என்கெளண்டர்கள் எதற்காக? யாரைத் திருப்திபடுத்த..?

- அ.மார்க்ஸ்

புதிய கவர்னர் ஆர்.என்.ரவி வந்த பிறகு திமுக அரசு சட்டம், ஒழுங்கில் தன்னை, அசகாய சூரனாக காட்டிக் கொள்ள அதிரடியாக மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களை கைது செய்து, ”ரவுடிகளை ஒடுக்குகிறோம்” என்றது. சமீபத்தில் தூத்துக்குடியில் இளைஞர் துரைமுருகன் என்கெளண்டரால் கொல்லப்பட்டார். அதன் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில இளைஞர்   முர்துஷா ஷேக் கொல்லப்பட்டுள்ளார். ”களத்தில் இறங்கி உண்மையைக் கண்டறிந்தால், காவல்துறையின் மீது சந்தேகம் வலுக்கிறது”  என்கிறது தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO).                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    ஸ்ரீபெரும்புதூர் அருகில் சுங்கச் சாவடி பெண் ஊழியர் இந்திராவின் 5 சவரன் நகையைப் பறித்துச் சென்ற இரு இளைஞர்களில் முர்துஷா ஷேக் (30) கடந்த அக் 11 அன்று தமிழக காவல்துறையால் என்கவுண்டரில்  கொல்லப்பட்டார். இது குறித்த உண்மைகளை அறிந்து அறிக்கை அளிக்கும் நோக்கில் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொண்டது.

எழுத்தாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான அ.மார்க்ஸ் ஒருங்கிணைப்பில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் செந்தில், கோவை நவ்ஃபல், வழக்குரைஞர்க்ள்  ஃபக்ருதீன், கி.நடராசன்,காஞ்சிபுரம் அயூப், இர்ஷாத், காஜா மொஹிதீன், ஸ்ரீபெரும்புதூர் ஃபெரோஜ் கான், சுங்குவார் சத்திரம் யு.சர்புதீன் ஆகியோர் களம் இறங்கி தீவிர விசாரணை நடத்தினர்.

நடந்தது என்ன என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஊர் மக்களும் சொல்வது:

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பணி செய்யும் இந்திரா சென்ற ஆக 10 அன்று காலை சுமார் 8 மணி அளவில் சென்னை செல்லும் பொருட்டு சுங்கச் சாவடி அருகில் உள்ள EB  காலனி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது  இரு வடமாநிலத்தவர் இந்திராவிடம் சென்று ஏதோ வழி கேட்பவர்கள் போலப் பேசி, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைத் அறுத்துக் கொண்டு ஓடினர்.  இந்திரா அலறியதைக் கேட்ட அங்கிருந்த ஒரு சிலர் அவர்களை விரட்டிப் பிடிக்க முனைந்தபோது, அவ் இருவரும் அங்கிருந்த காட்டுப் பகுதியுள் நுழைந்து மறைந்துள்ளனர்.  இவர்களை இந்திராவின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் தேடியுள்ளனர்.

இந்நிலையில் இருங்காட்டுக் கோட்டைப் பகுதியில் காவல்துறையினர் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அன்று அந்தக் காட்டுப் பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்தும் முர்துஜா ஷேக்கை என்கவுண்டர் செய்து சுட்டுக் கொன்றது குறித்தும் ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர், எஸ். கிருஷ்ணகுமார் தனது முதல் தகவல் அறிக்கையில் கூறுவது:”செயின் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்தது . அக்டோபர் 11 காலை சுமார் ஏழு மணி அளவில் காரந்தாங்கல் அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தபோது சந்தேகத்துக்குரிய நபர் ஒளிந்திருந்தார். விசாரணையில் அந்த நபர் ஜார்கண்ட் மாநிலத்தின் நெயிம் அக்தர் எனத் தெரியவந்தது. அவரை விசாரித்தபோது  சொன்ன தகவலின் அடிப்படையில்  அவரது கூட்டாளியான மோர்துஜா ஷேக்கை பிடிக்க special team  படூர் காட்டுப் பகுதியைச் சென்றடைந்தோம். அங்கு மதியம் சுமார் 1 மணி அளவில் அடர்ந்த புதரில் இருந்து ஒரு நபர் ஓடி வந்து  தலைமைக் காவலர் மோகன்ராஜை அரிவாளால் தாக்க முற்பட்டார். அவர் தடுத்தபோது இடது கை புஜத்தில் பலமான வெட்டுப்பட்டது. மோகன்ராஜ் நிலைகுலைந்து தடுமாறி வீழ்ந்தபோது, அந்த நபர் தன் துப்பாக்கியால் சுட முயன்றபோது நான் அவரை தற்காப்பிற்காக இரண்டு முறை சுட்டேன். ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு முர்துஜா ஷேக்கைக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டார் என ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தன் வாக்குமூலத்தை முடிக்கிறார்.

மொத்தத்தில் இது ஒரு வழக்கமான காவல்துறை என்கவுண்டர் படுகொலைதான் என்பது தெரிகிறது. அவரிடம் இருந்த துப்பாக்கியின் முன்பகுதி காணாமற் போனபின் அதைப் பயன்படுத்த முடியாது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. எனவே அந்த பயனற்ற பாதித் துப்பாக்கியைக் காட்டி சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மிரட்டினார், அதனால் சுட்டோம் என்பது ஏற்க இயலாத ஒன்று.

சுங்கச் சாவடி ஊழியர் இந்திராவின் சங்கிலியை அறுத்த இருவரில் மற்றொருவர் பெயர் மத்புல் ஷேக் என்றும், அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் சகோதரன் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மத்புல்ஷேக் இப்போது தீவிரமாகத் தேடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துர்ஷா ஷேக்கைக் கைது செய்து விசாரித்திருக்கலாம். நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனைகள் வாங்கித் தந்திருக்கலாம். என்கவுண்டர் செய்திருப்பதற்கான அவசியம் இல்லை. அந்த நபர் நகையைப் பறித்தபோது கூட இந்திராவையோ, துரத்தியவர்களையோ துப்பாக்கியைக் காட்டி மிரட்டவுமில்லை. அவரை இப்படிச் சுட்டுக் கொன்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைச் சொன்னோம்.

ஆனால்,DGP திரு சத்தியப் பிரியா முர்துஜாவை என்கவுண்டர் செய்தது குறித்து, ”I am convinced” என்றார். முர்துஜாவால் கத்தியால் வெட்டப்பட்ட காவலர் மோகன்ராஜுக்குக் கடுமையான காயம் பட்டுள்ளதாகவும், அவருக்கு இன்னும் தீவிரமான சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது எனவும் கூறினார்.

ஆகவே, கத்தியால் வெட்டியதாகக் கூறப்படும் அந்தத் தலைமைக் காவலர் மோகன் ராஜ் சிகிச்சை பெறும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். நாங்கள்  மருத்துவமனை  வார்டுக்குச் சென்றபோது அவர் அங்கில்லை. பக்கத்தில் இருந்தவர்கள் அவர் அன்று மதியம் வீட்டுக்குக் குளிக்கப் போனார், இன்னும் வரவில்லை எனக் கூறினார்கள். தினசரி அவர் வீட்டுக்குச் சென்று தன் தினசரிக் கடமைகளை முடித்து வருவது தெரிந்தது. பின் நாங்கள் அந்த வார்டுக்குப் பொறுப்பாக உள்ள செவிலியரைச் சென்று விசாரித்தோம். சிகிச்சை முடிந்து இன்று மோகன்ராஜ் ”டிஸ்சார்ஜ்” செய்யப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் தலைமைக் காவலர் மோகன் ராஜுக்கு அப்படி ஒன்றும் பெரிய வெட்டுக் காயம் ஏதும் இல்லை என்பது விளங்கியது.

காரந்தாங்கல் கிராமத்தவர்கள் கருத்து

பெங்களூரு நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.. இங்கு பணி செய்யும் வடமாநிலத்தவர்கள் பெரிய அளவில் நெடுஞ்சாலை ஓரமுள்ள காரந்தாங்கல் கிராமத்தில்தான் வசிக்கின்றனர்.

நாங்கள் சந்தித்துப் பேசிய அத்தனை பேர்களும் அங்கு தங்கியுள்ள வடமாநிலத்தவர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்டதை இங்கே பதிவு செய்வது அவசியம். பெரும்பாலும் ஜார்கண்ட், மே வங்கம், ஒடிஷா, பிஹார் முதலான மாநிலத்தவர்களான இவர்களுக்கு எந்த அடிப்படையில் வீடுகளை வாடகைக்குத் தருகிறீர்கள் எனக் கேட்டபோது, ”ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வீடுகளை வாடகைக்குத் தருகிறோம். அவர்களால் இதுவரை அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை” என்றார்.

கொள்ளையர்கள் வசித்ததாகச் சொல்லப்படும் அந்தத் தெருவில் ஒரு முன்னாள் கவுன்சிலரைச் சந்தித்தோம். வி.சி.க வைச் சேர்ந்த அவரும் அருகில் உள்ள ஒரு வீட்டைக் காட்டி அதற்குள்தான் இருந்தார்கள் எனச் சொல்லப்படுவதாகவும், அங்கு யார் இருந்தார்கள், எத்தனை பேர்கள் இருந்தார்கள் என்றெல்லாம் தனக்கு மட்டுமல்ல, அங்கு யாருக்கும் தெரியாது எனவும் சொன்னார். அவர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீட்டுக்குச் சென்றபோது, அது ஒரு பாழடைந்த குடிசை. எங்களைப் பார்த்துவிட்டு அந்த வீட்டுக்குள் படுத்திருந்த இரு நாய்கள் வெளியே ஓடின. அங்குதான் அவர்கள் இருந்தனர் என்பது நம்ப இயலாததாகவே இருந்தது.

மொத்தத்தில் அப்பகுதி மக்களுக்கு தங்கள் மத்தியில் வசித்த இந்த வடமாநில மக்கள் குறித்து எந்தப் புகாரும் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடிந்தது.

எங்கள் குழுவின் பார்வைகளும் கோரிக்கைகளும்

#  காரந்தாங்கல் கிராமத்தில் எங்கள் குழு விசாரித்தபோது அக் 11 அன்று காலை ஒரு வட மாநிலத்தவரைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றதாகக் கூறுகின்றனர். சிலர் இரண்டு பேர்கள் எனவும் கூறினர். அன்று காலை அப்பகுதி பரபரப்பாய் இருந்ததையும் அம் மக்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். அப்படிப் பிடிக்கப்பட்டவர் நயிம் அக்தர் எனும் ஜார்கண்ட் மாநிலத்தவர் எனவும் அவரது டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டுதான் முர்துஜா ஷேக்கின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவர் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார் என்கிற கருத்து ஒன்றும் உள்ளது. அந்த நயிம் அக்தர் தற்போது ரிமாண்ட் செய்யப்பட்டுச் சிறையில் உள்ளார்.

# முர்துஜா ஷேக்கும் இன்னொருவரும் வழிப்பறி செய்து நகையைப் பறித்துச் சென்றனர் என்பது குற்றச்சாட்டு. அவர்கள் கைது செய்யப்பட்டு. வழக்குத் தொடுத்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. சுமார் 300 ஆயுதம் தாங்கிய படையுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில் காவல்துறையினர் அவர்களை எளிதில் உயிருடன் பிடித்திருக்க முடியும். கொன்றுதான் பிடிக்க வேண்டும் என்பதற்கு அங்கு அவசியம் இருக்கவில்லை. காவல்துறை சொல்லும் கதையில் நியாயமோ, நம்பகத் தன்மையோ இல்லை. நகைப் பறிப்புச் சம்பவம் நடந்தது அக் 10. அடுத்த நாள் காலையே அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் செய்தி பரப்பப்பட்டபோதே ஏதோ நடக்கப்போகிறது என்கிற அச்சம் ஏற்பட்டது.

# இந்திராவிடமிருந்து செயின் அறுக்கப்பட்ட சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கையைத் தரவிறக்கம் செய்து பார்க்க இயலாதவாறு வைக்கப்பட்டுள்ளதன் காரணமும் விளங்கவில்லை.

# மொத்தத்தில் இது ஒரு அப்பட்டமான போலி மோதல் படுகொலை. இது குறித்து வழக்கு விசாரணையை என்கவுண்டர் செய்த காவல்துறையினரிடமே கொடுத்தால் நீதி கிடைக்காது. CBCID போன்ற வேறு புலனாய்வு முகமை ஒன்றிடம் இந்த விசாரணை ஒப்புவிக்கப்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்பட வேண்டும்.

# போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

எந்தப் பிரச்சினையையும் சாதி, மதம், இனம் என்கிற ரீதியில் பார்க்கப்படும் இன்றைய சூழலில் இந்தப் பிரச்சினை அப்படியான ஒரு கோணத்தில் இதுவரை அணுகப்படாதது  ஆறுதலாக இருக்கிறது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலத்தவர் என்றால் வெறுப்பாகப் பார்க்கும் ஒரு நிலை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது வருந்தத் தக்கது.

தமிழகத்தில் புதிய ஆட்சி உருவாகியுள்ள இந்தச் சில மாதங்களில் எதிர்க்கட்சிகளாக உள்ள பா.ஜ.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகியக் கூட்டணிக் கட்சிகள் இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதும் இந்த என்கவுண்டர் படுகொலைக்குப் பின்னணியாக உள்ளது எனவும் கூறலாம். இந்த என்கவுண்டர் நடந்த அடுத்த இரண்டு நாட்களில் தூத்துக்குடியிலும் ஒரு என்கவுண்டர் கொலை நடந்துள்ளதையும் காண்கிறோம். இப்படி அரசியல் நோக்கங்கள் குடிமக்களின் உயிர் பறிப்பிற்குக் காரணமாவது வேதனைக்குரியது. கண்டிக்கத் தக்கது.

கட்டுரையாளர் அ.மார்க்ஸ் ; 

தேசிய மனித உரிமை அமைப்புகளின் தேசியத் தலைவர், எழுத்தாளர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time