இன்னும் எத்தனைக் காலம் தான் மெல்லக் கொள்ளும் விஷமான டாஸ்மாக் மது உற்பத்தியாளர்களை போஷித்து, வளர்த்து வருவார்கள்? ஆரோக்கியமான கள் உலக அளவில் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏன் அதற்குத் தடை? லட்சக்கணக்கான விவசாயிகளை வஞ்சித்து, விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில பெருமுதலாளிகள் கொள்ளை லாபம் பார்க்க அரசு உதவுவதா? – விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி ஆவேசம்!
உலகில் 108 நாடுகளில், தென்னை,பனை மரங்கள் உள்ளன! எந்த ஒரு நாட்டிலுமே கள் இறக்கவோ, பருகவோ தடையில்லை! இந்தியாவிலேயே கூட தமிழகத்தைத் தவிர வேறு மாநிலங்களில் தடையில்லை! தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலம் 1987 தொடங்கி கள் தடை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தடை இந்திய அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்குவதும், பருகுவதும், மக்களின் உணவு உரிமை. அந்த அடிப்படை உரிமையானது மதுபான முதலாளிகளின் நலனுக்காக இங்கு தடை செய்யப்பட்டுள்ளது! இதனால் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடியுள்ளனர்.
கள் ஆரோக்கியமானது. பல தீராத வியாதிகள் பனங்கள் பருகுவதால் தீரும். எம்.ஜி.ஆர் அவர்கள் தனது சுய சரிதையாக நான் ஏன் பிறந்தேன் என்ற நூல் எழுதியுள்ளார். அதில் சின்ன வயதில் அவர் நோய்வாய்ப்பட்ட போது கள் குடிக்கச் செய்து தான் என் உடலினை தேற்றினார்கள் என எழுதியுள்ளார். இது போல பலருக்கும் பரவலான அனுபவம் இருக்கலாம்.
பெரியார் அவர்கள் ஒரு தீவிர கள் ஆதரவாளர் கும்பகோணம் மாநாட்டில் 1962ல் பேசும் போது தன் தங்கை கண்ணம்மாவின் கணவருக்கு வயிற்றுப் பிரச்சினை இருந்தது. அப்படிப்பட்டவர்கள் ஒரு மரத்து கள்ளினை தினமும் உண்டு வந்தால் அது முற்றிலும் குணமாகும். அந்தப்படியே அவரும் குடித்து நலமடைந்து வருகையில் கள் தடை சட்டம் வந்ததால் அவர் மீண்டும் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிட்டது என்று கூறினார். திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள் பெரியாரினை தங்கள் வழிகாட்டி எனக் கூறுகிறார்கள்! ஆனால், கள் விஷயத்தில் பெரியாருக்கு நேர் எதிராக செயல்படுகிறார்கள்!
நாங்கள் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல இயக்கங்கள் நடத்தி வருகிறோம். அரசு செவி சாய்க்க வேண்டும். இதை வலியுறுத்தி அஸ்வமேத யாகங்கள் எல்லாம் நடத்தி உள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் மாபெரும் கள் ஆதரவு மா நாடு நடத்த உள்ளோம். அதற்குள் தமிழக அரசு கள்ளுக்கு உள்ள தடையை விலக்கிக் கொள்ள வேண்டும்.
இயற்கையான கள் தான் நல்லது. டாஸ்மாக் மது ஆல்ஹாகால் அதிகமுள்ளது. அதுவும் மொலாசஸிசை மூலப் பொருளாகக் கொண்டு தற்போது தாயாரிக்கும் மது கேடானது. அது மெல்லக் கொல்லும் விஷமாகும். ஜப்பானிலும், சீனாவிலும் நெல்லை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் மவுத்தாய், சாக்கே போன்ற தரமான மது வகைகள் உள் நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப் படுத்தப்படுகின்றன! இதை முன் மாதிரியாகக் கொண்டு பனை, தென்னை மட்டுமின்றி அரிசி, தானியங்கள் ஆகியவற்றின் மூலமாக ஆரோக்கியமான மது வகைகளை நமது அரசு தயாரிக்க முன் வர வேண்டும். இதனால், குடிமகனின் உடல் நலமும் பாதுகாக்கப்படும். விவசாயிகளும் பலன் பெறுவார்கள். வாழைப்பழ உற்பத்தி தமிழகத்தில் அதிகமாகும். அது போன்ற பழங்களில் மது தயாரித்தால் அது சிறப்பான வரவேற்பை பெறும்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் பூரண மது விலக்கு கொண்டு வரப்பட்ட போது கூட அதில் அயல் நாட்டு மது வகைகள், அயல் நாட்டு பாணியில் தயாரிக்கப்படும் மது வகைகள், சாராயம் ஆகியவற்றுக்குத் தான் தடை விதிக்கப்பட்டது. கள்ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கேரளாவில் முந்திய ஆட்சியில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட போது, கள் மீது அரசு கைவைக்கவில்லை. மதுக் கடைகள் மூடப்பட்டு கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டன! ஏனென்றால் கள் இறக்குவதும்,பருகுவதும் அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு உரிமையாகும். அந்த உரிமையை தமிழக அரசு மட்டுமே மறுத்து வருகிறது.
உலகத்தார் உண்டென்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்
என்பது திருக்குறள்!
Also read
அதன்படி உலகமே கள்ளை ஏற்றுக் கொள்ளும் போது மாறாக இல்லை என்று மறுத்துக் கூறிய எம்.ஜி.ஆர் தொடங்கி கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருமே பேயே வள்ளுவர் கூற்றுப்படி!” என்றாஎ செ. நல்லசாமி!
Leave a Reply