ஒ.பி.எஸ் ஒழிக்கப்படுவாரா? ஒடுங்கிப் போவாரா?

சாவித்திரி கண்ணன்

அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் உக்கிரமடைந்து கொண்டிருக்கின்றன!

ஒ.பி.எஸின் எதிர்காலம் என்னாகும்…?என்பது தான் அதிமுகவில் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிர்ஷ்டவசமாக ஆட்சி அதிகாரத்தை இன்னும் சுவைத்துக் கொண்டிருக்கிறது அதிமுக! ஆட்சியின் தலைமை தன்வசம் இருப்பதைப் பயன்படுத்தி இ.பி.எஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்வதோடு, ஒ.பி.எஸை முடிந்த அளவுக்கு அழுத்தி வருகிறார்! இதனால் இ.பி.எஸும் தானும் இரட்டையர்களாக வலம் வர நினைத்த ஒ.பி.எஸ்ஸின் எண்ணத்தில் மண் விழுந்துவிட்டதால், தன்னைத் தக்கவைத்துக் கொள்ள கடும் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ஒ.பி.எஸ்!

இலைமறைவு காய்மறைவாக நடந்து கொண்டிருந்த தலைமைக்கான யுத்தம் தற்போது நேரடியாக நடந்து வருகிறது.இதில் சமாதானத்திற்கான வெள்ளைக் கொடியை காட்டிப் பார்த்து சலிப்படைந்துவிட்டார் பன்னீர்செல்வம். ஆனால், ’’நான் விரும்புவது சமாதானமல்ல சரண்டர்’’ என இ.பி.எஸ் ஒ.பி.எஸுக்கு உணர்த்திவிட்டார்…! இனி பன்னீர் என்ன செய்யப் போகிறார் என்பதை பல கோணங்களிலும் விவாதிக்கிறது இந்தக் கட்டுரை….!

தைரியமில்லா ஒ.பி.எஸ்!

அரசியலைப் பொறுத்த வரை அடங்கி நடப்பவன் அடக்கியே வைக்கப்படுவான்! அத்துமீறுபவன் தான் அதிகாரத்திற்கு வருவான்! அண்ணா மறைவிற்குப் பிறகு அனைவரும் நெடுஞ்செழியன் தான் முதல்வராவார் என நம்பினார்கள்! அவரும் இயல்பாக முதல்வர் பதவி தனக்குத் தான் வந்து சேரும் என நம்பினார். ஆனால், கருணாநிதியோ பலவிதங்களிலும் காய் நகர்த்தி, அதை கைபற்றிக் கொண்டார்! அதே போல, ஏற்கனவே இரு முறை முதல்வர் பதவி வகித்துள்ளதால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இயல்பாக அனைவரும் தன்னை முதல்வராக அங்கீகரிப்பார்கள் என பன்னீர் நம்பினார். ஆனால்,சூழல்கள் வேகமாக மாறி நின்றதை அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை! தன்னை அவமானப்படுத்திவிட்டு, சசிகலா முதல்வர் ஆக முயன்றதை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அப்போது அவருக்கு மாபெரும் ஆதரவு எதிர்பாராத திக்கிலிருந்தெல்லாம் கிடைத்தது என்பதே உண்மை! காரணம், மன்னார்குடி மாபியாக்கள் என வர்ணிக்கப்பட்ட சசிகலா குடும்பம் ஆட்சிக்கு வந்தால் தமிழகமே சூறையாடப்பட்டுவிடும் என மக்கள் பயந்தனர்!

பணிவின் திலகமாக அறியப்பட்ட பன்னீர் அவமானப்படுத்தப்பட்டது மக்களுக்கு ஒரு பெரும் அனுதாபத்தை அவருக்கு பெற்றுத் தந்தது! தனக்கான ஆதரவை வளர்த்து தனிப்பெரும் சக்தியாக அவர் உருவெடுக்க அவருக்கும் தைரியமில்லை.அவரை தாங்கிபிடித்த பாஜகவும் அதற்கு அவரை அனுமதிக்கவில்லை!

துணை முதல்வர்,கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதில் அவர் திருப்தியடையாத போது, சரி,இந்த முறை எடப்பாடி முதல்வராயிருக்கட்டும்,அடுத்த முறை பன்னீருக்கு விட்டுத் தரவேண்டும் என்பதாக பாஜக சமாதானப்படுத்தி வைத்தது! ஆனால்,அப்படி நடந்துவிடக் கூடாது என அப்போதே முடிவு எடுத்துவிட்ட எடப்பாடி ஆட்சியின் ஒற்றை முகமாக தன்னை காட்டுவதில் மிகுந்த முனைப்பு காட்டி வருவதோடு,பெருமளவு முன்னேறியும் விட்டார்!

ஆரம்பத்தில் பன்னீர்செல்வத்தை அனுசரித்து அங்கீகாரம் தருவது போல பாவனை காட்டிய எடப்பாடி,மெல்ல,மெல்ல அவரை புறக்கணித்துத் தனிமைப்படுத்தினார். எந்த ஒரு விவகாரத்திலும் பன்னீர்செல்வத்தைக் கலந்து பேசுவதை முற்றிலும் தவிர்த்தார்! தன்னுடைய துறையான எம்..எம்.டி.ஏவில் செயலாளர் யார் என்பதைக் கூட தானே முடிவு செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் பன்னீர்! ஜெயலலிதா கூட தன்னை மதித்து எவ்வளவோ முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், எடப்பாடியோ எள்ளவும் பன்னீர் முக்கியத்துவம் பெறுவதை விரும்பாமல்,சமயம் வரும் போது பன்னீரை சாய்க்க காத்திருக்கிறார்!

இன்றைய நிலவரப்படி பன்னீர் மிகவும் பலவீனமாக நிற்கிறார். பன்னீர் ஆதரவாளர்கள் பலரும் கூட தற்போது எடப்பாடி பக்கம் சென்றவண்ணம் உள்ளனர். எடப்பாடி அனைவரையும் விலைபேசி வாங்கிய வண்ணமுள்ளார்.பன்னீரிடமுள்ள ஒரே துருப்புச் சீட்டு அவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பது தான்! ஆனால்,அதைத் துருப்பிடித்த அதிகாரமாக்கவும் எடப்பாடிக் காய் நகர்த்திக் கொண்டுள்ளார்!

ஆட்சி என்ற அதிகார அஸ்த்திரம்!

இன்றைய அதிமுகவை பொறுத்தவரை அந்த கட்சி உயிர்த்திருப்பதே அது ஆட்சி அதிகார வாய்ப்பிலிருப்பதால் தான்! ஆட்சியின் மூலம் ஈட்டமுடிந்த முறைகேடான செல்வத்தையும்,வாய்ப்பையும் கருதியே அங்கே அனைவரும் ஒன்றுபட்டு இருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது! இந்த அதிகாரத்தின் மூலம் அவரவருக்குமுரிய தேவைகளை நிறைவேற்றி,தொடர்ந்து அவர்களை தன் ஆதரவாளர்களாக தக்க வைத்து கொள்ளமுடியும் என்ற எளிய சூத்திரமே எடப்பாடியை தற்போது வெற்றியாளராக காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால்,ஆட்சியானது முற்ற முழுக்க ஒரு மக்கள் விரோத ஆட்சியாக நடந்து கொண்டுள்ளது என்ற புரிதல் கூட அதிமுகவினருக்கு ஏற்படவில்லை என்பது தான் வேதனை! ஆக,ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதாலும்,தேர்தலின் போது அளப்பரிய பணத்தை அள்ளி இறைப்பதாலும் தான் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக நம்புகிறார்!

கட்சி அதிகாரம் என்ற கைப்பிடி!

கட்சியில் பன்னீர் தான் அதிக அதிகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளர்! ஆனால்,தன் அதிகாரம் குறித்த எந்த தன் நம்பிக்கையும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை! உதாரணத்திற்கு அவர் மாவட்டம்தோறும் சுற்றுப் பயணம் செய்து,கட்சிக் கூட்டங்களை நடத்தி தன் வலிமையைப் பெருக்கி இருக்கலாம்! அடிக்கடி கட்சி அலுவலகத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகள் தன்னை சந்திக்க,பேசவான வாய்ப்புகளை உருவாக்கி கொண்டிருக்கலாம்! ஆனால்,தான் எதைச் செய்தாலும் அது எடப்பாடி மனதை புண்படுத்திவிடுமோ.. என்று அச்சப்பட்டவராகவே இருந்துள்ளார்! ஜெயலலிதாவிற்கு கீழ் விசுவாசமாகவே இருந்து பழக்கப்பட்டுவிட்ட பன்னீர், தான் தற்போது தனியொரு தலைவராக விஸ்வரூமெடுக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் தன்னுடைய தயக்கம் மற்றும் போதாமை காரணமாக இழந்து வருகிறார்! இன்றைய நிலையில் வரும் தேர்தலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் தான் கையெழுத்திட்டால் தான் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அங்கீகாரம் செல்லுபடியாகும் என்ற ஒரே அஸ்த்திரம் தான் அவரிடம் உள்ளது.அதன் மூலம் தன் ஆதரவாளர்கள் பலருக்கு அவர் வாய்ப்பு பெற்றுத் தரமுடியும் என்பது தான் அவருக்குள்ள ஒரே பிடிமானம்! அதை நம்பித் தான் அவர் பின்னால் ஒரு ஆதரவு கூட்டம் நிற்கிறது!

கலகத்தில் பிறப்பது தான் நீதி!

அண்ணாவிற்குப் பின்பு அரியணை ஏறிய கருணாநிதி,யாரும் அசைக்கமுடியாத ஒற்றை அதிகாரமாகத் தன்னை நிலை நிறுத்த முயன்றார்! அதில் விரக்தியடைந்தவர்கள் புழுங்கித் தவித்த போது,அதற்கு ஒரு விடியலாகப் பார்க்கப்பட்டார் எம்.ஜி.ஆர்! கணக்கு கேட்டு கட்சிக்குள் கலகம் செய்தார்!

எம்.ஜி.ஆர் ஆட்சியிலிருந்த போதே எம்.ஜி.ஆரை மீறி தன்னை ஒரு அதிகாரமாக நிலை நிறுத்திக் கொண்டவர் தான் ஜெயலலிதா! ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரே தடுத்த போதும் ஜெயலலிதாவின் செல்வாக்கை ஒழிக்கமுடியவில்லை! ஏனெனில்,எம்.ஜி.ஆருக்கு பின்பு இந்த கட்சியில் தன்னைவிட்டால் வேறுயாருமில்லை என்று ஜெயலலிதா நம்பினார்!

தற்போது,ஒ.பி.எஸ் துணை முதல்வர் என்ற அதிகாரத்திலும், ஆட்சியில் கொள்ளையடித்துத் திளைப்பதற்கான வாய்ப்புகளிலும் தான் அக்கரை காட்டினாரேயன்றி,எடப்பாடி ஒழுங்காக ஆட்சி செய்கிறாரா? அளவுக்கு மீறி அத்துமீறிச் செல்கிறாரா?…என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்,ஆட்சியின் துணை முதல்வர் என்ற நிலையில் இருந்து கொண்டு ’செக்’ வைக்க தவறிவிட்டர்! மாறாக எடப்பாடியுடன் ஒன்றாக தோன்றி, தன்னையும் வலிந்து காட்சிப்படுத்திக் கொள்வதிலேயே கவனம் குவித்தார்! அதனால்,எடப்பாடி பன்னீருக்கு ’செக்’ வைத்துவிட்டார்!

மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி ஆட்சி 1967 -1969 வரை நடந்தது.அதில் ஜோதிபாசு துணை முதல்வர்! அஜய்குமார் முகர்ஜி தான் அதிகாரம் பெற்ற முதல்வர்! ஜோதிபாசு கொள்கை வழி உறுதியாக நின்றார். முதல்வரின் தவறான போக்குகளைச் சுட்டிக் காட்டி, அவ்வப்போது ‘செக்’ வைத்தார். முதல்வர் திணறினார்.மக்களுக்கு ஜோதிபாசுவின் மீது மரியாதை கூடியது! அடுத்த தேர்தலில் முகர்ஜியை அவரது தொகுதியிலேயே தோற்கடித்து அசைக்கமுடியாத முதல்வரானார் ஜோதிபாசு! இன்றைய அதிமுகவில் இதற்கு வாய்ப்பேயில்லை! ஏனெனில்,அனைவருமே பொறுக்கித் தின்பதில் தான் குறியாக உள்ளனரேயன்றி, கொள்கை என்று எதுவுமில்லை! இந்த கட்சிக்குள் தற்போதைய மோசமான ஆட்சியை விமர்சிக்கக் கூட யாருக்கும் துப்பில்லை!

எடப்பாடி பழனிச்சாமி தன் சாதியைச் சேர்ந்த கொங்கு பணமுதலைகளை வளர்ப்பதில் அத்துமீறி அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதாக அந்த கட்சிக்குள்ளேயே ஒரு புழுக்கம் உள்ளது! இந்தச் சூழலில் சசிகலா வந்தால் கட்சிக்குள் ஒரு பெரும் சலசலப்பு தோன்றவாய்ப்புள்ளது. இதன்பிறகு இரு கோஷ்டியுமே அவரிடம் சரணடையவும் வாய்ப்புள்ளது. இதில் பாஜகவின் அணுகுமுறையும் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்தே அதிமுகவின் எதிர்கால திசை மாறக் கூடிய வாய்ப்புள்ளது.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time