தமிழக அறநிலையத் துறை பாஜவுக்கான போட்டி அரசியல் களமா..?

- சாவித்திரி கண்ணன்

அறம் நிலைக்கச் செய்வதற்கான ஒரு துறையை இந்துத்துவ போட்டி அரசியலுக்கான கருவியாக்கப் பார்க்கிறதா திமுக அரசு..?

அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்றால், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் வேலை பார்க்கும் இந்துக்கள் நிலை என்னாவது..?

மத்திய அரசு நிர்பந்திக்கிறதா? மாநில அரசின் மனநிலை மாறிக் கொண்டிருக்கிறதா..?

அறநிலையத் துறை வரலாற்றில் இவரைப் போன்ற செயல் திறனுள்ள இன்னொருவரில்லை எனச் சொல்லத் தக்க வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்த ஆட்சியாளர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள், கடவுளை வெறுப்பவர்கள் என்று பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் தொடர்ந்து வைத்த குற்றச்சாட்டுகளுக்கு செயல் வழியாக பதில் சொல்லிவிட்டது இந்த ஆட்சி! இந்த அளவோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. ஆனால், அறநிலையத் துறையில் இந்த ஆட்சியாளர்கள் காட்டும் அதிகபட்ச ஈடுபாடும், அணுகு முறைகளும் பாஜகவின் இந்துத்துவ அரசியலோடு திமுக அரசு போட்டி போடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருவதை தவிர்க்க முடியவில்லை.

தற்போது இந்து அறநிலையத் துறை சார்பில் 10 கலைக் கல்லூரிகள் ஆரம்பிக்கப் போவதாக அமைச்சர் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொளத்தூர் மற்றும் கீழ்ப்பாக்கம், தூத்துக்குடியில் விளாத்திக்குளம், திண்டுக்கல்ல்லில் தொப்பம்பட்டி, வேலூரில் அணைக்கட்டு, திருவண்ணாமலையில் கலசப்பாக்கம், தஞ்சாவூரில் திருக்காட்டுப்பள்ளி, திருச்சியில் லால்குடி, தென்காசியில் கடையம், நாமக்கல்லில் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே 36 பள்ளிகளும் 5 கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் நான்கு கல்லூரிக்கு உயர்கல்வித்துறையிடம் அனுமதி கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நான்கு இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

இக்கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவான பிகாம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி கணிப்பொறி அறிவியல் ஆகிய 4 பாடப் பிரிவுகள் மற்றும் தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற ஆன்மிக பாடத் திட்டங்கள் இடம்பெறவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது! ஆனால், தமிழ்த் துறை ஏனோ தவிர்க்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியளிக்கிறது! கோவில்களில் தமிழ் மந்திரங்கள் முழங்க வேண்டும் என்பவர்கள் கோவில் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தமிழே இல்லாமல் செய்வது ஏனோ? தனியார் கல்வி நிறுவன முதலாளிகளின் ஆலோசனை மட்டும் வழிகாட்டுதலை பெற்று செயல்படுவதின் விளைவோ இது? நிச்சயம் அரசு இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தொடங்கப்படவுள்ள கல்லூரிகள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடக்கவுள்ளன! இந்து அற நிலையத் துறை அதற்கான அடிப்படை கட்டுமானத்திற்கு முதலீடு செய்ய  உள்ளது!

தமிழகத்தில் உயர்கல்வித்துறை என்ற ஒரு துறையும், அதற்கான அமைச்சகமும் இருக்க அற நிலையத்துறை அதிக கல்லூரிகள் தொடங்க முனைப்பு காட்டுவது ஆச்சரியமளிக்கிறது. அப்படி உயர் கல்வித் துறையை புறக்கணித்து, அறநிலையத் துறை மட்டுமே 10 கல்லூரிகளை தொடங்க ஆர்வம் காட்டுவானேன்?

காலச் சூழலுக்கு ஏற்ப சிந்தனைப் போக்குகள் மாறும்! திமுக போன்ற நாத்திக பின்புலத்தில் உருவான ஒரு கட்சி இன்றைய இந்தத்துவ இந்தியச் சூழலை இவ்வாறு எதிர்கொள்கிறது என்பதாகத் தான் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போது இந்தக் கல்லூரிகளுக்கான பணியாளர்கள், ஆசிரியர்கள் வேலைகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு விளம்பரம் செய்துள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது!

”அரசு அனைவருக்கும் பொதுவானதல்லவா? கோவில் வேலைக்கு ஆள் எடுத்தால் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்பதை ஏற்கலாம். கல்வி என்பது அனைவருக்கும் பொதுவல்லவா?” என பல தரப்பிலும் கேள்விகள் எழுந்தன.

அதற்கு அமைச்சர் சேகர்பாபு ஒரு விளக்கம் தந்துள்ளார். ” இந்து அற நிலையத்துறை சட்டப் பிரிவு 10 தின்படி இந்து அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படும் கோயில்களோ,கருணை இல்லங்களோ, கல்வி நிறுவனங்களோ எதுவானாலும் அவை கோவில் வருமானத்தில் நடத்தப்படுவதால் அவற்றில் இந்துக்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று உள்ளது. ஆனால் படிக்கும் மாணவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராகவும்  இருக்கலாம் என உள்ளது’’ என்கிறார் அமைச்சர்.

பொதுத் தன்மையில் பார்க்கும் போது அமைச்சரின் விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகத் தான் தோன்றுகிறது.

ஆனால், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் சொல்லும் விளக்கங்களாவது;

”மேற்படி சட்டம் கோவிலில் பணிபுரிபவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று மட்டுமே கூறுகிறது. கோவில் சம்மந்தப்பட்ட அறப்பணிகளுக்கு அதை பொறுத்தி பார்க்கக் கூடாது. கல்வி அனைவருக்குமானது. சமூகத்திற்கானது.  அதில் தகுந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மதத்தின் பேரால் புறக்கணிக்காமல் பயன்படுத்திக் கொள்வதே முறையாகும். இந்தியா முழுக்க சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் கூட தங்கள் மதத்தாரை மட்டுமே வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக இப்படி சிந்தித்ததில்லை. இஸ்லாமியர்கள் நடத்திய நீயூ காலேஜில் தான் பிரபல கவிஞர் தமிழன்பன் பணியாற்றினார். தமிழக வக்பு வாரிய கல்வி நிறுவனத் துணைத் தலைவராகவே இந்து இருக்கிறார். அந்த வக்பு வாரிய கல்வி நிறுவனங்களில் நிறைய இந்துக்கள் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர்! லயோலா கல்லூரியில் பல பாடப்பிரிவுகளுக்கு இந்துக்களே துறைத் தலைவர்களாக, பேராசிரியர்களாக  உள்ளனர். அங்கே சில பிரிவுகளில் இயக்குனராகவும் இந்துக்கள் இருந்து வருவதை பார்க்கிறோம்.  அப்படி இருக்க, அனைவருக்கும் பொதுவான அரசாங்கம் சமய சார்புடன் நடப்பது மதச்சார்பற்ற இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும்.

தமிழக தொல்லியல் துறையில் தலை சிறந்த ஒரு தொல்லியல் அறிஞர் இருந்தார். அவர் பிறப்பால் ஒரு இஸ்லாமியர். ஆகவே, கோவில் கல்வெட்டுகளை அவர் பார்வையிடக் கூடாது என வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, ”சம்பந்தப்பட்டவர் தொல்லியல் துறையை மிகவும் நேசிக்கும் ஒரு துறைசார்ந்த நிபுணர். அவரது திறமை ஒரு சமூகத்திற்கு தேவை. ஆகவே தவறில்லை” என தீர்ப்பளித்தார். ஆனால், இந்த வழக்கு மேல் விசாரணைக்கு போன போது வேறு தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், இதற்கு முற்றுபுள்ளி வைக்க சென்ற அரசாங்கம் 2019ல் தொல்லியல்துறை சட்டத்திலேயே, ”வேலை செய்வதற்கு மதம் தடையல்ல..’’ என திருத்தம் கொண்டு வந்தது.

இன்னும் எளிமையாக ஒரு விளக்கம் தருகிறேன். அறநிலையத்துறை சார்பில் ஒரு மருத்துவமனை செயல்படுகிறது. அந்த மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஒரு முக்கியஸ்தருக்கு ஒரு மருத்துவ ஸ்பெஷ்லிஸ்டின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் தேவை என்றால், அவர் எந்த மதம் என்று பார்த்துக் கொண்டா இருப்பார்கள்?’’ என்றார்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் நடத்தப்படப் போவது சுயநிதிக் கல்லூரிகள் தானே ஒழிய, இலவசக் கல்வி நிறுவனங்களல்ல. வாங்கப்படும் கல்விக்கட்டணத்தை வைத்துத் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் தரப் போகிறார்கள். கல்வி கட்டணம் செலுத்த முடிந்த  எல்லா மதத்தை சேர்ந்த மாணவர்களும் சேரலாம் என்பதே யதார்த்தம். அந்த வகையில் பார்க்கும் போது பல மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் தரும் கல்விக் கட்டணத்தால் நடத்தப்படும் ஒரு அரசு கல்வி நிறுவனம் ஒரு சில துறைகளில் திறமைசாலிகளாக கிடைக்கும் ஆசிரியர்களை மதத்தின் பெயரால் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

பல கிறிஸ்துவ மற்றும் சிறுபான்மையினர் நடத்தி வரும் கல்வி நிலையங்களால் கோடிக் கணக்கான இந்து மாணவர்கள் பயனடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான இந்து ஆசிரியர்கள் வேலை பெற்றுள்ளனர். இன்றும் தொடரும் அந்த மரபை இன்றைய தமிழ்நாடு அரசு தொடருமா? உடைக்குமா? இந்துத்துவ அழுத்தங்களுக்கு இடம் தராமல், இதயசுத்தியோடு முடிவு எடுக்கும் ‘வில்பவர்’ இருக்கிறதா? பார்ப்போம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time