ராஜமார்த்தாண்டன், புதுவண்ணாரப் பேட்டை, சென்னை
அதிமுக அமைச்சர்கள் மீதான ரெய்டுகள் அறச்சீற்றமா? கண் துடைப்பா?
1996 திமுக ஆட்சியில்ரெய்டுக்குள்ளான முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் ரெய்டு முடிந்த கையோடு கைது செய்யப்பட்டனர்! அதிமுக ஆட்சியில் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி போன்ற அமைச்சர்களை கைது செய்து சிறையில் தள்ளினார் ஜெயலலிதா! தற்போது ரெய்டுக்கு முன்னும், பின்னும் தெனாவட்டாக பேசி வருகின்றனர் அதிமுக மாஜிக்கள்! முடிவை உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன்.
தா. மணிகண்டன், ராஜபாளையம், விருதுநகர்
சசிகலாவுக்கு சிறைக்கு சென்ற பொழுது இருந்த தைரியம் கூட இப்பொழுது இல்லையே? இவ்வளவு வருடங்கள் ஜெயலலிதாவிடம் இருந்தும் அரசியலை கற்றுக் கொள்ளவில்லையோ?
சிறைக்கு சென்ற போது கட்சியும், ஆட்சியும் அவருடையதாக இருந்தது!
சிறையில் இருந்து வெளியேறிய போது இரண்டுமே இல்லாமல் போனது!
அது சரி, ஜெயலலிதாவிடம் அவர் அரசியல் கற்பதற்காகவா உடன் இருந்தார்?
சோ.கார்த்திகேயன், சென்னை
மது விற்பனையை அரசே நடத்துவது ஏற்க தக்கதாக இல்லை.. மீண்டும் தனியாரிடம் செல்ல வாய்ப்பு உள்ளதா ?
ருசி கண்ட பூனைகள் விட்டுத்தராது.
க.அம்புஜம், ஸ்ரீரங்கம்,திருச்சி
தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு குறித்து உங்கள் மதிப்பீடு?
அவரைப் பற்றி எழுத்தாளர்,பேச்சாளர் என்ற பிம்பமே என் மனதில் ஆரம்பத்திலிருந்து ஆழமாக படிந்திருந்தது. ஆனால், தற்போது அவர் முற்றிலும் வேறு அவதாராம் எடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. சோர்வில்லா கடும் உழைப்பு, நேர்மையான நிர்வாகத்தை இயன்ற வரை சாத்தியப்படுத்த வேண்டும் என்ற தவிப்பு, இடையிடையே களப்பணிகள் என்று சுற்றிச் சுழன்று வருகிறார்! தலைமைச் செயலாளர் இறையன்பு ஆட்சிக்கு பலம்! மக்களுக்கு வரம்!
சிம்மக்குரல்.கு நெடுமாறன்,சென்னை-96
காவல்துறையின் செயல்பாடுகள் செயல் இழந்து விட்டதா? செயல் இழக்கச் செய்யப் பட்டதா?
கேள்விக்கு அடுத்தபடியாக பதிலையும் நீங்களே சொல்லி உள்ளீர்கள்!
காவல்துறையில் அரசியல் நுழைந்தது! அறம் வீழ்ந்தது!
பணமும், அதிகாரமும் அதன் செயல்பாடுகளைச் சிதைத்தது!
விலைவாசி உயர்வு மூச்சு முட்டும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது! அதன் முடிவு என்னவாகும்.?
இன்னும் சில வருடங்களில் நடுத்தர வர்க்கமே இல்லாமல் ஏழை, பணக்காரன் என்ற இரு வர்க்கமே நிலைக்க வாய்ப்புள்ளது.
க.நரசிம்மன்,பொள்ளாச்சி
திமுக ஆட்சிக்கு வந்தால் மாறன் பிரதர்ஸ் ஆட்டம் மட்டுமீறி இருக்குமே? இந்த முறை திருந்திவிட்டார்களோ..?
ஹாஹாஹா…திருந்துவதாவது! அவங்க அகராதியிலேயே கிடையாது!
அண்ணாத்தே ரிலீசில் திரையரங்க உரிமையாளர்கள் சந்திக்கும் அட்ராசிட்டியை கேட்டால் அதிர்கிறது. ரிலீஸ் உரிமையை பெற்ற ரெட்ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி பேரும் சேர்ந்து டேமேஜ் ஆகிக் கொண்டுள்ளது! வரலாறு காணாத வியாபார நெருக்கடியாக இருக்கிறது! திரையரங்க வசூலில் 50;50 ஷேர் கேட்பார்கள். ஆனால், 75;25 கேட்கிறார்களாம்! திரையரங்க உரிமையாளர்கள் பேசமுடியாமல் தவிக்கின்றனர்.
ராதாமனோகர், அவிநாசி, கோவை
அந்தக்கால சாவித்திரிக்கு இணையாக இந்தக் காலத்தில் எந்த நடிகையை சொல்வீர்கள்?
ஜோதிகா! துடுக்குத்தனம், காதல், பாசம், தைரியம் ஆகியவற்றை அநாயசமாக வெளிப் படுத்துவதைப் பார்க்கும் போது ஜோவை இந்தக்கால நடிகையர் திலகம் என்றே சொல்லத் தோன்றுகிறது!
எம்.ராஜேஷ், திருக்கழுக்குன்றம்
நீங்கள் பார்த்து பிரமித்த மாபெரும் அரசியல்வாதி யார்?
ஜார்ஜ் பெர்னாண்டஸ்! மாபெரும் தொழிற்சங்கத் தலைவர். சோஷலிஸ்ட். அபாரமான அறிவாற்றல், விஷயங்களை கிரகித்து உள்வாங்கி முடிவெடுக்கும் வேகம், சலிப்பில்லா கடும் உழைப்பு, பன்மொழித் திறமை, எளிமை, தோழமை ஆகியவற்றில் தலை சிறந்தவர். கார்க்கில் போர் நடந்த போது 21,000 அடி உயர சியாச்சின் பனிமலை சிகரத்திற்கு – அதற்கு முன்போ, பின்போ எந்த இராணுவ அமைச்சரும் ஒரு முறை கூட சென்றிராத படுகுளிர் பகுதிக்கு – 32 முறை விசிட் அடித்தவர்!
Also read
க.அன்பழகன், சென்னை
பெட்ரோல்,டீசல் விலை நூறைக் கடந்து உயர்ந்து கொண்டுள்ளது. எங்களைப் போன்ற சுற்றுலா கார் தொழிலை நம்பி உள்ளவர்கள் – தற்போது தான் கொரோனா முடக்கத்தில் இருந்து மீண்ட நிலையில் – மீண்டும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். எங்கள் தீர்வுக்கு வழி என்ன?
நரேந்திர மோடிக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை விலாசம் மாற்றி அனுப்பிவிட்டீர்கள். கொஞ்சம் பொறுங்கள், அவர் அதானி, அம்பானி, ரத்தன்டாடா, இந்துஜா பிரதர்ஸ், சைரஸ் பூனேவலா, லட்சுமி மிட்டல்..போன்றோருடன் அளாவளாவிக் கொண்டிருக்கிறார்….! ஊகும்…., நம்ம பக்கம் திரும்பினாத் தானே!
குறிப்பு;
https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8
கேள்வி கேட்க விரும்புபவர்கள் இந்த லின்கில் சொடுக்கி கேள்வியை பதிவு செய்யலாம்.
George Fernandes had been caught by Tehelka Sting Operation.
Hello to every single one, it’s truly a pleasant for me to visit
this web page, it consists of precious Information.