அருண் பெரைரா எழுதிய Colours of Cage – A Prison Memoir.

- பீட்டர் துரைராஜ்

சிறைச்சாலையின் வித்தியாசமான அனுபவங்களைச் சொல்லும் நூலே, ‘கூண்டின் நிறங்கள் – சிறையின் நினைவுகள்’! மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதற்காக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலரான அருண்பெரைரா சிறைச்சாலையின் கொடூரங்களை அறிந்து கொள்ளவும், அதை வெளிப்படுத்தவுமான வாய்ப்பாகவும் சிறைவாழ்வை பயன்படுத்திக் கொண்டதே இந்த நூல்!

விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொண்ட விதார்பாவில் சமூகப் பணிபுரிந்த அருண்பெரைராவை நக்சல் என கைது செய்து, வழக்கு, வழக்கு, மேலும் வழக்கு என பதினோரு வழக்குகளில் கைது செய்ததையும் பிணையில் வர முடியாமல் தடுத்து தொடர்ந்து சிறைப்படுத்தியதையும் சொல்கிறது இந்த நூல்! நாக்பூரில் கைது செய்யப்பட்டு,  மகாராஷ்டிரா  சிறையில்  கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் இருந்த அருண் பெரைரா ‘Colours of the Cage – A Prison Memoir’ (கூண்டின் நிறங்கள் – சிறையின் நினைவுகள்) என்ற ஆங்கில நூலை எழுதி தனது சிறை அனுபவங்களை, 164 பக்கங்களில்  விவரித்துள்ளார்.

சிறையில் விடுதலை ஆனவுடன் இவரை வரவேற்க காத்திருக்கும் அம்மா, அப்பா கண் முன்பே,  கடத்திக்கொண்டு செல்வது என்பது ஒரு சட்ட நடவடிக்கையா ?  சமூகசேவை செய்பவர்களை ‘நக்சல்கள்’ என முத்திரை குத்துவதை எதிர்த்தும், மீண்டும், மீண்டும் தொடர்ந்து கைது செய்யப்படுவதை எதிர்த்தும் காலவரையற்ற (27 நாட்கள்)  சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

”சிறைவாசிகளுக்கு காலை 7.30 க்கு சிற்றுண்டி வழங்கப்படும்.  சிறைவாசி அன்று நீதிமன்றத்திற்கு செல்வதாக இருந்தால், அடுத்த அரைமணி நேரத்தில், அதாவது காலை 8 அவருடைய மதிய உணவை சாப்பிட்டுவிட வேண்டும். உணவு,  பொட்டலமாக தரப்படாது. சாப்பிடவில்லை யென்றால் அன்றைக்கு அந்த சிறைவாசி பசியோடு இருக்க வேண்டியதுதான்” என்கிறார் அருண் பெரைரா( Arun Ferreira) சிறைச்சாலைகள், சிறைத்துறை சீர்திருத்தம் போன்றவைகளில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நூலை வாசிக்கலாம்.

நகர்ப்புற நக்சல்கள் என முத்திரைக் குத்தப்பட்டு, ஊபா( UAPA) சட்டத்தின் கீழ், பீமா கொரேகான் வழக்கில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களில் ஒருவர்தான் அருண் பெரைரா. இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உயிர் துறந்தவர் தான் கிறிஸ்த்துவ துறவி ஸ்டேன் சாமி.

அருண் பெரைராவின் மனைவி கல்லூரி விரிவுரையாளர். தன் மனைவிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களை சிறையில் இருந்து  எழுதியுள்ளார். அந்தக் கடிதங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த நூல் 2014 ல் வெளிவந்துள்ளது. தனக்கு யார் மீதும் தனிப்பட்ட பகைமை இல்லை, இந்த அமைப்பை சீர் செய்யும் நோக்கில், தான்  எதிர்கொண்ட பாத்திரங்களுக்கு புனைப்பெயரை  குறிப்பிட்டுள்ளதாகத்  தெரிவிக்கிறார். 2018 ஆகஸ்டு முதல் பீமா கொரேகான் வழக்கில் விசாரணை இன்றி, பிணை இன்றி சிறையில் அருண் பெரைரா அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எழுதிய இந்த நூல் இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்டது.

சிறைக்குள் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. சிறைவாசிகளின் உளவியல் என்னவென்று தெரியாது. தோழர் தியாகு எழுதிய ‘சுவருக்குள் சித்திரங்கள்’, ‘கம்பிக்குள் வெளிச்சங்கள்’ என்ற நூட்களும், சி.ஏ.பாலன் எழுதிய ‘தூக்குமர நிழலில்’  நூலும் சிறை இலக்கியம்தான். அந்த வரிசையில் இந்த ஆங்கில நூலையும் நாம் சேரக்க முடியும். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் சிறையில்  இருந்த ஜூலியஸ் பூசிக்,  எழுதிய ‘தூக்குமேடைக் குறிப்புகள்’ இன்றைக்கும் விரும்பி  வாசிக்கப்படும் ஒரு நூல்.

இந்த நூலைப் படிக்கையில் ஆங்கிலேயர்கால சிறைகளுக்கும், தற்கால சிறைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை அறியலாம். லாகூர் சிறையில் பகத் சிங்கோடு  இருந்த,  ஜதீன் தாஸ் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த செப்டம்பர் 13 அன்று இறந்தார். அந்த நாளை அரசியல் கைதிகளுக்கு அங்கீகாரம் கோரும் நாளாகவும், அவர்களை நிபந்தனை இன்றி விடுதலை கோரும் நாளாகவும் இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கைதிகள்  கடைபிடித்துவருகின்றனர்.

தேசப் பாதுகாப்புச் சட்டம், ஊபா சட்டம்  இந்திய சட்டத்தில் உள்ள தேசத்துரோகக்  குற்றம், சிறப்பு ஆயுதப் படைச் சட்டம் போன்ற குரூரமான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்று முத்தாய்ப்பாகக்  கூறி நூலை முடிக்கிறார்.

சுவரின் ஓரமாக சிறைவாசிக்கு கிடைக்கும் இடத்திற்கான சிறப்பு எத்தகையது ! இதை ஒப்பிடுகையில் இரு சிறைவாசிகளுக்கு  நடுவில் படுக்க கிடைக்கும் இடத்தின் மதிப்பு குறைவுதான்; சக கைதி எங்கே கை வைப்பார் எனத் தெரியாது. எல்லோரும் நடந்துபோகும் நடைபாதையில் இடம் கிடைப்பவர்களுக்கு தூங்குவதே சிரமம் என்கிறார். மன்னர்களைப் போல இருக்கும் ஜெயிலர்களிடம் அனைத்துமே ‘வேண்டுகோள்’தான். அவர்களுக்கு  ‘உரிமைகள்’ என்ற ஒன்றே தெரியாது  என்கிறார். உரிமைகளைக் கோரும் சிறைவாசி என்ன ஆவார் என்பதையும் விவரிக்கிறார். விசாரணை என்ற பெயரில் 36 மணி நேரம் வரைகூட தன்னை தூங்கவிடாமல்  வைக்கப்பட்ட துயரத்தைச் சொல்லுகிறார். காலைக்கடன்களைக் கழிப்பது,குளிப்பது வரை எல்லாமே சவால் தான் சிறையில்!

சிறைவாசிகளின் குடும்பத்தினர் கிடைக்கின்ற 20 நிமிடத்தில் கம்பி வலைக்குள் அப்பால் நின்று என்ன பேசிவிட முடியும் ?  இந்த சாதாரண விஷயம் கூட அதிகாரிகளுக்குத்  தெரியாதா என்ன ?

சிறை என்பது ஒரு சீர்திருத்த சாலை; அது சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல. ஆனால், சிறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்து வந்தவர்கள். அதனால்தான் சிறைவாசிகளின் பிரச்சினைகளை  தீர்ப்பதற்குப் பதிலாக வெளியில் தெரியாமல் அடக்கும் வேலைகளைச் செய்கிறார்கள் என்கிறார் . உதாரணமாக சிறைச்சாலை கேண்டீனில் தின்பண்டங்களை விற்பதில் ஊழல்  குறித்த புகார் வந்ததால் அந்த கேண்டீனையே ஒட்டுமொத்தமாக மூடி தவிக்கவிட்ட கதையைச் சொல்லுகிறார்.  இரத்தமும் சதையுமாக இந்த நூல் நம்மிடையே உழல்கிறது.

சிறை மருத்துவமனைகளில் உடல் உபாதைகளுக்கு ஒட்டுமொத்தமாக மாத்திரைகள் தர மாட்டார்கள். மறுநாள் சிறை மருத்துவமனைகளுக்கு அனுப்புவார்களா என்று சொல்ல முடியாது. அந்த நிலையில் சிறை மருத்துவர்களின் ‘வருமானத்தைச்’ சொல்லுகிறார். நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது சிறைவாசிகளின் குடும்பத்தார்கள் வருவாரா என நாள் முழுவதும் எதிர்பார்த்து ஏங்கும் கதையைச் சொல்லுகிறார். சிறைவாசியாகவே இருக்கட்டும். அவர்கள் கண்ணியமாக நடத்தப்படக் கூடாதா..?  என்ற எளிய கேள்வியை வைக்கிறார்.

வெளி உலகத்தின் பார்வை இல்லாத நிலையில் ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு விதமாக சட்டத்திற்கு விளக்கம் சொல்லுகிறார்கள். சிறைவிதிகளை ஒரு சிறைவாசி படிக்க முடியாதா ? தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் அவர்  படித்த  நாவல்களின், நூல்களின்  பெயர்கள் சுவாரசியமாக உள்ளன. சிறையில் இருந்து கொண்டே மனித உரிமை தொடர்பாக ஆய்வு செய்கிறார். சக கைதிகளுக்கு படிப்பு சொல்லித் தருகிறார். மனு எழுதித் தருகிறார். ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் தனிமைச் சிறையில் அடைத்து வைப்பதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்? அதனால்  பயன் என்ன ? அதற்கான அடிப்படை என்ன ? சட்டப்படி இது சரியா?

சட்ட அமலாக்கத்தின் நோக்கம் ஜனநாயகத்தை வலுப்படுத்தவே என்பதை புரிந்து கொண்டால்தான் யார் குற்றவாளி என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். மன நோயாளிகளை சிறையில் வைத்திருப்பதால் என்ன பயன் ? மூன்றாம் பாலின சிறைவாசிகளுக்கு என்ன ஏற்பாடு ? சிறைவாசிகள் செய்யும் வேலைக்குத் தரும் சொற்பக் கூலி ஒருவித சுரண்டல் இல்லையா !

சிறைக்கு சென்றவுடன்  முதலில் சில நாட்களும், விடுதலை ஆகும் இறுதிநாட்களிலும் சிரமப்படுவார்கள். சிறைவாசிகளை சீட்டுக்கட்டு விளையாட அனுமதிப்பதால் என்ன கெடுதல் ஏற்பட்டுவிடப் போகிறது. எல்லா சிறைகளைப் போலவே மகாராஷ்டிராவிலும்  முஸ்லிம் சிறைவாசிகளின்  விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது.

காவல் சித்திரவதைகளுக்கு எதிரான ஐநா இணக்க விதிகளுக்கு ஏற்ப சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஊடக வெளிச்சம் இல்லாத, மூடுண்ட வளாகம், பொதுமக்கள் பார்வை  இல்லாத நிலை, தங்களை ஜமீன்தாரர்களாக நினைக்கும் அதிகாரிகளின் போக்கு  போன்றவை சிறைவாசிகளின் வாழ்வைத் துயரமாக்குகின்றன. யாரும் கவனிக்காத ஒரு பொருள்  குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த நூலை  பிளிப்கார்ட்டில் தருவிக்கலாம். எளிய ஆங்கிலத்தில்,  உணர்ச்சிகரமான நூலாக உள்ளது.

Aleph Book Company, 7/16 Ansari Road, Daryaganj, New Delhi – 110 002/ ரூ.299/164 pages.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time