ஏ.செந்தில், மதுரை
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல்வாதிகள் புதிய கட்சிகள் தொடங்கத் தான் இந்த ஜனநாயகம் பயன்படுகிறதே தவிர, சாமானிய மக்களுக்கு என்ன பயன்?
சாமானிய மக்களையும் அரசியல்வாதிகள் ஆக்கிக் கொண்டுள்ளது நம் ஜனநாயகம். பணமில்லாமல் தேர்தல் களத்திற்கு வராதே என்று இன்று மக்கள் அரசியல்வாதிகளை மிரட்டத் தொடங்கிவிட்டனர்…!
முகைதீன் புதல்வன், இராமேஷ்வரம், இராமநாதபுரம்
கேள்வி கேட்பவர்கள் அறிவாளிகளா? பதில் சொல்பவர்கள் அறிவாளிகளா?
முட்டாள்தனமான கேள்விகளை எதிர்கொள்ளத் தெரிந்த அறிவாளிகளும் உண்டு.
அறிவாளிகளைக் கூட முட்டாள்கள் ஆக்கிவிடும் கேள்வியாளர்களும் உண்டு.
எம்.சரவணன், தண்டையார்பேட்டை, சென்னை
ஜெயலலிதா சமாதியில் கண்ணீர்விட்டு அழுத சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கார் விருது வேண்டுமானால் தரலாம் என்று கூறியுள்ள ஜெயகுமாரின் கருத்து பற்றி?
மிக வன்மமான பேச்சு. ஓரம்கட்டப்பட்டு அதிகாரங்களின்றி இருக்கும் சசிகலாவிடம் காட்டும் வீரத்தை, ஜெயக்குமார் தங்கள் கட்சியை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பாஜக மீது காட்டினால் கட்சி வளரும்.
கே.எஸ்.கவின், மணலூர்பேட்டை,கள்ளக் குறிச்சி
உலக நாடுகளின் பட்டினிப் பட்டியலில் இந்தியா 101 வது இடம் பெற்றுள்ளது. ஆனால், உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக அரசு சொல்கிறதே?
இரண்டுமே பொய்யல்ல! அபாரமான தானிய உற்பத்தியின் ஒரு பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது! மற்றொரு பகுதி பொறுப்பின்மையால் பாதுகாப்பின்றி அழிகின்றது! உதாரணத்திற்கு இந்தியாவில் குடவுன்களில் வீணாகும் கோதுமை ஆஸ்திரேலியாவின் ஓராண்டு கோதுமை உற்பத்திக்கு நிகரானது. தற்போது தானியங்களில் இருந்து எரிபொருள் தயாரிக்க இலட்சக்கணக்கான ஏக்கரில் தானியங்கள் ( வேர்க்கடலை,சோளம், கோதுமை..உள்ளிட்ட 18 தானியங்கள்) பயரிடப்பட்டு அழிக்கப்படுகின்றன! இந்தியாவில் பாழாகும் உணவு தானியங்களை தடுத்து பகிர்ந்தளிக்க முடியுமானால் இங்கு பட்டினிக்கே வழியில்லை.
டி.அன்பழகன், மத்திய சென்னை
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
தற்போது இருப்பதை விடவும் மோசமாக இருக்கும்.
சஞ்சய்குமார், மும்பை
மாலேகான் குண்டுவெடிப்பு புகழ் பிரக்யாசிங் தாகூர்சிங் கபடி விளையாடியதை பார்த்தீர்களா..?
கபடி மட்டுமா? கர்பா டான்ஸ், குத்தாட்டம் என கலக்கி வருகிறார்!
இவர் தான் ஐயோ பாவம் உடல் நிலை மோசமாக இருக்கிறார் என சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்! குண்டுவெடிப்புகான பரிசாக எம்.பி பதவி தரப்பட்டவர். நாடாளுமன்றத்திற்கு வந்து செல்லமுடிந்த அவருக்கு, கோர்ட்டுக்கு வரமுடியாத உடல் நிலையில் இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெறப்பட்டது.
ம.நாராயணன், சிவாஜி நகர், பெங்களுர்
விவசாயிகளுக்கு ஆதரவாக வருண் காந்தி தொடர்ந்து பாஜக ஆட்சியாளர்களை விமர்சிக்கிறாரே?
இப்ப தான் ஞானோதயம் வருகிறதோ.. பார்ப்போம். மேலும் இன்னும் எந்த அளவுக்கு விமர்சிப்பார் என்று! ஓரம் கட்டப்பட்டுள்ளவருக்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம். அவ்வளவே!
அமல்ராஜ், சின்ன காஞ்சிபுரம்
கட்சிக்காரர்களின் வற்புறுத்தல் காரணமாகவே தன் மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் முக்கிய பதவி தர நேர்ந்ததாக வைகோ கூறுகிறாரே..?
பாசாங்குத் தனத்தில் பல பி.ஹெச்.டி பட்டங்களை வென்றதில் நிகரற்றவர் வைகோ!
வி.பாண்டியன், மண்ணூர்பேட்டை, திருவள்ளூர்
உங்கள் அறம் இப்போதெல்லாம் (ஆளும் அரசுக்கு) அனுசரணையாக உப்பு தூக்கலாகவும், அத்தியாயங்களை தட்டிக் கேட்க காரம் குறைவாகவும் உள்ளதே?
பிரச்சினைகள், செயல்பாடுகள் அடிப்படையில் தான் எந்தக் ஆட்சியையும் சமரசமின்றி விமர்சிக்கிறோம். திமுகவின் கடந்த கால அத்தியாயங்களை தற்போது கிளறி குத்திக் காட்டும் வன்மம் சரியானதல்ல. அந்தந்த காலங்களிலேயே அதை வலுவாக கேட்டுள்ளேன்.
தற்போதைய ஆட்சியின் குறைபாடுகளை அதிகமாக சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதும் அறம் மட்டுமே!
இந்த ஆட்சியில் நிழல் அதிகார மையமாக முதல்வரின் மருமகன் சபரீசன் செயல்படுவதைக் கண்டித்த காரசாரமான கட்டுரை, ‘திமுகவின் கடலூர் எம்.பி, நெல்லை எம்பி ஆகியோரின் மீதான சட்டபூர்வ நடவடிக்கைகள் உறுதிபடுத்தக் கோரும்’ கட்டுரை, ”முன்னாள் அமைச்சர்கள் ஊழல்கள் தொடர்பான ரெய்டுகள், விசாரணைகள் உண்மையா? பேரமா?’’ என கேட்கும் கட்டுரை, ‘கொள்ளையடித்ததில் பாதி கொடுத்தால் பதவியா?’ எனக்கேட்ட கட்டுரை, இவை போன்ற இன்னும் சில கட்டுரைகள் திமுக அரசை காத்திரமாக விமர்சித்துள்ளன!
முதலமைச்சருக்கு அதிக பாதுகாப்பு தரப்படுவது குறித்தும், கோவில்கள் தொடர்ந்து மூடப்படுவது குறித்தும் நாம் எழுதிய கட்டுரைக்கு பாசிடிவ் ரியாக்சன் அரசு தரப்பில் ஏற்பட்டதை அனைவரும் அறிவர். நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் அதிகாரிகள் ஊக்கப்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய போது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேவசாகாயதாஸ், குரோம்பேட்டை, சென்னை
பத்திரிகை துறையில் ஏன் நடுவு நிலைமை இல்லை?
சார்பு நிலை எடுத்து பல சகாயங்களைப் பெறுவது வியாபாரிகளின் இயல்பு!
Also read
சிபி,பேரளையூர் கடலூர்
கோவில்களை திறக்கச் சொல்லி இருப்பது பாசகவின் B team திமுக எனக் காட்டுகிறதா?
திமுக அரசு, பாசகவின் B team ஆக இருந்திருப்பின், கோவில்களை திறக்க கோரி பாஜகவை போராட்டம் நடத்தும் அளவுக்கு தள்ளியதும், போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து வழக்குகள் போட்டிருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
வீ.ஜே, பெரம்பூர், சென்னை
ஓட்டுக்கு பணம் தருவதை சட்டபூர்வமாக்கிவிட்டால் என்ன?
சட்டபூர்வமாக எவ்வளவு கிடைத்தாலும், ”சட்டபூர்வமற்ற முறையில், எவ்வளவு தருவீர்கள்” என கேட்பார்கள்.
குறிப்பு;
https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8
கேள்வி கேட்க விரும்புபவர்கள் இந்த லிங்கில் சொடுக்கி, கேள்வியை பதிவு செய்யலாம்!
Leave a Reply