காசி மாணிக்கம், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்
‘மோசடி செய்தவர்கள் உலகில் எங்கும் ஓடி ஒளிய முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறாரே ‘ பிரதமர் மோடி?
உலகில் எங்கு ஒளிந்தாலும் நடவடிக்கை எடுத்துவிடலாம் தான். பாஜகவிற்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனரே!
ப.சரஸ்வதி, சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம்
‘கரோனா மூன்றாவது அலை ஜனவரி,பிப்ரவரியில் தொடங்க வாய்ப்பிருப்பதாக’ சுகாதாரத்துறையினர் சொல்கிறார்களே?
சுகாதாரத்துறை ஜோசியத்துறையாகிவிட்டதா?
இதை திட்டமிட்டு பரப்புகிறார்களா..? அல்லது பரப்புபவர்களின் குரலாக ஒலிக்கிறார்களா?
செந்தில், ஜாபகர்கான்பேட்டை, சென்னை
எடப்பாடி உள்ளிட்ட அதிமுக முன்னாள் மாஜிக்கள் ஆளுநரை சந்தித்துள்ளார்களே..?
ஆளுநர் மாளிகை அபயம் தேடுபவர்களின் அடைக்கலமா? ரெய்டுகள் என்பது கைதுகளுக்கு நகருமா? தடைபடுமா? பார்ப்போம், பொறுத்திருந்து!
அப்துல்காதர், வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம்
ரஜினியின் ‘அண்ணாத்தே’ பாடல்கள் போதுமான கவனம் பெறவில்லையே..? ஏன்..?
உண்மைதான்! விஜய், அஜித், தனுஷ், சூர்யா படப்பாடல்கள் ஒரு கோடிக்கு மேற்ப்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கின்றன! அதில் பாதியைத் தான் அண்ணாத்தே தொட்டுள்ளது!
அண்ணாத்தே, அண்ணாத்தே பாடல் மட்டும் எஸ்.பி.பியின் கடைசி பாடல் என்ற வகையில் கவனம் பெற்றது! சாரல் காற்றேவும், மருதாணியும் ..ம்கூம்!
அம்மா வயதுள்ள நடிகைகள், தாத்தா வயதுள்ள நடிகர்..! என்ன செய்வது? ஓடிக் களைத்த கப்பல் கரை ஒதுங்குவது இயற்கை தானே!
டேவிட், நாகர்கோவில்,குமரிமாவட்டம்
இந்தியாவிலேயே அதிக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு பத்தாயிரத்திற்கு குறையாமல் உள்ளதே?
அதிலும், கேரளாவில் கொரானா தடுப்பூசி போட்டவர்களைத் தான் அதிகம் தாக்குகிறது. கொரானாவில் இறந்தவர்களில் 57 சதவிகிதத்தினர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களே! யார் கண்டது? தடுப்பூசிக்கு தடை கோரும் போராட்டம் கேரளாவில் வெடிக்கவும் வாய்ப்புள்ளது!
ராஜமாணிக்கம், பந்தல்குடி, விருதுநகர் மாவட்டம்
‘சினிமா துறையில் கட்டபஞ்சாயத்து செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என டி.ராஜேந்தர் –உஷா தம்பதி புகார் கூறுகின்றனரே!
அவங்க மட்டுமே செஞ்சத, மத்தவங்களும் செய்வதா..? அதிரப் பேசி, அவமானபடுத்திவிட்டால், எதிர்தரப்பினர் அஞ்சி நடுங்கி வழிக்கு வருவார்கள் என்பது அதில் ஒரு யுத்த தந்திரம்! அதைத்தான் அந்த குடும்பத்தினர் தொடர்ந்து செய்கிறார்கள்!
எஸ்.கவின், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி
உள்ளாட்சி தேர்தலில் பணம் பெருங்காற்றியிருக்கும் நிலையில், நேர்மையான நிர்வாகத்தைப்பெற நீங்கள் மக்களுக்கு சொல்லும் யோசனை என்ன…?
யோசனையெல்லாம் யாருக்கு தேவை? நேர்மையான நிர்வாகத்தை பற்றி கவலைப்படாத மக்களால் தான் பணம் விளையாடி இருக்கிறது! அனுபவித்து பாடம் பெறட்டும்.
மருதமுத்து, கரூர்
சர்வாதிகாரி ஹிட்லர், கொடுங்கோலன் இடிஅமின் போன்றவர்கள் ஆட்சி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போது அது போன்று இந்தியாவில் நடப்பதாக தோன்றுகிறது. இந்த உணர்வு சரிதானா?
ஹிட்லரின் நாஜி கட்சி வருங்காலத்தில் பேரழிவை நிகழ்த்த அதற்கான சூழலை உருவாக்க அன்று என்னென்ன செய்ததோ அவை அனைத்தையும் இன்று பாஜக செய்து வருகின்றது! பாஸிசத்தை நோக்கிய நகர்வு என்பதே சரியாக இருக்கும்.
சிபி, பேரளையூர், கடலூர்
‘தமிழ் இந்து என்பது இந்துத்துவத்திற்கு மாற்று’ என பெ. மணியரசன் கூறுவது சரியா?
பெ.மணியரசனின் தமிழ்த் தேசிய பேரியக்கம் தன்னை தமிழ்த் தேசிய பாஜகவாக மாற்றிக் கொண்டதாகப் புரிந்து கொள்கிறேன்.
ப. சிங்காரம் நாவல்கள் குறித்துக் கூறுங்கள்.
புலம்பெயர் இலக்கியத்தின் முன்னோடி ப.சிங்காரம். ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ ஆகிய இரு நாவல்களை மட்டுமே எழுதி நீங்காப் புகழ் பெற்றவர். மன்னிக்கவும், நான் இது வரை வாசித்ததில்லை.
தயாளன், தாம்பரம், செங்கல்பட்டு
நாம் தமிழர் பாஜகவின் B டீம் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
ஒத்துக் கொள்ளமாட்டேன். நாம் தமிழர் தான் உண்மையான – ஒரளவு பலமான – தமிழக பாஜக!
Also read
இராமநாதன், தல்லாகுளம் , மதுரை
வைகோவின் மகன் துரைவையாபுரி மதிமுகவின் தலைமைக்கு அடையாளப் படுத்தப்பட்டுள்ளது பற்றி..?
‘கொள்கைக் குன்றாக’ மதிமுகவை நினைத்திருந்த தொண்டர்களுக்கு ‘இல்லை இது குடும்ப சொத்து’ என உணர்த்தியுள்ளார் வைகோ! மகனைக் கொண்டு மதிமுகவிற்கு முடிவுரை எழுதுகிறார்!
மு.ராஜலிங்கம், சிதம்பரம்
பஞ்சாபில் அமீந்தர்சிங் புதுக் கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டு சேர்கிறாராமே..?
80 வயதில் தன் எதிர்கால அரசியலுக்காக, காலமெல்லாம் எதிர்த்தவர்களோடு கைகோர்கிறார்!
அடங்காத அதிகாரப் பசி, அவமானங்களையே பெற்றுத் தரும்!
குறிப்பு;
https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8
கேள்வி கேட்க விரும்புபவர்கள் இந்த லின்கில் சொடுக்கி கேள்வியை பதிவு செய்யலாம்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தை தமிழ்த தேசிய பாஜக என்பது மிகவும் தவறு. தமிழ் தேசியப் பேரியக்கம் குறித்துக் கட்டமைக்கப்படும் பொது புத்தியிலிருந்து வெளிப்படும் எதிர் வினையாகவே உங்கள் விமர்சனத்தைப் பார்க்கிறேன். இத்தகைய “பெயர் சூட்டல்களுக்கு’ எத்தகைய ஆய்வும் தேவையில்லை. எந்த இயக்கமும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் நலன் சார்ந்து இயஙகிவரும் ஒரு இயக்கத்தை நீங்கள் ஆய்வுபூர்வமாக விமர்சிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
இதிகாசக் காலம் முதல் இன்று வரை மந்தை மந்தையாக பார்ப்பனியத்துக்கு அடியாட்களும், அவர்களுக்கு தளபதிகளும் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அன்று குரங்குக் கூட்டமாக, அனுமானாக, விபிசணனாக. இன்று பெரியரை மறுக்கும் தமிழ்த் தேசியவாதிகளாக, நாம் தமிழர் கட்சியாக, சீமானாக, மணியரசனாக…
திருடனுக்குத் தேள் கொட்டியது போல இந்துத்துவத்திற்கு, பச்சை சனாதனத்திற்கு கூலிப்படையாக இருந்து ஆள் சேர்க்கும் சீமானும், மணியரசனும் வெளிப்பட்டு மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சைவ சமயத்திற்கு திரும்பச் சொல்லும் சீமான் முதலில் இந்து மதத்திலிருந்து சைவத்தை மீட்க வேண்டியதுதானே. முருகனை பார்ப்பானுக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் அறுபடை வீடுகளில் இருக்கும் பார்ப்பனரை வெளியேற்றப் போராடலாமே? முருகனின் பெயரை மாற்றி சுப்பிரமணியன் (பார்ப்பானுக்கு நல்லவன்) என்று வைத்திருக்கும் முருகன் என்னும் தமிழை மீட்கப் போராடலாமே?
உண்மையான தமிழ்த் தேசியவாதியாக இருந்தால், சாதியால் பிளவுண்டு ஒன்று பட முடியாமல் உட்பகை நோயில் சிக்கிச் சீரழியும் தமிழகத்தை மீட்க “தமிழர்களே இந்து மதத்திலிருந்து வெளியேறுங்கள்” என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்! அதை விடுத்து, தம்மீது காலங்காலமாக அப்பியிருந்த சாதி இழிவைக் கழுவி, தூய்மையான இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் மீண்டும் இந்து மதத்திற்கு (சைவமும் இந்து மதத்தின் ஒரு பிரிவே) அழைக்கும் குடிகேடிகள் எவ்வளவு பெரிய அயோக்கியர்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரிந்து விட்டது இப்போது.
இன்னும் சொல்லப் போனால் சைவமும் தமிழர்கள் மதமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், தமிழ் நாட்டில் எந்தச் சிற்றூர்களிலும் சிவனுக்கும் முருகனுக்கும் கோயில் கிடையாது. அது பெருந்தெய்வ வழிபாட்டில் அடக்கம். தமிழர்களின் நடுகல் வழிபாட்டில் இருந்த முருகனை சிவனுக்கு மகனாக்கி தெய்வானைக்கு கணவனாக்கி காசு பணம் பார்க்க பார்ப்பனர்கள் திருடிக் கொண்டு போய் விட்டார்கள். பட்டி தொட்டியெல்லம் வழிபடக்கூடிய இசக்கி அம்மனும், சுடலை மாடனும், முனியும், ஐயனாரும்தான் தமிழ்க் கடவுள்கள். இவர்களுக்கு அவதாரங்கள் கிடையாது. தேவலோகம் கிடையாது. மக்களைப் போல் மழையிலும் வெயிலிலும் காய்ந்து கிடக்கும் காட்டுத் தெய்வங்கள். இவை அனைத்தும் முன்னோர் வழிபாடே. இவர்களை வழிபட பூசாரிகளும் தேவையில்லை. பூசை பொருள்களும் தேவை இல்லை. வேலைக்குப் போகும்போதும், வரும்போதும் வணங்கி விட்டுப் போகலாம்.
தான் கெட்டது போதாதென்று தனக்குப் பின்னால் ஒரு பெருந்திரளாய் இளைஞர்களைத் திரட்டி தமிழ் இனத்திற்கு எதிராக, சனாதனத்திற்கு அடிமை சேவகம் செய்யும் கோடாரிக் காம்புகளை இதுவரை வரலாறு கண்டதில்லை. கருணா கூட துரோகியான பின்பு வெளிப்படையாக எதிரியுடன் நின்றான். பார்ப்பன எச்சிக் கஞ்சி குடித்த ம.பொ.சியும் வெளிப்படையாக நின்றார். இன்று ‘நாம் தமிழர்’ வேடமிட்டு களம் இறங்கி நிற்கும் சீமானும், மணியரசனும் போட்டிருக்கும் வேசம் ஆபத்தானது. அமுதம் என்னும் புட்டியில் நிரம்பி வழியும் நஞ்சே இருவரும்.
சீமானுக்கும் மணியரசனுக்கும் பின்னால் திரளும் தம்பிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்த்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் தமிழீழத் தேசிய விடுதலைக்கான தலைவர். அவர் தனக்கு முன்மாதிரி என்று சொன்ன இந்தியத் தலைவர் சுபாஸ் சந்திர போஸ் அவர்கள். அந்த சுபாஸ் சந்திரபோஸ் இந்திய விடுதலைக்கு படை அமைத்து ஆயுதங்களோடு களத்தில் நின்றவர். அவரைப் போல தலைவர் பிரபாகரனும் படை அமைத்து களத்தில் நின்று தன் குடும்பம் முற்றும் இழந்தவர். அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற தலைவர் பிரபாகரனே என் தலைவர் என்று ஊளையிடும் சீமான் ஏன் அரசியல் களத்தில் நின்று முதல்வர் கனவு காண்கிறார்? இந்திய தேசியத்தை எதிர்த்து தமிழ்த் தேசிய விடுதலைக்கு படை கட்டவில்லையே? மேதகு தலைவர் பிரபாகரன் படத்தைப் போட்டு, அவரது கூட்டாளி மணியரசன் சொல்வதுபோல, இந்திய கங்காணி வேலைக்கு ஏன் அணி திரட்டுகிறார்? தலைவர் படத்தைப் போட்டு போர்க்களத்தில் நிற்காமல் கோமாளி மாதிரி பல்லை இளித்துக் கொண்டு இனத்தைக் காட்டிக் கொடுக்கும் இழி செயலை ஏன் செய்கிறார் சீமான்?
இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழத் தேசிய விடுதலைக்காகப் போராடியவர். அவர் படத்தைப் போட்டு அரசியல் செய்வதிலேயே தெரிய வேண்டாமா சீமான் போலி தமிழ்த் தேசியவாதிதான் என்று. நம்மிடம் தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன் வைத்து களமிறங்கிய தோழர் தமிழரசன், அய்யா பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் போன்றவர்கள் படத்தைப் போட்டு ஏன் அரசியல் செய்யவில்லை? அவர்கள் முன் வைத்த முழக்கத்தை சீமானும் மணியரசனும் ஏன் முன் வைக்கவில்லை? அய்யா பாவலரேறு பெருஞ்சித்திரனார் முன் வைத்த….
“‘இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும். இந்து மதம் இருக்கும்வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாத வரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாத வரை, தமிழ் மொழி தூய்மையுறாது; தமிழினம் தலை தூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே, இந்து மதத்தினின்றும், மதப் பூசல்களினின்றும், ஆரியப் பார்ப்பதினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடியினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே, தமிழக விடுதலைதான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்” என்ற தூய தமிழ்த் தேசத்தின் வித்தான சொற்றொடரை என்றேனும் மணிரசனும் சீமானும் முழங்கினார்களா? அல்லது முனங்கியாவது இருப்பார்களா?
தமிழ்த் தேசியம் என்பது தனிநாடு கோரிக்கையை உட்கொண்ட கருத்தியல். அதில் எள்ளளவும் பயணிக்காமல் நாக்பூரில் தைத்துக் கொடுத்த நாம் தமிழர் கட்சிக் கொடியை பிடித்துக் கொண்டும், கோவணத்தைக் கட்டிக் கொண்டும் இங்கே களமிறங்கினால் மக்களுக்குத் தெரியாமல் போய் விடுமா என்ன?
உலகெல்லாம் பனிரெண்டு கோடித் தமிழர்கள் இருந்தும் அவர்களுக்கென்று இந்த பூமியில் கால்படி மண் கூட சொந்தம் கிடையாது. நம் மண்ணும், மொழியும், பண்பாடும் அடிமைப் பட்டுக் கிடக்கிறது. அது இந்தியாவில் பார்ப்பனர்களிடமும் இலங்கையில் சிங்களவரிடமும் தான் கிடக்கிறது.
யார் நம்மை அடிமையாக வைத்திருக்கிறார்களோ அவர்களே எதிரிகள். அவர்களை நோக்கியே நம் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். அதை விடுத்து சீமானும், மணியரசனும் செய்யும் அரசியல் நம்மிடம் இருக்கும் இந்த மாநில மண்ணையும் இழக்க வழிவகை செய்யும். நம்மை இந்தியத் தெருக்களில் நாயாக அலைய விடவே இருவரும் வேலை செய்கிறார்கள்.