூட்டாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் எங்கள் வியூகம் ஒரே மாதிரியாக இருந்தது.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா,ராகுல் ஆகியோர் பேசியவற்றை தொகுத்து பார்த்தால் இளைஞர்கள் களத்தில் செயல்பட்டு வருவதையும், போராட்ட குணமுள்ள அடித்தட்டு மக்களிடமிருந்து காங்கிரஸ் தலைமைக்கு இளம் தலைவர்கள் வருவதை ஆதரிப்பதாகவும், காங்கிரசின் சித்தாந்தத்தில் பற்றும், சுய கட்டுப்பாடுகளும் கொண்டவர்களே இன்றைய தேவை என்றும் செயற்குழு பிரகடனப்படுத்தியுள்ளது என்றே சொல்ல முடிகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time